இதயத்தின் கேடயமாக மாறும் மசாலாக்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 22 Second

நம்முடைய உணவில் மிகவும் பிரதானமானது மசாலாப் பொருட்கள். மிளகு, சீரகம் இல்லாமல் ரசம் வைக்க முடியாது. அதேபோல் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை இருந்தால்தான் அது பிரியாணி. சொல்லப் போனால் ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதும் இந்த மசாலாக்களுக்காகத்தான். அப்படிப்பட்ட மசாலாக்கள் நம் உணவில் சுவை மற்றும் மணம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், அவை நம் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக விளங்குகிறது.

இதை அறிந்த நம் முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு ஃபார்முலாக்களை வகுத்திருந்தனர். காலம் மாற மாற நாம் எல்லோரும் பாக்கெட் உணவுப் பொருட்களுக்கு மாறிவிட்டோம். ஆனால், அதில் நம் முன்னோர்கள் அமைத்துள்ள ஃபார்முலாக்கள் உள்ளதா? இதற்கான விடை மீண்டும் பாரம்பரிய முறையை கடைப்பிடிப்பதுதான். அந்த பாரம்பரியத்தை மீட்டெடுத்து ‘லைஃப் ஸ்பைஸ்’ என்ற பெயரில் பலவித மசாலாப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளனர் கணேசன் வரதராஜன் மற்றும் ராமசாமி வெங்கடாச்சலம் என்ற இரு நண்பர்கள்.

‘‘நானும் ராமசாமியும் மத்திய கிழக்கு நாடுகளில் பொறியியல் துறையில் வேலை பார்த்து வந்தோம். இருவருமே அந்த துறையில் பல திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். எங்களின் தொழிலை பொறுத்தவரை அனைத்தையும் மனம் நிறைவாகத்தான் செய்திருக்கிறோம்’’ என்று பேசத்துவங்கினார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கணேசன்.

‘‘எங்களின் மசாலா பயணம் கோவிட் காலத்தில்தான் துவங்கியது. 2020ம் ஆண்டு இந்தியா வந்திருந்த ேபாது கோவிட் காரணமாக லாக்டவுன் அறிவிச்சாங்க. எங்களால் திரும்ப போக முடியாத சூழல். வீட்டிலும், தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்யணும்னு சொல்லிட்டாங்க. அப்போது நான் பார்த்த ஒரு விஷயம்தான் என்னை இதுபோன்ற ஒரு உணவுப் பொருட்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. நான் பல ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கேன்.

அங்கு கிச்சனில் அதிகபட்சம் பெண்கள் செலவிடும் நேரம் மிகவும் குறைவு. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் காலை முதல் இரவு வரை பெண்கள் கிச்சனில் மட்டுமே பல மணி நேரம் செலவு செய்றாங்க. இது ஏன்னு யோசிச்சேன். நான் சமைப்பேன். ஆனால் ஒரு முறை சமைக்கும் உணவு அடுத்த முறை சமைத்தால் வேறு சுவையில் இருக்கும். காரணம், நம்முடைய சமையல் என்பது பெரிய பிராசஸ். அதை எளிமை படுத்த நினைச்சோம். அதற்கான மசாலாப் பொருட்களை கொடுத்தால், பெண்கள் எளிதாக சமைத்திடலாம்னு திட்டமிட்டோம்.
அதனால் மசாலா குறித்த ஆய்வில் இறங்கினோம். ஆனால் அங்குதான் எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

நாம் கடையில் வாங்கும் மசாலா பாக்கெட்டில் மசாலா பொருட்களைத் தவிர மற்ற பொருட்களும் சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். உதாரணத்திற்கு பிரியாணி மசாலாவில் பொதுவாக கிராம்பு, பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ , பிரிஞ்சி இலைதான் இருக்கும். ஆனால் அதற்கான மசாலாவில் இஞ்சிப் பொடி, வெங்காய பொடி, பூண்டு பொடி இருந்தது. இஞ்சிப் பொடி என்பது சுக்குப் பொடி. சுக்கை நாம் பிரியாணியில் சேர்க்க வேண்டுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதனால் ஒவ்வொரு மசாலாக்கள் குறித்த ஆய்வில் இறங்க ஆரம்பித்தேன்’’ என்றவரைத் தொடர்ந்தார் இணை நிறுவனரான ராமசாமி.

‘‘கணேசன் என்னிடம் மசாலாப் பொருட்களில் உள்ள பொருட்களைப் பற்றி பேசிய போது எனக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. உணவே மருந்துதான் நம்முடைய தாத்பரியம். மருந்தாகும் உணவு நம்முடைய சமையல் அறையில்தான் இருக்கு. அதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னது எனக்கும் சரின்னு பட்டது. நானும் அவருடன் சேர்ந்து ஆய்வில் இறங்கினேன். நம்முடைய உடலில் மரபணுக்கள் உள்ளது. அந்த மரபணுக்கள் இயங்க நாம் சாப்பிடும் உணவு மிகவும் அவசியம். பொதுவாக பலரும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இது புரத சத்துக்கு நல்லதுன்னு ெசால்வாங்க. அதேபோல் அகத்திக் கீரையில் இரும்புச் சத்துள்ளது.

