என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)

Read Time:21 Minute, 1 Second

ஒரு விஷயத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று நினைத்தால், நாம் அதற்கு ஒருவரை முன்னுதாரணமாகக் கொள்வோம். உதாரணமாக, கிரிக்கெட் விரும்பிகளிடம் கேட்டால், எனக்கு ‘டெண்டுல்கர்’ போல் ஆகணும் என்பார்கள். சமூக சேவை என்று எடுத்துக் கொண்டால், அனைத்துப் பெண்களையும் கவர்ந்தவர் அன்னை தெரசா. இதுபோல் நம் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே ‘ரோல்மாடல்’ என்று ஒருவர் இருந்து விட்டால் அவர்களின் வளர்ப்பு பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை. ‘நீ அதை செய், இதை செய்யாதே!’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கத் தேவையில்லை. காரணம் சிறு பிள்ளைகள் அதிகார தோரணையில் நாம் ஆணையிடுவதை விரும்புவதேயில்லை.

முன்பெல்லாம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-பிள்ளைகள் இவர்களுக்குள் அதிக இடைவெளி காணப்பட்டது. கல்லூரி செல்லும் வரை பிள்ளைகளை அப்பா, அம்மா கண்டித்தார்கள். பெற்றோர் சொல்லுவதையே பிள்ளைகள் செய்து வந்தார்கள். இந்தக் கணினி யுகத்தில் பிள்ளைகள் அதிபுத்திசாலிகள். கால விஞ்ஞான முன்னேற்றத்துக் கேற்றபடி அவர்களின் அறிவும் திறமையும் அதீதமாக காணப்படுகிறது.

சமயங்களில், பெரியவர்களுக்குத் தெரியாத சூட்சமமான விஷயங்களை பிள்ளைகள் கற்றுத் தருகிறார்கள். இந்தப் பொருளில் இத்தகைய ‘தொழில் நுட்பம்’ தான் இருக்க வேண்டும் என்கிற மதிநுட்பம் காணப்படுகிறது. இத்தகைய புத்திசாலிப்பிள்ளைகளை நாம் முதலில் புரிந்து கொண்டு அவர்கள் மன ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் தான் நம் அறிவுரைகளை அவர்களிடம் சேர்க்க வேண்டும். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டேயிருந்தால், அவர்களுக்குப் பிடிக்காது. ‘பாலிஷாக’ சொல்லி விட்டு அவர்கள் அதில் உடன்பாடு காட்டுகிறார்களா என்று யோசிக்கலாம். சொன்ன பிறகும் அச்செயலில் ஈடுபாடு காட்டவில்லை என்றால் அவ்விஷயம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.

ஆசிரியர்-மாணவர் உறவும் அந்தக்காலம் போல் கிடையாது. ‘குரு’ என்றாலே பயந்து ஒடுங்கி நின்ற காலம் அது. இப்பொழுது ‘ஹாய் மேம்’ என்னும் நட்பு தோரணைதான். அதனால் பிள்ளைகளை வழி நடத்த ‘அன்பு’ என்கிற ஒரு ஆயுதம் நம்மிடம் இருந்தால் போதும். அதே சமயம் எப்பொழுதும் அன்பாகவே நடப்பதற்கு நமக்குத் தேவை ‘பொறுமை’. ‘பொறுமை’ எல்லை மீறும் பொழுதுதான் நமக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

அம்மா பையனைப் பார்த்து கொஞ்சும் உயரத்தில் இருக்கும் பொருட்களை எடுத்துத் தரச் சொன்னார். அவன் உடன் விருப்பத்துடன் ஓடிவந்து உதவினான். வேறு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டான். ‘இல்லை, உதவியதற்கு நன்றி’ என்று அம்மா சொன்னார். அவனும் ‘பரவாயில்லை’ என்றான். இதன் மூலம் நமக்குப் பையனின் மனநிலை புரிகிறது. அவன் அம்மாவுக்கு உதவுவதில் அக்கறை காட்டுகிறான். வேலையை விரும்பிச் செய்கிறான். உதவி கேட்பதிலும் ஒரு நயம் இருக்கிறது.

