நட்பு… என் வாழ்க்கையின் வசந்தம்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 29 Second

‘பாலக்காடுதான் என் ஊர். சென்னையில் செட்டிலாகி இரண்டு வருஷமாச்சு. சின்ன வயசில் சாருகாசன் பேத்தியா ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். அதன் பிறகு பத்தாம் வகுப்பு படிக்கும் போது மம்முட்டி சாரோடு ஒரு படத்தில் பத்திரிகையாளரா நடிச்சேன். அதன் பிறகு நிறைய மாடலிங், விளம்பர படங்களில் எல்லாம் நடிச்சிருக்கேன். தமிழ் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதிலும் நடிச்சேன். அதன் பிறகு தான் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ மூலம் அனு என்ற கதாப்பாத்திரம் மூலமாக உங்க வீட்டில் ஒரு பெண்ணாக இருக்கிறேன்’’ என்று கண்கள் படபடக்க பேசத் துவங்கினார் ஸ்ரீகோபிகா. இவரை அனு என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.

‘‘எனக்கு திரைப்படத்தில் நடிப்பதை விட சீரியலில் நடிப்பது பிடிச்சிருந்தது. ஒன்று திரைப்படம் என்றால் நல்ல ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருக்கணும். அதே சமயம் காம்படீஷனும் அதிகம். ஆனால் சீரியல் பொறுத்தவரை ஒரு நல்ல கதாப்பாத்திரத்தை தேர்வு செய்தால், அது நமக்கான ஒரு அடையாளத்தை என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்க செய்யும். எல்லாவற்றையும் விட தினமும் வேலை இருக்கும். அதனால் எப்போதும் நம்மை பிசியாக வைத்துக் கொள்ள முடியும். எனக்கும் நான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைச்சது. பிரபல தொலைக்காட்சி தான். ஆனால் அந்த சீரியலின் தயாரிப்பாளருக்கு என் மேல் என்ன வெறுப்புன்னே தெரியல. எனக்கும் அவருக்கும் கடைசி வரை செட்டாகல. கிட்டத்தட்ட நான் மனச்சோர்வுக்கு அவரால் தள்ளப்பட்டேன்.

விலகிவிடலாம்ன்னு நினைச்சாலும் அவர் என்னை விடவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அவரே என்னை அந்த சீரியலில் இருந்து நீக்கினார். ஆனால் அதில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் என்னை பெரிய அளவில் பாதித்தது. அந்த சமயத்தில் நான் என் ஊருக்கு போயிட்டேன். அப்போது என்னை ஒரு ஃபிரெண்ட் போல பார்த்துக் கொண்டவர் என் அம்மாதான். அவங்க பெயர் சுஜிதா. ஸ்கூல் டீச்சரா வேலைப் பார்த்தாங்க. இப்ப ஓய்வு பெற்றுட்டாங்க. நான் அந்த சமயத்தில் ரொம்பவே டிப்ரஷன்ல இருந்தேன். அப்ப எனக்கு முழு சப்போர்ட்டா அவங்க தான் இருந்தாங்க. என்னை அந்த சோர்வில் இருந்து வெளியே கொண்டு வந்ததும் அவங்க தான்.

உன்னால் செய்ய முடியும்னு தைரியம் கொடுத்ததும் அவங்கதான். உன்னால முடியாதுன்னு யார் சொன்னாங்களோ அவங்க முன்னால நீ ஜெயிச்சு காட்டணும்னு எனக்கு ஊக்கம் அளிச்சாங்க. அதன் பிறகு தான் எனக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. 60 பேர் ஆடிஷனுக்காக வந்திருந்தாங்க. ஆனால் என்னை மட்டும் தான் காவேரி மேடம் செலக்ட் செய்தாங்க. நான் ஏன் இது சொல்றேன்னா. என்னுடைய வாழ்க்கையில் என் பெஸ்ட் ஃபிரெண்ட் என் அம்மாதான்.