உண்மையாகவே பருப்பில் புரதம் உள்ளதா என்றால் இல்லை என்று எங்களால் ெசால்ல முடியும். ஆனால் புரத சத்து உருவாக இது ஒரு காரணமாக அமைகிறது. அதாவது, பருப்பில் உள்ள அமினோ ஆசிட் நம் வயிற்றில் உள்ள பெப்டைடுடன் இணையும் போது அது புரத சத்தினை உருவாக்கும். இதற்கு மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்ெவாரு மனிதனுடைய உடலில் பல ஆயிரம் மரபணுக்கள் உள்ளன.

இவை நம் உடலை இயக்கக்கூடிய அணுக்களுக்கு தேவையான புரத சத்தினை உற்பத்தி செய்கிறது. அதற்கு ஃபைட்டோகெமிக்கல்ஸ் தேவை. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் செடிகளில் இருக்கக்கூடியது. அதை நாம் உண்ணும் போது அது நம் உடலில் உள்ள மரபணுக்களில் மாற்றத்தினை ஏற்படுத்தி அவை இயங்க உதவுகிறது. இதன் மூலம் நம் உடலை தாக்கும் தீராத நோயான கேன்சர் உட்பட நீரிழிவு, இதய பிரச்னை, கொலஸ்ட்ரால், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னையை கட்டுப்படுத்த முடியும். இவை அனைத்தும் நாம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் நிறைந்துள்ளது. இது குறித்த ஆய்வினை நாங்க ஆய்வகக் கூடத்தில் செய்து அதன் பிறகுதான் இந்த மசாலாப் பொருட்களையே உற்பத்தி செய்ய ஆரம்பித்தோம்’’ என்றார்.

இவரை தொடர்ந்த கணேசன் அந்த ஆய்வு குறித்து விவரித்தார். ‘‘ஜீப்ரா மீன் (வரிக்குதிரை மீன்) என்ற ஒரு வகை மீன் உள்ளது. இதன் பண்புகள் மனிதனுடன் பல வகையில் ஒத்துப்போகும். அதனால் இதனை எங்களின் ஆய்வுக்காக பயன்படுத்தினோம். முதலில் மஞ்சள், மிளகாய், மிளகு, பட்டை, லவங்கம், சோம்பு என அனைத்து மசாலாக்களின் நற்பண்புகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். அதன் மூலம் அவை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்பதை பிரித்தோம். அதாவது, பட்டை நம்முடைய இதயம், கொலஸ்ட்ராலுக்கு சிறந்தது என கண்டறிந்தோம். இதேபோல் ஒவ்வொரு மசாலாக்களையும் தனியாக பிரித்தோம்.

அதில் இதயத்திற்கு ஏற்ற மசாலாக்களை ஒன்றாக அமைத்து அதனை ஒன்றாக சேர்க்கும் போது அதனால் ஏற்படும் பயன்களை கண்டறிந்தோம். நாங்க தயாரித்த மசாலாக்களை மீனுக்கு கொடுத்தோம். பத்து நாள் கழித்து அந்த மீனுடைய இதயத்தை ஆய்வு செய்த போது, அதன் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தோம். இதன் மூலம் மசாலாக்களில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் இதயத்திற்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை உணர்ந்தோம்.

இப்படியாக இதயம், கேன்சர், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு, நுரையீரல் போன்ற நோய்களுக்கான தெரபி கரம் மசாலா மற்றும் டீ மசாலாவை அறிமுகம் செய்தோம். இவற்றை நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் போது அது நம்முடைய உடலில் பல மேஜிக்கினை செய்யும். தெரபி மசாலா தவிர ரசம், சாம்பார், பிரியாணி, அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலா என 20 வகையான மசாலாக்களும் உண்டு.

இந்த காம்பினேஷனை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால்தான் சளி, இருமல் ஏற்பட்டால் பாட்டிகள் பாலில் மஞ்சள் பொடி, மிளகுப் பொடி சேர்த்து கொடுப்பாங்க. இவற்றை தனித்தனியாக சாப்பிட்டால் எந்த பலனும் கிடையாது. அதே சமயம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது மசாலாக்களில் உள்ள பைட்டோகெமிக்கல் நம்முடைய உடலில் 25% ஆற்றலை தருகிறது. எங்களைப் பொறுத்தவரை உணவு ஆரோக்கியம் சார்ந்தது.

அதில் விளையாடக் கூடாது. அதே சமயம் நீங்க எந்த உணவுப்பொருட்களை வாங்கினாலும், அதில் அவர்கள் என்ன சேர்த்து இருக்கிறார்கள் என்பதை படியுங்கள். அது உங்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த மசாலாக்களை வாங்குங்கள். மேலும் ஒரு மசாலாவை தயாரிக்கும் முன் ஆய்வுக்கூடத்தில் அதன் ஆரோக்கிய அம்சத்தை தெரிந்து கொண்டு தயாரிப்பதில் முன்னோடி என்று சொல்வதில் நாங்க பெருமைக் கொள்கிறோம்’’ என்றார் நிர்வாக இயக்குநரான கணேசன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம்! (மகளிர் பக்கம்)
Next post வெந்நீரின் மகத்துவம்! (மருத்துவம்)