
கோடையை குளிர்விக்கும் முலாம் பழம்! (மருத்துவம்)
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே, அனல்காற்று, தாகம், வெப்பம், எரிச்சல் போன்றவை கோடையில் வாட்டும் பிரச்னைகளாகும். எனவே, பல்வேறு உணவுகள், பழங்கள், பானங்கள் இவற்றை பயன்படுத்தி கோடையை சமாளிக்கிறோம். அந்தவகையில், முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
சத்துக்கள்: தென் ஆப்ரிக்கப் பகுதியை தாயகமாகக்கொண்ட முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகச்சத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் , தாமிரம், கந்தகம், குளோரின் மற்றும் ஆக்சாலிக் அமிலம் போன்றவைகள் அடங்கியுள்ளன.
மருத்துவப் பயன்கள்: முலாம்பழத்தை உண்டு வர மலச்சிக்கல் நீங்கும் முலாம்பழம் சிறுநீரை பெருக்கி, உடலில் வெம்மையை தணித்து குளிர்ச்சியூட்டும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க்கடுப்பு இவற்றைக் குணப்படுத்தும் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உடையது.
முலாம்பழத்தின் பழச்சாறு தாகத்தை தீர்த்து, தொண்டைவலியை குணப்படுத்தும். பழ சர்பத்தோடு இனிப்பு சேர்த்து அருந்தி வர சொறி, சிரங்கு மாறும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். முலாம்பழத்தின் பழச்சாறு பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை கூட்டும்.
பழத்தை கூழாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்துவர விரைவில் நோய் குணமாகும்.
பழச்சதையோடு சர்க்கரை, பால் சேர்த்து சாப்பிட கோடைக் கால வெம்மை தணியும், தலைச்சூடு குறையும்.முலாம் பழத்தின் விதைகளை சேகரித்து, காயவைத்துப் பொடித்து உண்ண, வயிற்றுப்புழுக்கள் விலகும். விதைகளை அரைத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மேல் பூசிவர கரும்புள்ளிகள் மாறும். முலாம் பழத்தின் காயை கூட்டு போன்று சமைத்து உண்ண சுவையாக இருக்கும்.
முலாம்பழக் கொடியின் வேரை கஷாயம் செய்து குடித்தால், வாந்தியை நிறுத்தும். பழத்தை பால்விட்டு பிசைந்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவி வர, முகம் பளபளப்பாகும். கோடையினால் ஏற்பட்ட தோல் சுருக்கம் மாறும்.முலாம்பழம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். கீல் வாதத்தை குணப்படுத்தும். கண் எரிச்சல், கண்சூடு மாறி கண் குளிர்ச்சி பெறும். வெப்பத்தால் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலை இப்பழம் குணப்படுத்தும்.