உள்ளங்கை உலகத்தை சரியாக பயன்படுத்துங்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 49 Second

அரசுப் பள்ளியில் மாணவி. இப்போது மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர். மேலும் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன் டிஜிட்டல் உலகம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி தருகிறார் சென்னையை சேர்ந்த கார்த்திகா.‘‘நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். சென்னை, சேத்துப்பட்டில் உள்ள அரசுப் பள்ளியில் தான் படிச்சேன். எங்க பள்ளிக்கு அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அதில் படிக்கும் குழந்தைகள் எல்லாரும் காரில் தான் வருவார்கள். வசதிப் படைத்தவர்களால் மட்டுமே தான் அந்த பள்ளியில் தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும். மேலும் பெரும்பாலான தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் அங்கு படிக்கிறார்கள்.

இவர்கள் காரில் வருவதால், சாலையின் ஒரு பக்கம் அடைத்திடுவார்கள். மற்ற வாகனங்கள் மறு பக்கத்தில் உள்ள சாலை வழியாகத் தான் செல்ல முடியும். காரணம் பள்ளி இருக்கும் சாலை நெடுக்க கார்கள் நிற்கும். எங்களின் பள்ளியும் அந்த சாலையில் இருப்பதால், நாங்க எங்களுடைய பள்ளிக்கு மறுபக்கத்தில் உள்ள சாலை வழியாக சுற்றித் தான் செல்வோம். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன்.

அந்த பள்ளியில் நாமும் படித்திருந்தால், எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வரலாம். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பல நாட்கள் ஏங்கி இருக்கேன். ஆனால் நான் அரசுப் பள்ளியில் படித்தாலும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதை என் மனதில் பதிவு செய்து கொண்டேன். அப்போதுதான் நல்ல வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிக்க முடியும். +2வில் நல்ல மதிப்பெண் பெற்றதால், எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சது. ஆவடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் எனக்கு சீட் கிடைச்சது. அங்கு சேர்ந்து படிச்சேன்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அதில் படிப்படியாக உயர்ந்தேன். என்னை ஐதராபாத்திற்கு டீம் லீடராக புரமோஷனில் அனுப்ப நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் நான் புரமோஷனை விரும்பவில்லை. வேலையை ராஜினாமா செய்வதாக கூறினேன். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறாய். உனக்கான நல்ல அடையாளம் கிடைத்துள்ளது. மேலும் உன்னை அதற்காக அங்கீகரிக்கும்போது வேலையை விட்டு போகிறாயே என்று என் மேலதிகாரி கேட்டார். ஆனால் எனக்கு என்னவோ அவர்கள் கொடுக்கும் அந்த அங்கீகாரத்திற்கும், பணத்திற்கும் வேலை பார்க்க விருப்பமில்லை. தனித்து எனக்கான அடையாளத்தை பெற விரும்பினேன்.

அதனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் என் வேலையை ராஜினாமா செய்தேன். அதன் பிறகு எனக்கான நிறுவனத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பிச்சேன். இந்த நிறுவனம் துவங்கி மூன்று ஆண்டுகளாகிறது. நானும் என் நண்பரும் சேர்ந்து தான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறோம். ஆனாலும் எனக்குள் அந்த பள்ளியில் படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது. அது என்னிடம் வேலை பார்க்கும் ஒரு பெண்ணால் தான் மறைந்ததுன்னு சொல்லணும். காரணம் நான் எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று ஏங்கினேனோ அந்தப் பள்ளியில் தான் அந்தப் பெண் படித்துள்ளார். அதன் பிறகு நாம் எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது அவசியமில்லை. ஆனால் எப்படி படிக்கிறோம்… என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்னு புரிந்தது’’ என்றவர் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி விவரித்தார்.

‘‘ஒரு சின்ன செல்போனை கையில் வைத்துக்கொண்டு உலகமே நம் கையில் வந்துவிட்டதாக பெருமைப்படுகிறோம். ஆனால் நாம் டிஜிட்டல் சிறையில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம் என்று யாரும் உணரவில்லை. நாம் எங்கு போகிறோம் என்ன செய்கிறோம். எங்கு தங்குகிறோம். என்ன சாப்பிடுகிறோம். என்னென்ன பொருட்கள் வாங்குகிறோம். நமக்கு என்னென்ன தேவை என்ற அனைத்து தகவல்களும் சைபர் உலகத்தால் சேகரிக்கப்படுகிறது. போலீசாரிடம் இருந்து கூட தப்பிவிடலாம். ஆனால் நாம் கூகுள் மேப்பிடம் இருந்து தப்பவே முடியாது. பொதுவாக ஒரு நிறுவனம். தங்கள் ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தும்படி கூறுகிறது.

