கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 19 Second

பிள்ளைகள் என்னும் குழந்தைகள் அந்தந்த வயதில் குறும்புகளைச் செய்வதுதான் இயல்பு. சொல்லும் செயல்களை மட்டும் செய்துவிட்டு, வாய் திறக்காமல் சென்றுவிட்டால், அது ரசிக்கும்படி இருக்காது. சிறுசிறு விஷமங்கள்கூட நாம் ரசிக்கும் வண்ணம் இருப்பதே குழந்தைகளுக்கான சிறப்பம்சமாகும்.

பகவான் கிருஷ்ணரே சிறுவயதில் எத்தனை லீலைகளை நடத்தியிருக்கிறார். அப்படியிருக்கையில், மனிதப்பிறவியாகிய நாம் குழந்தைகளின் விஷமங்களையும், குறும்புகளையும் ரசிக்க வேண்டாமா? மழலைச் சொல்லை எப்படியெல்லாம் கேட்டு ரசிக்கிறோமோ, அதேபோல் விஷமங்களையும், குறும்புகளையும் ரசிப்பதுடன் மட்டுமல்லாது, ஏன் அத்தகைய குறிப்பான செயல்களைச் செயல்படுத்துகிறார்கள் என்று யோசிக்கலாம். உதாரணமாக, ஒன்றைச் சொல்லலாம்.

ஒரு சிறுவனுக்கு ‘சாக்லெட்’ மீது அப்படியொரு மோகம். அவன் பெற்றோர், அவனை தினமும் ‘சாக்லெட்’ சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்லவென்றும், பல் கெட்டுவிடுமெனவும் கூறி எப்பொழுதாவது வாங்கித் தந்தார்கள். அவனும் சமத்தாக இருந்துள்ளான். கல்லூரியில் சேருவதற்காக ஒரு உறவுக்கார பையன் சில நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தான். அந்த உறவுக்கார பையன் தினமும் பெரிய ‘சாக்லெட்’ வாங்கி சாப்பிடுவதை சிறுவன் பார்த்திருக்கிறான்.

சிறுவன் மனம் ஏங்க ஆரம்பித்தது. இதில் அவன் தப்பு எதுவும் கிடையாது. குழந்தை மனதுக்கு பிடித்த பொருளுக்கு ஆசைப்பட்டது. தெரு மூலையில் இருக்கும் கடையில் சென்று ஒருநாள் ‘சாக்லெட்’ எடுத்துள்ளான். கடைக்காரருக்கு கோபம் வந்து, சிறுவன் என்றதால் எதுவும் சொல்லாமல் பெற்றோரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

பெற்றோர் மனம் வருந்தி, அவனுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைத்தனர். அடிக்கடி அவனுக்கு வாங்கித்தந்து, அறிவுரையும் வழங்கினர். பிஞ்சு மனம், பிள்ளைகளுக்கே உரித்தான மிட்டாய் ஆசை என்றுதான் சொல்ல வேண்டும். கல்லூரி சேரக்கூடிய முதிர்ச்சியடைந்த பையன், சிறுவன் எதிரே காட்டாமல் இருந்திருக்கலாம் அல்லது அவனுக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். இரண்டும் நடக்காததால், சிறுவனின் மனம் ஆசையைத் தூண்டியிருக்கிறது. முதலிலேயே கண்காணிக்கப்பட்டதால், அவன் ரொம்ப நாணயமானவனாக வளர்கிறான். இல்லாவிடில், இச்சிறு பழக்கம் அவன் எண்ண அலைகளையே மாத்தியிருக்கலாம். பெரும்பாலும் பிள்ளை களின் குறும்பு விஷயங்கள் சாப்பாடு தொடர்பானவைகளாகவேயிருக்கும்.

காரணம், அச்சிறுவயதில் அவர்களுக்கு குடும்பக்கவலைகளோ, வேறுவிதமான யோசனைகளோ கிடையாது. சிறிய வகுப்புகளாயின், படிப்பு சுமைகளும் தெரியாது. நன்கு விளையாட வேண்டும், பிடித்ததை சாப்பிட வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் போன்றவைதான் அவர்கள் வாழ்க்கை. இவற்றையெல்லாம் முழுமையாக ஆலோசித்துப் பார்த்தால், அவர்கள் செய்யும் தவறுகள் நமக்கு பெரிதாகத் தெரியாது.

