ஃபுட் ஆர்ட்டில் கலக்கும் ரேவதி!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 25 Second

சிற்பி கல்லை சிலையாகச் செதுக்குவது மாதிரி, தூரிகைக்குள் ஒரு ஓவியத்தைக் கொண்டு வருவது மாதிரி, கேக்கில் பலவிதமான டிசைன்களை அசால்டாகக் கொண்டு வருகிறார் ஃபுட் ஆர்ட் ஸ்பெஷலிஸ்ட் ரேவதி. சன் டி.வியில் நடைபெற்ற ‘மாஸ்டர் செஃப்’ கன்டெஷ்டனில் டாப் 18ல் இருந்திருக்கிறார். குழந்தை ஒன்று, தனது இரண்டு காலையும் மடக்கி, குப்புறப்படுத்தால் எப்படி அதன் வளைவு, நெளிவு சுளிவுகள், அதனுடைய பிஞ்சுப் பாதங்கள் மற்றும் விரல்கள் இருக்கும் என்பதை கேக்கின் மேல் மினியேச்சராக ரேவதி ஃபுட் ஆர்ட் செய்து வைத்திருக்கும் விதம் நம் கண்களைக் கவர்கிறது.

நியூ பார்ன் பேபி கேக்… இரண்டு பேரக் குழந்தைகளுடன் தாத்தா இருப்பதுபோல பிறந்தநாள் கேக்… லெக் பீஸ் இருப்பது போன்ற பிரியாணி கேக்… மேகி கேக், புல்லட் கேக்… மேக்கப் செட் கேக், டவர் கேக், வெட்டிங் கேக் என விதவிதமான டாப் அப்புகளுடன் ரேவதியின் கைவண்ணத்தில் கேக்குகள் விதவிதமாகத் தயாராகின்றன. ஃபுட் ஆர்ட் ஃபீல்டில் கால்பதித்தது குறித்து அவரிடத்தில் பேசியதில்…

‘‘இந்த துறைக்குள் நான் காலடி வைத்து 9 ஆண்டுகளைக் கடந்தாச்சு. எனக்கு பூர்வீகம் காரைக்குடி. என் பாட்டி, அம்மா எல்லோருமே சமையலில் கை தேர்ந்தவர்கள். பாட்டியையும், அம்மாவையும் பார்த்தே எனக்கும் சமையலில் ஆர்வம் வந்தது. கை பக்குவத்தில் ருசியாக சமைக்க அவர்களிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். விதவிதமாய் சமைத்துப் பார்ப்பது எனக்கு பிடித்த விஷயமாக இருந்தது.

அதையும் தாண்டி வரைவது, பெயின்டிங்ஸ், எம்ப்ராய்டரிங் என கிரியேட்டிவான விஷயங்களிலும் அதிக ஆர்வம் இருந்தது. எனக்குப் பிடித்தகுக்கிங் மற்றும் ஆர்ட் டிசைனிங் இணைகிற ஃபுட் ஆர்ட் ஃபீல்டை கெரியராக நான் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது எனக்கு அப்போது சுத்தமாகத் தெரியாது’’ என்கிற ரேவதி, கோவை கல்லூரி ஒன்றில் மைக்ரோ பயாலஜி முடித்து, பிறகு எம்.பி.ஏ படித்திருக்கிறார்.

‘‘படிப்புக்காக பெற்றோர் தேர்வு செய்தது கோயம்புத்தூரை. பள்ளி முதல் கல்லூரிவரை எனது படிப்பு கோவையில்தான். பிறகு சென்னைக்கு குடும்பத்தோடு மாறினோம். இங்கு வந்த பிறகு ஏர்லைன் இன்டஸ்ட்ரீ தொடர்பாக ஒரு ஷார்ட்டெர்ம் கோர்ஸ் முடித்து கிங்பிஷர் நிறுவனத்தில் கிரவுண்ட் ஸ்டாஃப்பாக 2 ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு வேறொரு நிறுவனத்திற்கு மாற வேண்டிய சூழலும் வந்தது. இருந்தாலும் வேலை தொடர்பாக என் மனசுக்குள்ள ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. மனசு ஒட்டாமல், விருப்பமில்லாத வேலைகளை செய்கிற ஃபீல் எனக்குள் தொடர்ந்தது. இந்த நிலையிலேயே எனக்குத் திருமணமாகி மகள் பிறந்தாள்.

மகளின் முதல் பிறந்த நாளுக்கு மனதிற்குப் பிடித்த மாதிரியான கேக் வாங்க நிறைய மெனக்கெட்டேன். அலைந்தேன். நாம ஆசைப்படுகிற ஒன்று எதிர்பார்க்கிற மாதிரி கிடைப்பதில்லை எனப் புரிய ஆரம்பித்த தருணம்தான் என் லைஃப்போட டெர்னிங் பாயின்ட். எனக்கு பிடித்த ஃபீல்ட் குக்கிங் மட்டுமே என்பதை என் மகள் பிறந்த பிறகு லேட்டாகவே உணர்ந்தேன்.

