ஆரோக்கியம் காக்கும் வைட்டமின்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 34 Second

உணவு ரகசியங்கள்

ரத்தம் உறைதலுக்குக் காரணமாக இருக்கும் வைட்டமின் ‘கே’ வைக் கண்டுபிடித்தவர் டச்சு நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியல் வல்லுனர் கார்ல் பீட்டர் ஹென்ரிக் டேம் என்பவர்தான். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களுள் ஒன்றான வைட்டமின் ‘கே’ வைக் கண்டறிந்ததற்காக 1943ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. கொழுப்பு நீக்கப்பட்ட உணவு அளிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு ரத்தம் உறையாமல், ரத்தப்போக்கு ஏற்பட்டதைக் கவனித்தார்.

பிற வைட்டமின்கள் ஏ, டி, ஈ உள்ள உணவைக் கொடுத்தபிறகும் ரத்தப்போக்கு நிற்காததைக் கண்ட அவர், ஆல்பால்பா (Alfalfa)) என்னும் ஒருவிதத் தாவரம் மற்றும் அழுகிய மீன் போன்றவற்றை உணவாகக் கொடுத்தபிறகு, ரத்தம் சரியான முறையில் உறையத் துவங்கியது. இப்பொருட்களிலுள்ள, ரத்தம் உறைதலுக்குக் காரணமாகச் செயல்படும் அந்த நுண்பொருள் கொழுப்பில் கரையக்கூடிய புதியவகை வைட்டமின் என்று கண்டறிந்து, அதற்கு வைட்டமின் ‘கே’ என்று பெயரிட்டார்.

வைட்டமின் ‘கே’ – செயல்பாடுகள்

மனித உடலில், மிக முக்கியமான மூன்று பணிகளை வைட்டமின் ‘கே’ செய்கிறது. அவை ரத்தம் உறைதலுக்கு உதவி செய்வது, எலும்புகளில் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றம் மற்றும் ரத்தம் உறைதலுக்குத் தேவையான கால்சியம் அளவினை ஒழுங்குமுறைப் படுத்துவது. இவற்றுள் மிகப் பிரதானமாகப் பார்க்கப்படுவது, ரத்தம் உறைதலுக்கு உதவிசெய்யும் பணிதான். இதனால், வைட்டமின் ‘கே’விற்கு, “இரத்தம் உறைதல் வைட்டமின்” (Blood coagulating vitamin) என்று வேறொரு பெயரும் உண்டு.

ரத்தம் உறைதலும் வைட்டமின் “கே” வும்

உடலில், ஏதேனும் ஓரிடத்தில் சிராய்ப்பு, வெட்டு, சிதைவு அல்லது காயம் ஏற்பட்டால், ரத்தம் வெளியேறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ரத்தம் வெளியேறுவது அல்லது கசிவது, ஏறக்குறைய 1 முதல் 9 நிமிடங்களுக்கு நிகழலாம். இது சராசரியான அளவு. அதன்பிறகு, ரத்தம் வெளியேறுவது சிறிது சிறிதாகக் குறைந்து, அவ்விடத்தில் கொழகொழப்பான அல்லது சற்றே அரைதிட நிலையில் ரத்தநுண்பொருட்கள் உருவாகி, ரத்தப்போக்கினை நிறுத்திவிடும். இதைத்தான் “இரத்தம் உறைதல்” என்கிறோம். இந்த நிகழ்வு, சாதாரணமாக 10 முதல் 13 நொடிகளில் நடந்து முடிந்துவிடும். இந்த ரத்தம் உறைதல் நேரம் அதிகரிக்கும்போது, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதும், நேரம் குறையும்போது, மிக விரைவாக திடப்பொருள் உருவாகிவிடுவதும், ரத்தத்தில் இருக்கும் பிற பொருட்களையும், வைட்டமின் ‘கே’ வையும் பொறுத்து அமைவதாகும்.

ரத்த உறைதல் நிகழ்வு நான்கு நிலைகளில் ஏற்படுகிறது. அவை, காயம் ஏற்பட்ட இடத்தில் நசுங்கிய நுண்ணிய இரத்த நாளங்கள் சுருங்குதல், ரத்தத்திலுள்ள ரத்தத் தட்டுகள் தற்காலிகமான அடைப்பினை ஏற்படுத்துதல், வெளியேறும் ரத்தம் சிறிது சிறிதாக திடநிலையை அடைதல், இறுதியாக, ரத்தத்திலிருக்கும் ‘பைப்ரின்’ என்னும் பொருள் காயத்திற்கு மேல் நுண்ணிய வலைப்பின்னலை ஏற்படுத்தி, ரத்தம் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்துதல்.

ரத்தம் உறைதல் நிகழ்வு ஏற்படுவதற்கு, ஏறக்குறைய 13 காரணிகள் தேவைப்படுகின்றன. பைப்ரினோஜன், புரோத்திராம்பின், திராம்போபிளாஸ்டின், கால்சியம் அயனிகள் உள்ளிட்ட இவை ரத்தத்திலேயே இருக்கின்றன. இவற்றுள் புரோத்திராம்பின், ஸ்டேபிள் காரணி, பிளாஸ்மா திராம்போபிளாஸ்டின் மற்றும் ஸ்டுவார்ட் காரணி போன்ற நான்கு காரணிகள் உருவாகுவதற்கு, வைட்டமின் ‘கே’ மிகவும் அவசியம். ரத்தம் உறைதலுக்குத் தேவையான இந்தக் காரணிகளைத் தயாரிக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது.

