பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்! (மருத்துவம்)

Read Time:16 Minute, 8 Second

பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்!“சர்வே ரோகா மந்தாக்னௌ” என்ற ஆயுர்வேத கூற்றிற்கு ஏற்ப நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் முதற்காரணம் அக்னியின் (ஜீரணத்தின்) மந்தமே ஆகும். இந்த மந்த அக்னியின் முதல் அறிகுறி பசியின்மை. பசியின்மையை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் உணவுகளை திணிப்பது பல நோய்களுக்கு வழி வகிக்கிறது. பசியின்மை என்பது உணவு அருந்துவதற்கான விருப்பம் குறைந்து பசி ஏற்படாமல் இருக்கும் நிலையே ஆகும்.

பசியின்மை இருப்பவர்களுக்கு தங்கள் கடைசி உணவிற்குப்பின் பல மணி நேரத்திற்கு பிறகும் கூட பசி எடுக்காது, உணவைப் பற்றிய எண்ணம் அல்லது அதை பார்த்தாலே கூட அவர்களுக்கு பிடிக்காது. நவீன விஞ்ஞானம் இந்த நிலையை ஒரு தனிப்பட்ட நோயாக அங்கீகரிக்கவில்லை, இது பொதுவாக பல நோயுற்ற நிலைகளின் அறிகுறியாக உணரப்படுகிறது. அதேசமயம் ஆயுர்வேதத்தில் இந்த குறிப்பிட்ட நோய் பற்றிய விரிவான விளக்கம் உள்ளது. இந்நிலையை ‘மந்தாக்னி’ என்றும் ‘அருசி’ என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

பசியின்மை ஏற்படுவதற்கான சாதாரண காரணங்கள்

இன்பம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஆழ்ந்த சிந்தனைகள், தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் பசியின்மை ஏற்படும். இது  சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பசியின்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

*வயிறு எரிச்சல் மற்றும் வயிற்றில் நோய் தொற்று இருந்தால் பசியின்மை ஏற்படலாம்.

*மனச்சோர்வானது, உணவின் மீது வெறுப்பை உண்டாக்கி பசியின்மையை உண்டாக்கலாம்.

*சில மருந்துகள் குறிப்பாக காசநோய்க்கு (TB)  கொடுக்கப்படும் மருந்துகள், ரத்த கொதிப்பிற்கு (Blood Pressure) கொடுக்கப்படும் மருந்துகள் மற்றும் இதய நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் பசியின்மை ஏற்படலாம்.

*குழந்தைகளுக்கு பொதுவாக வயிற்றில் குடல் புழுக்கள் இருந்தால் பசியின்மை ஏற்படலாம்.

*கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு பசியின்மை ஒரு பொதுவான அறிகுறியாக இருக்கிறது.

*மது, புகையிலை மற்றும் புகைத்தல் ஆகியவை கூட பசியின்மைக்கு காரணமாக அமையலாம்.

*50 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு பசியின்மையும் உடல் எடை குறைதலும் நாளுக்கு நாள் அதிகரித்தால் நாம் புற்றுநோய் பற்றி யோசிக்க வேண்டும்.

*பசியின்மையோடு,  இருமல் மற்றும் மாலை நேரங்களில் லேசான காய்ச்சல் வந்தால் டி.பி. (காச) நோயாக இருக்கலாம் என்று நாம் சந்தேகிக்க வேண்டும்.

*பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும் பசியின்மை ஒரு உண்மையான நிலை அல்ல. ஏனெனில், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை நன்றாக சாப்பிடுவதும் பிடிக்காத உணவுகளை பசியில்லை என்று தட்டிக் கழிப்பதும் நாம் அறிந்ததே.

பசியின்மை ஏற்படுவதற்கான மற்ற நோய் நிலைகள்

*களைப்பு, பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு.
*சிறுநீரக செயலிழப்பு, இதய நோய்கள்.
*ரத்த சோகை, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி.
*கர்ப்பம், மாதவிடாய்க்கு முன் ஏற்படும் நோய்க்குறி.
*சளி மற்றும் காச நோய்.
*துத்தநாகம் (Zinc) மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு
*பெருங்குடல் புண்.
*மது மற்றும் போதை மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்துதல்.
*சில மருந்துகளின் பக்கவிளைவு.

புற்று நோயும் பசியின்மையும்  

புற்றுநோய் அல்லது புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளாக பசியின்மை, சோர்வு, வாந்தி, வலி ஆகியவை ஏற்படும். பசியின்மையால் இங்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் எடை குறைவு ஆகியவை மேலும் அதிகரிக்கிறது. சில புற்றுநோய்களில் குறைந்த அளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். அறுவை சிகிச்சை அல்லது புற்றுநோய் சிகிச்சையால் பசியின்மை அல்லது பசி குறைந்து காணப்படும் வாய்ப்பும் அதிகம். எனவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும்போது பசியின்மை ஏற்பட்டால் நன்றாக  ஆலோசிக்க வேண்டும்.