அப்போது என் அக்கா அமெரிக்காவில் வசித்து வந்தார். நானும் விடுமுறைக்கு அங்கு போக வேண்டிய சூழல் அமைந்தது. அந்த நாட்டில் கேக்கினை பெரிது பெரிதாக தயாரித்து, காட்சிப்படுத்துவார்கள். அவற்றையெல்லாம் ரசிக்கத் தொடங்கினேன். அவர்களின் தயாரிப்பு கேக் டிசைன்களை பார்த்து எனக்குள்ளும் அந்த மாதிரியான கேக் டிசைன்களை உருவாக்கும் ஆசை வரத்தொடங்கியது.

அப்போது அக்காவின் வீட்டருகில்‘வில்டன் ஸ்கூல் ஆஃப் கேக் டிசைனிங்’ (Wilton school of cake designing) என்கிற பெயரில் ஃபுட் டிசைனிங் கோர்ஸ் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. நானும் அந்த வகுப்பில் இணைந்து கேக்கினை பேஸாக வைத்து வெறும் டிசைனிங் செய்வதை மட்டுமே (food art) ஆறு மாதப் பயிற்சியாக எடுத்து கற்றுக்கொண்டேன். பேஸிக்கில் இருந்து தொடங்கி நான்கு லெவல் வரை வகுப்புகள் நடந்தது.

பயிற்சி முடித்ததும், 2016ல் நான் வீட்டிலிருந்தே கேக் ஆர்ட் செய்யும் முயற்சிகளை தொடங்கிய நேரத்தில், நம் நாட்டிற்கு அது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது.
இப்போது இந்தத் துறை வேற லெவலில் இங்கும் வளர்ச்சி அடைந்தாலும், நான் இதில் காலடி வைத்தபோது, ஃபுட் ஆர்ட் செய்யத் தேவையான பொருட்கள் வெளிநாட்டில் இருப்பதுபோல இங்கு தரமானதாகக் கிடைப்பதில் சவால்கள் இருந்தது. வெளிநாட்டில் இருந்து வரவழைத்தும் பயன்படுத்த முடியாத நிலை. காரணம், அந்த நாட்டின் கிளைமெட் முற்றிலும் வேறு. அவர்களின் தயாரிப்பு இன்கிரேடியன்ஸ், க்ரீம் மற்றும் டாப்அப்களை வைத்து இங்கு ஃபுட் டிசைன்களை உருவாக்கும் போது நமது சீதோஷ்ண நிலைக்கு சுத்தமாக அவை செட்டாகாமல் இருந்தது. நமது சூழலுக்கு ஏற்ற தரமான இன்கிரேடியன்ஸ்களை தேடி கண்டுபிடிப்பதில் எனக்கு மிகப்பெரிய சவால் இருந்தது.

இந்த துறையில் பெரிய அளவில் யாருக்கும் எக்ஸ்பிரிமென்ட் அப்போது இல்லையென்பதால், நானே முயற்சித்து தேடித்தேடி நம் கிளைமெட்டுக்கு ஏற்றவற்றை வாங்கி செய்து பார்க்கத் தொடங்கினேன். சின்னச் சின்ன ஸ்டெப்பாக எடுத்து வைக்கத் தொடங்கி எனது ஹோம் கிச்சனில் வைத்தே கேக் அயிட்டங்களை தயாரித்து அதன்மீது விதவிதமான ஃபுட் ஆர்ட் சைன்களை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். இந்த விஷயத்தில் என் கணவர் எனக்கு பக்க பலமாக இருந்தார்.

எதிலும் நூறு சதவிகிதமும் பெர்ஃபெக்ட் எதிர்பார்ப்பவள் நான். கமர்ஷியலாக யோசித்து நிறைய சம்பாதிக்கணும் என முயற்சிக்காமல் எதுவாக இருந்தாலும் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில், முதலில் நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள், திருமணநாள், முக்கிய நாட்களுக்கு கேக்கில் புதுப்புது டிசைன்களை செய்து தீம் கேக்காகக் கொடுக்கத் தொடங்கினேன்.

என்னோட கேக் தயாரிப்பு முறை மற்றும் கேக்கில் நான் செய்யும் ஃபுட் ஆர்ட் டிசைனிங் பிடித்துப் போகவே என் கணவரின் அலுவலக நண்பர்கள், என் தம்பியின் அலுவலக நண்பர்கள், அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் என கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர்கள் வரத் தொடங்கியது. எனது தயாரிப்பின் சுவை பிடித்துப்போகவே பெரிய நிறுவனங்கள், மிகப் பெரிய ரெஸ்டாரென்ட் ஸ்டால்களில் தீம் கேக் ஆர்டர்கள் வரத் தொடங்கியது. நானும் கேக் தயாரிப்பில் என்னை நிறைய செதுக்கிக் கொண்டேன்’’ என்கிறார்.

