பருக்கள் நீங்க…!! (மருத்துவம்)
பருத்தொல்லை முகத்தின் அழகைக் கெடுத்து அகத்தின் தன்னம்பிக்கையை சரிப்பது. இளம் பருவத்தினருக்குக் குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு பரு ஒரு மிகப் பெரிய சவால்… பருவைப் போக்கும் இரண்டு ஃபேஸ்பேக்ஸ் இங்கே உங்களுக்காக….
மஞ்சள் – கற்றாழை ஃபேஸ் பேக்
தேவையானவை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் ( தரமானதை தேர்வு செய்யுங்கள்)
கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்.
கற்றாழையின் மடலில் இருக்கும் நுங்கு போன்ற ஜெல்லை எடுத்து நன்றாக கசக்கி அதில் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். இதை முகம் முழுக்க தடவி உலரவிட்டு வெதுவெதுப்பான அல்லது மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
பலன்கள்
இது சிறந்த பேக் என்பதோடு எளிமையானது. கற்றாழை இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. நச்சுக்களை போக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. இது சருமம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
நெற்றிப்பருக்களை நீக்கும் முல்தானிமிட்டி சிட்ரஸ் பேக்
தேவையானவை
முல்தானி மிட்டி – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – தேவைக்கேற்ப.
எலுமிச்சைச்சாறுடன் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து அதில் முல்தானிமிட்டியை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். கட்டிதட்டியில்லாமல் கலக்கி முகத்தில் முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் கவனம் செலுத்தி தடவி எடுக்கவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். இது முகப்பருவுக்கு நன்றாக தீர்வு கொடுக்கும்.
பலன்கள்
எலுமிச்சை சிட்ரஸ் பழம். இதில் வைட்டமின் சி உள்ளது. சருமத்திலிருக்கும் பாக்டீரியாக்களை அகற்றி சருமத்துக்கு பளபளப்பு ஊட்டுகிறது. முல்தானி மிட்டி முகத்தில் இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு புத்துயிர் ஊட்டுகிறது.