ஒரு பையன் பல நாட்களாக நோட்டுப்புத்தகத்தில் அட்டையில்லாமல் கிழிந்த பக்கங்களோடு எடுத்து வந்தான். ஆசிரியர் அவனை அட்டையிட்டுக் கொண்டு வருமாறு கூறினார். அவனுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை. மற்றொரு பையன் நோட்டிலிருந்து அட்டையை உருவி, அவன் நோட்டில் மறைத்து, ஆசிரியரிடம் நீட்டினான். அவனின் எண்ணம் ஆசிரியருக்குப் புரிந்து விட்டது. கிழிந்த நோட்டுக்கு அட்டையிட அவனுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும், அதன் முக்கியத்துவத்தை அவனுக்கு உணர்த்த நினைத்தார். ஆணையிட்டு ஒரு விஷயத்தை அறிவுறுத்தினால் வெறுப்புதான் கிட்டும் என்பதையறிந்த ஆசிரியர், அவனை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்து அமரச் சொன்னார்.

பின் மெல்ல பேச ஆரம்பித்தார். “உன் சட்டை எப்பொழுதும் மடிப்புக் கலையாமல் ‘பளிச்’ சென இருக்கிறதே! யார் துவைத்து இஸ்திரி செய்கிறார்கள்?” என்று கேட்டார். பிள்ளை மனம் அன்பிற்குப் பணிந்து ஆசையுடன் பேச ஆரம்பித்தான். “மிஸ், எங்க வீட்ல வாஷிங் மெஷின் கூட இல்ல மிஸ். எங்க அம்மாதான் தினமும் துவைத்து இஸ்திரி செய்து எனக்கு ஸ்கூலுக்கு ரெடியா வைப்பாங்க!” என்று அம்மா மீது தன் தரிசனத்தையும், ஆதங்கமான ஆசையையும் வெளிப்படுத்தினான்.

ஆசிரியர் தொடர்ந்தார். “அம்மாவின் சிரமம் உனக்கு நன்றாகவே புரிகிறது. உன் அம்மாவை அசத்த வைக்க உனக்கு நான் ஒரு ஐடியா தருகிறேன் கேள். அம்மா துவைத்து வைத்தபின் அதை நீ ஏன் இஸ்திரி செய்யக் கூடாது? அம்மாவுக்கு ஒரு ‘சர்ப்ரைஸ்’ தரலாமே! உனக்கும் பாராட்டு, அம்மாவுக்கும் சிரமம் குறையும். ஆனால் நீ கவனத்துடன் இஸ்திரி செய்ய வேண்டும். துணி கெடாமல் பத்திரமாக வேலையில் ஈடுபட வேண்டும். உனக்குப் பிடித்திருந்தால் இதை செய்யலாம்!” என்று முடித்தார்.

மறு திங்கட்கிழமை வெள்ளை சட்டையுடன் அவன் ஆசிரியரிடம் வந்து நின்றான். “மிஸ், நீங்க சொல்லி தந்தபடி செய்தேனா? எங்க அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்! எங்கிருந்துடா உனக்கு திடீர் ஞானம் வந்தது என்று என்னைக் கேட்டு துளைத்தார்கள். கட்டிக் கொண்டு முத்தம் தந்தார்கள். சாக்லெட் தந்தார்கள். அது மட்டுமா, நீ ரொம்ப ‘ஹெல்ப்புல்’ என்று பாராட்டினார்கள் மிஸ்!” என்றான். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாற் போல ஆசிரியர் ஆரம்பித்தார். “ நீ அழகு, உன் ஆடை பார்க்கவே ‘பளிச்’. உன் நோட்டும், புத்தகங்களும் அட்டையுடன் காணப்பட்டால் எல்லாமே அழகுதானே! உன்னிடம் எவ்வளவு திறமைகள் இருக்கின்றன. அவற்றைக் காட்டு. மறைத்து வைக்காதே” என்றார்.

