மனதை கட்டுப்படுத்துவோம் ! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 0 Second

இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் இயந்திரம் போன்று சிறு இடை வேளையின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். எதற்காக? என்று வினா எழுப்பினால் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் என்று பதில் வரும். அதே சமயம் நம்மில் பெரும்பாலானோர் குடும்பத்திற்காக உழைக்கிறோம் என்ற மனநிறைவு இருந்தாலும், ஒரு வித மன அழுத்தத்தோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட மன அழுத்தமான வாழ்க்கை இல்லாமல் நல்லதொரு மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக…

‘வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுப்பது போல்  நோய் வரும் முன்  நம்மை  நாம் காக்க வேண்டும்’ என்பது  நமது முன்னோர்கள் கூறிய கருத்து. இந்த வாக்கியம்  மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் மனஅழுத்தத்தினால் பாதிப்படைகிறார்கள்.  கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தம் ஒற்றைத்தலைவலியில் ஆரம்பித்து மாரடைப்பு வரையிலான நோய்கள் வரை மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு தனியார் நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறை மற்றும் பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உலவி கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தை நாம் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க முயல வேண்டும். அதற்கான தீர்வு  வேற எங்கும் இல்லை. நம்மிடம்தான் இருக்கிறது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 – 90% வரை அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். எதிர்பார்ப்புகள் குறைவதால், மனஅழுத்தமும் பெருமளவில் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலை பளு… இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும். சிலருக்கு அதிகளவு வெளிச்சம், சத்தம் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தும். விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் அழைத்து செல்லும்.

அதில் முதல் முக்கிய காரணி பணப்பிரச்னை. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் ேவலை செய்யும் இடம், அடுத்து உறவினர்கள். சில நேரங்களில் நெருங்கிய உறவினர்களே மன அழுத்தத்தை தோற்றுவிப்பார்கள். இவை தவிர முறையற்ற உணவு, போதை பழக்கம், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

முதுமை மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தினை சந்திப்பார்கள். இவர்கள் இருவருக்கும் அன்பான உபசரிப்பு தான் தேவை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில சமயம் திருமணம், பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்களும் மன அழுத்தத்த்தை அதிகரிக்கும். அந்த நேரத்தில் அதை சரியாக கையாண்டு கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் தீர்க்க முடியாத நோய் அல்ல. கட்டுப்படுத்தினால் அதனால் ஏற்படக்கூடிய நோய்களை தவிர்க்கலாம்.

என்ன செய்யலாம்

*உடற்பயிற்சி மன அழுத்தத்தை போக்க மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொண்டால், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும் போது எண்டோர்பின்ஸ் போன்ற நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கும்.

*எவ்வளவு வேலை இருந்தாலும், உங்களுக்கான சில மணி நேரம் ஒதுக்குவது அவசியம். அது உங்களின் உடல் மனம் அனைத்தையும் அமைதிப்படுத்தும்.

*தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தலாம்.

*ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியை தினந்தோறும் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.

*முறையான உணவுப்பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகள், கீரை உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

*தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

*7 முதல் 8 மணி நேரம் உறக்கம் அவசியம். உறங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டால், புத்தகங்கள் படிக்கலாம், மனதை ரம்மியமாக்கும் இசை கேட்கலாம். அப்படியும் பிச்னை நீடித்தால் டாக்டரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐரோப்பிய கலையும் சுவையும் சேர்ந்த டிசைனர் கேக்குகள்! (மகளிர் பக்கம்)
Next post வாசகர் பகுதி-கண் பார்வையை தெளிவாக்கும் தும்பை! (மருத்துவம்)