பசியின்மையின் அறிகுறிகள்

*உணவுப்பொருட்கள் மீது வெறுப்பு ஏற்படும், இதனால் உணவுப் பொருட்களை பார்க்கும்போது அல்லது அதனைப்பற்றி நினைக்கும் பொழுது கூட குமட்டுவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
*மேலும் போதிய உணவு உட்கொள்ளாததால் எடை இழப்பு ஏற்படும்.
*பசி இல்லாத போது வலுக்கட்டாயமாக சாப்பிட்டால், சிலர் சாப்பிட்ட பிறகு வாந்தியெடுத்து விடுவார்கள்.
*பசியின்மை நீடித்திருந்தால், தலைச்சுற்றல், மயக்கம், ஒழுங்கற்ற சுவாசம் போன்றவை ஏற்படலாம்.

பசியின்மையின் பொதுவான சிகிச்சை

*பொதுவாக மேல் கூறிய நோய்களின் நோய்க்குறிகள் இருந்தால் அந்நோய்களை குணப்படுத்துவதோடு பசியின்மைக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். மேலும் ரத்த சோகை, காமாலை, கணைய அழற்சி, துத்தநாகக் குறைபாடு, வைட்டமின் பி 12 குறைபாடு ஆகியவற்றின் நிலைகளை மருத்துவ (லேப்) பரிசோதனை செய்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

*மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மது போதை அடிமைத்தன்மை இருந்தால் ஒரு நல்ல மனோ தத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.

*பசியின்மைக்கு காரணமான மந்தாக்னிக்கு கப தோஷத்தின் சீற்றமே முதன்மையாகும். கபதோஷத்தின் குணங்களான சிநேகம், மந்தம், குளிர்ச்சி ஆகியவை நம் செரிமான மண்டலத்தையும் ஆக்கிரமித்து பசியின்மையை ஏற்படுத்துகிறது. இதனால் உணவுப்பையில் உள்ள சுரப்பிகளும் மந்தமடைந்து அதன் செயல்பாடுகளை சரிவர செய்யாததனால் பசியின்மை ஏற்படுகிறது, ஆகவே பசியின்மைக்கு சிகிச்சையாக கபதோஷத்தை குறைத்து, அக்னியை தூண்டி, உணவை செரித்து, வாதத்தை அனுலோமனம் செய்யக்கூடிய மருந்துகளை இங்கு நாம் பயன்படுத்துகிறோம்.

பொதுவாக நாட்பட்ட வயிற்றுப் புண்களில் கூட பசியின்மை ஏற்படுவதால் கசப்பு சுவை உள்ள மருந்துகளையே முதலில் பயன்படுத்தி பிறகு காரம், சுவை உள்ள உணவுகளை, மருந்துகளை தேர்ந்தெடுப்பது ஆயுர்வேத வைத்திய முறையாகும்.

பசியின்மைக்கு எளிய வீட்டு வைத்திய முறைகள்

நம் வீட்டிலேயே பசியை தூண்டுவதற்கு பல மூலிகைகளை நாம் நம் உணவில் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டே தான் வருகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் உணவுகளில் சீரகம், சோம்பு, ஓமம், மிளகு, மஞ்சள், பூண்டு ஆகியவை பசியின்மைக்கு நல்ல வீட்டு வைத்திய மருந்துகளாக அமைகின்றது.

சீரகம் பசியின்மைக்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. சீரகத்தை லேசாக வறுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வாயிலிட்டு மென்று வந்தால் நம் உமிழ்நீர்கள் நன்றாக சுரந்து வயிற்றினுள் இறங்கி பசியை தூண்ட ஆரம்பித்து விடும். இதே சீரகத்தை தண்ணீரிலிட்டு காய்ச்சி சீரக குடிநீராக உணவுக்குப் பின் குடித்து வர ஜீரணத்தை வலுப்படுத்தி வயிறு உப்புசம், வயிற்றுப்பொருமல் ஆகியவற்றை போக்கி அடுத்த வேலை பசி நன்றாக எடுக்க உதவும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் அதுவே பசியின்மைக்கும்,  நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும், உடல் இடை குறைவதற்கும் முக்கியமான காரணமாக அமைந்து விடும். அத்தகைய நிலைகளில் வாய்விடங்க சூரணம் 2 கிராம் அளவு தேனில் கலந்து காலை மற்றும் இரவு என,  ஐந்து நாட்கள் கொடுத்து வர புழுக்கள் முற்றிலும் நீங்கி விடும், பின்னர், பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருந்தான அஷ்ட சூரணத்தை ஒரு ஸ்பூன் குழந்தையின் உணவின் முதல் உருண்டையில் உருக்கிய நெய்யுடன் கலந்து கொடுத்து வர பசி நன்றாக எடுக்க ஆரம்பித்து விடும். ஒரு துண்டு எலுமிச்சையின் மேல் மிளகு தூள் மற்றும் உப்பு சிறிதளவு வைத்து அடிக்கடி சப்பிக் கொள்ள நன்றாக பசியெடுக்கும்.

