கோவையில் தயாராகும் காய்கறி கூடைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 38 Second

‘‘மூங்கில் கூடைகள்…. சிட்டி வாழ்க்கையை விட கிராமத்தில் எல்லா வீட்டிலும் பல டிசைன்களில் இந்த மூங்கில் கூடைகளை நாம் பார்க்க முடியும். கோழியினை மூடி வைக்க, மாட்டுச் சாணத்தை அள்ள, காய்கறிகளை போட்டு வைக்க, கிழங்குகளுக்கு, பார்சல் கட்ட என பல வகையான மூங்கில் கூடைகளை நாம் பார்க்க முடியும். கூடைகள் மட்டுமில்லாமல் ஸ்கிரீன் தட்டுகள், டீ காபி கொடுக்கும் டிரேகளும் இதில் உண்டு. பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மூங்கில் பொருள்கள் இருக்கின்றன.

கூடைகளில் காய்கறிகளை போட்டு வைக்கும் போது, கூடைகளில் உள்ள சின்னச் சின்ன துவாரங்கள் மூலமாக காற்று வசதி இருப்பதால், கூடைகளுக்குள் எப்போதும் குளிர்ச்சி தன்மை நிலவுவதால், காய்கறிகள் எளிதில் கெட்டுப்போகாது. இதனால்தான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு காய்கறிகளை கூடையில் போட்டு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்’’ என ஆச்சரியமான தகவலை சொல்கிறார் ஆனந்தகுமார். இவர் கோவை, மேட்டுப்பாளையத்தில் கூடைகளை செய்து விற்பனை செய்து வருகிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது மேட்டுப்பாளையம், ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற மலைப்பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் எல்லாம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சந்தைக்கு வந்துதான் வெளிமாவட்டங்களுக்கு செல்லும். அவ்வாறு வரும் காய்கறிகளை எடுத்துச் செல்ல வியாபாரிகள் மூங்கில் கூடைகளைதான் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காகவே மேட்டுப்பாளையத்தில் கூடைகள் செய்யும் தொழிலில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தலைமுறைகளாக கூடை முடையும் வேலையை செய்து வருகிறார் மகேஸ்வரி.

‘‘கூடைகள் செய்வது ஒரு கலை. என் அப்பா, அம்மா இந்த தொழில்தான் செய்து வந்தாங்க. நானும் திருமணத்திற்கு பிறகு வீட்டில் சும்மா இருப்பதால், இந்த வேலைக்கு வந்தேன். கூடை முடையும் தொழில் பொதுவாகவே மார்க்கெட் பகுதிக்கு அருகே தான் இருக்கும். மூங்கிலில் செய்ய முடியாத பொருள்களே கிடையாது. குறிப்பாக காய்கறிகளில் கேரட், கோஸ், கிழங்கு வகைகள்னு பார்சல் பண்ணி அனுப்புவதற்காகவே கூடைகள் செய்வோம். மற்ற ஊர்களில் கோழியை மூடி வைக்கவும், சோறு தண்ணி வடிக்கவும் கூடைகள் தயார் பண்ணுவாங்க. கோயம்புத்தூர்ல காய்கறிகளை எடுத்துச் செல்வதற்காகவே கூடைகள் செய்கிறோம்.

கூடை முடைவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஒரு மூங்கில நான்கா கிழிப்போம். அதில் ஒவ்வொரு பட்டையையும் 12 பட்டைகளா பிரிப்போம். பிறகு அந்த பட்டையை இரண்டா கிழிச்சா பச்சை, வெள்ளை என இரண்டு பட்டைகள் கிடைக்கும். அதன் பிறகு கூடைகளின் அளவிற்கு ஏற்ப அடி கணக்கில் வெட்டி வைப்போம். பச்சையாக இருக்கும் மூங்கில் கனமான பொருள்களை தாங்கக் கூடியது. அதனால கூடையோட கீழ்பாகத்தில் இந்த மூங்கிலை வச்சு முடைவோம்.

