நிவேதா பெத்துராஜ் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 9 Second

‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதைத் தொடர்ந்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பிரபு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகிலிருந்து வாய்ப்பு வர தற்போது, தமிழ், தெலுங்கு இரண்டிலும் நடித்து வருகிறார். மேலும், மாடல் அழகி, விளையாட்டு வீராங்கனை, கார் ரேஸர் என பல முகங்களைக் கொண்ட நிவேதா பெத்துராஜ் 2015இல் மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றுள்ளார். நிவேதா தனது ஃபிட்னஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:

“எனது பூர்வீகம் கோவில்பட்டி. ஆனால், எனக்கு 11 வயதாக இருக்கும்போதே, அப்பாவுக்கு துபாயில் வேலை கிடைக்க, அங்கே சென்று செட்டிலாகிவிட்டோம். எனவே, வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்கேதான். படிக்கும்போதே, மாடலிங் துறையில் வாய்ப்பு வர, மாடலிங் செய்யத் தொடங்கினேன். மாடலிங் துறையில் இருக்கும்போதுதான், 2015 -இல் அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து பட்டத்தையும் வென்றேன். அதைத் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிட்டியது. இவைகளைத் தாண்டி எனக்கு விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உண்டு. அவ்வப்போது, பாக்ஸிங் வெர்ஸ்ட்லிங் போன்ற போட்டிகளிலும் கலந்து கொள்வேன். மேலும், பார்மூலா ஒன் கார் ரேஸ்ஸில் கலந்துகொள்வதும் ரொம்ப பிடித்தமான ஒன்று. அந்த வகையில் விளையாட்டு, மாடலிங், நடிகை என எல்லாவற்றுக்குமே உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது மிகமிக அவசியமானது. எனவே, உடற்பயிற்சி, டயட், பியூட்டி இவை அனைத்துக்கும் முக்கியத்துவம் உண்டு.

டயட்

காலையில எழுந்ததும் வெந்நீரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பேன். அரை மணிநேரம் கழிச்சுதான் டீ, காபி குடிப்பேன். மூணு வேளையும் அரிசி உணவுகளைச் சாப்பிடற பழக்கம் எனக்கில்லை. சப்பாத்தி, தானியங்கள், பழங்கள், கீரைகள், காய்கறிகள் எல்லாம் எடுத்துக்குவேன். ஷூட்டிங் நேரத்துல வேற வழி இல்லைனாதான் அரிசி சாதம் சாப்பிடுவேன். வீட்டுல இருக்கும்போது என் சாய்ஸ் வடித்த சோறுதான். ஏன்னா, குக்கர்ல வெச்ச சாதத்தை சாப்பிடுறது ஆபத்து. இதனால சர்க்கரைநோய் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க. சோறு வடிச்சு சாப்பிடறதுதான் ஆரோக்கியமானது. சுவையானதும்கூட.

மாலைநேரத்தில் ஏதாவது ஒரு மில்க் ஷேக் குடிப்பேன். அதற்கும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மட்டும்தான் பயன்படுத்துவேன். ஜங்க் ஃபுட்ஸ் எதையும் நான் சாப்பிடுறதில்லை. எப்பவாவது நொறுக்குத்தீனி சாப்பிடணும்போல இருந்தா, வீட்டுலேயே செய்யச்சொல்வேன். அப்போதும் தேங்காய் எண்ணெய்தான் என் சாய்ஸ். இதைத்தவிர, கிரீன் டீயை ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூணு முறை குடிப்பேன். கிரீன் டீ உடம்புக்கு நல்லது. அதுபோன்று , அவ்வப்போது, இரண்டு கப் தண்ணீரில் ஒரு மூடி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிப்பேன். இது ஸ்கின் டோனை மேம்படுத்தவும் உடலைக் குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

தினமும் மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கிறது அவசியம். அதை மொத்தமா குடிக்காம, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு கிளாஸ்னு குடிக்கிறதுதான் பெஸ்ட். தவிர, இந்த முறையில் தண்ணீரை குடிப்பது கொழுப்பைக் குறைக்கிறதுக்கும் உதவும்.

உடற்பயிற்சி

தினமும் காலையில அரை மணிநேரம் நடைப்பயிற்சி, அரை மணிநேரம் யோகப் பயிற்சிகள் செய்வேன். தினசரி ஜிம்முக்குப் போகும் பழக்கம் கிடையாது. இதைத் தவிர, சூட்டிங் இல்லாத ஓய்வு நேரங்களில் பாக்ஸிங் பயிற்சி, கார் ரேஸூக்கான பயிற்சியும் அவ்வப்போது எடுத்துக்கொள்வேன்.

பியூட்டி

வாரத்துக்கு ஒருமுறை சீ சால்ட் பாடி ஸ்க்ரப்பிங் (Sea Salt Body Scrubbing) பண்ணுவேன். இது இறந்த செல்களை நீக்கும். இதைத் தவிர, தேங்காய் முதல் கொண்டு சுமார் 20 வகையான எண்ணெய்கள் வைத்திருக்கிறேன். அவற்றைக்கொண்டு அவ்வப்போது மசாஜ் செய்தால், ஸ்கின்னை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு, மனசையும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேங்காய் ஓட்டில் அலங்கார பொருட்கள்… கைநிறைய வருமானம்! (மகளிர் பக்கம்)
Next post லீவ்லோஸ் சாப்பிடலாமா? (மருத்துவம்)