நாதஸ்வரத்தில் கலக்கும் பள்ளிச் சிறுமிகள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 3 Second

நாதஸ்வரம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், திருவண்ணாமலையில் பள்ளிச் சிறுமிகள் இருவர் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படிக்கும் அக்கா ஸ்ரீஹரினியும், ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கை கனிமொழியும் நாதஸ்வரம் வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள். கோயில்களில் நவராத்திரி பண்டிகை களைகட்டியுள்ள நேரத்தில், நாதஸ்வரத்தில் பிஸியாக இருந்த சிறுமிகளை அணுகியபோது.. “நாதஸ்வரத்தில் எனக்கு முத்தான முத்தல்லவோ பாட்டு ரொம்பவே சூப்பரா வாசிக்க வரும்” என்ற சிறுமி ஸ்ரீஹரினியிடம் ‘எப்படி இருவரும் நாதஸ்வரம் கத்துக்கிட்டீங்க’ என்றதற்கு?

எங்கள் வீட்டில் எப்போதும் நாதஸ்வர இசை ஒலித்துக்கொண்டே இருக்கும். ஏன்னா எங்கள் குடும்பமே நாதஸ்வரக் குடும்பம். அப்பா பாலகணேசன். அம்மா பாகேஸ்வரி. எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா என அனைவருமே புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள். இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் எங்களை நாதஸ்வரம் கத்துக்கச் சொல்லியெல்லாம் கட்டாயப்படுத்தலை. படிப்புல கவனம் செலுத்துங்கன்னு மட்டும்தான் எப்பவும் சொல்லுவாங்க. கொரோனா நேரத்தில், ஸ்கூல் இல்லாமல் நீண்டநாள் வீட்டிலிருந்தபோது, எனக்கும் என் தங்கை கனிமொழிக்கும் என்ன செய்வதென்றே தெரியலை. வெளியிலும் போகமுடியாது. ரொம்பவே போராக இருந்தது.

சரி நாங்களும் நாதஸ்வரம் கத்துக்குறோம்னு அம்மா, அப்பாவிடம் கேட்டோம். முதலில் ஒரு ஹாபியா நினைச்சுதான் இருவருமே ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுக்க எடுக்க, ஓரளவு வாசிக்க வந்தது என்றவரிடம், ‘நீங்க இருவருமே சிறுமிகளாக இருக்கீங்க. கைகளில் நாதஸ்வரத்தை தூக்கிப்பிடித்து வாசிப்பது சுலபமாக இருக்கா என்றதற்கு? ‘ஆரம்பிக்கும்போது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பழகப் பழக ஈஸியா வந்துருச்சு’ என்கிறார்கள் விரல்களில் தம்ஸப் காட்டி.

கீர்த்தனைகள், கர்நாடக சங்கீதம்னு முதலில் தொடங்கும்போது நம்மால இது முடியுமான்னு கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்துச்சு. அம்மாவும் அப்பாவும் கண்டிப்பா முடியும். முயற்சி பண்ணுங்கன்னு தொடர்ந்து நம்பிக்கை கொடுத்தாங்க. என்னாலையும் முடியும்னு நம்பிக்கையோட வாசிக்கத் தொடங்கினேன். சுலபமாகிருச்சு என்றவர், ஆனாலும் எங்க அம்மா, அப்பா மாதிரி இன்னும் வாசிக்க வரலை என்று புன்னகைக்கிறார்.

அவரைத் தொடர்ந்து அவரின் தங்கை கனிமொழி, அம்மா, அப்பா ரெண்டுபேரும் சொல்லித் தந்தாலும் அம்மா எங்களுக்கு ரொம்ப அன்பா அமைதியா சொல்லித் தருவாங்க. எனக்கு சினிமாப் பாடல்களை நாதஸ்வரத்தில் வாசிப்பதுதான் எப்பவுமே ரொம்பப் பிடிக்கும் என்ற கனிமொழி மொபைலில் யூ-டியூப்பை ஓப்பன் செய்து அதில் வரும் நோட்ஸ்களை அப்படியே கேட்ச் செய்து நாதஸ்வரத்தில் வாசிப்பேன் என்றவாறு ‘கண்ணான கண்ணே’ பாடலை நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டுகிறார். ஆகஸ்ட் 15ல் எங்கள் பள்ளியில் நானும் அக்காவும் தேசிய கீதத்தை நாதஸ்வரத்தில் வாசித்தோம். நாங்க வாசித்து முடித்ததும் எல்லோரும் எங்களுக்கு க்ளாப் பண்ணுணாங்க என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் கனிமொழி.

இப்ப நாங்கள் பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டதால் பெரும்பாலும் ஸ்கூல் முடிந்து வந்து மாலையில்தான் பயிற்சி எடுக்கிறோம். அதுவும் ஒரு அரைமணி நேரம் மட்டுமே என்ற ஹரினியிடம், ‘இந்த சின்ன வயதில் மூச்சை தம்கட்டி நாதஸ்வரத்தை வாசிக்க உங்கள் இருவராலும் முடியுதா?’ என்றதற்கு, ‘அதெல்லாம் நல்லாவே பழகிருச்சு. ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட நிறையவே டெவலப் ஆகி இருக்கோம்’ என்றவரிடம், ‘முதன் முதலில் மேடையில் நாதஸ்வரம் வாசித்த உணர்வு எப்படி இருந்தது’ என்றதற்கு? முதலில் கொஞ்சம் பதட்டம் இருந்தது. அம்மாவும் அப்பாவும் கூடவே இருந்ததால் பெரிய டென்ஷன் இல்லை. தொடர்ந்து பல்வேறு மேடைகளில் அம்மா, அப்பாவோடு வாசித்ததால் சுத்தமாக பயம் போயிருச்சு என்கிறார்.