அவங்க என்னை புரிந்துகொள்ளாமல் என்னை திட்டி இனி சீரியல் வேண்டாம்னு சொல்லி இருந்தாங்கன்னா…. அனுவா நான் உங்க முன்னாடி இப்ப இருந்திருக்க மாட்டேன். ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு உறவுகள் வந்தாலும், அதில் ரொம்பவே முக்கியமானது ஃபிரெண்ட்ஷிப். எனக்கும் என் அம்மாவுக்குமான உறவு அம்மா, பெண் என்பதை விட நட்பு என்ற பாசக்கயிறால் பின்னப்பட்டுள்ளது. அம்மாகிட்ட நான் எதையுமே மறைக்கமாட்டேன். சென்னையில் இப்ப நான் தனியா இருந்தாலும், மனசு பாரமா இருந்தா முதலில் அம்மாவைத்தான் கூப்பிடுவேன்’’ என்றவர் அவர் வாழ்வில் உள்ள முக்கிய நண்பர்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் முதலில் கான்வென்ட் பள்ளியில் தான் படிச்சேன். அதன் பிறகு ஆறாம் வகுப்பில் இருந்து கேரளாவில் உள்ள பெஸ்ட் பெண்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிச்சேன். அங்க சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அங்கு ஏழாம் வகுப்பில் தான் எனக்கு ஸ்ருதி ஃபிரெண்டானா. இவளுக்கு இப்ப கல்யாணமும் ஆயிடுச்சு. அழகான ஒரு குழந்தையும் இருக்கு. பள்ளியில் படிக்கும் வரை தான் நானும் ஸ்ருதியும் தினமும் நேரில் பார்த்துக் கொண்டோம். அதன் பிறகு நான் கல்லூரிக்கு போனதால, என்னால அவள ரெகுலரா பார்க்க முடியல.

ஆனாலும் நாங்க இருவரும் இன்னும் தொடர்பில் இருக்கிறோம். கிட்டதட்ட ஸ்ருதியைப் பார்த்து ஒரு வருஷம் மேல ஆச்சு. மாசம் ஒரு முறை போனில் பேசுவோம். அதைவிட எனக்கு ஏதும் பிரச்னைன்னா நான் அவளுக்கு எந்த நேரம் வேண்டும் என்றாலும் போன் செய்வேன். அவளும் அப்படித்தான். அந்த சமயத்தில் அவளால் என் பக்கத்தில் இருக்க முடியவில்லை என்றாலும், அவளுடைய சப்போர்ட் வேறு விதத்தில் எனக்கு இருப்பது ேபால் பார்த்துப்பா. நான் அவளுக்கு ஒன்று என்றால், இங்க வேலை இருந்தாலும், லீவ் சொல்லிட்டு பறந்திடுவேன். பெண்களால ஒரு நட்பினை அதிக காலம் தொடர முடியாதுன்னு சொல்வாங்க. நாங்க அப்படி இல்லை.

ஸ்ருதியோட அப்பா துபாயில் வேலைப் பார்த்து வந்தார். அதனால அவ எனக்கு துபாயில் இருந்து சாக்லெட் கொண்டு வருவா. அப்புறம் நானும் அவளும் பள்ளி கான்டீனில் முட்டை பஃப் சாப்பிடுவோம், அதுவும் அவ தான் வாங்கித் தருவா. சில சமயம் நானும் அவளும் பள்ளியில் இருந்து லேட்டா வீட்டுக்கு போவோம். எங்க பள்ளிக்கு பஸ் எல்லாம் கிடையாது. நாங்க அரசு பஸ்சில் தான் வீட்டுக்கு போவோம். அப்ப சில சமயம் பஸ்சை விட்டுட்டு அங்க பக்கத்தில் உள்ள கடையில் ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டு போவோம். எங்க வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு ரூபாய் செலவு செய்யணும்ன்னா கூட யோசிச்சு செலவு செய்ய சொல்வாங்க. டி.வி கூட ரொம்ப பார்க்க விடமாட்டாங்க.

படிப்பு தான் முக்கியம் எங்க வீட்டில். நாங்க சில சமயம் லேட்டா போகும் போது வீட்டில் அம்மா ஏன் லேட்டுன்னு கேட்பாங்க. அப்ப சும்மா பஸ் விட்டுட்டோம்னு சொல்லிடுவேன். இப்ப ஸ்ருதிக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்திடுச்சு. அவள் பார்க்க வரலைன்னு கோச்சுக்கிட்டா. அப்புறம் நான் கேரளா போன போது போய் பார்த்திட்டு வந்தேன். அப்ப கூட வீட்டில் எனக்கு பிடிச்சதை எல்லாம் செய்து வச்சிருந்தா. நான் சென்னைக்கு வரும் முன்பு ஸ்ருதியோட அக்கா சென்னையில் இருந்தாங்க. அவங்கள பார்க்க நானும் அவளும் இங்கு வந்திருந்தோம். அப்பகூட நான் நினைச்சு பார்க்கல. நான் இங்க வந்து செட்டிலாவேன்னு.

