பவுண்டரிகளை குழந்தைகள் உருவாக்குவதில்லை! (மருத்துவம்)

Read Time:9 Minute, 45 Second

நான், பெட்ரீஷியா, விக்னேஷ், திவ்யா நால்வரும் ஒரு குழுவாக இணைந்து குழந்தைகளுக்காக வேலை செய்கிறோம். இதில் நான் குமார்ஷா. பொறியியல் முடித்து அறம் ஃபவுண்டேஷனில் பணியாற்றிய நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக குழந்தைகளோடு பயணிக்கிறேன். எம்.எஸ்ஸி., சைக்காலஜி படித்த பெட்ரீஷியா ஒரு அமைப்பில் தன்னார்வலராய் பணியாற்றி அவரும் குழந்தைகளோடு வேலை செய்தவர். வித்யா உத்ரகண்ட் மாநிலத்தில் அதே மாதிரியாக பணியாற்றியவர்தான். ஜெய்யும் அப்படித்தான். தனித்தனியாக இருந்த நாங்கள் இணைந்து உருவாக்கியதே “களிமண்”. இதைத் தொடங்கி மூன்று வருடம் முடியப் போகிறது என நம்மிடம் பேச ஆரம்பித்தவர்கள் பெட்ரீஷியாவும் அவரின் நண்பர் குமார்ஷாவும்.

குழந்தைகளிடம் களிமண்ணைக் கொடுத்தால் அதை வைத்து அவர்கள் விளையாடவும் செய்யலாம். பிடித்த வடிவத்தையும் அதில் கொண்டுவரவும் செய்யலாம். பிடித்த விஷயத்திற்கு களிமண்ணை மாற்றுவது அவர்களின் கைகளில் இருக்கு. இதுதான் “களிமண்” உருவான நோக்கம். இதனை கம்யூனிட்டி மாதிரி கொண்டு செல்கிறோம் என்று முதலில் நம்மிடம் பேச ஆரம்பித்தவர் குமார்ஷா. ‘‘2007-ல் நான் துவங்கிய பயணம் இது. சைக்கிளில் மாவட்டம் மாவட்டமாக பயணித்து, பல ஊர்களுக்கும் சென்றேன்.

பயணத்திற்குள் கதை, கதைக்குள் பயணம் என்று மாறி, மாறி வருஷம் போனதே எனக்குத் தெரியல. இந்தியா முழுதும் கிட்டதட்ட 24 மாநிலங்களுக்கு சைக்கிளில் பயணம் செய்ததில், சைக்கிள் என்றில்லாமல் பஸ், ரயில், நடைபயணம்னு பயணம் மாறிக்கொண்டே இருந்தது. இதில் சைக்கிள் பயணங்களை எப்பவும் மறக்கவே முடியாது. பயணங்களே என்னை தொடர்ச்சியாக பயணிக்க வைத்தது.

சைக்கிளில் பயணிக்கும்போது, குழந்தைகள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகக் கிடைத்தது. கிராமப்புறக் குழந்தைகள், அரசு பள்ளிக் குழந்தைகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள் என பல பள்ளிக்கூடங்களுக்கு சென்றோம். அந்தக் குழந்தைகளின் பார்வையில் நூறு கதைகளை முதலில் சேகரித்தோம். முதலில் குழந்தைகளுக்கு நாங்கள் கதை சொல்வோம். பிறகு அவர்களிடம் இருக்கும் கதையை நாங்கள் கேட்டுக்கொள்வோம்.

“கதையில் சிங்கம்னா அது ராஜா. நரின்னா தந்திரம் செய்யும். காக்காய் ஏமாற்றும்…” சில விலங்குகளை கதைகளில் நாம் சேர்ப்பதே இல்லை. எருமை மாட்டிற்கு அமைச்சர் போஸ்டே கொடுப்பதில்லை. பன்றி, முள்ளம் பன்றி, ஓணான் இவற்றை கதைக்குள் கொண்டு வருவதேயில்லை. கதையில எங்கோ ஒரு இடத்தில் சமமற்ற நிலை இருந்து கொண்டே இருக்கும். இவையெல்லாம் நாமே ஏற்படுத்திய ஒரு பார்டர். சில விலங்குகளை கதைகளில் நாம்தான் ஒதுக்கி வைக்கிறோம். ஆனால் அவற்றை குழந்தைகள் ஒதுக்குவதில்லை. நாம் கட்டமைத்திருக்கும் விஷயங்களை உடைத்து கதைக்குள் வராத கேரக்டர்களை குழந்தைகள் கொண்டு வருகிறார்கள். பவுண்டரிகளை குழந்தைகள் உருவாக்குவதில்லை.

