நீரிழிவு நோயாளிகளின் நண்பன் பீன்ஸ்!! (மருத்துவம்)

Read Time:17 Minute, 17 Second

நாம் அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தரவல்ல ஒரு காய்தான் பீன்ஸ். ரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதனாலேயே நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி, தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதால்  இதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது. உணவுக்குப் பிந்தைய ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்தல் ஆகிய பல நன்மைகளைத் தரும் பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் தாவர புரதங்கள் அதிகமாக இருப்பதால் அவை வயிறு நிரம்பிய மனநிறைவை அதிகரிக்கும். அதனால் உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கும்.

பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நன்மை பயக்கும் இரைப்பை குடல் பாக்டீரியாக்களை  அதிகரிக்கிறது, இதன் மூலம் பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. பச்சை பீன்ஸ் கரையக்கூடிய மற்றும் கரையாத ஃபைபர்களின் வலுவான கலவையை வழங்குகிறது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்.
பீன்ஸ் தாவர புரதத்தின் மூலமாகவும் சைவ உணவு உண்பவர்களின் புரதத்துக்கான மூலமாகவும் விளங்குகிறது. பீன்ஸில் உள்ள ஃபோலேட் (Folate) சத்தானது இதயத்தின் ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கிறது.

பச்சை பீன்ஸ்களில் லுடீன் (Lutein), பீட்டா கரோட்டின் (Beta-carotene), வயலக்ஸாந்தின் (Violaxanthin) மற்றும் நியோக்சாண்டின் (Neoxanthin) இருப்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சில சந்தர்ப்பங்களில், பச்சை பீன்ஸில் இருக்கும் இந்த கரோட்டினாய்டுகள் (Carotenoid)  மற்ற கரோட்டினாய்டு நிறைந்த காய்கறிகளான கேரட் மற்றும் தக்காளி போன்றவற்றைவிடவும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மேலும், அவற்றில் உள்ள குளோரோபில் (chlorophyll) உள்ளடக்கத்துடன், பச்சை பீன்ஸ் மற்ற பைட்டோ நியூட்ரியன்களையும் (Phytonutrients) வழங்குகிறது. லுடீன் (Lutein), பீட்டா கரோட்டின் (Beta-carotene), வயலக்ஸாந்தின் (Iolaxanthin, மற்றும் நியோக்சாண்டின் (Neoxanthin) போன்ற கரோட்டினாய்டுகளை கொடுப்பதோடு, குவெர்செட்டின் (Quercetin), கேம்ஃபெரோல் (Kaemferol), கேடசின்கள் (Catechins), எபிகாடெச்சின்கள் (Epicatechins) மற்றும் (Procyanidins) போன்ற ஃபிளாவனாய்டுகளும் உள்ளன.

இந்த நுண் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்குள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவர்களாக செயல்படுகின்றன. ஆக்ஸிஜனேற்ற சூழலில், பச்சை பீன்ஸ் சமைக்கும்போது உருவாக்கப்படும் சில பெப்டைட் (புரதம் தொடர்பான) கூறுகள் பயனுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தநாளங்களை வலுப்படுத்தவும், புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடவும் உதவுபவை.  பச்சை பீன்ஸ் வகைகளைப்போலவே ஊதா நிறத்தில் வரக்கூடிய பர்பில் குயின் மற்றும் ராயல்டி பர்பில் போன்ற பீன்ஸ் வகைகளும் அந்தோசயனின் ஃபிளாவனாய்டுகளை வழங்குகின்றன. அதேபோல, பச்சை பீன்ஸில் நிறைந்துள்ள சிலிகான் என்னும் தாதுப்பொருள் நம் உடலின் எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களின் வலிமைக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது என்று ஊட்டச்சத்து அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

1 கப் அளவு பச்சை பீன்ஸில்  சராசரியாக 7 மில்லி கிராம் அளவில் சிலிக்கான் தாதுப்பெருள் இருக்கிறது. பீன்ஸில் வைட்டமின்கள் ‘பி 2’ மற்றும் வைட்டமின் ‘இ’ மிகுந்துள்ளது. சிறுவயதிலிருந்தே உணவில் பச்சை பீன்ஸை அடிக்கடி சேர்த்துக் கொள்பவர்களுக்கு, பெண்களாக இருந்தால், மெனோபாஸால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் குறைவதாகவும், ஆண்களுக்கு வயதாவதால் வரக்கூடிய அனைத்து வகையான எலும்பு தேய்மான நோய்களை தவிர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள பாலிபினால் எனப்படும் உட்பொருளே இதற்கு மூலகாரணமாகும். பீன்ஸில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவை நார்ச்சத்தும், புரதச்சத்தும் ஆகும். கார்போஹைட்ரேட் தொடர்பான வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த சர்க்கரை ஒழுங்குமுறை  ஆகியவற்றிற்கான ‘பி 1’, ‘பி 2’ மற்றும் ‘பி 3’ போன்ற பி வைட்டமின்கள்; இதய ஆதரவுக்கான பி வைட்டமின்களான ‘பி 6’ மற்றும் ஃபோலேட்; ரத்த சர்க்கரை ஒழுங்கு முறைக்கு உதவும் தாதுப்பொருளான குரோமியம் மற்றும் இதய செயல்பாடுகளுக்கு  உதவக்கூடிய தாதுவான மெக்னீசியம் ஆகியவை பீன்ஸில் உள்ளன.

