விட்டு விடுதலையாக… மைக்ரைன் தலைவலி!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 35 Second

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள். பொதுவாக சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிடும் தலைவலியை நாம் சாதாரண நோயாகத்தான் பார்க்கிறோம். ஆனால், தலைவலியில் 300 வகைகள் உள்ளன. ஒவ்வொரு தலைவலியும் ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மைக்ரைன் தலைவலிதான்.

ஏனென்றால், இந்த தலைவலியின் தீவிரம் தாங்காமல், தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. எனவே, மைக்ரைன்  தலைவலி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலகளவில் மைக்ரைன்  தலைவலிக்கான தினமும் அனுசரிக்கப்படுகிறது. மைக்ரைன்  தலைவலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு நரம்பியல் மருத்துவர் அருண்குமார்.

மைக்ரைன்  என்றால் என்ன.. எதனால் ஏற்படுகிறது..

பொதுவாக நாம் அனைவருமே சாதாரணமாக அடிக்கடி சந்திக்கும் உடல் ரீதியான பிரச்னை என்றால் அது தலைவலிதான். இந்த தலைவலியில் 300 வகைகள் உள்ளன. இதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது மைக்ரைன்  தலைவலியாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி ஆகும். இது ஏன் ஏற்படுகிறது என்றால், பரம்பரை வழியாக வருகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் மைக்ரைன்  இருந்திருந்தால், மரபணு வழியாக அடுத்தத் தலைமுறைக்கும் வரும். இதற்கு வேறு எந்த காரணமும் இருக்காது. இது ப்ரைமரி தலைவலி என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது. இந்த ப்ரைமரி தலைவலியிலேயே நான்கு வகைகள் உள்ளன. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது மைக்ரைன்  மற்றும் டென்ஷனினால் ஏற்படும் தலைவலிதான்.

மைக்ரைனின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்..

இந்த மைக்ரைன் பாதிப்பு என்பது ஒற்றைத் தலைவலி ஆகும். இது புருவத்திற்கு மேல் வலி தெரியும். இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது வாந்தி உணர்வு, ஒமட்டல், கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கலாம். இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் வலிக்கும். அல்லது இரண்டு பக்கமும் வரலாம். அது மெள்ள மெள்ள அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் தலையில் யாரோ இடிப்பது போன்ற தீவிரமான வலியாக மாறும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. சத்தத்தைக் கேட்க முடியாது. இதை போட்டோ ஃபோபியோ, ஃபோனா ஃபோபியா என்று சொல்வோம்.

இந்த மைக்ரேன் தலைவலியானது முதல் 2 மணி நேரம் வரை இருக்கும். அதைத்தொடர்ந்து 2 முதல் 3 நாள் வரை நீடிக்கலாம். இது பொதுவாக, தூக்கமின்மை, க்ளைமேட் சேஞ்ச், மன அழுத்தம், வேலை பளு, குளிர்ந்த பொருளை உண்ணுவது போன்ற நேரங்களில் ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடித்து சரி செய்தாலே ஒரளவு தீர்வு காணலாம். அதுபோன்று மூளையில் சுரக்கும் சில கெமிக்கல்கள் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ ரத்தக்குழாய்கள் சுருங்குவதோ அல்லது விரிவடைந்தாலோ இப்படிப்பட்ட தலைவலி ஏற்படும். அதாவது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தாலும் இந்த மைக்ரைன்  ஏற்படலாம். இந்த தலைவலி நார்மலான தலைவலியில் கூடுதல் வலியைக் கொடுப்பதால், மைக்ரைன்  உள்ளவர்களால், தலைவலி வந்துவிட்டால், வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாமல் சிரமப்படுவார்கள்.

மைக்ரைன்  வகைகள் என்ன..

