நேரம் பொறுமை எனர்ஜி இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 18 Second

பரிசுகள் பொதுவாக திருமண நாள்,பிறந்த நாளன்று கொடுப்பது வழக்கம். அப்படி தரும் பரிசுகள் எல்லாம் நம்முடைய மனசுக்கு மிகவும் நெருக்கமான தருணங்களில் கொடுக்கப்பட்டதாக இருக்கும். அந்த நிகழ்வினை பல ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் இன்றும் பசுமையாக நம்முடைய மனதில் பதிந்து இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட பரிசுகளை நாம் கொடுக்க நினைக்கும் போது ஒரு நிமிடம் நாம் தடுமாறி தான் போவோம். காரணம்… என்ன கொடுப்பது என்று நமக்குள் இனம் புரியாத கலக்கம் ஏற்படும்.

கடைசியில் வாட்ச், பொக்கே, ஷர்ட், கடிகாரம், பொம்மைகளை தான் தேர்வு செய்வோம். இனி தடுமாற தேவையில்லை. உங்களுக்கு பிடித்தவரின் மனதை கவர அவர்கள் மனதில் என்றும் நிலையாக இருக்க அழகான தீர்வினை ஏற்படுத்தி தருகிறார் ஸ்ருதி ஜெயச்சந்திரன். இவர் நம்முடைய மனதில் உள்ள எண்ணத்தை தன் கிரியேட்டிவிட்டி மூலம் அழகாக பரிசுப்பொருட்களாக வடிவமைத்து தருகிறார்.

தற்போது பரிசுப்பொருட்கள் மட்டுமில்லாமல் கல்யாணம், கார்ப்பரேட் நிறுவன நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா புரோமோஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்து தருகிறார். ‘த பிக் பாக்ஸ் தியரி’ என்ற பெயரில் கடந்த ஆறரை வருடமாக இதனை தனித்து செயல்படுத்தி வருகிறார்.

‘‘விஸ்காம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் தான் என்னுடைய நிறுவனத்திற்கான விதையை விதைக்க ஆரம்பிச்சேன்’’ என்று பேசத்துவங்கினார் ஸ்ருதி. ‘‘என்னுடைய நெருங்கிய தோழியின் பிறந்தநாள். என்ன பரிசளிப்பதுன்னு தெரியல. ரொம்பவே குழப்பமா இருந்தது. அந்த சமயத்தில் தேர்வு, பிராஜக்ட்ன்னு பிசியா வேற இருந்தேன். அவளுக்கு பிடிச்சதை போய் வாங்கவும் நேரமில்லை.

அவளுக்குப் பிடித்தமானதாகவும், அதே சமயம் புதுமையாகவும் ஒரு பரிசை கொடுக்க நினைச்சேன். வெளிய போய் வாங்கினால் தான் பரிசா… நாமே அதை நம்முடைய கலைத் திறனை பயன்படுத்தி கொடுத்தாலும் பரிசு தானேன்னு தோன்றியது. ஒரு சின்ன பாக்ஸ்… அதில் அவளுக்கு பிடித்தமான எல்லா பொருட்களையும் வைத்து தர திட்டமிட்டேன்.

கேக், சாக்லெட், சின்னதா ஒரு கிப்ட், நாங்க இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம். எல்லாம் சேர்த்து வச்சு அழகாக பேக் செய்து கொடுத்தேன். அவளுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு. மற்ற நண்பர்களும் அழகா இருக்குன்னு பாராட்டினாங்க. மேலும் இதையே நீ ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது. நாங்க கூட ஆர்டர் தருவோம் என்று சொல்ல அப்படித்தான் ‘பிக் பாக்ஸ் தியரி’ உருவானது.

‘‘இந்த பெயர் வைக்க ஒரு காரணம்… ஒரு பாக்ஸ் அதில் பலதரப்பட்ட பரிசுகள்… சும்மா விளையாட்டா தான் ஆரம்பிச்சேன். ஆறரை வருடம் எப்படி போனதுனே தெரியல. இப்ப இதுவே என்னுடைய முழு நேர தொழிலாக மாறிடுச்சு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் பரிசுப் பொருட்கள் மட்டுமில்லாமல்… கல்யாண அலங்காரம், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், சினிமா புரோமோஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் எல்லாம் செய்து வருகிறேன். இது வரை அனைத்தையுமே வீட்டில் இருந்தபடியே தான் செய்து வந்தேன். இம்மாதம் ஒரு அலுவலகம் அமைத்து அதில் முழுமையாக செயல்பட திட்டமிட்டிருக்கிறேன்.

