கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு!! (மருத்துவம்)
பொதுவாகவே நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். இதில் இன்னும் ஒரு அதிர்ச்சியாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நீரிழிவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஊரகப் பகுதிகளில் சர்க்கரை நோயின் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டன. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 25 கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சர்க்கரை நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக ஊரகப் பகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டில் 4.9 சதவீதமாக இருந்த சர்க்கரை நோய் பாதிப்பு, தற்போது 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குள் சர்க்கரை நோய் தாக்கம் 300 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நகரவாசிகளிடம் உருவாவதாக நம்பப்பட்டுக் கொண்டிருக்கும் நீரிழிவு தற்போது கிராமங்களிலும் அதிவேகமாக உருவாக என்ன காரணம்? ‘வாழ்க்கைமுறை மற்றும் உடல் பருமன் உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம். மேலும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் போதிய அளவு இல்லாமையும் இதற்கு காரணமாக உள்ளது. இனி கிராமப்புறங்களில் வாழ்கிறவர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.