ஊருக்கே பட்டா வாங்கி கொடுத்த பழங்குடி பெண்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 50 Second

தங்களுடைய நிலத்தை பாதுகாக்க ஊர் மக்களை ஒன்றிணைத்து பல நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி 23 குடும்பங்களுக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளார் பழங்குடி பெண்ணான ராஜலஷ்மி. வால்பாறையில் உள்ள தன் கிராமத்து மக்களை வெளியேற சொன்ன போது தனி மனுஷியாக நின்று அவர்களை எதிர்த்தும் தனது ஊர் மக்களை ஒருங்கிணைத்து பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்று சமகாலத்து வரலாற்று பெண்மணியாக மாறியுள்ளார் இவர்.

‘‘நம்முடைய நோக்கம் அறம் சார்ந்ததாக இருந்து அதுவும் அகிம்சை வழியிலான போராட்டமாக இருந்தால் அது என்றுமே தோல்வியடையாது’’ என்று பேசத் தொடங்குகிறார் ராஜலஷ்மி. ‘‘எனக்கு சொந்த ஊர் வால்பாறையில் இருக்குற கல்லார் கிராமம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த கிராமத்துல தான். வால்பாறையில இருந்து காட்டுக்குள் சென்றால்தான் என்னுடைய கிராமம் வரும். நான் படிக்கல. எனக்கு தங்கச்சி மற்றும் ஒரு தம்பி.

அவங்க இரண்டு பேரையும் படிக்க வைக்கிறேன். எங்களுக்கு விவசாயம் தான் தொழில் என்பதால், நான் சின்ன வயசில் இருந்தே அப்பா, அம்மாவோட சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அதனால் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிக்க முடியல. விவசாயம் மட்டுமில்லாமல் காடுகளில் கிடைக்கும் பொருட்களையும் விற்பனை செய்து வந்தேன். எனக்கு எல்லாமே என் கிராமம் மற்றும் கிராம மக்கள் தான். அதனால் அவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்வது, குழந்தைகளை படிக்க வைப்பது என பொது வேலைகளில் ஈடுபட்டு வந்தேன்.

அந்த சமயம் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால நாங்க யாருமே வீட்டைவிட்டு வெளியேறல. கிட்டத்தட்ட 250 பழங்குடி குடும்பங்களும் கிராமத்தில் முடங்கி இருந்தோம். நான் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வாங்கி கொடுத்தேன். இதே காலகட்டத்தில்தான் நாங்க வாழ்ந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்க எங்களோட வீடு, பொருட்கள் எல்லாத்தையும் இழந்திட்டோம். காட்டை விட்டு வெளியே போற பாதையிலயும் மண் சரிவு இருந்தது.

அதனால் எங்களால் காட்டைவிட்டும் வெளியேற முடியல. ஊர் மக்கள் எல்லாரும் பயந்துட்டாங்க. இனிமே இந்த ஊருல வாழ முடியாதுன்னு எல்லாரும் முடிவு எடுத்து கல்லார் கிராமத்துல இருந்து தெப்பக்குள மேடு என்ற எங்களுக்கு சொந்தமான பகுதிக்கு குடியேறினோம். அந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால வனத்துறையினர் வந்து நாங்க புதுசா குடியேறின பகுதியை விட்டு வெளியேற சொல்லி சொன்னாங்க. ஆனா தெப்பக்குள மேட்டை விட்டா சமமான பகுதிகள் வேறெங்கும் கிடையாது.

மேலும், எங்க விவசாய நிலங்களும் தெப்பக்குளமேட்டுல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம்தான். நாங்க வேற இடத்திற்கு போனா ரொம்ப தூரம் நடந்து போய் தான் விவசாய நிலங்களுக்கு வர வேண்டி இருக்கும். இதையெல்லாம் சொல்லி எங்களுக்கு தெப்பக்குளமேட்டுலயே பட்டா கொடுக்க சொல்லி கேட்டோம். ஆனா அதுக்கு வனத்துறையினர் ஒத்துக்கல. இடத்தை காலி பண்ண சொல்லி கட்டாயப்படுத்தினாங்க’’ என்றவர் நிலத்தை மீட்ட போராட்டம் குறித்து விவரித்தார்.