பச்சை பீன்ஸ் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளடக்கத்தை கொண்டுள்ளதன் காரணமாக ஒமேகா -3 இன் நல்ல மூலமாக தகுதி பெறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒரு கப் சமைத்த பச்சை பீன்ஸ் அதிக அளவு ஒமேகா -3 யை கொண்டுள்ளது, ஒமேகா-3  இதயத்தை ஆரோக்கியமாக்கவும், நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தக்கூடிய ஊட்டச்சத்தாக உள்ளது. உணவில் பீன்ஸை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், வாழ்வியல் முறை நோய்களான உடல்பருமன், நீரிழிவு, ஃபேட்டி லிவர் நோய்களால் வரக்கூடிய அபாயத்தை குறைத்துக் கொள்ள முடியும். ஒரு சிலருக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஃபேட்டி லிவர் பிரச்னை வரக்கூடும். நாளடைவில் அதுவே கல்லீரல் செயலற்றுப்போகவும் வழி வகுக்கும். இவர்கள் இறைச்சிக்கு பதில் புரதம் நிறைந்த பீன்ஸ் பர்கரை சாப்பிடுவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மேம்படுத்த முடியும்.

நீராவியில் வேகவைத்த பச்சை பீன்ஸ், பித்த அமிலங்களுடன் பிணைப்பதன் மூலம் கொழுப்பைக் குறைக்கும் நன்மைகளை வழங்கக்கூடும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பீன்ஸில் உள்ள ரசாயனக் கூறுகள் பித்த அமிலங்களுடன் பிணைக்கப்படும்போது, ​​கல்லீரல் கொழுப்பைத் திரட்டி பித்த அமிலங்களாக உடைக்கிறது. இதன் விளைவாக, ரத்த ஓட்டத்தில் கொழுப்பின் அளவு குறைகிறது. பீன்ஸ் வேகவைத்த நீரை வடிகட்டி குடிப்பதன்  மூலம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக் கட்டிகள் கரைகிறது. ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடல் எடை அதிகரிப்பது ஒரு  கவலைக்குரிய பிரச்சனை ஆகும்.

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
வயது அதிகரிக்கும்போது, உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து கொண்டே வரும். பீன்ஸ் சாப்பிடுவதால், அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து  நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது. உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புகள் அந்த உணவுகளை செரிமானம் செய்ய அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள், பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பீன்ஸ் காய்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.  அதிகம் உணவில் பீன்ஸ் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் கொண்டுள்ள காயாக பீன்ஸ் இருக்கிறது.  இவர்களுக்கு ஏற்படும் ரத்தச் சோகை ஒரு பெரும் பிரச்னை ஆகும். உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் ரத்தச் சோகை ஏற்படுகிறது. பீன்ஸ் காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடல் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புகிறது.  தினமும் நாம் சாப்பிடும் அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பீன்ஸ் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.

சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலும், மீண்டும் கற்கள் உருவாகும் வாய்ப்புண்டு. இவர்கள் பீன்ஸ் வேகவைத்த நீரை அடிக்கடி அருந்துவதன் மூலம் அந்த வாய்ப்பை குறைத்துக் கொள்ள முடியும். பீன்ஸை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை கெடாமல் பயன்படுத்தலாம். வெளியில் வைப்பதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு இழப்பு ஏற்படும். சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன் பீன்ஸ், கேரட், போன்ற காய்களை வைத்து தயாரிக்கும் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்யும் முறையை இங்கே செய்து காண்பிக்கிறார்.

ஈஸி ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் –  ½ கப் (பொடியாக நறுக்கியது)
கோஸ் – ½ கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – ¼ கப் (பொடியாக நறுக்கியது)
குடை மிளகாய் – ¼ கப் (பொடியாக நறுக்கியது)
(பச்சை, மஞ்சள், சிகப்பு)
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
முட்டை – 2
பாஸ்மதி அரிசி – 2 கப் (வேக வைத்தது)
(முக்கால் பதத்தில் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்)

செய்முறை

ஒரு அகலமான கடாயில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் வெங்காயம், கோஸ், பீன்ஸ், கேரட், குடைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது பெப்பர் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். முழுதாக வேகக்கூடாது. பின், அதில் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறி, பின்னர் அதில் வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதற்கு தேவையான உப்பு, பெப்பர் தூள் சேர்த்து நன்கு கிளறி, வெங்காயம் மற்றும் வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ!! (மருத்துவம்)
Next post டயாபட்டீஸ் டயட்!!! (மருத்துவம்)