மருந்தில்லா மருத்துவம்…!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 13 Second

அக்குபஞ்சர், சுஜோக் அக்குப்ரெஷர், ரெய்கி போன்ற வைத்தியமுறைகளில் எந்தவிதமான மருந்துகளும் தரப்படுவதில்லை என்பதால் இவற்றை மருந்தில்லா மருத்துவம் என்கிறார்கள். இவற்றில் எந்தவிதமான மருந்துகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடலுக்குள் செலுத்தப்படுவதில்லை. உங்கள் உடலின் ஆரோக்கியமான ஒரு பகுதியை வைத்தே ஆரோக்கிய மற்ற இன்னொரு பகுதிக்கு சிகிச்சை தரப்படுகிறது.

அக்குபஞ்சர்

லத்தீன் மொழியில் அகுஸ் என்றால் ஊசி என்று பொருள். பஞ்சர் என்றால் குத்துதல்.  இந்தஇரு சொற்களின் இணைப்புச் செயல்பாடான ஊசியால் குத்துதல் என்ற சிகிச்சை முறைதான் அக்குபஞ்சர். இப்படி, ஊசியால் குத்துவதன் மூலமாக உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை.மருத்துவ அறிவியல் என்பது உடற்கூறியல், உடலியக்கவியல், நோய்க்குறியியல், நோய் நீக்கியல் ஆகிய நான்கு அடிப்படைகளின் மீது இயங்குகிறது. அக்குபஞ்சர் எனும் சிகிச்சைமுறை இந்த நான்கு குறித்தும் சிறப்பான புரிதலைக் கொண்டுள்ளது என்பதால் இதை முழுமையான மருத்துவ அறிவியல் என்று சொல்லலாம்.

உயிர் ஆற்றல் என்பதில் நேர்மறை, எதிர்மறை என இருவகையான ஆற்றல்கள் உள்ளன. அக்குபஞ்சர் இதை யின் மற்றும் யான் என்று அழைக்கிறது. இந்த இரு ஆற்றல்களின் இணைவுதான் இயக்கம். யின் என்பது பெண் தன்மை, குளிர்ச்சி, கருமை எனக் கருதப்படுகிறது. யான் என்பது ஆண்தன்மை. வெப்பம், உறுதி, வெண்மை எனப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவே நோய். இந்தப் பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளதுவே பிண்டத்தில் உள்ளது என்பதற்கு இணங்க நம் உடலும் பஞ்சபூதங்களின் சமநிலையால் ஆனதுதான். இந்தப் பஞ்சபூதச் சக்திகள்தான் நமது முக்கியமான 12 உடல் உறுப்புகள் வழியாக உயிராற்றலாக ஓடுகிறது. இப்படியான சக்தி ஓட்டத்தில் ஏதேனும் சமன்குலைவு ஏற்பட்டால் அது நோயாகிறது.

அக்குபஞ்சரில் ஓர் உடல் உறுப்புக்குச் சக்தியைக் கொடுக்கும் உறுப்பு தாய் ஆகிவிடுகிறது. சக்தியைப் பெறும் உறுப்பு சேயாகிவிடுகிறது. இதுபோல இவற்றில் ஜோடி உறுப்புகளும் உள்ளன. மேலும், இன்னொரு உறுப்பை ஆதிக்கம் செலுத்தும் உறுப்பு கணவன் உறுப்பாக இருக்கும். மற்றது மனைவி உறுப்பாக இருக்கும். இது எல்லாம் பாரம்பரிய அக்குபஞ்சரின் அடிப்படைகள்.

பரிசோதனைகள்

அக்குபஞ்சரில் நோயைப் பரிசோதிப்பதற்கு பன்னிரெண்டு உறுப்புகளின் செயல்பாடுகளையும் இரண்டு கைகள் வழியாகப் பார்க்கப்படுகிறது. யின் மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் வரும் இதயம், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகளை இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள். அதுபோலவே, இதயத்துக்கு ஜோடியாகச் சிறுகுடல், கல்லீரலுக்கு ஜோடியாகப் பித்தப்பை, சிறுநீரகத்தின் ஜோடியாகச் சிறுநீர்ப்பை என ஆறு உறுப்புகளின் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன.