பையனுக்கு எல்லாமே புரிந்தது போல் இருந்தது. மறு நாளே அனைத்து பழைய நோட்டுகளும், புது அட்டையுடன் அலங்கரித்துக் காணப்பட்டன. சிறிய விஷயம், அதைக் கண்டிக்காமல், அன்போடு கலந்த பாடமாக புகட்டப்பட்டது. இத்தகைய பொறுமை தேவைப்படுகிறது. ஆக ஆசிரியர் பொறுமை, அவனுக்கு அறிவைப் புகட்டவும், அம்மாவின் பொறுமை அவனுக்கு வேலைகளை கற்றுத் தரவும் உதவுகிறது. இதில் இடையில் எந்தவித மனஸ்தாபங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கற்பிப்பவர் பிள்ளைகள் மனநலம் குறித்து அறிந்து வைத்திருப்பார். அதை சமயத்திற்கேற்றாற் போல் செயல்படுத்தும் பொழுது செய்யும் சேவையில் வெற்றி பெறுகிறோம்.

படிப்புடன் மட்டுமல்லாது அவர்கள் பொருட்களை அடுக்கும் முறை, பராமரிக்கும் முறை, தேர்வுக்கு படிக்க வேண்டிய பாடங்கள் படித்து முடித்தவை, படிப்பு சம்பந்தமாக வாங்க வேண்டிய பொருட்கள் போன்றவற்றிற்கான அட்டவணையும் தயாரிக்கச் செய்வோம். இப்பொழுது பெரும்பாலும் கணினி, கைபேசி களிலேயே ‘மெமரி கார்ட்’ வைத்துக் கொள்கிறார்கள். முன்பு கணினி அவ்வளவாக இல்லாத சமயத்தில் அனைத்தையும் அட்டவணையிட்டுச் செய்வது நல்ல ஒரு பழக்கமாக இருந்தது. இப்பொழுது கூட மேற்கத்திய நாடுகளில், நிறைய வீடுகளில் ‘சாப்ட் போர்டு’ வைத்திருக்கிறார்கள். முக்கிய விஷயங்களை அதில் குறித்து வைப்பார்கள். குறிப்பிட்ட வேலை முடிந்தவுடன் அதை அழித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் பிள்ளைகள் தங்கள் அறை, மேசை போன்ற இடங்களை சுத்தப்படுத்தி, வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி, அழகுற அமைக்க வேண்டும். தனக்குப் பிடித்த தலைவர் படங்களை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, தாமும் முன்னேறுவதற்கான நல்லெண்ணங்களை கடைபிடிக்க வேண்டும். இது போல் எந்தப் பிள்ளைகள் சரிவர செய்கிறார்களோ அவர்கள் பெற்றோரிடமிருந்து, செய்த செயல்களை பட்டியலிட்டுக் கொண்டு வரலாம்.

அப்படி எடுத்து வருபவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தேன். சிறிது நாட்களில் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. பரிசு தருவதற்கு நிறைய செலவானாலும், என் நோக்கம் நிறைவேறியதில் எனக்குப் பெருமையாக இருந்தது. பெற்றோர் -ஆசிரியர் கூட்டத்தில் நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றியதற்கு பெருமைப்பட்டனர்.

ஊக்கப்படுத்துவதற்கு இது போன்ற நிறைய விஷயங்கள் கை கொடுத்தன. அது மகிழ்ச்சியும் சுட. பிள்ளைகளுக்கு எதில் விருப்பம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த விஷயங்களில் நாமும் அக்கறை காட்டுவது போன்று சேர்ந்து ஒத்துழைத்தால் அவர்களுக்கு உற்சாகம் வந்து விடும். நட்போடு பழகி, அவர்கள் வழியில் நாமும் செயல்பட்டால் எந்தவிதமான செயல்களையும் புரிவதற்கு தயாராகி விடுவார்கள். உதாரணமாக மழலை பேசும் குழந்தையின் பேச்சை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. குழந்தை மொழியில் நாமும் பேச ஆரம்பிப்போம். குழந்தை மொழியில் பேசும்போது அவர்கள் நம்முடன் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