அதற்கான வேலைகளும் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது’’ என்று கூறும் ஸ்ருதிக்கு சின்ன வயசில் இருந்தே கலை சார்ந்த பொருட்கள் மேல் தனி ஆர்வமுண்டாம். ‘‘பள்ளியில் படிக்கும்போது ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் வகுப்பில் மிகவும் ஆர்வமாக இருப்பேன். அதன் பிறகு கல்லூரி படிப்பில் பிஸியானதால், அதிகம் ஈடுபட நேரமில்லை.

நான் இந்த பிக் பாக்ஸ் ஐடியாவைத் தொடங்கியபோது முன்பு படித்த கலை தான் இப்போது எனக்குக் கை கொடுத்தது. கல்லூரி படிக்கும்போதே எனக்கான தொழில் இது தான் என்று முடிவு செய்தேன். சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதே சமயம் இந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் போய் சேரும் என்று நானுமே எதிர்பார்க்கவில்லை. நான் முதல் வருடம் படிக்கும்போது இருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் துவங்கினேன்.

ஆரம்பத்தில் தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு தான் செய்து கொடுத்தேன். அந்த வட்டம் ஒரு சிறிய அளவு என்பதால், மேலும் விரிவாக்க அடுத்த கட்டமாக முகநூலில் இதற்கான ஒரு பகுதியைத் தொடங்கினேன். அதைப் பார்த்துவிட்டு சிலர் ஆர்டர் கொடுக்க முன்வந்தாங்க. நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என என்னுடைய வாடிக்கையாளர்களின் வட்டம் விரிவடைந்தது.

வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை எல்லாருமே ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். சிலர் ரொம்ப கிரியேடிவ்வா இருப்பாங்க. ஆனால் அவங்களுக்கு அதை எப்படி வெளிப்படுத்தணும்ன்னு தெரியாது. சிலருக்கு எந்த ஐடியாவுமே இருக்காது. இப்படி மாறுபட்ட வாடிக்கையாளர்கள் இருந்தாலும், அவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து தர ஆரம்பித்தேன்.

சிலர் என்னுடைய முகநூலில் நான் பதிவு செய்துள்ள பரிசுப்பொருட்களைப் பார்த்து அதே போல் வேண்டும் என்பார்கள். சிலர் வேறு எங்காவது ஒரு பரிசைப் பார்த்து இருப்பார்கள், அதே போல் வேண்டும் என்று கேட்பார்கள். அதையே கொண்டு வர முடியாது என்றாலும், ஓரளவு மேட்ச் செய்து கொடுப்பேன்.

முதலில் என் தோழிக்குக் கொடுத்தது போலத்தான் ஒரு பெரிய கிஃப்ட் பாக்ஸில் எல்லாம் அடங்கி இருப்பது போல் செய்துவந்தேன். எல்லா வாடிக்கையாளர்களும் அதையே கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு என்று தனித்து இருக்க விரும்பினார்கள். வாடிக்கையாளர்களின் இந்த விருப்பத்தினால் என் கிரியேட்டிவிட்டிக்கு வேலை வந்தது’’ என்றவர் பிறந்த நாள், கல்யாண நாள், கல்யாணத்தின் போது கொடுக்கப்படும் பரிசுப் ெபாருட்கள் என எல்லா விதமான விசேஷங்களுக்கும் பரிசுப் பொருட்களை தயார் செய்து கொடுக்கிறார்.

‘‘பொதுவாக குழந்தைகள் என்றால் சாக்லெட், கேக் மற்றும் பொம்மைகளைக் கொடுக்கலாம். சாக்லெட்டில் அழகான பொக்கே போல் தயாரித்துக் கொடுக்கலாம். சிலர் குறிப்பிட்ட சாக்லெட்தான் வேண்டும் என்பார்கள். அதனால் அவர்களுக்கு அந்த பிராண்டில் பொக்கே செய்து கொடுப்பேன். சாக்லெட்கூட நானே தயாரிப்பதுதான் வழக்கம். டீன் ஏஜ் பெண்கள் என்றால், மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்களின் புகைப்படத்துடன் சேர்த்து பரிசுகள் அளிக்கலாம்.

காதலர் தினம் அன்று ஹார்ட் வடிவத்தில் சாக்லெட் மற்றும் ரோஜாக்களை இணைத்துக் கொடுக்கலாம். என்னை இந்த துறையில் அடையாளம் காட்டிய பரிசு என்றால், 30 இஞ்ச் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் சுழலும் விளக்கு. அவரவர்களின் புகைப்படம் பதிக்கப்பட்டு இருக்கும். விரும்பும் புகைப்படங்களை நானே வடிவமைத்து பிறகு பாட்டில் மற்றும் விளக்கில் பிரின்ட் கொடுப்பேன். மினி ஆல்பம் நம்முடைய உள்ளங்கை அளவில்தான் இருக்கும். இதில் அவர்களின் புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இவ்வாறு வயதுக்கு ஏற்ப பரிசுப் பொருட்களும் மாறுபடும்’’ என்றவர் வாடிக்கையாளர்களை சமாளிப்பது சுலபமில்லை என்றார்.

