திருக்குறள் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 22 Second

சொல்லின் அலங்கார வடிவமே ஓவியம் என்பார்கள். அதன் அடிப்படையில் இரண்டடி திருக்குறளை தன் தூரிகையினால் உருவம் கொடுத்து வருகிறார் செளமியா. தினமும் ஒரு திருக்குறளினை எடுத்துக் கொண்டு அதில் உள்ள கருப்பொருளை அப்படியே ஓவியமாக வரைந்து தன் சமூக வலைப்பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார். பல ஆண்டுகளை கடந்தாலும், இன்றுள்ள தலைமுறையினருக்கும் அறம் போதிக்கும் ஒரே நூல் திருக்குறள். அதனால் அதன் வரிகளில் உள்ள பொருளை அவர்களுக்கு புரியும் வகையில் அழியாத ஓவியமாக வரைந்து கொண்டிருக்கிறார்.

‘‘திருக்குறளின் சிறப்பே அதில் வரும் எழுத்தின் கூர்மைதான். அதற்கு மேலும் என் தூரிகையால் மெருகூட்ட நினைத்தேன். இதனால் தினம் ஒரு குறளை எளிதாக
கற்றுக்கொள்ள முடியும்’’ என்கிறார் சௌமியா. ‘‘நான் சென்னைவாசி. இயல் என்ற பெயரில் திருக்குறள் கருத்துக்களை நான் இன்ஸ்டாவில் ஓவியங்களாக வரைந்து பதிவிட்டு வருகிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஓவியங்கள் வரைவது ரொம்ப பிடிக்கும். சுவர்கள், தரைகள்னு எங்க வீட்டில் எல்லா இடங்களிலும் கிறுக்கி வச்சிருவேன்.

காலப்போக்கில் அந்த கிறுக்கல்கள்தான் ஓவியமாக மாறியது. கொஞ்ச நாட்களில் நான் பார்ப்பதை அப்படியே வரைந்து பழகினேன். இதை தெரிந்து கொண்ட என் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் என்னை அழைத்து அவர்களின் உருவத்தை வரைந்து தர சொல்வார்கள். இவ்வாறு வரையும் போது ஓவியங்களின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பு முடித்ததும் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை படித்து முடித்து என்னுடைய ஒரு ஆய்வு சம்பந்தமா தேடிட்டு இருக்கும் போது கவிதைகளை ஓவியங்களா மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்ததும் எனக்குள்ள இந்த விஷயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு என்ன வேலை செய்தாலும் ஓவியங்கள் வரைந்தால் மட்டும்தான் ஒரு விதமான நிம்மதியும் திருப்தியும் ஏற்படும். இதனால் நாமளும் ஏன் இந்த மாதிரி ஓவியங்களை வரையக் கூடாது என்று தோன்றியது. ஆனால் அது சாதாரண ஓவியங்களாக இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணினேன்’’ என்றவர் புதுச்சேரியில் அனிமேஷன் குறித்து டிப்ளமோ படித்துள்ளார்.

‘‘என்னதான் நான் தூரிகையில் படம் வரைந்தாலும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தெரிந்து வைத்திருக்கணும். அதனால் அதன் உதவியோடு எவ்வாறு ஓவியம் வரையலாம் என்பதை குறித்த அடிப்படையான விஷயத்தை கற்றுக் கொண்டேன். அது முடித்து விட்டு புதுச்சேரியில் இருக்கிற பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்கல் கம்யூனிகேஷன் படிச்சேன். படித்ததும் பல்கலைக்கழகத்துல பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் வேலை போக மீதி நேரங்களில் ஓவியங்கள் வரைவேன்.