அவர்கள் போக்கிலேயே போய், அன்போடு பேசி திருத்துவதுதான் பெரியவர்களின் நோக்கமாக அமைகிறது. ரசிப்பதை மகிழ்ச்சி தருவதாகக் கொண்டால், குறும்புத்தனத்தையும் குறை கூறாமல் திருத்துவதும் ஒவ்வொருவரின் விருப்பமாக இருத்தல் அவசியம். இதைத்தான் கற்பிப்பவரும் பெற்றோரும் சேர்ந்து செதுக்குகிறார்கள். அப்பொழுதுதான் பள்ளி முடிக்கும் சமயம், அவன் மிளிரும் இளைஞன் அல்லது ‘இளைஞி’யாக மிளிர்கிறார்கள்.

அதிலும் எப்போதும் பிள்ளைகளுக்குத் தன் சாப்பாட்டைவிட பிறர் உணவை ரசிப்பதில் ஆர்வம் அதிகம். திடீரென புதிதாக ஒரு பொருளை கேட்கிறார்களென்றால் யாரோ அந்த உணவை சாப்பிடுவதை பார்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம். நானும் ஒரு தாயாக இருந்ததால், ஒருசமயம் டப்பாவில் புதிய அயிட்டங்கள் செய்து சாப்பிடச்சொல்லி அனுப்பி வைத்தேன். எப்பொழுதுமே ஒருவருக்கு மட்டும் தராமல், நண்பர்களுக்கும் சேர்த்து நிறைய அனுப்பி வைப்பதுதான் பழக்கம்.

அன்றைய தினம் அந்த சாப்பாடு அயிட்டம் கொண்ட டப்பா வேறு ஒரு சிறுவன் கையில் இருந்ததைப் பார்த்தேன். மகனிடம், ‘நீ ஏன் இன்று சாப்பிடவில்லை,’ ‘டப்பாவை வேறு சிறுவன் கையில் பார்த்தேனே?’ என்றேன். மகன் சொன்ன பதில், ‘‘அம்மா, அவன் எனக்கும் கொஞ்சம் தந்தான்’’ என்பதுதான். ஆக, பிள்ளைகளுக்குள் எந்தவித பாகுபாடோ என்னுடைய பொருள், உன் பொருள் என்றோ வேறுபாடு கிடையாது. பிடித்தப் பொருளை சாப்பிடுவதில்தான் இஷ்டம்.

புதிய புதிய பொருட்களை ருசிப்பதில் அப்படியொரு ஆசை. அது ‘சாக்லெட்’ ஆகவும் இருக்கலாம். ‘பிரியாணி’யாகவும் இருக்கலாம். ‘பிரியாணி’ பற்றி நிறைய அனுபவங்களை கேள்விப்படுவோம். அதுவும் ‘ரம்ஜான்’ முடிந்தவுடன் பிள்ளைகள் சிலர் பிரியாணிக்காகவே காத்திருப்பார்களாம். ஒரு சிறுவன் தன் நண்பரிடம் ‘ரம்ஜான் பிரியாணி’ கேட்டிருக்கிறான்.

இரண்டு, மூன்று நண்பர்கள் கேட்டதால், அவன் தனக்கும் சேர்த்து மூன்று டப்பாக்களில் கொண்டு வந்தானாம். அன்று பிள்ளைகளுக்கு சாப்பாட்டு நேரத்திற்கு முன்பாக, விளையாட்டு பாட திட்டத்தில் இருந்திருக்கிறது. ‘‘விளையாட்டிற்கு கை கழுவி வருவதற்குள் நேரமாகி விடுமே, அதற்குள் வேறு யாரேனும் பிரியாணியை காலி செய்து விட்டால் என்ன செய்வது? விளையாட போகாவிட்டாலும் ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அனுப்பி விடுவார்’’ இவையெல்லாம் பிரியாணி கேட்ட பையனின் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாம். எப்படி இதையெல்லாம் தவிர்த்து பிரியாணியை ருசிக்கப்போகிறோம் என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்ததாம்.

