தேங்காய் ஓட்டில் அலங்கார பொருட்கள்… கைநிறைய வருமானம்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 32 Second

தேங்காய் ஓட்டில் கீ செயின்கள், அலங்காரப் பொருட்கள் இவையெல்லாம் செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் விளக்குகள், கைப்பைகள், நகைகள், ஓவியங்கள் என பல வகையான பொருட்களை செய்து வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த சீனிவாசன். தேங்காயில் உள்ள பூவினை எடுத்துவிட்டால், அதில் எந்த பயனும் இல்லை என்று நாம் நினைக்கிறோம். அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அதைக் கொண்டு நமக்கான ஒரு சம்பாத்தியத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்கிறார் சீனிவாசன்.

‘‘நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே நன்றாக வரையும் பழக்கம் இருந்தது. சாக்பீசினை செதுக்கி அதில் பல உருவங்களை அமைப்பேன். எனக்கு கலைத் துறை மேல ஏற்பட்ட ஈடுபாட்டால், படிப்பு மேல் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் படிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனால் வருமானம் வேண்டுமே அதனால், கேஸ் வெல்டிங் வேலைக்கு சில காலம் ேபானேன். ஆனால் அதை தொடர்ந்து செய்யல. காரணம் எனக்கு ஒரே வேலையை ஒரே மாதிரி செய்ய பிடிக்காது. புதுசா ஏதாவது செய்திட்டே இருக்கணும்.

வேலைக்கு போனாலும், கிடைக்கும் நேரத்தில் பொம்மைகளை செய்து வந்தேன். என்னுடைய பொம்மைகள் எல்லாம் உருண்டை வடிவில் இருப்பதால், அதை கீழே வச்சா உருண்டு கொண்டே இருக்கும். அதை ஒரு இடத்தில் நிற்க வைக்க தேங்காய் ஓட்டில் ஓட்டை போட்டு அதில் மாட்டினேன். தேங்காய் ஓடு தானேன்னு நாம் நினைக்கிறோம். ஆனால் அதில் ஒரு சின்ன ஓட்டைப் போட ரொம்பவே கஷ்டமா இருந்தது. அப்பதான் அதன் ஓடு மிகவும் கடினமானது என்று எனக்கு புரிந்தது.

பொதுவாக கடினமான பொருட் களைக் கொண்டு மற்றொரு பொருட்களை உருவாக்கினால், அது மிகவும் உறுதியாக இருக்கும். மேலும் இதைக் கொண்டு அழகான பல பொருட்களை அமைக்க முடியும்னு எண்ணம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள சிரட்டையில் சின்னச் சின்ன பொருட்களை செய்தேன். நல்லா வந்தது. அதை என் நண்பர்களுக்கு பரிசாக கொடுத்தேன். என் நண்பர்கள் பார்த்துவிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டியது மட்டுமில்லாமல், இதை விற்பனையும் செய்ய சொன்னார்கள். அவங்க சொன்ன ஐடியாவும் நல்லா இருந்ததால, விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி எல்லாமும் விற்பனையாகும்னு நினைச்சேன்.

ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம் நான் தேங்காய் ஓட்டில் சின்னச் சின்ன பொம்மைகள் மற்றும் பரிசுப் பொருட்களை மட்டுமே செய்ததால், பலரின் எண்ணம் இதைக் கொண்டு என்ன செய்வது என்பதுதான். அதனால் எல்லாருக்கும் பயன்படக்கூடிய பொருட்களை தயாரிக்க முடிவு செய்தேன். மக்களின் தேவையான பொருட்கள் என்ன? அதை எவ்வாறு தேங்காய் சிரட்டியில் செய்யலாம்னு ஆராய்ச்சியில் இறங்கினேன்.