வைட்டமின் ‘கே’ வகையும் உணவுகளும்

இயற்கையில் வைட்டமின் ‘கே’, மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை, வைட்டமின் K1 (பில்லோகுயினான்ஸ்),  வைட்டமின் K2 (மெனாகுயினான்ஸ்) மற்றும்  வைட்டமின் K3 (மெனாடயோன்). இவற்றுள் K1 அடர்பச்சை கீரை, காய்களில் அதிகமாகவும், K2 வகை பாக்டீரியாக்களால் புளித்தலுக்கு உள்ளான தானியம் மற்றும் பால் பொருட்களிலும், K3 வகையானது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு மருந்து மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களிலும் உள்ளது.

பீட்ரூட் மற்றும் டர்னிப் கீரைகள், அடர் பச்சை கீரைகள், பசலைக் கீரை போன்றவற்றில் 100 கிராமிற்கு 100 மைக்ரோ கிராம் முதல் 500 மைக்ரோ கிராம் அளவில் வைட்டமின் ‘கே’ இருக்கிறது. பிற காய்களில் 100 கிராமிற்கு 30 முதல் 80 மைக்ரோ கிராம் அளவில் வைட்டமின் ‘கே’ உள்ளது. பால் பொருட்கள் மற்றும் தானிய வகைகளில் 100 கிராமிற்கு 10 மைக்ரோ கிராம் அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே இருக்கிறது. ஒருவர் இவற்றை சரிவிகித உணவாக உண்ணும் நிலையில், வைட்டமின் ‘கே’ போதுமான அளவில் உடலுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும்.

வைட்டமின் ‘கே’ – தேவையான அளவு

ஒரு மனிதனின் சராசரி உடல் எடைக்கு,
1 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் ‘கே’ தேவை. எனவே, 65 கிலோ உடல் எடையுடன் இருப்பவருக்கு 65 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் ‘கே’ தேவைப்படுகிறது. இருப்பினும், வைட்டமின் ‘கே’ குறைபாடு என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகத் தீவிரமாக இல்லாததாலும், குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே அரிதாக வைட்டமின் ‘கே’ குறைபாடு ஏற்படுவதாலும், இந்த வைட்டமினுக்கான தேவையான அளவைப் பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மட்டும், 0.5 – 1.0 மில்லி கிராம் வைட்டமின் ‘கே’ வை ஊசிமூலம் மருந்தாகச் செலுத்துவதால், இக்குறைபாடு நீங்கும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

வைட்டமின் ‘கே’ வின் குறைபாட்டு நிலை

வைட்டமின் ‘கே’ குறைபாட்டினால் ஏற்படும் பிரதானமான நிலை அதிக ரத்தப்போக்குதான். சில நேரங்களில் 10 முதல் 13 நொடிகளில் நிகழக்கூடிய “ரத்தம் உறைதல்” நிகழ்வு,
கட்டுப்படுத்த முடியாத அதிக ரத்தப்போக்காக மாறும்போது, உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தும். இதற்குக் காரணம், வைட்டமின் ‘கே’ உட்பட உறைதலுக்குக் காரணமான பிற காரணிகளும் கிடைக்காமல் போவதுதான். வைட்டமின் ‘கே’ குறைபாடு, மனிதர்களுக்கு அரிதாகவே ஏற்படுகிறது என்றாலும், குடலின் உள்சுவர்களை சிதைத்து, கொழுப்புச்சத்து உட்கிரகித்தலைத் தடுக்கும் நீண்ட கால நோய்கள், அதற்கான மருத்துவ சிகிச்சைகள், சில வகையான கல்லீரல் நோய்கள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

பிறவியிலேயே ‘ஹீமோபிலியா’ என்னும் அதிக இரத்தப்போக்கினை ஏற்படுத்தும் நோய் இருக்கும் குழந்தைகளுக்கு ‘மெனாடயோன்’ என்னும் வைட்டமின் K3 வகை மருந்தாகச் செலுத்தப்படுகிறது. சில நேரங்களில் இடுப்பெலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருக்கும் முதியவர்களுக்கும் வைட்டமின் ‘கே’ குறைபாடு ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகளின் விவசாயத் துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் ‘கே’ வின் மிகைநிலை

வைட்டமின் குறைபாட்டு நிலையைப் போலவே வைட்டமின் ‘கே’ மிகை நிலையும் அரிதாகவே ஏற்படுகிறது. அதிக வைட்டமின் ‘கே’ உட்செலுத்துவதால், பச்சிளங்குழந்தைகளின் ரத்தத்தில் அதிக ‘பில்லிரூபின்’ என்னும் நிறமி சேர்வதால் மூளைபாதிப்பு ஏற்படலாம். சாதாரணமான மனிதர்களுக்கும் முறையான உணவுப்பழக்கம் இருப்பவர்களுக்கும் அவ்வளவாக ஏற்படுவதில்லை. வைட்டமின் ‘கே’ செறிவூட்டம் செய்யப்படும் குழந்தைகளின் ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், உலர்பால் மற்றும் சார்ந்த பொருட்கள், உடனடி பானங்கள் போன்ற சில உணவுகளை நீண்ட நாட்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் போது மிகைநிலை ஏற்படலாம். இதனால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள்காமாலை, ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒலிம்பிக்ல இந்தியாவுக்காக ஓடணும்!! (மகளிர் பக்கம்)
Next post வாசகர் பகுதி!! (மருத்துவம்)