ஒவ்வொரு செயலும் அப்படித்தான். அவர்கள் போன்று ‘ரைம்’ சொன்னால் அவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். கதை சொல்லிக் கொண்டே பாட்டு பாடிக் கொண்டே ஏதேனும் வேலை செய்தால், நம்மைப் பார்த்து அவர்களும் வேலை செய்ய ஆரம்பிப்பார்கள். ஒரு இரண்டு வயது குழந்தை ‘ரோபோ’ மூலம் வீடு முழுவதையும் சுத்தம் செய்வதைக் கண்கூடாக பார்த்தோம். அது ஓடும் சப்தம் குழந்தைக்கு மிகவும் பிடித்தால், அத்துடன் சேர்ந்து தானும் ஓடி ஓடி இயக்கியது.

ஒரு தாய் தோட்டத்திற்கு நீர் ஊற்றுவதை பார்த்துக் கொண்டிருந்த சிறிய பையன், தானும் வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, சிறிய ‘கப்’பினால் தொட்டிகளுக்கு நீர் ஊற்றியது. கண்ணால் பார்த்ததை கையால் செய்ய குழந்தை விரும்புகிறதென்றால், அந்த வேலை அதற்குப் பிடித்துள்ளது என்று அர்த்தம். நாம் ஆடிப்பாடிக் கொண்டு ஒரு வேலை செய்தாலும், பிள்ளை அதை கண்டு கொள்ளவில்லை என்றால் குறிப்பிட்ட வேலை பிள்ளைக்கு விருப்பமில்லாதது என்று புரிந்து கொள்ளலாம்.

இப்படியாக பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து கொண்டு, அவர்களால் செய்யக்கூடிய வேலைகளை ஊக்கப்படுத்தலாம். வளர வளர, அவர்கள் அத்தகைய செயல்களை திறம்படச் செய்ய விரும்புவார்கள், பிள்ளைகள் சொல்வதைச் கேட்பதில்லை என்று சொல்லாமல், அவர்களுடன் ஒன்றி, பிடித்தமானவற்றை கண்டுபிடித்து பழக்குவதுதான் இன்றைய காலகட்டத்திற்கேற்றபடி, நம் வழிக்குக் கொண்டு வரும் உபாயமாகும்.

ஒரு சிறுமி ‘படபட’ வென்று வேகமாகப் படித்து, எல்லோரையும் அசத்தி விடுவாள். அவர்கள் வீட்டில், அவள் ரொம்ப வேகமாக அனைத்தையும் படித்து முடித்து விடுவதாகவும், புத்திசாலி எனவும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர். கேட்கும் பொழுது மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. விடைகளை சொல்லும் ெபாழுது சில வார்த்தைகளை முழுங்கி வேகமாக அடுத்த வார்த்தைக்குச் சென்றுவிடுவாள். அதுபோல் சில எழுத்துக்களை தவறாகவே உச்சரிப்பாள். உதாரணத்திற்கு ‘ஞ’ என்ற எழுத்தை ‘ங’ என்பாள், ‘தே’ என்ற எழுத்தை ‘தெ’ என்பாள். நாங்கள் கற்பிக்கும் தொழிலில் இருந்தால், அவளின் தவறுகளை திருத்த நினைத்தோம்.

வீட்டில் நன்றாகப் படிக்கிறாள் என்பதற்காக, செய்யும் தவறை திருத்தாமல் இருக்க முடியுமா என்ன? பெருமையுடன் கூறிக் கொள்ளும் பெற்றோர் மனதையும் கஷ்டப்படுத்த விருப்பமில்லை. ஒரு குழந்தை தப்பாகவே படித்து கொண்டிருந்தால், பின்னால் பெரிய பிழையாக மாறும் பொழுது, அவளே தன்னை யாரும் திருத்தவில்லையே என்று நினைக்கவும் கூடாது. ஒரு நாள் அவளை அழைத்து உயிர் எழுத்துக்களை வரிசைப்படுத்தச் சொன்னோம்.