வலது கையைப் பொறுத்தவரை, நுரையீரல் (பெருங்குடல்), மண்ணீரல் (வயிறு), இதய உறை-சிரை ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் ஜோடி உறுப்புகளாக முறையே பெருங்குடல், வயிறு மற்றும் இடுப்பு வளையம், நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு ஆகியவற்றின் நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர். உடலில் அதிகப்படியான உயிராற்றல் இருந்தாலும் குறைவான ஆற்றல் இருந்தாலும் நோய், வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அக்கு ஊசி செய்யும் அற்புதம்

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். உடலை யின், யான் என்று இரண்டாகப் பிரிக்கிறது அக்குபஞ்சர் என்றோம் அல்லவா? இதில், சந்திரன்தான் யின். சூரியன்தான் யாங். அக்குபஞ்சர் ஊசி மூலமாகப் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளை உடலைச் நோக்கி ஈர்த்து உடலை சமநிலைப்படுத்துவதால் நோய் குணமாகிறது என்பதே இந்த மருத்துவத்தின் தத்துவம்.

உடலில் உள்ள உயிராற்றலை அக்குபஞ்சரில் ‘ச்சி’(qi) என்று அழைக்கிறார்கள். இந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிராற்றலைத் தூண்டிச் சமநிலைபடுத்துவதுதான் அக்குபஞ்சர் மருத்துவம். உடலில் மெரிடியன் (meridian) என்று சொல்லப்படும் நடுப்பகுதி வரைதான், உயிர் ஆற்றல் பாதை இருக்கிறது. அதில் ஊசியைச் செலுத்தி ஆற்றல் மண்டலத்தைச் சீர்படுத்துகிறது இம்மருத்துவம்.

ஊசி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதச் சக்திகளை ஈர்க்கிறது.நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் என உடலையும் பஞ்சபூதங்களாக அக்குபஞ்சர் பார்க்கிறது. அக்குபஞ்சர் மருத்துவம் நம் நாட்டின் யோகாவைப் போலவே உடலை ஏழு சக்கரங்களாகப் பிரிக்கிறது. இந்த ஏழு சக்கரங்களை இணைக்கும் இரு உயிர்சக்தி ஓட்டப்பாதைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்த இரு சக்தி ஓட்டப்பாதை வழியாக, நமது உள்ளுறுப்புகளுக்கு ஆற்றல் வழங்கப்படுகிறது.  

சுஜோக் அக்கு பஞ்சர்

சுஜோக் அக்குபஞ்சர் என்பது பாரம்பரிய அக்குபஞ்சரில் இருந்து சற்று மாறுபட்டது. இதை நவீன அக்குபஞ்சர் முறை எனலாம். இதை கொரியாவைச் சேர்ந்த ஜா வூ என்ற நிபுணர் உருவாக்கினார். சு என்றால் கைகள், ஜோக் என்றால் பாதங்கள். அதாவது, உள்ளங்கை மற்றும் பாதங்களில் அக்கு ஊசியை செலுத்தி சிகிச்சை தருவதுதான் சுஜோக் அக்குபஞ்சர். பாரம்பரிய அக்கு பஞ்சரின் சில சமயங்களில் உடல் முழுதுமேகூட அக்கு ஊசி செலுத்தப்படும்.

நமது ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலில் முன்புறம் மூன்று அக்கு புள்ளிகளும் பின்புறம் மூன்றும் அக்குபுள்ளிகளுமாக இரண்டு விரல்களிலும் சேர்த்து பன்னிரண்டு புள்ளிகள் உள்ளன. இந்த பன்னிரண்டு புள்ளிகளும் நம் முக்கியமான பன்னிரண்டு உள்ளுறுப்புகளோடு தொடர்புள்ளவை. இந்தப் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் எந்த உறுப்புக்கு சிகிச்சை தேவையோ அதை சீராக்கலாம் என்பது சுஜோக் அக்கு பஞ்சரின் அடிப்படை.

இதில் தணித்தல் (Sedation) தூண்டுதல் (Tonification) என்ற இருவகை உள்ளன. சில நோய்கள் ஏற்படும்போது உடலின் சக்தி ஓட்டத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக உடல் உஷ்ணமாகி உள்ளுறுப்புகள் வறட்சியாகும். அப்போது, அந்த உஷ்ணத்தை தணிப்பதற்கான புள்ளியைத் தூண்ட வேண்டும். அதுபோலவே, சில சமயங்களில் ஆற்றல் குறைவாகப் பயணிப்பதாலும் பிரச்சனை ஏற்படும். அப்போது குறிப்பிட்ட புள்ளி மூலம் சக்தி ஓட்டத்தைத் தூண்ட வேண்டும்.