‘கோயில், கல்யாண வீடுன்னு பள்ளிச் சிறுமிகளான நீங்கள் நாதஸ்வரம் வாசிப்பதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்’ என்றதற்கு? எல்லோரும் ஆச்சரியத்தோடுதான் பார்ப்பாங்க. சிலர் கையெல்லாம் கொடுத்து பாராட்டி வாழ்த்து தெரிவிப்பாங்க. சிலர் ஆசையாக எங்களுடன் செல்ஃபி எடுத்துக்குவாங்க. இன்னும் சிலர் பாராட்டி பரிசெல்லாம் கொடுத்துட்டுப் போவாங்க. அம்மாவிடமும் சென்று எங்களுக்கும் இவர்களுக்கு மாதிரி நாதஸ்வரம் கத்துக் கொடுங்கன்னு சில ஆன்டிகள் கேட்பதையும் பார்ப்போம் என்கிறார் புன்னகைத்து.

‘உங்கள் பள்ளி ஆசிரியர்களும், சக தோழிகளும் நீங்கள் நாதஸ்வரம் வாசிப்பதை எப்படி பார்க்கிறார்கள்?’ பள்ளியில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் முன்பு மங்கல இசை, சுதந்திர தினம், குடியரசு தினம், ஸ்போர்ட்ஸ் டே, ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் போன்றவற்றை நாதஸ்வரத்தில் இருவரும் வாசிப்போம். நல்லா வாசிக்கிறீங்க. இன்னும் நல்லா வாசிக்கணும்னு சொல்லுவாங்க. எங்கள் டீச்சர்ஸ் இருவரையுமே நிறையவே என்கரேஜ் பண்ணுவாங்க. எல்லார் முன்னாடியும் எங்களைப் பெருமைப்படுத்துவாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸும், சூப்பரா நாதஸ்வரம் வாசிக்கிறியேன்னு பாராட்டுவாங்க.

சிலநேரம் நாதஸ்வரத்தை வாங்கி ஊதிப் பார்த்து, என்ன சத்தமே வரலைன்னு கேட்பாங்க. எப்படி தம் பிடித்து வாசிக்கிறீங்க? எப்படி இதில் இசை வருது என்றெல்லாம் ஆச்சரியமாகக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்பார்கள். சில ஃப்ரெண்ட்ஸ் எங்களுக்கும் சொல்லிக்கொடுன்னு கேட்பாங்க என்ற ஹரினியிடம், படிப்பில் இருவரும் எப்படி என்றதற்கு? இருவருமே மீடியமாகப் படிப்போம். எனக்கு ஆங்கிலம் ரொம்ப பிடித்த பாடம். படம் வரைவதிலும் எனக்கு ரொம்பவே ஆர்வம் இருக்கு. மற்றபடி கணக்கு பாடமும் , அறிவியல் பாடமும் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும். எனக்கு டாக்டராகணும்னு ஆசை. தங்கை கனிமொழிக்கு டீச்சராக ஆசை. புன்னகைக்கிறார்கள் கனவுகளை விழிகளில் தேக்கி.

உங்க அம்மாவும் அப்பாவும் நாதஸ்வரம் வாசிக்கும்போது நாதஸ்வரத்தை வாசிப்பது யார் என்கிற வித்தியாசம் தெரியுமா என்றதற்கு? கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும். ஆனால் இருவரும் இணைந்து ஒன்றாக நாதஸ்வரத்தை வாசித்தால் மட்டும் கண்டுபிடிப்பது சிரமம் எங்களுக்கு. ஒரு கச்சேரியில் எவ்வளவு நேரம் உங்கள் இருவராலும் வாசிக்க முடியும் என்றதற்கு? இடைவெளி விட்டுவிட்டு ஒரு இரண்டரை மணி நேரம் வாசிக்க முடியும் என்கின்றனர் கோரஸாக.

ஆர்வத்தோடு இசையில் லயித்து முழுமையாய் இறங்கினால் கண்டிப்பாக நமது மூச்சே இசையாய் நமக்கு வசப்படும் என்ற சிறுமிகளின் அம்மாவான நாதஸ்வரக் கலைஞர் பாகேஸ்வரி, நான் சிறுமியாக என்னுடைய அப்பாவோடு மேடைகளில் நாதஸ்வரம் வாசித்தபோது ஆச்சரியத்தோடு பலர் என்னைப் பார்த்தார்கள். பிறகு என் கணவரோடு இணைந்து நாதஸ்வரம் வாசிக்கும்போதும் அதே ஆச்சரியம் கலந்த பார்வைகளை சந்தித்து வருகிறேன். இன்று என் மகள்கள் எங்களோடு இணைந்து மேடைகளில் நாதஸ்வரம் வாசிக்கும்போதும் அதே ஆச்சரியப் பார்வைகள் எங்களைத் தொடர்கின்றன என்றவாறு மகள்கள் ஸ்ரீஹரினி மற்றும் கனிமொழியுடன் விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மர கொலு பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
Next post ஆணுறை யூஸ் பண்ணாம கர்ப்பமாவதை தடுக்க முடியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)