ஐரோப்பிய கலையும் சுவையும் சேர்ந்த டிசைனர் கேக்குகள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 40 Second

இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்டங்களிலும் புதுமையான வித்தியாசமான கேக்குகளை வெட்டி அந்த பார்ட்டியை மேலும் விசேஷமாக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். கேக்கின் சுவையை தாண்டி, அது எவ்வளவு கலைநயத்துடன் இருக்கிறது என்பது இன்றைய இளைஞர்களின் முக்கிய தேவையாக இருக்கிறது. அப்படி வித்தியாசமாக ருசியுடன், க்ரியேட்டிவான ஸ்டைலிலும் கேக்கை வடிவமைத்து வருகின்றனர் நிக்கி’ஸ் கஃபே அண்ட் ஃபைன் பேஸ்ட்ரிஸ்.

நிக்கி மெஹபூபானியும் அவரது சகோதரி செரினா மெஹபூபானியும் சேர்ந்து சென்னையில் ஐரோப்பிய ஸ்டைலில் கேக் கஃபேவை நடத்தி வருகின்றனர். இவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இதில் நிக்கிக்கு தான் பேக்கிங்கில் ஆர்வம் முதலில் உண்டாகியது.சுவிட்சர்லாந்தில் ஒரு வருடம் பேக்கிங் பயிற்சி பெற்ற நிக்கி, அங்கு அவர் சுவைத்த அருமையான ஃப்ளேவர்களை இங்கே நம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் தான் சென்னையில் இந்த கேக் கஃபேயினை 2014ல் எக்மோரில் ஆரம்பித்தார். ஒரே வருடத்தில் மைலாப்பூரில் இரண்டாவது கிளையை ஆரம்பித்து பின் ஓ.எம்.ஆர், வேளச்சேரி, நாவலூர் என்று சென்னையின் முக்கிய பகுதிகளில் எல்லாம் இவர்களின் உணவகம் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன் தான், குரோம்பேட்டையிலும் இவர்கள் தங்களின் புதிய கிளையை தொடங்கியுள்ளனர்.

‘‘2014ல் நாங்க ஆரம்பித்த இந்த கேக் கஃபே, சுவையை தாண்டி மக்களிடம் அதிக கவனம் பெற ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணம் எங்களின் வித்தியாசமான கேக் டிசைன்கள் மற்றும் கேக்கின் சுவை. இப்படிப்பட்ட ஒரு அழகிய கேக் டிசைன்களை உருவாக்க முக்கிய காரணம் செரினாதான்’’ என்று பேசத் துவங்கினார் நிக்கி. நாங்கள் ஆரம்பித்த போது முதலில் எங்களுடைய சுவையில் மட்டும் கவனம் செலுத்தினோம். சுவையாகவும் தரமாகவும் எந்த உணவுக் கொடுத்தாலும் மக்கள் கண்டிப்பாக அதனை வரவேற்பார்கள். அப்படித்தான் எங்களுக்கான வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். ஆனால் பேக்கிங் துறையில் நம்பர் 1 இடத்தை பிடிக்க, ருசியுடன் வேறு ஏதாவது ஒரு சிறப்பம்சமும் தேவை என எனக்கு தோன்றியது. அப்போதுதான் செரினாவின் திறமை எங்களுக்கு கை கொடுத்தது. செரினாவுக்கு எப்போதுமே டிசைனிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்தது” என்கிறார் நிக்கி.

‘‘எங்களுடைய ருசி மக்களுக்கு பிடித்துவிட்டது, அடுத்தபடியாக நிக்கி நினைப்பது போல எங்களுடைய கஃபேவை தனித்துவமாக மாற்ற புதுமையான கேக் டிசைன்கள் உதவியாக இருக்கும் என நாங்கள் முடிவு செய்தோம். அதனால் தொடர்ந்து கேக் டிசைனில் கவனம் செலுத்தி வித்தியாசமான நேர்த்தியான கேக்குகளை உருவாக்க ஆரம்பித்தோம். அப்போது தான், மார்கெட்டிங் என்று வரும் போது அதில் சமூகவலைத்தளம் மிகவும் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தோம்.

அதில் எங்களுடைய நேர்த்தியான அழகான கேக்குகளை பதிவிட ஆரம்பித்ததும் எங்கள் வாடிக்கையாளரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. பலரும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என எங்களுக்கு ஆன்லைனிலேயே அவர்களுக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்து, எங்களிடம் கேக் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர். சொல்லப்போனால் இந்த கேக் கஃபே எங்க இருவரின் செல்லக்குழந்தை என்றே சொல்லலாம். இதில் நான், நிக்கி இருவரும் பிரதானமான பொறுப்புகளை ஏற்று இருந்தாலும், எங்கள் அப்பாவும் மற்றும் என் கணவர் இருவரும் எங்களின் பிசினசிற்கு உதவியாக இருக்காங்க. நானும் என் சகோதரனும் கேக்கை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவோம்.