மைகரேனில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, காமன் மைக்ரைன், கிளாசிக்கல் மைக்ரைன்  என இரண்டு வகைகள் இருக்கின்றன. காமன் மைகரேனில் நான் மேலே சொன்ன அறிகுறிகள் அத்தனையும் இருக்கும். கிளாசிக்கல் மைகரேனில், ஆரா இருக்கும். ஆரா என்பது மைக்ரைன்  தலைவலி தொடங்குவதற்கு முன்பு வரும் விஷூவல் அறிகுறியாகும். அதாவது, கண்ணில் கருப்பு – வெள்ளை நிறத்தில் பொட்டு பொட்டாக தெரியும். இது வெவ்வேறு வடிவத்திலும் தெரியும். இதை ஸ்கோட்டோமா என்று மருத்துவ உலகில் சொல்வார்கள். இந்த அறிகுறி வந்தால் உடனே தலைவலி தொடங்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இது பொதுவான ஆரா. இதிலேயே சிலருக்கு தலையில் சூடு ஏறுவது போன்று, கரண்ட் ஷாக் அடிப்பது போன்ற உணர்வுகளும் தலைவலி தொடங்குவதற்கான அறிகுறியாக தெரியும். இதனை சென்ஸிடிவ் ஆரா என்று சொல்வோம்.

சிகிச்சைகள்

மைகரேனுக்கான சிகிச்சை என்றால் வரும் முன் காப்பது தான் நல்லது. மைக்ரைன்  இருப்பது தெரிந்தால், மைக்ரைன்  டைரி ஒன்று பராமரிக்கப்படும். அதில் முதலில் என்ன காரணத்தினால் வருகிறது என்பதை ஆராய்வார்கள். அதாவது தூக்கமின்மையால் வருகிறதா, உணவு ஒவ்வாமையால் வருகிறதா அல்லது வாசனை திரவியங்களால் வருகிறதா, முன்பு சொன்னது போன்று வேலைப் பளுவினாலா, மன அழுத்தமா என்று எப்போது தலைவலி வருகிறது என்று பார்ப்பார்கள். பின்னர், எந்த நேரத்தில் வருகிறது. எவ்வளவு நேரம் இருக்கிறது. வலி எப்படி உணர்கிறார்கள் என்பதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

இதில் மைக்ரேன் தலைவலிக்கான சிகிச்சைகள் இரண்டு வகையில் உள்ளது. `ப்ரிவென்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்’ (Preventive Migraine treatments), `அபார்ட்டிவ் மைக்ரைன் ட்ரீட்மென்ட்ஸ்’ (Abortive migraine treatments) என்று இரண்டு வகைப்படும்.‘ப்ரிவென்ட்டிவ் மைக்ரைன் ட்ரீட்மென்ட்ஸ்’ என்பது அடிக்கடி தலைவலி வராமல் காக்கும் தடுப்புச் சிகிச்சை. அதற்கான மருந்துகளை 3 முதல் 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்.

தலைவலியைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டால் தலைவலி வருகிறது என்றால் அவற்றைத் தவிர்ப்பது, வெயிலில் அலைவதைத் தவிர்ப்பது, அதிக வாசனையுள்ள பெர்ஃபியூம் உபயோகத்தைத் தவிர்ப்பது, நேரம் தவறாமல் சாப்பிடுவது, தூங்குவது போன்றவை அவசியம்.

`அபார்ட்டிவ் மைக்ரைன் ட்ரீட்மென்ட்ஸ்’ என்பது ஒருமுறை தலைவலி வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வளிக்கும். வலி வந்த 30 முதல் 45 நிமிடங்களுக்குள் பாராசிட்டமால் பீட்டா பிளாக்கர், எஸ்.எஸ்.ஆர்.ஐ போன்ற மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலே பலன் தெரியும். மூளையில் கெமிக்கல் தொடர்பான செயல்பாடுகளால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்துவிட்டால், என்ன மாத்திரை எடுத்துக்கொண்டாலும் வலி குறையாது. அந்த நபருக்கு வழக்கமாக எத்தனை மணி நேரம் வலி நீடிக்குமோ, அத்தனை மணி நேரம் முடிந்த பிறகுதான் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மைக்ரைன்  வராமல் தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன..

பிறப்பு மூலமாக ஒருவருக்கு மைக்ரைன்  வருகிறது என்றால், அதைத் தடுக்க முடியாது. வருவதை ஒன்றும் செய்யவும் முடியாது. ஆனால், வந்துவிட்டால், அதை அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இதற்கு, டென்ஷன், கோபம், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சூடான நீரை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ரிலாக்ஸ்ஷேசன் தெரபி, மைக்ரைன்  டைரி மெயின்டன் செய்வது போன்றவற்றை செய்யவேண்டும். இவற்றை எல்லாம் கடைப்பிடித்தால் மைக்ரைனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நோய்களை விரட்டும் கற்பூரவள்ளி…!! (மருத்துவம்)
Next post போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)