ஆரம்பத்தில் நான் பாலின வேறுபாடுகள் இல்லாமல் வரைந்தேன். பின்னாட்களில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த உடைகள் குறித்தும் கடைசியாக சோழர்களின் சிற்பங்களையும் அதில் இருக்கும் உடைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து ஓவியங்களாக வரைய ஆரம்பித்தேன். நான் இந்த முயற்சியில் இருப்பதை அறிந்து கொண்ட சிலர் நீங்கள் வரையும் ஓவியத்தின் பொருள் புரியாதவாறு வரையுங்கள் என்று ஆலோசனை கூறினார்கள். எழுத்து ஒன்று உருவாவதற்கு முன்பே ஓவியத்தின் மூலம் மட்டுமே மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார்கள். தான் பார்த்து வியந்த எல்லாவற்றையும் மனிதர்கள் ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர்.

இதற்கு காரணம் வருங்கால மக்கள் இந்த ஓவியங்களின் மூலம் அவர்களுடைய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே. ஆனால் தற்போது வரையும் ஓவியங்களோ அது வரைந்ததற்கான பொருள் புரியாத மாதிரி வரைய சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு ஓவியத்தை பார்த்தவுடன் சட்டென புரிய வேண்டும் என்று நினைப்பேன். புரியாத ஓவியங்களை வரையுங்கள் என்று சொன்னதும், நம் தமிழ் மொழிக்கு என் ஓவியம் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது உதித்த எண்ணம் தான் திருக்குறளை ஓவியமாக்கும் முயற்சி’’ என்றவர் திருக்குறளை எவ்வாறு ஓவியமாக மாற்றினார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘திருக்குறள் ஒருவர் வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய அறநூல். அதன் கருத்துக்களை ஓவியமாக தீட்டுவது அவ்வளவு சுலபமில்லை. திருக்குறளுக்கு பலர் விளக்கம் கொடுத்து உரை எழுதியுள்ளனர். அதில் தெளிவான விளக்கத்தோடு இருக்கும் விளக்க புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன். திருக்குறளில் எப்படி இரண்டு அடியில் கருத்துக்களை சொல்கிறார்களோ அதே போல ஒரு ஓவியத்தில் அதற்கான விளக்கத்தை கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு ஒரு ஓவியம் வரைய வேண்டும் என முடிவு செய்து தினமும் ஒரு திருக்குறளை படிப்பேன். அன்று அதற்கான ஓவியத்தை வரைய வேண்டும்.

முதல் திருக்குறளை ஜனவரி 1ம் தேதி 2020ல் தான் வரைந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை 900க்கும் மேற்பட்ட குறள்களுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளேன். இப்போது பொருட்பால் அதிகாரத்தை வரைந்து கொண்டிருக்கிறேன். ஒரு குறளுக்கான விளக்கம் என்ன என்று தெரிந்து கொள்வேன். அதில் உள்ள மைய கருத்து தான் என் ஓவியமாக மாறும். இதன் மூலம் அந்த குறள் சொல்ல வரும் கருத்தை என்ன என்பதை என் ஓவியத்தை பார்த்தவுடன் புரிந்து கொள்வது போல் வரைந்து வருகிறேன்.

உதாரணத்திற்கு பாம்பு காது, முதலை கண்ணீர் என்று சொன்னால் அதை எளிதாக ஓவியமாக வரைந்து விடலாம். அதே போல பத்து பேர் இருக்கும் ஒரு குழுவில் ஒருவரை மட்டும் தனித்து காட்ட வேண்டுமென்றால் ஒன்பது நபர்களுக்கு மஞ்சள் நிறம் கொடுத்துவிட்டு ஒரு நபருக்கு நீல நிறம் கொடுத்தால் போதும். அப்படித்தான் திருக்குறள் ஓவியங்களையும் வரைகிறேன்.

ஒரு ஓவியம் வரைவதற்கு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஆகும். அதிலும் பொருட்பால் அதிகாரத்தில் வரும் சில திருக்குறளின் விளக்கத்தை இரவு கண் விழித்தெல்லாம் வரைந்திருக்கிறேன். திருக்குறளை படிக்க படிக்க மற்ற தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. திருக்குறளை அடுத்து இலக்கிய நூல்களையும் ஓவியங்களாக கொண்டு வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் சௌமியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வறண்ட கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க்! (மருத்துவம்)
Next post மன அமைதிக்காகத்தான் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்! (மகளிர் பக்கம்)