‘‘சன் டி.வி.யில் நடந்த ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, மூன்று ஜட்ஜஸ் மற்றும் செஃப் இருந்தார்கள். நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாய் ஃபுட், மெக்ஸிகன் ஃபுட், பைவ் மேஜர் சாஷஸ் குறித்தெல்லாம் கேள்விகள் அதில் இருந்தது. முதல் ரவுண்டில் தேர்வாகி அடுத்த ரவுண்ட் லைவ் கிச்சன் சென்றேன். அதில் சாக் கேக்பாப் பணியாரம் செய்து ஐசோமால்ட் பிளேட்டில் வைத்து நடுவர்களை அசத்தி டாப் 25க்குள் தேர்வானேன்.

இறுதி சுற்று பெங்களூர் பிலிம் சிட்டியில் நடந்தது. அதில் நான் பதினெட்டாவது இடத்தில் எலிமினேட் ஆனேன்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘ஐசோமால்டில் (Isomalt) அழகான ஃபுட் டிரேயினை இன்ஸ்டென்டாக தயார் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றதுடன், என்னுடைய வித்தியாசமான கேக்பாப் பணியாரம் அனைவரையும் கவர்ந்தது’’ என்கிறார்.

‘‘நான் செய்கிற பெரும்பாலான ரெஸிபீஸ் என்னோட முயற்சியே. ஒவ்வொரு ரெஸிபியையும் துவக்கத்தில் இருந்தே நான் பெர்ஃபெக்ட் செய்து கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட சிறப்பாக எப்படி கொண்டுவரலாம் என்பதே பெரும்பாலும் என்னுடைய யோசனையாக இருக்கும். எல்லா இடங்களிலும் ரோஸ்மில்க் கேக் கிடைத்தாலும், அதன் ரேசியோஸ், ஸ்பான்ஞ்சின் திக்னெஸ் எல்லாமே என் தயாரிப்பு கேக்கில் வித்தியாசமாகவே இருக்கும்.

வெனிலா கேக்கினை கட் செய்யும்போது உள்ளே இருக்கும் கேக்கின் துவாரங்கள் ஒரு இடத்தில் பெரியது ஒரு இடத்தில் சிறியது என இல்லாமல், சமமாக இருக்க வேண்டும். பெர்ஃபெக்டிற்காக மட்டுமே வெனிலா கேக்கினை நூறு முறை முயற்சித்திருப்பேன்’’ என்றவர், செட்டிநாட்டு பலகாரங்களான பால் பணியாரம், குழிப்பணியாரம், கந்தரப்பம், மசாலாப் பணியாரம், சீயம், பால்கொழுக்கட்டை, கேசரி போன்றவற்றையும் ஃபுட் ஆர்டிற்குள் கொண்டுவந்து பிரெசன்டபிளாக பிளேட் செய்து அசத்துகிறார்.

‘‘எந்த ஒரு விஷயத்தையும் படிக்கலாம்… கத்துக்கலாம்… ஆனால் எக்ஸ்பீரியன்ஸ் என்பது முயற்சி செய்ய செய்யத்தானே வரும்’’ என்றவர், ‘‘கேக் ஆர்டிற்கான ஃபவுண்டேஷனை கற்றபின், அதை நான் செய்ய ஆரம்பித்த பிறகே அதிலிருந்த சவால்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. நிறைய நிறைய தவறுகளை செய்தே சரியானதைக் கற்றுக் கொண்டேன்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘கேக் அயிட்டங்களை ஹோம்மேடாக வீட்டிலிருந்தே தயாரித்தாலும், எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. எனக்கான பேக்கிங் கிச்சனை, வீட்டின் ஒரு பகுதியில் நானே உருவாக்கிக் கொண்டேன். கேக் தயாரிப்புக்கான மெஷின்களை அதில் செட் செய்து வைத்திருக்கிறேன். உதவிக்காக ஒருசில ஊழியர்களையும் பணிக்கு அமர்த்தியிருக்கிறேன்’’ என நம்மை அழைத்துச் சென்று அவரின் ஹோம்பேக் கிச்சனை சுற்றிக் காட்டுகிறார்.

‘‘கேக் ஜெல், பிரசெர்வேட்டிவ் போன்ற உடலுக்கு கெடுதியான பொருட்களை தவிர்த்து, ஹோம்மேடாக எவ்வாறு தயாரிக்கின்றேனோ, அதே முறையிலேயே பெரிய அளவிலான
ஆர்டர்களையும் எடுத்து அவுட்லெட் செய்யும் முயற்சியில் தற்போது இருக்கிறேன். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது’’ என்றவாறு நம்மிடம் விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களே அதைப்பற்றி கேட்க கூச்சமா இருக்கா?… இப்படியும் கேட்கலாமே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வயிற்றுக்கு சாப்பாடு மட்டுமல்ல… எக்சர்சைஸும் தேவை! (மருத்துவம்)