நாமும் அப்படி செய்கிறோம். ஆனால் நாம் அந்த ஆப்பினை டவுன்லோட் செய்யும் முன்பு, அதில் உள்ள கண்டிஷன்களை படித்துக்கூட பார்ப்பது இல்லை. உங்கள் தகவல்களை நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா என்று ஒரு கேள்வி அந்த ஆப் கேட்கிறது. நாமும் ஓ.கே சொல்லிவிடுகிறோம். அந்த ஆப் நம்முடைய தகவல்களை சேகரித்து வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்வது நமக்கு தெரியாது. நம்முடைய தகவல்களை பெற்றவர்கள் மெல்ல மெல்ல நம்மிடமே விற்பனையை தொடங்கி விடுகிறார்கள்.

சார் உங்களுக்கு லோன் கிடைத்துள்ளது வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்? வீட்டில் ஃபிரிட்ஜ், டிவி ரிப்பேர் பொருட்கள் பற்றிய விளம்பரங்களை நமது அலைபேசிக்கு அவர்கள் அனுப்பி மெல்ல மெல்ல மார்க்கெட்டிங்கை தொடங்குவார்கள். உதாரணத்திற்கு நாம் ஒரு செல்போன் மாடலை இணையத்தில் பார்ப்போம். நமக்கு செல்போன் தேவை என்று டிஜிட்டல் உலகத்திற்கு தகவல் சென்றுவிடும்.

அது சார்ந்த விளம்பரங்கள் மற்றும் விவரங்கள் உங்களின் அனைத்து சமூக வளைத்தளத்திலும் வெளியாகும். மேட்டரி மோனியல் இணைய தளத்தை விளையாட்டாக பார்த்தால் கூட அது நம்மை விடுவதாக இல்லை. நமது எண்ணம் செயல் சிந்தனைகளை பின் தொடர்ந்து வருகிறது டிஜிட்டல் உலகம். அதிலிருந்து தப்பிக்க இன்னும் நாம் வழி கண்டுபிடிக்கவில்லை. நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். யாருக்கு என்ன தகவல்கொடுக்கிறோம் என்பதை மிகவும் ஜாக்கிரதையாக தர வேண்டும். இது ஒரு பக்கம் இருந்தாலும் நாம் உட்கார்ந்த இடத்திலேயே நமக்கான தேவையை வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவும் நம்மால் முடியும்.

கொரோனாவுக்கு முன்பு இருந்த டிஜிட்டல் உலகம் வேறு இப்பொழுது இருக்கும் உலகம் வேறு. சுமார் 60% கொரோனாவால் டிஜிட்டல் உலகம் முன்னேறிவிட்டது. இனி அது மென்மேலும் உயர்ந்து கொண்டேதான் போகும். ஒரு நிறுவனம் தாங்கள் தயாரித்த பொருளை தொலைக்காட்சி அல்லது நாளிதழில் தான் விளம்பரம் கொடுப்பார்கள். தற்போது அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பிவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல இல்லத்தரசிகளும் இன்ஸ்டாவில் வியாபாரம் செய்ய துவங்கிவிட்டார்கள்.

வீட்டில் இருந்து கொண்டே குடும்பத்தின் வருமானத்தை பெருக்க இது அவர்களுக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது. உதாரணமாக எம்ப்ராய்டிங், டெய்லரிங், அழகுக்கலை, சாம்பார்பொடி, ரசப்பொடி, சோப், சத்துமாவு, சிறுதானியங்கள் என அனைத்தும் இன்ஸ்டாவில் விற்பனையாகிறது. இதற்கான அலுவலகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தொழில் துவங்கலாம். இன்ஸ்டாகிராமில் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்தி அதனை ஆர்டரின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு கூரியர் மூலம் டெலிவரி செய்திடலாம்.

அவர்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தினால் போதும். உண்மையில் சரியாக பயன்படுத்தினால் டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லத்தரசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய முடியும். ஒருவரின் திறமையை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து உங்களுக்கான வாய்ப்பை நீங்களே தேடிக்கொள்ளலாம். இப்போது பெரிய பிரபலங்களை விட இன்ஃப்ளூவர்களை கொண்டு தான் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள்.

காரணம் அவர்களை பின்பற்றுபவர்களின் ஒரு 50% மக்களாவது இவர்களின் பொருட்களை வாங்குவார்கள் என்பது பெரிய நிறுவனங்களின் கணக்கு. சொல்லப்போனால் பெரிய நிறுவனங்களும் சமூக வலைத்தளத்தினை நாடுகிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை வளமாக பயன்படுத்தினால் அது ஒரு வரப்பிரசாதம்’’ என்கிறார் கார்த்திகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எனது குரலை வைத்தே பலர் என்னை அடையாளப் படுத்துகிறார்கள்! (மகளிர் பக்கம்)
Next post ஊருக்கே பட்டா வாங்கி கொடுத்த பழங்குடி பெண்!! (மகளிர் பக்கம்)