வாசகர் பகுதி-கண் பார்வையை தெளிவாக்கும் தும்பை! (மருத்துவம்)
தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலையும், பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி நாடெங்கிலும், வயல் வெளிகளில் தானே விளைந்து கிடைக்கும் ஒரு அரிய வகை மூலிகைச் செடியாகும். தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை எனப் பலவகை உண்டு. எல்லா வகைகளும் மருத்துவ குணமுடையவை.
தும்பையின் மருத்துவப் பலன்கள்
*தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாக காதிற்கு விட்டுவரக் ‘காதில் சீழ் வடிதல்’ நிற்கும்.
*தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துக் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
*தும்பைப்பூ, நந்தியாவட்டைப்பூ, புளியம்பூ, புங்கம்பூ, எள்ளுபூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கண்ணுக்கு மையாகத் தீட்டிவர ‘வெள்ளெழுத்து’ மாறும். கண் பார்வைத்
தெளிவடையும்.
*அதிகாலையில் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்குத் தர ‘விக்கல்’ நீங்கும்.
*தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தை தனித்தனியே ஊறவைத்து, உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர ‘இதய பலவீனம்’ நீங்கும். ஜுரத்திற்கு பின் ஏற்பட்ட ‘சோர்வு’ நீங்கும். பசி அதிகரிக்கும். ‘பித்த மயக்கம், வாந்தி’ குணமாகும்.
*தும்பைப் பூவை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் ‘பூரான் கடி’ குணமாகும். இதனால் ஏற்பட்டத் தடிப்பும், அரிப்பும் மறையும்.
*தும்பை இலை சாறை தேன் கலந்து உள்ளுக்குத் தர ‘நீர்க் கோர்வை’ குணமாகும்.
*தும்பை இலைச் சாற்றுடன் சிறிது சோற்று உப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டு குளித்து வர ‘சொறி, சிரங்கு, நமச்சல்’ போகும்.
*தும்பை இலைச் சாற்றை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்பினால் தலையில் ‘நீரோ, கபால நீரோ, மண்டைக் குத்தலோ, மண்டையிடியோ’ குணமாகும்.
*தும்பைச் சாறும், வெங்காயச் சாறும் கலந்து 5 நாள் தர ‘ஆசனப்புண்’ குணமாகும். தும்பைச் செடியை அரைத்து ‘தேமல்’ உள்ள இடத்தில் பூசிவர ‘தேமல்’ குணமாகும்.