நிறைய பிழைகள் இருந்தன. அவற்றைத் திருத்தச் சொன்னபின், உச்சரிக்கச் செய்தோம். நிறை பிழைகள் செய்தாள். பின் அதையும் திருத்தி உச்சரிப்புக்களை சரிவர சொல்லித் தந்தோம். அவளிடம் “ நீ உன்னை இப்பொழுது ஆசிரியராக நினைத்துக் கொள். இதற்கு எவ்வளவு மதிப்பெண் தருவாய்? என்ன மாதிரி குறை எழுதுவாய்?” என்றோம். அவள் சொன்னாள் “ஏழு மதிப்பெண் பன்னிரண்டுக்கு தரலாம், எழுத்துக்களை சரியாக உச்சரிக்க வேண்டும்” என்று குறை எழுதுவேன் என்றாள். அவள் பிழையை அவளே உணரும் விதத்தில் காயப்படுத்தாமல் வெற்றிகரமாக பாடம் புகட்டினோம். சில வார்த்தைகள் அல்லது சொற்கள் வாயில் நுழைய கஷ்டப்படும் பொழுது, அவற்றைத் தள்ளிவிட்டு அடுத்த வார்த்தைக்குச் செல்ல முயலும் பொழுது, வேகமாக பிறருக்கு தவறு தெரியாவிதத்தில் படித்து விடுவதால் இந்நிலை வந்தது.

இவ்வளவு பொறுமையோடு, நாம் விளக்கி எடுத்துரைத்தபின், நமக்கும் பிழை திருத்திய திருப்தி. அவளும் மனக் கஷ்டப்படாமல் தன் தவறை புரிந்து கொண்டாள். திருத்தும் விதமும் அவர்கள் செய்யும் பிழையும் கற்பிப்பவரால் கண்டு கொள்ள முடியும். தெரிந்தும் பிழையை திருத்தாமல் அல்லது முயற்சி எடுக்காமல் இருந்தால் அது நம் தொழிலுக்கு செய்யும் நியாயமாக ஆகாது. படிக்கும் வேகத்தை வைத்து ஆராய்ச்சி செய்து தவறுகளை கண்டுபிடிப்பது என்பது பெற்றோர்களுக்கு சாத்தியமாகாது.

தவறு இருந்தாலும் ‘தைரியமாக’ சப்தம் போட்டு ஆசையுடன் படிக்கும் பிள்ளையை நாம் தாழ்த்திப் பேசவும் கூடாது. அவளின் படிப்பு ஆர்வமும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை பொறுமையுடன், நேரம் ஒதுக்கி, தனிப்பட்ட கவனம் செலுத்திதான் பிள்ளைகளை தன் தவறை புரிந்து கொள்ள செய்ய வேண்டும். அப்படியில்லாமல், நல்லாத்தானே படிக்கிறான் அல்லது படிக்கிறாள் என்று விட்டு விடுவோமானால், நிறைய பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டாகும்.

அதே பிள்ளை கல்லூரி சென்று, தவற்றுடனே படித்தால், உடன் இருக்கும் சக மாணவர் கேலி செய்ய, “எந்தப் பள்ளியில் படித்தாய்? உச்சரிப்புக் கூட சரியில்லையே என ஆசிரியர் கேட்க, பிள்ளைக்கு மனம் எவ்வளவு கஷ்டப்படும்?” அதைப் பார்க்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல்தான் ஏற்படும். பொறுமை, நிதானம் இவற்றோடு அன்பான அனுசரணைதான் நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்களே கிடையாது.

அதுவும் பிள்ளைகள் வாழ்க்கை என்பது விளையாட்டுத் தனத்தோடு சேர்ந்த குறும்புகள் நிறைந்ததுதான். அவர்கள் வேண்டுமென்று எதையும் செய்வதில்லை. திட்டுவார்களோ, அடிப்பார்களோ, ஏளனம் செய்வார்களோ என்கிற அடிப்படை பயம் மனதில் இருப்பதன் பிரதிபலிப்புதான் சில பிழைகள்.இதைப் புரிந்து கொள்பவர் பெற்றோர். அதைத் தெரிந்து திருத்த முயல்பவர்தான் கற்பிப்பவர் என்னும் ஆசிரியர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)
Next post நலம் காக்கும் நவதானியங்கள்!! (மருத்துவம்)