‘‘தினமும் வனத்துறையினர் இங்கு வந்து எங்களை வெளியேற சொல்வாங்க. நாங்க மாட்டோம்னு கோஷம் போடுவோம். காட்டுக்குள் வாழ விலங்குகளுக்கு உரிமை இருப்பது போல பழங்குடி மக்களாகிய எங்களுக்கு இருக்குன்னு சொல்லி எங்களுடைய எதிர்ப்பை அழுத்தமா தெரிவிச்சோம். அதில் ஒரு சிலர் விட்டுவிட்டு செல்லலாம்னு சொன்னாங்க. நான் உடனே நிலத்தை விட்டு போனா என்ன பிரச்னை வரும்னு சொல்லி புரியவச்சேன். நிலம் இல்லை என்றால், கூலி வேலைகளுக்கு தான் போகணும்.

அப்படி போனாலும் அடிமைகளாக தான் நடத்துவாங்க. அப்படியே விவசாயம் செய்தால், பல கிலோ மீட்டர் தூரம் நடக்கனும். இதையெல்லாம் ஊர் மக்களுக்கு சொல்லி புரிய வைச்சேன். நிலம் நம் உரிமை. நாம் வெளியே போக வேண்டாம்ன்னு சொன்னேன். அவங்களும் உறுதியா போராடலாம்னு சொன்னாங்க. இடத்தை காலி பண்ண சொல்லி ஆர்டர்கள் தொடர்ந்து வரவே நாங்க போராட்டம் நடத்தலாம்னு முடிவு பண்ணோம். முதல் நாள் வால்பாறை ஆட்சியாளரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை தொடங்கினோம். ஆனால் அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியல. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்ன்னு செயல்படுத்த ஆரம்பித்தோம்.

இது குறித்து ஊர் மக்களை கூட்டி பேசுவேன். அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய சொற்களை சொல்லி உத்வேகப்படுத்துவேன். இப்படி ஒரு நிகழ்வில் ஈடுபடும் போதுதான் நம்முடைய தனித்திறமை வெளிப்படும். அப்படித்தான் எனக்குள் இருந்த தலைமை பண்பை நான் உணர்ந்தேன். ரொம்ப இக்கட்டான சூழ்நிலையிலும் எப்படி முடிவுகள் எடுக்குறதுன்னு எல்லாமே நான் இந்த காலகட்டங்களில் கத்துக்கிட்டேன். வெவ்வேறு நாடுகளில் பல போராட்டங்களை பெண்கள் நடத்தியிருப்பதை கேள்விப்பட்டிருக்கேன்.

அந்த சமயத்தில் அவங்க எண்ணம் எப்படியிருக்கும்னு உணர்ந்தேன். பயங்கர எதிர்ப்பு, அடக்குமுறை இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து நின்றேன். உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினோம். சிறுவர்,சிறுமிகள் தவிர மற்றவர்கள் எல்லாரும் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால் எங்களைப் பார்த்து அவர்களும் எங்களோடு உண்ணாவிரதம் இருந்தாங்க. மூன்றாவது நாள் உண்ணாவிரதம் இருக்கும் போது முதலமைச்சர் எங்களுக்கு தெப்பக்குளமேட்டுலேயே பட்டா வழங்கப்படும்ன்னு சொல்லி எங்க போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். எங்க அறவழி போராட்டம் வெற்றி பெற்றது. என்னுடன் சேர்ந்து மொத்தம் 23 குடும்பங்களுக்கு ஒன்றரை சென்ட் நிலத்துக்கான பட்டா கைகளுக்கு வந்தது.

ஆதி காலத்தில் இருந்து நாங்கள் வாழ்ந்த இந்த காட்டில் மீண்டும் அதிகாரத்தோடு குடியமர்ந்தோம். காட்டில் மனிதர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் பழங்குடி மக்களை தொடர்ந்து காட்டை விட்டு வெளியேற்றும் நிலைதான் இருந்து வருகிறது. ஆனால் பழங்குடி மக்களாகிய நாங்கள்தான் இந்த காட்டின் அரண்கள். நாங்களும் போயிட்டா காடுகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிடும். ஒரு போராட்டம் உணர்ச்சிகளால் கட்டமைத்து உருவாக்கப்பட வேண்டும். தலைமை பண்பை கொண்டிருக்கும் நபர் எந்த மாதிரியான உணர்ச்சியோடு இருக்கிறாரோ அதே உணர்ச்சி கடைசி மனிதர் வரைக்கும் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலோ உங்களுடைய போராட்டம் வெற்றி பெற்றது என்று அர்த்தம்’’ என்றார் ராஜலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உள்ளங்கை உலகத்தை சரியாக பயன்படுத்துங்கள்! (மகளிர் பக்கம்)
Next post இருளர் குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோ ! (மகளிர் பக்கம்)