சட்டென உடற்பயிற்சி ஆசிரியரிடம் போனானாம். தனக்கு முதல் நாளே ஜுரம் இருந்ததாகவும், இப்பொழுதும் ஜுரம் வருவதுபோல் இருப்பதாகவும், ரொம்பவும் தலைவலி இருப்பதாகவும் சொன்னானாம். ஆசிரியர் மிகுந்த அனுதாபத்துடன் வகுப்பிலேயே போய் ஓய்வெடுத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார். ‘அப்பாடா!’ என்று நிம்மதி மூச்சுடன் வகுப்பிற்கு வந்து நண்பன் எடுத்து வந்த முதல் ‘பிரியாணி’ டப்பாவை ருசிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனின் மற்றொரு நண்பன் ‘பிரியாணி ப்ரியன்’ விளையாட்டில் மாட்டிக் கொண்டானாம்.

முதல் சிறுவன் வகுப்பில் அமர்ந்து விடவே அவனுக்கு விளையாட்டில்கூட ‘மூடு’ இல்லையாம். சிறிது நேரம் ஓடிவிட்டு கால் ‘சறுக்கி’ விட்டதாக நொண்டிக்கொண்டே சென்றானாம். பார்த்த ஆசிரியர், போய் ஓய்வெடுக்கச் சொன்னாராம். ஒரே ஓட்டமாக ஓடி வந்து பார்த்தால், முதல் சிறுவன் இரண்டாவது ‘டப்பா’விலிருந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தானாம். எனவே இரண்டாம் ‘பிரியாணி ப்ரியன்’ மூன்றாவது டப்பாவையும் முழுக்க காலி செய்துவிட்டானாம். கொண்டுவந்த பையனுக்கு கேண்டீன் ‘சாண்ட்விச்’தான் கிடைத்ததாம். என்ன ஒரு பிரியாணி ஆசை! எப்படியெல்லாம் அவர்களை நடிக்க வைத்துள்ளது!

அவர்கள் வாயிலிருந்தே இந்த நிகழ்வைக் கேட்கும்பொழுது, அவர்களின் சிறுபிள்ளைத்தனமும், கள்ளங்கபடில்லா உண்மை மனமும் வெளிப்படுகிறது. இதையெல்லாம் திட்டித் திருத்த முடியுமா? நன்கு படித்துத் தேர்ச்சியடைந்தால் பிரியாணி வாங்கித் தருவதாகத்தான் சொல்ல வேண்டும். இதுதான் பிள்ளைகள் வாழ்க்கை.அவர்களைத் திட்டவும் கூடாது; அதே சமயம் இதுபோன்ற விஷயங்களை செய்யக்கூடாது, பொய் பேசவே கூடாது என்கிற கருத்துக்களை அன்போடு பேசி புரிய வைத்தல் அவசியம். அதற்கான பொறுமையும், மனப்பக்குவமும் நமக்கு அவசியம் தேவை. புரிய வைப்பதற்கு பல யுக்திகளையும் கையாள வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள், நம் ஒவ்வொரு வரின் வாழ்விலும் சிறுவயதில் நிறைய நடந்திருக்கும். வளர்ந்தபின் நாம் அவற்றை நினைத்துப் பார்த்தால் கேவலமாகத் தோன்றும். விஷயங்கள் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம். ஆனால் குறும்புத்தனங்கள் நிறைந்ததுதான் பள்ளிப்பருவம் என்பது. அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் இத்தகைய நிகழ்வுகள் நம்மை உற்சாகப்படுத்தும். அதே பிள்ளைகள், வளர்ந்து ஆளானவுடன் அதே உணவை விரும்பாமல்கூட இருந்துவிடுவார்கள். எத்தகைய சாப்பாட்டுப் பொருளும் அவர்களை ஈர்க்காது.

வேலையில் சேர்ந்து பெரிய பிள்ளைகளாக வளர்ந்து விட்டால், வாழ்க்கையில் தன்னைத்தானே பார்த்துக்கொள்வார்கள். எதுவுமே அவர்களுக்கு இயலாததால்தான் பிறரிடம் எடுத்துச் சாப்பிட்டார்கள் என்று சொல்லவே முடியாது. அந்த மாதிரி விஷயங்களில் பிள்ளைகளுக்கே உரித்தான குறும்புத்தனமும், விளையாட்டுத்தனமும்தான் இயற்கை.

‘பிரியாணி’ விஷயம் ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொன்னதாக இருந்தாலும், நிறைய விஷயங்கள் பலப்பல கோணங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். சில பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்களில் ஆர்வம் காட்டுவார்கள். புதிதாக எதையேனும் பார்த்தால், தன்னுடையதாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதெல்லாம் பிள்ளை பருவத்தில் சகஜம்தான். இவற்றையெல்லாம் தப்பாகப் புரிந்துகொண்டு பிள்ளைகளை மட்டம் தட்டுவதோ? மற்றவர் எதிரே அவமதிப்பதோ மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம்.

