நாங்க அடிப்பொலி ஜோடி! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 29 Second

பட்டாஸ்… படக்கம், கம்பி மத்தாப்பு…. கம்பித்திரி, சங்குசக்கரம்… விஷ்ணுசக்கரம், புஸ்வாணம்… பூக்குட்டி, பாம்பு மாத்திரை… பாம்பு குலிகா, சரவெடி… வாணபடக்கம், தீபாவளியன்று நாம் வெடிக்கும் பட்டாசிற்கு மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்து இந்த அழகான இளம் ஜோடிகள் வெளியிட்ட அந்த வீடியோ ஒரே நாளில் மிகவும் பிரபலமானது. காரணம், இவர்கள் இன்ஸ்டாவில் வெளியிடும் அந்த யதார்த்தமான ரீல்ஸ் என்றுதான் சொல்லணும். கல்யாணமாகி பத்தே மாதங்கள் என்பதால் அந்த இளம் ஜோடிகளுக்கு இடையே உள்ள குறும்பு, காதல் என அனைத்தும் இவர்கள் இருவரிடமும் பார்க்க முடிகிறது. அழகான புன்னகையுடன் சமூக வலைத்தளங்களில் எல்லோரையும் கவர்ந்துள்ளனர் இந்த அடிப்பொலி ஜோடியான பிரதீப்
மற்றும் மினி.

‘‘நான் சென்னைவாசி. திருவள்ளூரில் இருக்கிறேன். அடிப்படையில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் டெவலப்பராக வேலை பார்த்து வந்தாலும் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே நடன அமைப்பாளராக இருந்து வருகிறேன். எனக்கு பல இடங்களுக்கு பயணம் செய்யவும் பிடிக்கும். என்னுடைய நடனம் மற்றும் டிராவல் சார்ந்த வீடியோக்களை என் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து இருக்கேன். அது மட்டுமில்ல, நாங்க ஹனிமூன் போன இடங்களையும் படம் பிடித்து போட்டோம். ஆனால் அதற்கெல்லாம் இல்லாத ஃபாலோவர்கள் இந்த ஒரு ரீல்ஸ் போட்டதும் அப்படி குவிஞ்சிட்டாங்க’’ என்றார் பிரதீப். அவரைத் தொடர்ந்து தன் முத்துப்பற்கள் தெறிக்க அழகான சிரிப்புடன் தொடர்ந்தார் மினி.

‘‘நான் கேரளத்து பெண். படிச்சது, வேலை பார்த்தது எல்லாம் அங்கதான். இப்ப ஒன்றரை வருஷத்திற்கு முன்பு தான் சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மனிதவள துறையில் வேலைக்கு சேர்ந்தேன். எங்களுக்கு இந்த வருஷம்தான் திருமணமாச்சு. இது எங்களுக்கு தலை தீபாவளி. அதனால் மதியம் சாப்பிட்டுவிட்டு சும்மா பேசிக் கொண்டு இருந்தோம். அப்ப எங்க வீட்டு பக்கத்தில் படக்கம் வெடிச்சாங்க. நான் இவரிடம், ‘‘என்ன மாமா… இப்படி படக்கம் வெடிக்கிறாங்கன்னு கேட்டேன்.

இவர் படக்கமான்னு முழிச்சார். அப்பதான் மலையாளத்தில் பட்டாசை என்ன சொல்வாங்கன்னு சும்மா ஒரு வீடியோ போட்டோம். மறுநாள் பார்த்தா அந்த வீடியோவை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இரவில் பார்த்திருந்தாங்க. இப்ப வரைக்கும் 14.5 மில்லியன் மக்கள் பார்த்திருக்காங்க. இது எங்களுக்கே ஆச்சரியமா இருந்தது’’ என்றவரிடம் இரண்டு ஸ்டேட்ஸும்
எப்படி இணைந்தது என்று கேட்டதற்கு…

‘‘அது ஒரு சின்ன லவ் ஸ்டோரின்னு’’ தொடர்ந்தார் பிரதீப். ‘‘நான் இவங்கள என் நண்பனின் கல்யாணத்தில்தான் பார்த்தேன். முதல் பார்வையிலேயே எனக்கு இவங்கள பிடிச்சு போயிடுச்சு. இவங்க மணப்பெண்ணோட தோழி. எப்படியாவது கல்யாணம் முடிவதற்குள் இவங்க போன் நம்பர வாங்கிடணும்ன்னு நினைச்சேன். அன்று இரவு இவங்கள ஹாஸ்டலில் நான் தான் டிராப் செய்வேன்னு என் நண்பனிடம் அடம் பிடிச்சு கொண்டு போய் விட்டேன். நம்பர் கேட்ட போது கொடுத்திட்டாங்க. அதன் பிறகு மெசேஜ் செய்து படிப்படியா எங்களின் காதல் வளர்ந்தது. அப்புறம்தான் தெரிந்தது இவங்களும் கல்யாணத்தில் என்னை பார்த்திருக்காங்கன்னு.

