காமன்வெல்த் விளையாட்டில் கலக்கிய காரிகைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 57 Second

உலக விளையாட்டரங்கில், இந்திர வீரர், வீராங்கனைகளுக்கு இது நல்ல காலம் போலும்! குறிப்பாக, நமது வீராங்கனைகளுக்கு! அவர்கள் காட்டில் ‘பதக்க மழை’ காலமாக பொழிந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் ஜூலை 28ம் தேதி முதல் இம்மாதம் 8ம் தேதி வரை நடைபெற்ற 22வது காமன்வெல்த் போட்டிகளே உதாரணம். 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த திருவிழாவில் பளு தூக்குதல், குத்துச்சண்டை, பேட்மின்டன், ஹாக்கி, மல்யுத்தம், தடகளம், லான் பவுல்ஸ் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்கேற்று வெற்றி பதக்கங்களை வென்றுள்ளனர்.

பதக்க வேட்டையை துவங்கிய மீராபாய்   

இந்தியாவின் பதக்க வேட்டையை, வெயிட் லிஃப்டிங் வீராங்கனையான மீராபாய் சானு தொடங்கி வைத்தார். நடப்பு சாம்பியனான இவர் 48 கிலோ எடைப் பிரிவில், பங்கேற்று ஸ்நேட்ச் பிரிவில் 88 கிலோ தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை நிகழ்த்தினார். கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் முதல் சுற்றில் 109 கிலோவும், இரண்டாவது சுற்றில் 113 கிலோ என மொத்தம் 222 கிலோ தூக்கி, தங்கம் வென்று இந்தியாவிற்கு வெற்றி வாகையை சூடினார். அவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை வீராங்கனைகளான நீத்து கங்காஸ் மற்றும் நீக்கத் ஜரீன் தங்கள் பங்கிற்கு தங்கப் பதக்கங்களை வென்றனர். குறைந்தபட்ச எடைப் பிரிவான 45-48 கிலோ பிரிவில் பங்கேற்ற 21 வயதான நீத்து கங்காஸ் இங்கிலாந்தின் டெமி ஜேட்ரெஸ்டானை எதிர் கொண்டார்.

எதிராளியின் ‘பன்ச்’களில் இருந்து லாவகமாக விலகி, 5-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இவரைத் தொடர்ந்து, லைட் பிளை வெயிட் 48-50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற உலக சாம்பியனான நிக்கத் ஜரீன் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கார்லி மெக்நாலினை எதிர் கொண்டு, 5-0 வித்தியாசத்தில் வென்று கோல்டு மெடலை கைப்பற்றினார். மேலும் எடை தூக்கும் போட்டியில் வெண்கலம் பெற்று வெற்றி வாகை சூடினார் ஹர்ஜிந்தர் கவுர். 55 கிலோ எடை தூக்கும் பிரிவில் வெள்ளி பதக்கத்தினை தன் வசம் தக்கவைத்துக் கொண்டார் பிந்தியாராணி தேவி.

பிரமிப்பில் ஆழ்த்திய பி.வி.சிந்து

கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெண்கலம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இப்போட்டியில் தங்கம் வென்று அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். தொடக்க சுற்றுகளில் அபாரமாக விளையாடிய இவர் எளிதாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அதில் சிங்கப்பூரை சேர்ந்த ஜியாமின்யிவோவை எதிர்த்து விளையாடி 21-19, 21-17  என்ற கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கனடா வீராங்கனை மிஷெல்லியை இறுதிப் போட்டியில் சந்தித்து 21-15 என முதல் செட்டைக் கைப்பற்றினார். பின்னர், அதே உத்வேகத்துடன் விளையாடிய இவர் இரண்டாவது செட்டை 21-13 என வென்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டியில் பி.வி.சிந்து வென்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தத்தில் அசத்திய மாலிக் ஜோடி

காமன்வெல்த் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளில், சாக்‌ஷி மாலிக், அன்ஷூமாலிக் என்ற மல்யுத்த ஜோடியும் குறிப்பிடத் தகுந்த வீராங்கனைகள். 62 கிலோ எடைப் பிரிவான ஃபிரீஸ்டைல் போட்டியில் லீக் சுற்றில் அபாரமாக வென்றார் சாக்‌ஷி மாலிக். அடுத்து அரை இறுதிப் போட்டியில் கேமரூன் வீராங்கனையை எடானேகேஸ்லேவை 10-0 என்ற பாயின்ட்சில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி, கனடா நாட்டைச் சேர்ந்த கோடி நெஸ்சை சந்தித்தவர், 0-4 புள்ளியில் தோல்வியின் விளிம்பில் இருந்தார்.

பின்னர், வீறு கொண்டு எழுந்து, கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை ஆன அன்ஷூமாலிக் (57 கிலோ) நகுனயோ போவா சட்வியை எதிர்கொண்டு 3-7 என்ற வித்தியாசத்தில் வெள்ளி பதக்கத்தை வென்றார். வினேஷ் போகட் கனடா வீராங்கனை சமந்தா ஸ்டிவர்ட்டினை வீழ்த்தி மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றார். ஜூடோவில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினை வெற்றார் சுஷிலா தேவி.

சாமர்த்திய சவீதா

ஹாக்கியில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வெல்ல கோல்கீப்பர் சவீதி, முக்கிய காரணம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா என 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா தனது கடைசி லீக்கில் கனடாவை 3-2 என வீழ்த்தியது. 9 புள்ளிகள் பெற்ற மகளிர் அணி அரை இறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் மோதி தோல்வியை தழுவினாலும், நியூசிலாந்துடன் நடைபெற்ற போட்டில், சாமர்த்தியமாக செயல்பட்ட கோல் கீப்பர் வீராங்கனையான சவீதியின் திறமையால், நியூசிலாந்து வீராங்கனைகளின் முயற்சிகளை முறியடித்து இந்தியா வெண்கலம் வென்றது.

காமன் வெல்த் போட்டியில் முதன் முறையாக அறிமுகமான டுவென்டி 20-ல் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 8 அணிகள் பங்கேற்ற போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் போட்டி போட்டது. அதில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெள்ளியினை வென்றது.தனி நபர் பிரிவில். 10,000 மீட்டர்  நடைப்பந்தயத்தில் பங்கு பெற்ற பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கமும், ஜூடோ போட்டியில் துலிகா மான் வெள்ளி பதக்கமும், 60 மீட்டர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னுராணி வெண்கலம், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் தங்கம் என்று தங்கள் பங்கிற்கு பதக்கங்களை வென்றனர். வீராங்கனைகளின் அசாத்திய பங்களிப்பால் இந்தாண்டு காமன்வெல்த் போட்டியில் 4ம் இடம் பிடித்த இந்திய அணி வருகிற 2026-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 23-வது காமன் வெல்த்  போட்டியில் மேன்மேலும் சிறப்பான இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குண்டு உடம்பு, வட்ட முகம், மெல்லிய கோடு இதழ்..! (மகளிர் பக்கம்)
Next post உங்களுக்கு உடலுறவு தொடர்பான சந்தேகங்கள் இருக்கா..!! (அவ்வப்போது கிளாமர்)