சுஜோக் அக்கு பிரெஷர்

சுஜோக் அக்கு பஞ்சர் என்பதில் அக்கு ஊசி பயன் படுத்தப்படுகிறது. ஊசி எதையும் பயன்படுத்தாமல் ப்ரோப் எனும் சிறிய உலோகத் தண்டு அல்லது விரல்கள் மூலம் அக்கு புள்ளிகளை தூண்டி சிகிச்சை அளிப்பதுதான் அக்கு பிரெஷர். அக்கு பிரெஷர் என்பதை எளிய கை மருத்துவமாக நாமே செய்யலாம். ஒருமுறை அக்கு நிபுணரிடம் சென்று வந்த பிறகு நம்முடைய பிரச்சனைக்கு உள்ளங்கையில் அல்லது காலில் எந்த புள்ளியை அழுத்த வேண்டும் என்பதைப் கற்றுக்கொண்டால் வீட்டில் இருந்த படியே நாமும் செய்யமுடியும். ஆனால், கவனம் அவசியம். மருத்துவரிடம் எந்த புள்ளி என நேரடியாகக் கேட்டு அவர் முன்னிலையில் செய்து பழகிய பிறகு அவர் அனுமதித்தால் மட்டுமே நாமாகச் செய்வது நல்லது.

ரெய்க்கி

மருந்தில்லா மருத்துவத்தில் ரெய்க்கி என்பது தற்போது பிரபலமாகிவரும் ஒரு சிகிச்சை முறை. நமது உடல் பிரபஞ்ச சக்தியால் நிறைந்துள்ளது என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் இதுவும் இயங்குகிறது. நம் உடலில் உள்ள பிரபஞ்ச சக்தி குறையும்போது அல்லது அதில் மாறுபாடு ஏற்படும்போது நமக்கு அசதி, கை, கால் வலி, ஸ்ட்ரெஸ் முதல் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. ரெய்க்கி நிபுணர் ஒருவர் பிரபஞ்ச சக்தி ஓட்டத்தை தம் கைகள் மூலமாக நம்மைத் தொடாமல் நம் உடலுக்குச் செலுத்தி சீரமைப்பதன் மூலம் பிரச்சனைகள் குணமாகின்றன.

ஜப்பானை பூர்விகமாகக் கொண்ட ரெய்க்கி என்பது பல நூறு குறியீடுகளால் இயங்குகிறது. இதை மிக்காவோ உசி என்பவர் இந்த சிகிச்சை முறையைஉருவாக்கினார். நம் உடலில் ஏழு நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இதை கீழைத்தேய மரபில் ஏழு சக்கரங்கள் என்பார்கள். பிறப்புறுப்பின் அடிப்பகுதியில் உள்ள மூலாதாரம் முதல் உச்சந்தலையில் சஹஸ்ரா வரை இவை வரிசையாக அமைந்துள்ளன. இந்த ஏழு சக்கரங்கள் வழியாகவே பிரபஞ்ச சக்தி உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் செயல்பட்டுவருகிறது.

ரெய்க்கி சிகிச்சையில் இந்த ஏழு சக்கரங்களுக்கும் தனித் தனி குறியீடுகள் உள்ளன. அதுபோலவே உறுப்புகளுக்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு பாதிக்கப்பட்டி ருந்தால் உடலில் அந்த உறுப்பு அமைந்துள்ள இடத்தின் மேற்புறம் அந்தக் குறியீட்டை காற்றில் வரைவார்கள். இதன் மூலம், பிரபஞ்ச சக்தி நம் உடலில் பயணித்து அந்த உறுப்பின் பிரச்சனையை சீராக்குகிறது.

மருத்துவத்தில் ப்ளேஸ்போ எபெக்ட் சிகிச்சை என்று ஒரு வகை உள்ளது. இதை நம்பிக்கை மருத்துவம் என்று தோராயமாக மொழி பெயர்க்கலாம். ரெய்க்கியும் ஒருவகை நம்பிக்கை மருத்துவம்தான். நம் உடல் பலவீனமாகும்போது மனதால் அந்த உறுப்பை நினைத்து இந்த சிகிச்சையின்போது அது குணமாவதாக மனதார நம்பும்போது நிஜமாகவே இது குணமாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இதயத்தின் நண்பன் தாமரை! (மருத்துவம்)