ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:12 Minute, 32 Second

எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஆண்களில் படிப்படியாக நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் கிருஷ்ணாசேஷாத்திரியிடம் பேசினோம்…

‘‘நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு கொள்கிறது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இயங்கத் தேவையான ஹார்மோன்களை ஒவ்வொரு நொடியும் உற்பத்தி செய்யக்கூடிய பல நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன. தைராய்டு, அட்ரினல் மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளில் உற்பத்தியாகி ரத்த ஓட்டம் அல்லது மற்ற உடல் திரவத்தின் வழியாக ஊடுருவி, உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு சென்று அவற்றின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தி உடையவை இந்த ஹார்மோன்கள். அதாவது உடல் எப்போது? என்ன செய்ய வேண்டும்? என்ற சமிக்ஞைகளைத் தரும் சிக்னல்களாக வேலை செய்கின்றன.

இவற்றில் மூளைக்குப் பின்னால் இருக்கும் பிட்யூட்ரி சுரப்பிதான் மற்ற நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்தக்கூடிய தலைமை வேலையைச் செய்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியம். பிறந்த குழந்தைக்குகூட தைராய்டு ஹார்மோன் குறைபாடு வரலாம். தைராய்டு ஹார்மோன் மூளை வளர்ச்சிக்கும் முக்கியமானது என்பதால் மூளைவளர்ச்சிக் குறைபாடு, குழந்தைகளின் கற்றல் திறன் பாதிப்பது போன்றவை ஏற்படலாம். தைராய்டு, பிட்யூட்ரி, அட்ரினல் மற்றும் இன்சுலின் ஹார்மோன்களால் வரக்கூடிய அனைத்து பிரச்னைகளும் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானது.

ஆண் பருவமடைவதில் உள்ள சிக்கல்கள்

பெண் பருவமடைவதை கொண்டாடும் அம்மாக்கள், பையன்களை கண்டுகொள்வதே இல்லை. ஆண்கள் பருவமடைவது சீக்கிரமாகவோ, மிகவும் தாமதமாகவோ நிகழ்வது அல்லது பருவம் அடைதலே நடக்காமல் இருப்பது போன்ற நிலைகள் உள்ளன. இதில் சீக்கிரமாக பருவமடைவதை Precocious puberty என்கிறோம். பிட்யூட்ரி சுரப்பி அதிகமாக வேலை செய்வதால், ஆண்களின் பருவமடையும் வயதான 9 வயதுக்கு முன்பே, மிக சீக்கிரமாகவே மீசை, தாடி மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்ச்சி, ஆணுறுப்பு வளர்வது போன்ற பருவமடைவதற்கான அறிகுறிகளில் வேகமான வளர்ச்சி காணப்படும்.

இந்த வளர்ச்சிகள் வேகமாக இருந்தாலும், உடல்வளர்ச்சி குறைந்து குள்ளமாக இருப்பார்கள். இதற்கு காரணம் பிட்யூட்ரி சுரப்பி அல்லது அட்ரினல் சுரப்பியில் கட்டி மற்றும் ஹைப்போ தைராடிசமாக இருக்கலாம். தாமதமாக பருவமடைதல் மற்றொரு நிலை. இந்த நிலையில் முகரும் தன்மை குறைபாடு, பிட்யூட்டரி மற்றும் அட்ரினல் சுரப்பு குறைவு, உயிரணுக்கள் மற்றும் கருமுட்டைகளை உற்பத்தி செய்யும் Gonads வெளிப்பாடு குறைவதாலும் தாமதமாக பருவமடைதல் ஏற்படுகிறது. ஆண்களுக்கான ஹார்மோன்கள் உற்பத்தி குறைவு மற்றும் ஆணுறுப்பு வளர்ச்சி இல்லாமல் இருப்பது. இது மூன்றாம் நிலை. உடலில் கொழுப்புத்தன்மை அதிகமாக இருப்பதால், ஆண்குறி உள்ளே அமுங்கிவிடும்.