எங்களுடைய தந்தை ஒரு பிஸினசை எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு வழிகாட்டுவார். எதை முதலில் செய்ய வேண்டும், எங்கு இன்வெஸ்ட் செய்யலாம், எதில் பணத்தை மிச்சப்படுத்தலாம் போன்ற முக்கிய தொழில் சார்ந்த வழிகளை எங்களுக்கு சொல்லுவார். என் கணவர் ப்ரனவ் நிர்வாகம் சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். அதாவது பணியாளர்களை வேலைக்கு நியமிப்பது, அவர்களை ஒருங்கிணைப்பது போன்ற வேலைகளை பார்த்துக்கொள்வார். நிக்கி, இந்த கேக்கை எப்படி ருசியாகவும் தரமாகவும் தயாரிப்பது என்பதில் மும்முரமாக இருக்கும் சமயம், நான் இந்த கேக்குகள் வெளிப்புறத்தில் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன். இதெல்லாம் தான் எங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புகளும். இந்த நான்கு பேரின் பங்களிப்பும் தான் இந்த கஃபேவின் வெற்றி” என்கிறார் செரினா.

அவரை தொடர்ந்து பேசிய நிக்கி, ‘‘நாங்க உருவாக்கும் ஒவ்வொரு கேக்குமே தனித்துவமான டிசைனில் புதுமையானதாகவும் அதே சமயம் ருசியாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கடின உழைப்புடன் தான் இதை செய்து வருகிறோம். இதை நாங்கள் யாருமே விளையாட்டாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ செய்யவில்லை. இந்த கேக்குகளை தயாரிக்கும் போது அதில் நிச்சயம் சந்தோஷம் கிடைத்தாலும், அதே சமயம் கடின உழைப்பும் இருக்கிறது. ராஸ்பெரி வைட் சாக்லெட், பெல்ஜியன் பிஸ்தா, புளூபெர்ரி அண்ட் சால்டட் கேரமல் சீஸ் கேக் போன்று சென்னையிலேயே எங்களிடம்தான் பிரத்யேகமான ஐரோப்பிய வகை பேஸ்ட்ரிகள் கிடைக்கும் என்பதும் இந்த கஃபேவின் முக்கியமான அம்சமாகும்” என்றார்.

இவர்களின் மிகவும் ஃபேமசான தீபாவளி கேக்குகளை பற்றி கேட்ட போது, “தீபாவளி சமயத்தில் ஒருவருக்கு கேக்கை பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்து உருவாக்கியது தான் இந்த விநாயகர் கேக். சாப்பிட மட்டும் அல்லாமல், இதை அந்த நாள் முழுக்க அழகாக அலங்கரித்து வீட்டில் அலங்காரப் பொருளாகவும், சென்ட் பீஸாகவும் கூட எங்களுடைய கேக்கை பயன்படுத்தலாம்.

அதே போல சமீபத்திய தீபாவளி பண்டிகைக்கு ஒரு பெண் கையில் விளக்குகளை ஏந்தி இருப்பது போன்ற கேக்கை உருவாக்கினோம். அந்த விளக்கை பற்ற வைத்து கேக்கை வெட்டும் விதத்தில் இதை வடிவமைத்திருந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றனர்.இவர்கள் இது போன்ற பல 2டி, 3டி கேக்குகளையும் செய்து வருகின்றனர். பல பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இவர்களுடைய கேக்கை நாம் பார்க்க முடியும்.

‘‘சென்னையில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலுமே கேக் ஆர்டர் செய்ய வேண்டும் என்றதும் அவர்கள் முதலில் நிக்கி’ஸ் கஃபே அண்ட் ஃபைன் பேஸ்ட்ரிஸைதான் அணுக வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். நாங்கள் தயாரிக்கும் கேக்குகள் எல்லாமே 99% முட்டை சேர்க்காத கேக்குகள் தான்.

இந்த எட்டு வருடங்களில் நாங்கள் ஒவ்வொரு படியாக தவறுகள் செய்து, பல பாடங்கள் கற்று உயர்ந்திருக்கிறோம். பேஸ்ட்ரிகள், ப்ரெட், சாண்ட்விச்கள், பேன்-கேக்ஸ், வாஃபிள்ஸ், பாஸ்தா போன்ற உணவுகள் உணவு டெலிவரி செய்யும் செயலி மூலமாகவோ இல்லை நேரடியாக எங்கள் கஃபேக்களில் வாங்கி ருசிக்கலாம். வாடிக்கையாளருக்கு கஸ்டமைஸ்ட். டிசைனர் கேக்குகள் வேண்டும் என்றால், அதை ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்யலாம்’’ என்கிறார்கள் செரினாவும், நிக்கியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
Next post மனதை கட்டுப்படுத்துவோம் ! (மகளிர் பக்கம்)