பசியின்மையின் ஆயுர்வேத சிகிச்சை

நோய் நாடி நோய் முதல் நாடி என்ற குறளுக்கேற்ப பசியின்மையின் காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதே முதன்மையாகும். மேலும், பசியின்மைக்கு சில மருத்துவ முறைகளை ஆயுர்வேதம் விவரித்துள்ளது. அவை,

*கவலம் – கந்தூஷம் (வாயில் மருந்தை தக்கவைப்பது மற்றும் வாய் கொப்பளிப்பது), – மாதுளை சாறு – 10 மில்லி., வறுத்த சீரகம் – 1 கிராம் மற்றும் சர்க்கரை – 10 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து 2 நிமிடம் கவலம் போல் வாயில் வைத்திருக்க வேண்டும்.

*தூமபானம் – மூலிகை புகைத்தல்,

*முக தாவனம் (மீண்டும் மீண்டும் வாய் கழுவுதல்),

*மனோஜ்னா அன்னபானம் (மனதிற்கு பிடித்த உணவு மற்றும் பானங்கள் அருந்துவது),

*ஹர்ஷணம் (பாதிக்கப்பட்டவரை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது) மற்றும்

*ஆஸ்வாசனம் (ஆறுதல் கூறுவது)

*செரிமான மருந்துகளுடன் மேற்கூறிய முறைகள் நல்ல பலனளிக்கும்.

*மேலும் காய்ந்த கருப்பு திராட்சை, கடுக்காய் தோல் மற்றும் சர்க்கரையை சம பாகங்களாக கலந்து பொடி செய்து 3 முதல் 6 கிராம் அளவு 50 மி.லி. சூடான தண்ணீருடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*ஆங்கில மருந்துகளை உட்கொள்வதால் வரும் பசியின்மைக்கு தூசி விசாரி அகத மாத்திரையும், அமிர்தோத்திர கஷாயமும், குடிச்சியாதி கசாயமும், வில்வாதி மற்றும் திராக்ஷாதி லேகியமும் நல்ல பலன் அளிக்கும்.

*மேலும் பசியின்மையை போக்க ஆயுர்வேத பிரசித்தி பெற்ற மருந்து பஞ்ச கோலத்தினால் உண்டான கஞ்சியாகும். பஞ்ச கோலம் என்பது திப்பிலி, கண்டந்திப்பிலி, செவ்வியம், கொடிவேலி, சுக்கு இவை ஐந்தும் சேர்ந்த கலவையே ஆகும். இந்த ஐந்து பொருட்களையும் சமபங்கு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு சுமார் 30 கிராம் அளவு 2 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி ஒரு லிட்டர் அளவுக்கு குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் பஞ்சகோல கசாயம் என்று கூறுவோம். அடுத்து, அரிசி ஒரு பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்து தண்ணீர் கால் பங்கு ஆகும் வரை காய்ச்சி பின் சிறிதளவு இந்து உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும், இதற்கு இடையில் மேல் கூறிய பஞ்சகோல கசாயத்தை 20 மில்லி அளவு நடுநடுவில் நான்கு நாட்கள் இதே போல் அருந்தி வந்தால் பசியின்மை, வயிற்றுப் பொருமல், வயிறு வலி, சுவையின்மை ஆகியவை நீங்கி நன்றாக பசி எடுத்து உடல் வலிமை பெறும்.

*மலச்சிக்கலினால் வரப்படும் பசியின்மைக்கு அபயாரிஷ்டம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

*‘வைஸ்வாநர சூரணம்’ பசியின்மைக்கு மிகவும் நல்ல மருந்து. வைஸ்வாநரம் என்றால் எல்லாவற்றையும் எரிக்கக் கூடிய நெருப்பு என்ற பெயருக்கு ஏற்றவாறு உணவை நன்கு செரிமானம் செய்ய உதவும் மருந்து. இதில் சரியான அளவு உப்பு, துவர்ப்பு, கார்ப்பு இருப்பதால் வயிற்றின் கோளாறுகளை போக்கும். இதை செரிமான சக்தி குன்றியவர்கள் தினமும் இரவில் ஒருவேளை சாப்பிட்டு வர செரிமான சக்தி அதிகரித்து இரைப்பை, குடல், கல்லிரல் நன்றாக இயங்கும்.

மேலும் இதர ஆயுர்வேத மருந்துகளான தாடிமாஷ்டக சூர்ணம், லவண பாஸ்கர சூர்ணம், தாளிசபத்ராதி மாத்திரை, மஹாதிக்தக கஷாயம், திராக்க்ஷாதி கஷாயம், ஜீரகாரிஷ்டம், நாரிகேள லாவணம் ஆகியவை தக்க ஆயுர்வேத மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்கள் தங்கச் சுரங்கம்!! உடலுறவில் உச்சம்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post புத்துணர்ச்சி தரும் புதினா!! (மருத்துவம்)