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ன்னு சொல்வாங்கல… அப்படித்தான் எங்க காதல்’’ என்றார் பிரதீப். அதெப்படி பார்த்தவுடன் ஒரு பையன உங்களுக்கு பிடிச்சதுன்னு மினியிடம் கேட்டபோது… அழகான மலையாளம் கலந்த தமிழில் பேச ஆரம்பித்தார். ‘‘அது எப்படின்னு தெரியல. இவர் அங்க ஒரு டான்ஸ் ஷோ எல்லாம் செய்தார். சொல்லப்போனால், அழகான தமிழ் பையனா என் மனசில் பதிவானார். அதன் பிறகு பழகிய பிறகு இவரின் இன்ஸ்டா பக்கம் எல்லாம் பார்ப்பேன்.

அவர் வீட்டைப் பற்றி தெரிந்து கொண்டேன். அப்படியே லவ் ஆச்சு. அது ரொம்ப ஸ்ட்ராங்கானது, கோவிட் காலத்தில்தான். நான் கேரளாவிற்கு போயிட்டேன். இவர் என்னைப் பார்க்க இ-பாஸ் எல்லாம் போட்டு கேரளா வருவார். ஐயோ பையன் ரொம்ப கஷ்டப்படுறானேன்னு வீட்டில் இவர பத்தி பேச ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா இவர பத்தி சொல்லி சொல்லி என்னைவிட என் அம்மாவிற்கு இவரை ரொம்பவே பிடிச்சு போயிடுச்சு. எங்க இருவர் வீட்டிலும் பெரிசா தடை எல்லாம் செய்யல. இன்னும் சொல்லப்போனா… எங்க வீட்டில் இருந்துதான் இவர மாப்பிள்ளை பார்க்க வந்தாங்க’’ என்றவர் தன் ஹனிமூன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘இவர் நிறைய இடங்களுக்கு டிராவல் செய்வார். அதெல்லாம் இன்ஸ்டாவில் போட்டு இருக்கார். எனக்கும் அந்த மாதிரி புதுமையான இடங்களுக்கு பயணம் செய்யணும்னு ஆசை. அதை என் ஹனிமூன் கிஃப்ட்டா கொடுத்தார். நாங்க ஒரு மாசம் ஹனிமூன் போனோம். எங்க இருவருக்குமே பயணம் செய்ய பிடிக்கும். அதுவும் நான் விருப்பப்பட்டதாலே எனக்கு சர்பிரைசா பிளான் செய்திருந்தார். வயசு இருக்கும் போது தான் இதெல்லாம் செய்ய முடியும். காசு சேர்த்து வச்சு என்ன செய்றதுன்னு இவர் சொல்வார். இதற்காகவே இவர் லீவே எடுக்காம எல்லா பிராஜக்ட்டும் முடிச்சிட்டு ஒரு மாசம் லீவ் எடுத்தார்.

பொதுவா ஹனிமூன்னா ஒரு இடத்துக்கு மட்டுமே போயிட்டு வருவாங்க. நாங்க அட்வென்சர் செய்தோம். ஃபிளைட், டிரெயின், பஸ், ஆட்டோ என எல்லாவற்றிலும் டிராவல் செய்தோம். முதலில் தில்லி, அங்கிருந்து ரிஷிகேஷ். அங்க ரிவர் ராஃப்டிங் செய்தோம். தண்ணீரில் ேபான போது ரொம்ப ஜாலியா இருந்தது. அடுத்து நேபாளம். அங்க பங்கி ஜம்பிங் செய்தோம். இது பத்தி அவர் மூச்சு விடவே இல்லை. மறுநாள் செய்யப் போறோம்னா, முதல் நாள்தான் சொன்னார். நான் முடியவே முடியாது. வீட்டுக்கு போயிடலாம்ன்னு சொன்னேன். இவர் முடியவே முடியாதுன்னு சொல்லி கூட்டிக் கொண்டு போனார்.