அதன் பிறகு டீ கப்கள், பென்சில் மற்றும் கீசெயின் ஸ்டாண்ட், சின்ன பைகள், விளக்குகள்னு செய்ய ஆரம்பிச்சேன். நல்லா விற்பனையானது. அதை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து விலகி, கலை பொருட்கள் சார்ந்த கடை ஒன்றினை ஆரம்பித்தேன்’’ என்றவர் தேங்காய் ஓட்டில் எவ்வாறு விளக்குகள் செய்ய தொடங்கினார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘என்னுடைய நண்பர் வெளிநாட்டில் இருக்கார். ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்த ேபாது, அவரிடம் என் கலை சார்ந்த தொழில் பற்றி விவரித்துக் கொண்டிருந்தேன். அப்பதான் அவர் தேங்காய் ஓட்டிலேயே பல டிசைன்கள் செய்து சுவற்றில் தொங்க விடக் கூடிய விளக்குகள் செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு ெவளிநாட்டில் நல்ல வரவேற்பு இருக்குன்னு சொன்னார். ஆரம்பத்தில் தேங்காய் ஓட்டில் விளக்கா என்று வியந்தேன். அதே சமயம் அவ்வாறு செய்தால் விற்பனையாகுமான்னு எனக்கும் சந்தேகங்கள் இருந்தது. இருந்தாலும் செய்து பார்ப்போம்னு அலங்கார தொங்கும் விளக்குகள் எப்படி இருக்கும்னு கடைகளில் சென்று பார்த்தேன்.

அதில் எவ்வாறு விளக்கினை இணைத்திருக்கிறார்கள் என்பதையும் கடைகளில் உள்ள விளக்குகளைப் பார்த்து தெரிந்து கொண்டேன். அதை வைத்து புதிய டிசைன்களை தேங்காய் ஓட்டில் வடிவமைத்தேன். மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து புதுப்புது டிசைன்களை செய்து விற்கத் தொடங்கினேன். புதுச்சேரிக்கு அதிகம் வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். அவர்களும் சில டிசைன்களை எனக்கு காட்டினார்கள். அதை பார்த்து மெருகேற்றினேன். இதுவரை 20 டிசைன்களில் தேங்காய் ஓட்டில் விளக்கினை வடிவமைத்திருக்கேன். என்னுடைய விளக்குகள் அனைத்தும் வெவ்வேறு மாடல்கள் என்பதால், மறுமுறை வருபவர்கள் அதே டிசைன் கேட்டா இருக்காது.

ஆர்டர் செய்தால் புதிதாக செய்து தருவேன். ஒரு நாள் இரண்டு தேங்காய் ஓடு விளக்குகள் தான் செய்ய முடியும். நான் மட்டுமே செய்கிறேன். விருப்பம் உள்ளவர்களுக்கு கற்றும் தருகிறேன். மேலும் அதனை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறேன். தேங்காய் ஓட்டில் விளக்குகள் மட்டுமில்லாமல் கழுத்தில் அணியும் அணிகலன்கள், கைப்பைகளில் டிசைன்கள் என பல வகைகளில் தேங்காய் ஓடுகளில் தயாரிக்கலாம்.

இது மட்டுமில்லாமல் இந்த பொருள்களை செய்யும் போது மீதமாகும் துகள்களை வைத்து ஓவியங்களை உருவாக்குகிறேன். மேலும் தேங்காய் ஓடு துகள்களை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனுடன் நொச்சி இலை, துளசி, வேப்பிலை கலந்து புகை போட்டால் கொசு தொந்தரவு இருக்காது. எல்லாவற்றையும் விட இவை எளிதில் மக்கக்கூடிய பொருள் என்பதால், நம் சுற்றுச்சூழலை பாதிக்காது’’ என்றவர் இதனைக் கொண்டு மேலும் பல பொருட்களை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பல வித டிசைன்களில் பத்தமடை பாய்கள் ! (மகளிர் பக்கம்)
Next post நிவேதா பெத்துராஜ் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்! (மருத்துவம்)