மூங்கிலோட உள் பகுதியில வெள்ளை பட்டையைக் கொண்டு முடைவோம். கூடை முழுமையாக தயாரானதும் பிரியாமல் இருக்கவும் கனமான பொருள்களின் எடை தாங்க அதன் மேல் வார்னிஷ் கொண்டு பூசுவோம். மூங்கில் கூடை என்பதால் பூச்சிகள் அரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு மாட்டு சாணியை கரைச்சு சுத்தி மொழுகிடுவோம். இதனால் பத்து வருஷம் பூச்சி அரிக்காது, மூங்கில் குச்சியும் உடையாது. இப்ப மக்கள் பிளாஸ்டிக் பொருள்களையே விரும்புவதால், இந்த தொழில் நலிவடைஞ்சிருச்சு. கூலியும் குறைவாகத்தான் கிடைக்குது. இந்த தொழிலை எங்க தலைமுறையில் உள்ளவர்கள் தான் செய்து வருகிறார்கள். அடுத்த தலைமுறையினர் இதை செய்ய விரும்புவதில்லை’’ என்று வருத்தமாக சொல்கிறார் மகேஸ்வரி.

‘‘பிளாஸ்டிக் பொருள்களுக்கு முன் நாம் அனைவரும் இயற்கை சார்ந்த பொருள் களைதான் பயன்படுத்தி வந்தோம். பிளாஸ்டிக் பொருள்கள் வந்த பிறகு இயற்கையை விட்டு நாம் வெகுதூரம் சென்று விட்டோம்’’ என பேசத் தொடங்கினார் மூன்று தலைமுறைகளாக கூடைகள் விற்பனை செய்யும் தொழிலை செய்து வரும் ஆனந்தகுமார். ‘‘என்னோட தாத்தா காலத்தில் இருந்தே இந்த தொழில் செய்து வருகிறோம். வெட்ட வெட்ட முளைக்கும் மூங்கில் போல எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இந்த தொழிலை விட்டு போகக் கூடாதுன்னு டிப்ளமோ முடிச்சுட்டு என் பரம்பரை தொழிலுக்கே வந்துட்டேன். மூங்கில் குளிர்ச்சியான தாவர வகையை சேர்ந்தது. கரையான்கள் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும், மண்ணும் குளிர்ச்சியாக இருக்கும்.

மூங்கில் வளரும் இடத்தில் கரையான்கள் இருக்கும் என்பதால், அங்குள்ள மண் வளமாக இருக்கும். அந்த இடத்தில் விவசாயம் செய்தால் செழிப்பாக இருக்கும். அதனால் தான் விவசாயிகள் மூங்கில்களான பொருள்களை பயன்படுத்தி வந்தாங்க. மூங்கில விவசாயத்தோட தாய்ன்னு கூட சொல்லலாம். ஆரம்பத்தில் எல்லா விவசாயிகளும் மூங்கில் வளர்ப்பாங்க. ஆனால் அதில் ஒரு சிலர் தான் கூடை முடைவாங்க.

அதனால எங்களைப் போல் மூங்கில் பொருட்கள் சார்ந்த தொழில் செய்றவங்ககிட்ட மூங்கிலை கொடுப்பாங்க. நாங்க கூடைகள் செய்து தருவோம். ஆனால் வனத்துறையினர் மூங்கிலை வெட்டக்கூடாதுன்னு சொன்னதால், கேரளாவில் இருந்து மூங்கில் வாங்கி பொருள்களை தயார் செய்து, சிறு வியாபாரிகளிடம் விற்றோம். கோவையை பொறுத்தவரை காய்கறி கூடைகள் தான் அதிகம் தேவைப்பட்டது. அதனால் காய்கறிகளுக்கு ஏற்ப பல டிசைன்களில் கூடைகள் தயாரிச்சோம்’’ என்றவர் கூடைகளின் வகைகளை விவரித்தார்.