அது ரொம்பவே திகிலா இருந்தது. அடுத்து விசில் கிராமம். அங்க ஒருத்தரை மற்றொருவர் விசில் அடிச்சுதான் கூப்பிடுவாங்க. அவங்க குடிலில் ஒரு நாள் தங்கி அவங்க சாப்பாட்டை சாப்பிட்டோம். அப்புறம் சிக்கிம், சிம்லா, மேகாலயான்னு டிரக்கிங் செய்தோம். ரொம்பவே சாலஞ்சிங்கா இருந்தது அந்தப் பயணம். எனக்கு இந்த அனுபவம் ரொம்பவே புதுசா இருந்தது. நாங்க போன இடத்தை எல்லாம் vlog எடுத்து யுடியூபில் பதிவு செய்தோம். எப்ப பார்த்தாலும் அது எங்களின் நினைவுகளா இருக்கும்’’ என்றவர்களிடம் அவர்களின் ரீல்ஸ் பற்றி கேட்டபோது… அது குறித்து பிரதீப் விவரித்தார்.

‘‘எனக்கு இன்ஸ்டாவில் அக்கவுன்ட் இருக்கு. இவங்க எதிலேயுமே இல்லை. நான் கல்யாணத்திற்கு முன்பிருந்தே என்னுடைய டான்ஸ் மற்றும் டிராவல் பற்றி நிறைய வீடியோ போட்டு இருக்கேன். அதன் பிறகு நாங்க லவ் செய்யும் போது இருவரும் சேர்ந்து டிக்டாக் எல்லாம் போட்டு இருக்கோம். பட்டாசு ரீல்சுக்கு பிறகு நாங்க போட்ட 90ஸ் கிட்ஸ் விளையாட்டு, பஞ்ச் டயலாக் எல்லாம் ஃபேமசாச்சு. அதன் பிறகு தான் சின்னச்சின்ன கன்டென்ட் கொடுக்க ஆரம்பிச்சோம். வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சண்டை மற்றும் சந்தோஷத்தை தான் ரீல்ஸா காமெடியா போட்டோம். நான் கன்டென்ட் சொல்வேன்.

இவங்க கொஞ்சம் மாற்றம் செய்வாங்க. அதன் பிறகு எடிட்டிங் முழுக்க இவங்க தான் பார்த்துப்பாங்க. அப்படித்தான் கிரிக்கெட் விளையாட போகும் போது மழை வர்றது, அவரை அடிக்கிற மாதிரி வீடியோ, இவர் டீக் கடைக்கு போற மாதிரி வீடியோ… இப்படி ஒன்னு ஒன்னா போட ஆரம்பிச்சோம். இப்ப எங்களின் ஒவ்வொரு ரீல்சும் 50 ஆயிரம் 60 ஆயிரம் வரை போயிருக்கு’’ என்றவரிடம் பொலி கபில்ஸ் பற்றி கேட்ட போது.

‘‘மலையாளத்தில் அடிப்பொலின்னு சொல்வாங்க. அதாவது சூப்பர். அப்ப நாங்க சூப்பர் ஜோடிகள் தானே. அதேபோல அவர் என்னை மினின்னு கூப்பிட்டா பிடிக்காது. தெரியாம கூப்பிட்டா கோச்சிக்குவேன். அதனால அவர் என்னை தங்கம்னுதான் கூப்பிடுவார். நானும் அவரை மாமான்னு கூப்பிடுவேன். மாமா… தங்கம்னு கூப்பிடும் போது மனசுக்கு நெருக்கமா இருக்கும்’’ என்று குழந்தையாக சிரித்தார் மினி.

‘‘இப்ப நான் கன்சீவா இருப்பதால், நிறைய டிராவல் செய்யணும்னு வேலைக்கு போகல. இவருக்கும் வீட்டில் இருந்துதான் வேலை. அதனால முழுக்க முழுக்க இப்ப இன்ஸ்டாவில் நல்ல நல்ல கன்டென்ட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அடுத்து ஒரு சின்ன டூர் பிளான் செய்திருக்கிறோம். பாப்பா வருவதற்குள் இந்த டூர் பிளானை முடிக்கணும்’’ என்றனர் இந்த அடிப்பொலி ஜோடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நட்பு… என் வாழ்க்கையின் வசந்தம்! (மகளிர் பக்கம்)
Next post LGBT!! (அவ்வப்போது கிளாமர்)