‘‘படிக்கும் போதே தொழிலையும் செய்ய ஆரம்பித்ததால் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. மறுநாள் எனக்கு செமஸ்டர் பரீட்சை. முதல் நாள் இரவு ஒரு வாடிக்கையாளர், அவசரமாகப் பரிசு வேண்டும் என்றார். என்னால் மறுக்கவும் முடியவில்லை. விடிய விடிய அதைத் தயாரித்துக் கொடுத்துவிட்டுப் பரீட்சைக்குச் சென்றேன். ஒரு முறை நான் செய்த பாட்டில் லேம்ப் டெலிவரி செய்யும்போது உடைந்துவிட்டது.

அது எங்களின் தவறுதான். அதனால் அதை மறுபடியும் ஒரே ராத்திரியில் செய்து கொடுத்தேன். சிலர் ஆர்டர் கொடுப்பார்கள். சில காரணங்களால் வேண்டாம் என்பார்கள். மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியாது. இது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருவதல்ல சின்ன தவறு ஏற்பட்டாலும் நம்முடைய உழைப்பு மட்டுமில்லை பரிசு பொருளின் தரமும் குறைந்திடும்’’ என்றவர் தொழில்நுட்பம் தன்னுடைய பிசினசுக்கு மிகப் பெரிய பலமாக இருந்ததாக கூறுகிறார்.

‘‘முகநூல், இன்ஸ்டா எனஅனைத்து சமூகவலைத்தளங்களிலும் எனக்கான ஒரு பக்கம் உருவாக்கினேன். அது தான் இந்த கொரோனா காலத்திலும் எனக்கு கைக் கொடுத்தது. கடைகள் இல்லை, வெளியே போய் வாங்க முடியாத சூழல் என்பதால், பலர் என்னிடம் பரிசுப்பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய ஆரம்பிச்சாங்க. நானும் எல்லா பொருட்களையும் மிகவும் கவனமாக சானிடைஸ் செய்து அனுப்பினேன். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

அடுத்து என்னிடம் பரிசுப் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களில் பலர் அவர்களின் திருமண நாளுக்கும் மேடையினை அலங்காரம் செய்ய சொல்லிக் கேட்டாங்க. அப்படித்தான் என்னுடைய தொழில் அடுத்தகட்ட நிலைக்கு நகர்ந்தது. ஒரு கல்யாணத்திற்கு மேடை அலங்காரம் செய்யணும்னா அவ்வளவு சுலபமில்லை. அவர்களிடம் 20 முறையாவது சந்தித்து பேசணும். மாப்பிள்ளை, மணப்பெண்ணை மட்டும் கன்வின்ஸ் செய்தால் போதாது, இரண்டு குடும்பத்தினருக்கும் என்னுடைய டிசைன் பிடிக்கணும்.

இரவு பகல் பார்க்காமல் கண் முழிச்சு வேலை பார்க்கணும். காரணம் ரிசெப்ஷன் முடிஞ்ச கையோடு, அந்த அலங்காரத்தை மாற்றி மறுநாள் முகூர்த்தத்திற்கு வேலைகளை ஆரம்பிக்கணும். விடிவதற்குள் மணமேடை தயாரா இருக்கணும். இதற்காகவே ஒரு குழு இருக்காங்க. அவங்களிடம் நான் அலங்காரம் குறித்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தால் போதும், அவங்க அதை தயார் செய்திடுவாங்க.

சாதாரண பொக்கே டெலிவரி கொடுப்பதில் முக்கியத்துவம் கொடுப்பதை விட 100 மடங்கு முக்கியத்துவம் கொடுக்கணும். மேலும் இது போன்ற துறையில் அதிக காலம் நிலைச்சு நிற்பது அவ்வளவு சுலபமில்லை. நம்மை நாமே அப்டேட் செய்துகொண்டே இருக்கணும். இந்த ெதாழிலுக்கு நேரம், எனர்ஜி மற்றும் பொறுமை மிகவும் முக்கியம். எல்லாவற்றையும் விட பெண்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் அவளுக்கான சுதந்திரம் மற்றும் ஸ்பேஸ் இருக்கணும்’’ என்கிறார் ஸ்ருதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post ஹார்ட் அட்டாக் Vs கார்டியாக் அரெஸ்ட்!! (மருத்துவம்)