நாம்தான் உருவாக்கி, அவர்களை சிறுவர்கள் என நினைக்கிறோம். உண்மையான கதையை கேட்கும் வழியை குழந்தைகளிடம் இருந்தே தொடங்கினோம். அதனால்தான் எங்கள் “களிமண்” அமைப்பின் சிம்பலை பன்றியின் அருகே வண்ணத்துப் பூச்சி பறப்பதாய் வடிவமைத்தோம்.சைக்கிளில் கிராமங்களைத் தேடிப் பயணித்து அங்கேயே தங்கி குழந்தைகளோடு குழந்தையாக கிவ் அண்ட் டேக் முறையில் கதை சொல்லும்போதே, எந்தமாதிரியான கதைகளை நாம் சொல்ல வேண்டும் என்கிற புரிதல் குழந்தைகளுக்கு வருகிறது. இதுவரை கதைகளில் வராத பல கேரக்டர்களையும் வைத்து குழந்தைகளே நாடகம் தயாரித்தார்கள்.

சில வகையான ஆர்ட் ஃபார்ம்களை முதலில் கையிலெடுத்தோம். அதன் வழியாக கதை சொல்வது, பப்பட் ஷோ, தியேட்டர், பாடல்கள் வழியாக குழந்தைகள் மொழியில் பேசத் தொடங்கினோம். இதில் பல்வேறு கேரக்டர்களை குழந்தைகளே உருவாக்கினார்கள். அவர்கள் எழுதிய கதைகள், அவர்கள் வரைந்த படங்கள், அவர்கள் செய்த வேலைகளை சேகரித்து அவற்றையெல்லாம் காட்சிப்படுத்தினோம்.

எல்லா குழந்தைக்கும் எல்லா இடத்திலும் ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும். அது இயல்பான குழந்தையோ, சிறப்புக் குழந்தையோ… அது அவர்கள் பிரச்சனையில்லை. எந்த நிலையிலும் குழந்தைகளை ஒதுக்குதல் கூடாது. ஒரு குழந்தைக்கு அங்கீகாரத்தைக் கொடுப்பதன் மூலமாக தன்னை எப்படி உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். என்னுடைய படமும் இந்த சுவற்றில் தொங்குகிறதென்பதே அவர்களுக்கான அங்கீகாரமாக இருக்கிறது. இதில் சரியாக செய்யாத குழந்தையும் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்திட முயற்சிக்கிறான். தன்னை செழுமைப்படுத்திக் கொள்கிறான்.

குழந்தைகளின் கற்பனையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களால் தெரிந்து கொள்ளவும், அவர்கள் குறித்த புரிதலும் கிடைத்தது. குழந்தைகள் தெளிவாக நம்மை உள்வாங்குகிறார்கள். குழந்தைகளோடு வேலை செய்யும்போதே, அவர்களிடம் நாம் எப்படி பேச வேண்டும், அவர்களை எப்படி கையாள வேண்டுமென புரிந்தது. அவர்களிடமிருந்தே நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம்’’ என்றவரைத் தொடர்ந்தார் பெட்ரீஷியா.

‘‘படிப்பை குழந்தைகளிடத்தில் திணிக்க முடியாது. ஒரு குழந்தைக்கு 8ம் வகுப்புவரை தியரிட்டிக்கல் நாலேஜ் இருக்கக் கூடாதென்பதே என் எண்ணம். குழந்தைகள் தேர்வு எழுதி முடிச்சதும் அவர்கள் படித்தது மறந்து போகும். படித்தேன்… எழுதினேன்… அடுத்த வகுப்பிற்குச் சென்றேன்… என்ற மந்த மனநிலைதான் அவர்களுக்கு இருக்கிறது. இது கல்லூரிவரை தொடர்கிறது. குழந்தைகளின் விருப்பம்… சிந்தனை… இவற்றை உணராமலே புத்தகத்திற்குள் அவர்களை அடைத்து வைக்கிறோம். ஸ்டோரி டெல்லிங், ஆர்ட் அண்ட் கிராஃப்ட், தியேட்டர் போன்ற விஷயங்களுக்குள் அவர்களை நுழைத்து குழந்தைகளின் சிந்தனையை ஆர்ட் மூலம் தூண்டி, அதன் வழியே படிப்பைக் கொண்டுவந்தால் குழந்தைகள் நிறைய
சிந்திக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சென்னை வியாசர்பாடியில் குழந்தைகளின் டிராப்அவுட் அதிகம். ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு கானா எழுதுவது, கானா பாடுவது பிடித்தமானதாக இருக்கிறது. சினிமா பாடலுக்கு ஏற்ப அவர்களே மெட்டமைத்து வார்த்தைகளை தேடி எழுதுகிறார்கள். பாடல் வரிகளை அமைக்கிறார்கள். அவர்களே பாடுகிறார்கள். ஃபோக் கலந்த ஃப்யூஷன் நடனத்தை அசால்டாய் ஆடுகிறார்கள். வெளிநாட்டுப் பாடகர்கள், ஃபுட்பால் பிளேயர்ஸ் பெயர்களை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். நமது குழந்தைகள் நிறையவே சிந்திக்கிறார்கள். சிந்தனையை விரிவடையச் செய்கிறார்கள். தேவை அவர்களுக்கு சிந்தனையை தூண்டும் ஆர்ட் முறையிலான கல்வி’’ என்றவாறு விடை கொடுத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவுக்குப் பின் ஏன் கட்டாயம் இதை செய்ய வேண்டும்?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ங போல் வளை-யோகம் அறிவோம்! (மருத்துவம்)