உலகளவில் என் ஓவியங்கள் புகழ் பெற வேண்டும்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 50 Second

கோயம்புத்தூர், உள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் மோனிஷா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தற்போது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் இவரின் அடையாளம் ஓவியர் என்பதுதான். இவர் வரைந்த ஓவியம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. இவரின் ஓவியத் திறமையை பாராட்டி சென்னை கல்வி அமைப்பு இவருக்கு ‘டாக்டர்’ பட்டமும் அளித்து கவுரவித்துள்ளது. மேலும் பல விருதுகளை பெற்றிருக்கும் மோனிஷா, தொடர்ந்து பல அசர வைக்கும் ஓவியங்களை தீட்டி வருகிறார். இளம் வயதில் சாதனை படைத்து வரும் மோனிஷாவை சந்தித்துப் பேசினோம்.

* ஓவியம் மேல் ஆர்வம் ஏற்பட காரணம்?

கல்வியை கற்பிக்க வேண்டும். கலை சார்ந்த விஷயங்கள் நம்முடைய ரத்தத்தில் ஊறி இருக்கும். நம்முடைய திறமை என்ன என்று அறிந்து, அதனை வளர்த்துக் கொண்டு சாதனை புரிவது அவரவர் திறமை. என்னுடைய நான்கு வயதிலேயே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போது இருந்தே பத்திரிகையில் வரும் ஓவியங்கள் மற்றும் கார்ட்டூன்களை பார்த்து வரைவேன்.

அதன் பிறகு கொஞ்சம் பெரியவள் ஆன பிறகு கோலங்களை போட பழகினேன். அதன் அடுத்த கட்டம் மெஹந்தி போடுவது. மணப்பெண்களுக்கான மெஹந்தி எல்லாம் போட ஆரம்பித்தேன். கலை மேல் ஆர்வம் ஏற்பட என் அம்மாதான் காரணம். அவங்க நல்லா எம்பிராய்டரி செய்வாங்க. அதைப் பார்த்துதான் எனக்கு ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டது. நான் வரைவதைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் அதற்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி தந்தாங்க. என்னுடைய ஓவியங்கள் அனைத்தும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்டதாக இருக்கும்.

* ஓவியத்தில் நீங்கள் நிகழ்த்தி இருக்கும் சாதனை

வீட்டில் ஓவியங்கள் வரைவதால், பள்ளியில் நடக்கும் எல்லாவிதமான ஓவியப்போட்டியிலும் நான் பங்கு பெறுவேன். அதில் தவறாமல் பரிசும் பெற்றிருக்கேன். ஒரு முறை மாவட்ட அளவில் மாணவர்களுக்காக ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் நான் பென்சில் ஆர்ட் வரைந்திருந்தேன். என்னுடைய ஓவியம் முதல் பரிசினைப் பெற்றது. நடிகரும் சிறந்த ஓவியருமான சிவகுமார் அவர்கள்தான் எனக்கு பரிசு கொடுத்தார். அந்த தினம் என்னை மென்மேலும் ஓவியத்தில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.
அப்படித்தான் முட்டையில் ஓவியம் வரைந்தேன். அது இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு வருடம் கடும் பயிற்சிக்கு பிறகு ஓவியத்தில் கின்னஸ் சாதனை செய்தேன். பல தடைகள் மற்றும் போராட்டங்களை கடந்துதான் அந்த கின்னஸ் சாதனையில் இடம் பெற முடிந்தது. பதிமூன்று மணிநேரம் தொடர்ந்து வரைந்தேன். முட்டிப்போட்டே வரைந்ததால் என்னுடைய முழங்கால் முட்டியில் தோல் உறிந்தே போனது. சாதனையை முடித்த பிறகு மூன்று நாட்கள் நான் எழுந்திருக்கவே இல்லை.  படுத்த படுக்கையாகத்தான் இருந்தேன். படிப்படியாகத்தான் என்னுடைய உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

என்னதான் எனக்கு ஓவியம் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தாலும் அதனை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு நுண்கலைகளில் அட்வான்ஸ் டிப்ளமோ (Advance Diploma In Fine Arts) பயிற்சியில் சேர்ந்து பட்டமும் பெற்றேன். வார இறுதி நாளான ஞாயிறு மட்டும் தான் பயிற்சி என்பதால், கல்லூரி படிப்பினை இது டிஸ்டர்ப் செய்யவில்லை. காலையில் கல்லூரி பாடம் இரவு ஓவியம்னு என் வாழ்க்கை ஓடியதை என்னால் மறக்க முடியாது. இப்போது ஐ.டியில் வேலை என்றாலும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு ஓவியங்கள் வரைந்தால்தான் எனக்கு தூக்கமே வரும்.

* உங்க ஓவியத்தின் சிறப்பம்சம்

கையால் செய்யப்பட்ட வரைபடங்கள் தான் என்னுடைய ஸ்பெஷாலிட்டியே. ஆயில் பெயின்ட், அக்ரலிக் நிறங்கள் இவை இரண்டையும் கொண்டு ஓவியங்களை வரைகிறேன். அதுமட்டுமில்லாமல் பென்சில் ஆர்ட், கிளாஸ் பெயின்டிங்கும் செய்வேன். நாம் ஓவியம் வரைய பயன்படுத்தும் நிறங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தன்மையுண்டு. இதில் பல வகை உள்ளன. வாட்டர் கலரால் வரையப்படும் ஓவியங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் வரைந்து முடித்துவிடலாம்.

பென்சிலால் தீட்டப்படும் ஓவியங்களுக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரமாகும். ஆயில் பெயின்ட் ஓவியங்கள் காய நேரமாகும். அந்த ஓவியங்களை சீக்கிரம் வரைந்தாலும் அது காய்வதற்கு 20 முதல் 30 நாட்கள் வரை எடுக்கும். என் பெற்றோரை அப்படியே ஓவியமாக தீட்டியிருக்கேன். ஒருவரை பார்த்து வரையும் போது, ரொம்பவே பொறுமையா வரையணும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் உருவ அமைப்பு மாறிடும்.

* எதிர்கால லட்சியம் வெளிநாடுகளில்தான்

மாடர்ன் மற்றும் இயற்கை ஓவியங்களை மக்கள் ரசிக்கிறாங்க. அவர்கள் ஓவியங்கள் தங்களுடன் பேசுவது போன்று உணர்ந்து ஒரு ஓவியத்தை பல லட்சங்கள் கொடுத்து வாங்குகிறார்கள். என்னுடைய ஓவியமும் அது போன்று அமைய வேண்டும். மாறுபட்ட சிந்தனை கொண்ட ஓவியங்களை வரைய வேண்டும். ஓவியம் என்றாலே மோனோலிசா ஓவியத்தைதான் இன்றும் குறிப்பிடுவார்கள். அந்த ஓவியம் போல் என்னுடைய ஓவியமும் புகழ் ெபற வேண்டும். தற்போது ஓவியக் கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கேன். அடுத்து உலகளவில் உள்ள ஓவியப் பயிற்சி முறைகளை பெற வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோவையில் தயாராகும் காய்கறி கூடைகள்!! (மகளிர் பக்கம்)
Next post பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)