கல்லூரியில் ஆதிராவோட நட்பு கிடைச்சது. அவள நான் கொச்சிக்கு போகும் போது தான் பஸ்சில் சந்திச்சேன். நானும் அம்மாவும் ஊருக்கு பஸ்சில் போன போது, அவளும் அவ அம்மா கூட வந்திருந்தா. எங்க இரண்டு பேரோட அம்மாவும் நல்ல ஃபிரெண்டாயிட்டாங்க. அதேபோல எங்களுக்குள்ள ஒரு இனம் பிரியாத நட்பு உருவாச்சு. அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை. போனில் தான் பேசிக் கொள்வோம். அப்ப செல்ஃபோன் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு தான் கூப்பிடுவா.

இப்படி ஒரு பக்கம் ஸ்ருதி மறுபக்கம் ஆதிரான்னு என் நட்பு வளர்ந்தது. பள்ளி முடிச்சிட்டு நான் கல்லூரியில் சேர்ந்தேன். அன்று முதல் நாள். நான் கிளாசிற்கு போன போது ஏழு பெண்கள் தான் இருந்தாங்க. என்னடா… யாரிடம் பேசுவது. இவங்க எல்லாரும் பேசுவாங்களான்னு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்ப ஒரு பெண்ணோட குரல், ‘மேம், மே ஐ கம் இன்’னு. பார்த்தா அங்க ஆதிரா இருந்தா. எனக்கு ஒன்னுமே புரியல. அவ என்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லல. இங்க சேரப்போறது பத்தி.

எனக்கு ஒரு லவ்வர பார்த்தா எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அப்படி இருந்தது. அந்த மூணு வருஷம் அவ்வளவு ஜாலியா இருந்தது. இப்ப அவள நேரில் பார்க்க முடியலைன்னாலும், ஃபோனில் சாட்டில் பேசிக் கொள்வோம். சென்னையில் எனக்கு கிடைத்த ஒரு ஃபிரெண்ட் நிதின். என் ஃபிரெண்டோட நண்பன். சென்னையில் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருப்பான். எனக்கு ஏதாவது வேண்டும்னா அவன் உடனே எனக்காக வந்திடுவான்.

சுந்தரி செட்டைப் பொறுத்தவரை சுந்தரி, கார்த்திக், சித்து, கிருஷ்ணா எல்லாருமே ரொம்ப ஜாலியா இருப்பாங்க. என்னை ரொம்பவே புரிஞ்சி இருக்காங்க. நான் கொஞ்சம் எமோஷனல் டைப். சில சமயம் நான் அப்செட்டா இருந்தா, இவங்கள கத்திடுவேன். அப்ப இவங்க யாருமே என் மேல கோபப்படமாட்டாங்க. அவ கொஞ்சம் அப்செட்டா இருக்கா. சைலன்டா விட்டுடலாம். அப்புறம் அவளாவே வருவான்னு சொல்லிடுவாங்க.

நாங்க எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவோம். நான் இவங்க எல்லாரையும் கிண்டல் செய்திட்டே இருப்பேன். இவங்க கூட நான் வெளியே போனது இல்லை. ஆனால் சில ஷாட்டில் ஒரு இடத்தில் இருந்து வேற இடத்திற்கு டிராவல் செய்வோம். அப்ப ஏதாவது கடையில் டீ. காபி சாப்பிடுவோம். அப்ப அங்க இருக்கிறவங்க எங்களை அடையாளம் கண்டு பேசுவாங்க. எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடையாது. ஆனால் இருக்கும் சிலர் எனக்காக உண்மையா இருக்காங்க.

என்னைப் பற்றி தப்பா சொன்னா போதும் சண்டைக்கு போயிடுவாங்க. அந்த நம்பிக்கை தான் எப்போதுமே நிலைச்சு இருக்கும். அதுவே என்னுடைய வாழ்க்கையை அழகாக மாற்றி இருக்கு’’ என்றார் ஸ்ரீ கோபிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தையும் முதலுதவியும்!! (மருத்துவம்)
Next post நாங்க அடிப்பொலி ஜோடி! (மகளிர் பக்கம்)