மன அமைதிக்காகத்தான் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 14 Second

இசை, ஓவியம், சமையல், விளையாட்டு… இவை அனைத்தும் தனிப்பட்ட ஒருவருக்கு மனசினை ரிலாக்ஸாக வைக்க உதவும் கலைகள். ஒருவருக்கு இசைப் பிடிக்கும். ஒருசிலருக்கு ஓவியம் வரைய பிடிக்கும். சிலர் சமைத்தால் என்னுடைய மனச்சோர்வு நீங்கும் என்பார்கள். இதில் உஷா கோடீஸ்வரன் இரண்டாவது ரகம். அவருக்கு கையில் தூரிகை மற்றும் வண்ணங்களை பார்த்த அடுத்த நிமிடம் மனசுக்குள் ஒரு அமைதி ஏற்படும்.

அந்த அமைதியினால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக ஓவியங்களை வரைவது மட்டுமில்லாமல், பயிற்சியும் அளித்து வருகிறார். மேலும் இவரின் ஓவியங்கள் கண்காட்சியிலும் இடம் பெற்று வருகிறது. அதில் கடந்த வாரம் ‘Shades Of Soul’ என்ற பெயரில் சென்னை, ராயப்பேட்டையில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் உஷா அவர்கள் வரைந்த நடராஜர் ஓவியம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. காரணம், அது ஓவியமா அல்லது புகைப்படமா என்று வியக்கும் அளவிற்கு தத்ரூபமாக இருந்தது.

‘‘சின்ன வயசில் இருந்தே எனக்கு வரைய ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு ஓவியம் குறித்து முழுமையான பயிற்சியினை எடுக்க முடியவில்லை. ஆனாலும் ஓவியம் வரையும் என் தாகத்தை சயின்ஸ் ரெக்கார்ட் வரைந்து தீர்த்துக் கொண்டேன். நான் பள்ளியில் காமர்ஸ் குரூப் எடுத்திருந்தாலும், சயின்ஸ் பாடத்தினை எடுத்த மாணவர்களுக்கு ரெக்கார்ட் எல்லாம் வரைந்து கொடுப்பேன். புத்தகத்தில் இருப்பதை அப்படியே பார்த்து வரைவது என்பது எனக்கு அப்போது இருந்தே இருந்துள்ளது.

அந்த வயசில் எனக்கு அது பற்றி பெரிசா எதுவுமே தெரியல. அதன் பிறகு கல்லூரி படிப்பு, திருமணம், குழந்தைகள், குடும்பம்னு என் நாட்கள் கழிந்தது. பசங்க எல்லாரும் பெரியவர்களானதும்,
அவர்களுக்கான வேலையை அவர்களே பார்த்துக் கொள்ள ஆரம்பித்த பிறகுதான் எனக்குள் புதைந்திருந்த ஓவியத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தினை நிறைவுபடுத்த விரும்பினேன். என் கணவரிடம் இது குறித்து சொன்ன போது, அவரும் மறுக்காமல், உனக்கு பிடிச்சதை செய்னு சொன்னார். அப்படித்தான் நான் டெஸின் ஓவிய பயிற்சி அகாடமியில் சேர்ந்தேன். 2014ம் ஆண்டு முதல் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். ஓவியம் கற்றுக் கொண்டு அதை என் கைகளால் வரைந்து என் வீட்டு சுவர்களை அழகாக்க வேண்டும் என்று விரும்பினேன்’’ என்றவர் ஓவியக் கண்காட்சியில் ஈடுபட்டதை குறித்து விவரித்தார்.

‘‘என் பயிற்சி பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடத்துவது வழக்கம். ஆரம்பத்தில் எனக்கு இந்த கலை இவ்வளவு பெரிய உலகம்னு தெரியல. நான் பயிற்சி பெற்ற இடத்தில், கண்காட்சியில் கலந்து கொள்ள ஊக்கமளித்தாங்க. அதன் பிறகு தான் நான் கண்காட்சி வைக்கவே ஆரம்பித்தேன். இது வரை 17க்கும் மேற்பட்ட கண்காட்சியில் என் ஓவியங்களை பார்வைக்காக வைத்துள்ளேன். ஓவியம் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும், அதன் மேல் ஈடுபாடு ஏற்பட்டால், அந்த துறை சார்ந்த பல விஷயங்களை தெரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள். அப்படித்தான் கண்காட்சியும். நான் பயின்ற அகாடமி மூலமாக ஐந்து கண்காட்சியில் இடம் பெற்றேன்.

அதன் பிறகு ஓவியர்களுக்கான ஒரு தனிப்பட்ட குழு உண்டு. அதிலும் என் ஓவியங்கள் இடம் பெற்றிருக்கு. சென்னை, மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரா பூங்காவில் ‘சென்னை ரோட் ஷோ’ நிகழ்ச்சியின் போதும் என் ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. கோவிட் போது, ஆன்லைன் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கேன். இப்போது டெசின் அகாடமியின் பிரான்சைசி எடுத்து அதன் மூலம் ஓவியப் பயிற்சி வகுப்பும் நடத்தி வருகிறேன். ஓவியத்தில் பல ஸ்டைல் உள்ளன. அப்ஸ்ட்ராக்ட், சர்ரியல், பாப் ஆர்ட், போட்டோரியலிசம், எக்பிரஷன், இம்பிரஷன்னு என்று. இதில் என்னுடையது ரியலிஸ்டிக் பெயின்டிங். பார்க்க அப்படியே தத்ரூபமாக இருக்கும். அதாவது இது போட்டோவா அல்லது பெயின்டிங்கான்னு குழம்பும் வகையில் அவ்வளவு நேச்சுரலா இருக்கும்.