பிள்ளைகளுடன் பழகுபவர்களுக்கு இவையெல்லாம் நன்றாகவே புரியும். அதனால் மீண்டும் மீண்டும் நடந்ததை சுட்டிக்காட்டாமல், இனிமேல் குறிப்பிட்ட விஷயங்கள் நடக்காமலிருக்க, நீதி தரும் கருத்துக்களை ருசியுடன் அவர்கள் மனதிற்கு எடுத்துச்செல்ல வேண்டும். நம் தாத்தா – பாட்டிகள் எப்படி கதைகள் சொல்லி, நம்மை வளர்த்தார்களோ, அதுபோல் நாமும் நீதிக்கதைகள் சொல்லியும், இதிகாச புராணங்களில் வரும் ரசிக்கும்படியான சம்பவங்களையும் எடுத்துக்காட்டாகச் சொல்லி புரிய வைக்கலாம்.

நேருஜி, தன் சுயசரிதையில் இளமைப்பருவத்தில் தன் பாட்டி சொல்லிய கதைகள் பற்றியெல்லாம் விளக்கியிருப்பார். கங்கை நதி மீது தனக்கிருந்த மதிப்பு வளரக்கூட அத்தகைய கதைகள்தான் காரணம் என்று சொல்லியிருப்பார். எந்த விஷயத்தை நாம் பிள்ளைகள் மனதில் நன்கு விதைக்கிறோமோ, அதன் பிரதிபலன் கண்டிப்பாக நமக்குத் தெரிய வரும். எப்பொழுதுமே, ‘நீ அதை செய்யாதே’ என்று அறிவுறுத்தும்பொழுது ‘செய்துதான் பார்ப்போமே!’ என்று நினைக்கத் தோன்றும்.

சிறுவயதில் பிள்ளைகளுக்குள் நடக்கும் விஷயங்களில் பெரியவர்கள் தலையிடாமல் இருந்தாலே போதும். ஒருநாள் அடித்துக்கொள்வார்கள், மறுநாள் சேர்ந்துவிடுவார்கள். ஆசிரியர் தலையிட்டு, பிரச்னைகளை தீர்க்க நினைத்தால்கூட, பிள்ளைகள் தன் நண்பர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஒரு மாணவனின் புதிய பேனாவை மற்றொருவன் எடுத்துக்கொண்டான்.

இது குறித்து மூன்றாமவன் வந்து புகார் செய்தான். தீர்த்து வைக்க நினைத்தபொழுது, பேனாவின் உரிமையாளரான முதல் பையன் சொன்னான்-‘‘மிஸ் என்னிடம் இதுபோல் நிறைய பேனாக்கள் உள்ளன. ஆசைப்பட்டு அவன் இந்தப் பேனாவை எடுத்துக்கொண்டான், பரவாயில்லை. பேனாவுடன் என்னையும் நினைவில் கொள்வான்!’’ என்ன ஒரு பெருந்தன்மையான பதில்! தாராள மனம் கொண்ட பிள்ளைகளிடையே நாம் ஏன் விவாதம் நடத்த வேண்டும்?

பிள்ளைகள் மனம் எதை நாடுகிறது, எதற்கு ஆசைப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு செயல்படும்பொழுது, அந்தந்த வயதிற்கேற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். இதை செய்யக்கூடாது, அதை செய்யக் கூடாது என்றெல்லாம் ஆணையிடுவதைவிட, இப்படியெல்லாமும் செய்யலாம் என்கிற ‘பாஸிடிவ்’ எண்ணத்தை விதைத்தாலே போதும்! நமக்கும் அழுத்தம் ஏறாது. நீதியும் கற்பித்ததாகி விடும். அவர்கள் மனதில் நமக்கும் ஒரு உயர்ந்த இடம் உண்டு. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். கற்பிப்பதும், புரிய வைப்பதும் அருமையான கலைதானே! ‘அன்பைவிட அருமையான ஆயுதம் வேறொன்றுமில்லை!’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இனி ஓராண்டுக்கு கவலை இல்லை! (அவ்வப்போது கிளாமர்)
Next post நேரம் பொறுமை எனர்ஜி இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்!! (மகளிர் பக்கம்)