புத்துணர்ச்சி தரும் புதினா!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 30 Second

புதினா என்பது துளசி குடும்பத்தைச் சார்ந்த ஒரு நறுமணத் தாவரமாகும். வழக்கில் நாம் பயன்படுத்தும் புதினா ஆங்கிலத்தில் ஸ்பியர் மின்ட் (Spear mint- Mentha spicata) என்று அழைக்கப்படுகிறது. புதினாவில்  பெப்பர் மின்ட், ஆப்பிள் மின்ட், வைல்ட் மின்ட் என ஏராளமான வகைகள் உள.

இவை இதன் இலைகளைக் கசக்கும் போது வரும் மணத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால், இவற்றின் குணங்கள் பெரும்பாலும் ஒன்றுபட்டே இருக்கின்றன. வீரியத்தில் சிறிதளவு மாற்றமிருக்கும். இவற்றின் சுவை கார்ப்பு மற்றும் துவர்ப்பு. இது குளிர்ச்சி தன்மையுடையது. வயிற்றில் தங்கும் வாயுவை வெளியேற்றி, பசியைச் தூண்டும் இயல்புடையது. இங்கிலாந்தின் தாவரவியல் தந்தை என்றழைக்கப்படும் வில்லியம் டர்னர் புதினாவை வயிற்றுப் பிரச்சனைகளுக்கான இறைவனின் தீர்வு என்று கூறுகிறார். இது உலகின் மிகவும் பழமையான மூலிகைகளில் ஒன்றாகும். பிரியாணி, பாணி பூரி சாப்பிடுபவர்களுக்கு இதன் பெயரைக் கேட்டாலே நாவில் நீர் ஊறும்.

அகத்தியர் தன்னுடைய பொருட்பண்பு நூலில்;
‘அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்
குருதியழுக்கு மலக்கொட்ட-விரியுந்
துதியதன்று சோறிறங்குந் தொல்லுலகில் நாளும்

புதியனல் மூலி முதல்’என்கிறார். அதாவது,  புதினாவை உணவில் சேர்த்துக்கொள்ள, சுவையின்மை, வாந்தி, பசியின்மை, மந்தம், செரியாமை, இரத்தத்தில் தோன்றும் அழுக்குகள், இவை நீங்கி அன்னம் நன்கு சீரணமாகும் என்று கூறுகிறார்.

100 கிராம் புதினாவில் 44 கலோரி ஆற்றல், கார்போஹைட்ரேட்-8 கிராம், புரதம் -3.3 கிராம், நார்ச்சத்து-7 கிராம், சோடியம்-30 மி.கி, பொட்டாசியம்-458 மி.கி, இரும்புச்சத்து-244 மி.கி, மாங்கனீசு -1.118 மி.கி, மக்னீசியம் -15 மி.கி, வைட்டமின் சி-27 மி.கி, ஃபோலிக் அமிலம்-0.3 மி.கி, நிக்கோட்டினிக் அமிலம் -0.124 மி.கி, ரிபோபிளேவின்-0.175 மி.கி, பேந்தோதனிக் அமிலம்-0.62 மி.கி, பைரிடாக்சின்-0.158 மி.கி நிறைந்துள்ளன.

இதன் இலைகளை வாளியில் காய்ச்சி (Distillation) எடுக்கப்படும் எண்ணெயின் பெயர் ஸ்பியர்மின்ட். நறுமண எண்ணெயான இது ஒரு பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பியாகச் செயல்படுகிறது. பற்பசைத் தயாரிப்புகளில் இது ஒரு முக்கியப் பொருள். பற்பசைகளை வாயில் வைத்தவுடன் வரும் விறுவிறுப்பு, புத்துணர்ச்சி, குளிர்ச்சி, நறுமணத்துக்கு இதுவே காரணம்.

1) புதினா டீ:- தேயிலையில், எலுமிச்சைச் சாறு, தேன், புதினா இலைகளை சேர்த்துக் காய்த்து குடிக்கும்போது ஒருவிதப் புத்துணர்ச்சியை உடலுக்குத் தருகிறது. இதிலுள்ள மென்தால் வாய்க்குள் ஒரு குளிர்ச்சியை உண்டாக்கும். இதனால், வாய்ப்புண், தொண்டைப்புண், தொண்டைக் கரகரப்பு, ஊரல் குணமாகும். வாய்துர்நாற்றம் நீங்கும். இது மன விழிப்புணர்வை மேம்படுத்தி நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு உற்சாக பானம்.

2)வலி, வீக்கம் நீங்க:- புதினாக் கீரையுடன், ஓமம் சிறிதளவு சேர்த்து நீர் விட்டரைத்து அடிபட்ட வீக்கம், மூட்டு வலியுள்ள இடங்களில் பற்று போட்டு வந்தால், வீக்கம், வலி இவைகளுக்கு ஓரிரு நாட்களில் நல்ல பலனைத் தரும்.

3) பொடுகு தீர:- புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சைச் சாறு, தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துக் குளித்துவந்தால் பொடுகு நீங்கும், கூந்தல் செழித்து வளரும்.

4) காமாலை, வயிற்று வலி, விக்கல் நீங்க:- புதினா இலைகளை நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாகப் பொடித்து, அதில் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து 30-60 மிலி வீதம் குடித்துவர, காமாலை, கல்லீரல் நோய்கள், வயிற்று வலி, விக்கல் நீங்கும்.

5) மாதவிடாய் ஒழுங்காக:- புதினா இலை,கர்ப்பூரப்புல் ஓரெடையாக எடுத்து, குடிநீரிட்டு கொடுக்க மாதவிடாய் தடை, அடிவயிற்றில் ஏற்படும் வலி இவை நீங்கி மாதவிடாய் ஒழுங்காக வரும்.

6) பல்வலி குணமாக:- புதினாப் பொடி, ஓமத்தூள், உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் வலி, வாய் துர்நாற்றம் இவை நீங்கி பல் முத்துப்போல் பளபளக்கும்.

7) IBS – நோய்க்கு: IBS என்னும் வயிற்றுப் பிரச்சனைக்கு புதினாவில் உள்ள மென்தால் ஒரு அருமருந்து. இது வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தி IBS நோயில் இருந்து
நிவாரணம் தருகிறது.

8) ஆஸ்துமா நோய்க்கு: புதினா இலைகளில் உள்ள மென்தால், லாமினால் மார்புத் தசைகளை விரிவடையச் செய்கிறது. ஆகவே, ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் உள்ள சிரமம் நீங்குகிறது. சுவாச நோயுள்ளவர்கள் தினமும் 2 முதல் 3 முறை புதினா இலைகளால் செய்த டீயைக் குடிக்கலாம்.

9) முகப் பருவுக்கு: புதினா இலைகளில் உள்ள சாலிசிலிக் அமிலம், வைட்டமின் ஏ தோலில் சீபம் என்ற எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, முகப்பரு உள்ளவர்களுக்கு புதினா இலை ஒரு அருமருந்து.

10) தலைவலி தீர: பச்சைப் புதினா இலைகளை அரைத்து நெற்றியில் பற்றிட்டால் மைக்ரைன் என்ற ஒற்றைத் தலைவலி நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்! (மருத்துவம்)
Next post யோகாவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழகம்! (மகளிர் பக்கம்)