அரி கூடை, சாப்பாட்டிலிருந்து கஞ்சியை வடிக்க செய்யும் கூடை. அப்பளம் வைக்க தனி கூடை, பூ கட்டி விற்க பூக்கூடை, கிழங்கு கூடை, மணல் ஜல்லி செங்கல் போன்ற பொருள்களை எடுத்து செல்ல பயன்படும், தேயிலையை பறித்து சேகரிக்க பயன்படுத்தும் கூடைகள், கோயில்களில் சாமி சிலைகளை எடுத்து செல்லும் கூடைகளை கோல முடி கூடைகள் என்று அழைப்போம். குப்பைகளைப் போட்டு வைப்பதற்கு குப்பை தொட்டி கூடைகள், பச்சபின்னி மொறம், வீட்டு விலங்குகளை அடைத்து வைக்க அளத்தி கூடை, கொட்டை பாக்குகள் அளக்கும் கூடைகள், கோஸ் கூடைகள், 25 ,40, 70 கிலோ எடைகளை தாங்கும்.

பூண்டு வெங்காயம் போட்டு வைப்பதற்கு பொட்டி கூடைகள், சீர் பொருள்களை கொடுக்க சீர் கூடைகள், மரத்தூள்கள் எடுத்துச் செல்ல தூள் கூடைகள், பார்சல் பொருள்களை அனுப்ப எடை குறைவான கூடைகள் தயாரிப்போம். அழுக்கு கூடைகள், அழுக்கு துணிகளை இதில் போட்டு வைத்தால் காற்று சுழற்சி இருப்பதால் வாசனை வராது, ரொட்டி கூடை கோழிகளை அடைத்து வைக்க, மூங்கில் பாய்கள் தூங்குவதற்கும், வீட்டின் மறைப்பிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

சினிமா பட போஸ்டர்கள் ஊர் ஊராக கொண்டு செல்லவும் பயன்பட்டது மூங்கில் பாய். தற்போது வீட்டின் மேல் போடும் கான்கிரீட் தளங்களின் உறுதித்தன்மைக்கு இதை பதிக்கிறார்கள். ‘பிரிவின’ வட்ட வடிவ கூடை, மண்பாண்ட பாத்திரங்கள் வைக்க பயன்படுத்துவார்கள். ஸ்கிரீன் தட்டிகள், வீட்டின் ஜன்னல் மறைப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் விற்பனை செய்கிறோம்.

பயன்படுத்தி தூக்கிப் போட்டாலும் மக்கக் கூடிய பொருள்கள் என்பதால் சுற்றுச்சூழலை பாதிக்காது. மூன்று ஆண்டுகளுக்கு மேலான முதிர்ந்த மூங்கில்கள் தான் உறுதியாக இருக்கும். மூங்கில்களின் வயதை அறிய அதனுடைய பட்டையில் இருக்கும் சுருக்கங்களை வைத்து கண்டுபிடித்துவிடலாம். 5 வருடங்களுக்கு மேலான மூங்கில்கள் என்றால் சுருக்கங்கள் இருக்காது. கூடைகளுக்கு பெரு மூங்கில் தான் பயன்படுத்துவோம். கல் மூங்கில், ஓடை மூங்கில்களில் ஒட்டடை குச்சிகள், சாலை கூட்டும் சீமார்கள் தயாரிப்போம். விலை குறைவாக பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பதால் மக்கள் இதை வாங்குவதில்லை.

வயதானவர்களும் மூங்கிலின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு கொண்ட மக்கள்தான் இதனை வாங்குகிறார்கள். இளம் தலைமுறையினர் இதனை விரும்புவதில்லை. அதே போல அவர்களும் இந்த வேலைகளுக்கு வருவது இல்லை. கூடை முடையும் வேலையில் இருக்கும் வயதானவர்கள் இந்த வேலைகளை செய்யும் வரையில் இந்த தொழில் இருக்கும். அரசு இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சலுகைகளோ உதவிகளோ செய்தால் இந்த தொழிலை அழிவிலிருந்து மீட்டெடுக்கலாம்’’ என்கிறார் ஆனந்தகுமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வசம்பு வைத்தியம்! (மருத்துவம்)
Next post உலகளவில் என் ஓவியங்கள் புகழ் பெற வேண்டும்!! (மகளிர் பக்கம்)