நான் ஓவியத்தை என் துறையா தேர்வு செய்யல. எது செய்தால், எனக்கு மன அமைதி கிடைக்கிறதுனு பார்த்தேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காகத்தான் நான் செய்தேன். சொல்லப்போனால் நான் என் திறமையை யாருக்கும் நிரூபிக்க விரும்பல. ஓவியம் மேல் விருப்பம் உள்ளவர்கள் பல லட்சம் கொடுத்தும் வாங்க தயாராக இப்பாங்க. எனக்கு அதை நானே செய்து என் வீட்டை அலங்காரம் செய்யணும்னுதான் நினைச்சேன். எனக்கு பிடிச்சிருப்பதை நான் செய்தேன். அவ்வளவுதான். மேலும் நான் ஓவியப் பயிற்சி எடுத்துட்டேன். எனக்கு எல்லாம் தெரியும்னு இருக்க முடியாது. இந்த துறையில் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கும்.

நான் ஓவியப் பயிற்சி எடுத்தாலும் இன்றும் ஒரு மாணவிதான். போன வருஷம் நான் புலி மற்றும் சிங்க ஓவியம் ஒன்று வரைந்தேன். அதில் புலியின் முடி மற்றும் சிங்கத்தின் பிடரி அப்படியே வரணும். வரையும் போது வருமான்னு தெரியாது. ஆனால் அதை கொண்டு வரணும், அது தான் ஒரு ஓவியரின் திறமை. அது எனக்கு ஒரு சாலஞ்சா இருந்தது. மேலும் இந்த இரண்டு ஓவியங்கள் தான் என்னுடைய அடையாளம். பலருக்கு என் பெயர் தெரியாது. ஆனால் புலி மற்றும் சிங்கம் ஓவியத்தைக் கொண்டு தான் என்னை அடையாளம் காண்கிறார்கள். இந்த கண்காட்சியில் என்னுடைய நடராஜர் மற்றும் நந்தி ஓவியங்கள் ரொம்பவே பேசப்பட்டது’’ என்றார்.

‘‘ஓவியங்கள் பொறுத்தவரை அப்ஸ்ட்ராக்ட் எல்லாம் தான் நிறைய பேர் வரைவாங்க. ஆனால் என்னுடைய பலம் ரியலிஸ்டிக் ஓவியங்கள். நான் முதன் முதலில் 2016ம் ஆண்டு கண்காட்சி வைத்தேன். அப்ப ஒரு லாண்ட்ஸ்கேப் வரைந்திருந்தேன். என்னுடைய முதல் ஓவியம் என்பதால், அதை விற்க மனமில்லை. ஒருத்தர் அந்த ஓவியத்தை 40 ஆயிரத்திற்கு கேட்டாங்க. எனக்கு ரொம்பவே ஷாக்கிங்கா இருந்தது. ஒரு ஓவியத்திற்கு இவ்வளவு மதிப்பா என்று. ஆனால் நான் அந்த ஓவியத்தை விற்பனை செய்வதில்லை என்று சொல்லி அதே ஓவியத்தை அவர்களுக்கு மீண்டும் வரைந்து கொடுத்தேன். மேலும் கண்காட்சியில் மற்ற ஓவியர்களின் ஓவியங்களையும் பார்க்கும் போது பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

ஓவியம் பொறுத்தவரை எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் இதற்கு வயது என்பது தடையில்லை. எந்த வயதிலும் வரைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். என்னிடம் ஒரு சிறுவன் பயிற்சிக்காக வந்தான். முதலில் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகத் தான் இங்கு சேர்ந்தான். நாலே மாசத்தில் அவனுக்கு இதில் விருப்பம் வர நான்கு வருஷம் தொடர்ந்து பயின்றான். எப்படி ஒருவருக்கு இதன் மேல் ஈர்ப்பு வருகிறதோ, அதேபோல் என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். நான் ஆரம்பத்தில் சம்பாதிக்கணும்னு எல்லாம் வகுப்பு எடுக்க ஆரம்பிக்கல. ஒரு கண்காட்சி அல்லது போட்டியில் கலந்து கொண்டால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

என் கணவர் எனக்காக செய்வார். ஆனால் என்னுடைய சுயசம்பாத்தியமாக இருக்கணும்னு நினைச்சேன். அப்படித்தான் முதலில் மூன்று பேர் என்னிடம் பயிற்சிக்காக வந்தாங்க. இப்ப 50 பேர் பயிற்சி ெபறுகிறார்கள். நான் இதுவரை மற்றவர்களுடன் இணைந்து தான் கண்காட்சி வைத்திருக்கேன். இனி தனிப்பட்ட முறையில் கண்காட்சி வைக்கணும் மற்றும் என் ஓவியங்களை விரும்புபவர்களுக்கு விற்பனை செய்யவும் இருக்கேன். என்னுடைய இந்த பயணத்திற்கு பக்க பலமாக இருப்பது என் குடும்பத்தினர் மற்றும் என் குருக்களான புருஷோத்தமன் மற்றும் ராஜேந்திரன் அவர்கள் தான்’’ என்றவர் பல விருதுகள் மற்றும் ஓவியப் போட்டியில் பங்கு பெற்று பரிசும் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருக்குறள் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸில் ஆண்கள் உச்சம் காண முடியாமல் போவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்..!! (அவ்வப்போது கிளாமர்)