இதை்தான் வளர்ச்சி இல்லை என்பார்கள். கொழுப்பை குறைத்தாலே இது தானாக சரியாகிவிடும். சில ஆண்களுக்கு Testosterone எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தியாகாமல் இருக்கலாம். ஆண்களுக்கான குரோமோசோம்களில் 46xy இருப்பதற்கு பதிலாக 46xxy என்று x குரோமோசோம் அதிகமாக இருப்பதால், விதைப்பை சிறிதாக இருப்பது உயிரணு உற்பத்தி குறைவு, ஆண்குறி வளர்ச்சியின்மை, பெண்களைப்போல மார்பகம் பெரிதாவது, பெண்களைப் போன்ற நடை போன்ற மாற்றங்கள் ஆண்களிடத்தில் இருக்கும். இதை கண்டுபிடிப்பதற்கு Testosterone பரிசோதனையும், FSH பரிசோதனையும் செய்வோம்.

இவையெல்லாம் விதைப்பையினுள் இருக்கும் பிரச்னைகள். சிலருக்கு விதைப்பையே வெளியில் வராமல் உள்ளிழுத்துக் கொண்டு இருக்கும். சிலருக்கு பிட்யூட்ரி சுரப்பி வேலை செய்யாமலோ, வளர்ச்சியில்லாமலோ இருக்கலாம். இதற்கு பரம்பரைத் தன்மையும் காரணமாகிறது. இதெல்லாம் பருவமடைவதில் ஆண் சந்திக்கும் பிரச்னைகளாகச் சொல்லலாம்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?

பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்னைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது.

ஆண்கள் சந்திக்கும் பிற ஹார்மோன் பிரச்னைகள்…

வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.

இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.

ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டா?!

‘ஆண்ட்ரோபாஸ்’ என்ற வார்த்தை சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. வயதாவதால் ஆண்களின் பாலியல் செயல்பாடு குறையுமே தவிர, ஆண் ஹார்மோன் உற்பத்தி குறையுமா என்பது இன்னும் சர்ச்சை நிலையில்தான் இருக்கிறது. எல்லா ஆண்களுக்குமே ஆண் ஹார்மோன் உற்பத்தி குறைவதில்லை. எப்படி பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது இதயத்தைக் காக்கிறதோ, அதேபோல டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் ஆண்களின் இதயத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுவதால், குறைவாக இருப்பவர்களுக்கு இதை அதிகரிக்க சில சிகிச்சைகள் செய்கிறோம். ஆனால் ஆன்ட்ரோபாஸ் வருவதற்காக வாய்ப்பு இருக்கிறது.

திடீரென்று மாதவிடாய் வருவது நின்று பெண்களுக்கு மெனோபாஸ் வருவது மாதிரி, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்குமே தவிர இறுதிப்புள்ளி என ஒன்று ஏற்படுவதில்லை. அவ்வப்போது 80 வயதிலும் அப்பா ஆகும் செய்தியை படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆண்களின் 60, 70 வயதுகளில் உண்டாகும் மாற்றம்…

இந்த வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

பாலுணர்வை அதிகரிக்க அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி…

உடலுறவு கொள்வதன் தன்மை குறைவதற்கு பல காரணங்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையேயான நம்பகத்தன்மை, அன்பு, மன அழுத்தம் சம்பந்தப்பட்டது. ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு உடலுறவில் தன்னுடைய செயல்திறன் சரியில்லையோ என்று தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். தங்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஆண்மைக் குறைபாட்டைச் சரி செய்கிறோம்’ என்ற விளம்பரங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இனிமையான தாம்பத்ய வாழ்வுக்கு கணவன் மனைவிக்கிடையே நல்ல இணக்கமே போதும். அதற்கு கவுன்சிலிங்கே போதுமானது. இதுபோன்ற காரணங்கள் இல்லாமலும் உடலுறவு கொள்வதில் பிரச்னை தொடர்ந்தால் வயாக்ரா போன்ற சிகிச்சைகள் சரியானதுதான். ஆனால், இதய நோய் உள்ளவர்கள், குறிப்பாக நைட்ரேட் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் வயாகரா மாத்திரைகளை சாப்பிடக்கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்? (மருத்துவம்)
Next post பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்! (அவ்வப்போது கிளாமர்)