முடத்தை குணமாக்கும் முடக்கறுத்தான் கீரை! (மருத்துவம்)

Read Time:9 Minute, 59 Second

முடக்கற்றான், முடக்கத்தான், முடர் குற்றான், முடக்கொற்றான், முடக்கு தீர்த்தான், உமிஞை எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹேலிகாகாபம் (Cardiospermum halicacabum ) என்பதாகும்.

முடக்கு + அறுத்தான் = முடக்கறுத்தான். முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருப்பதாலே, இது முடக்கறுத்தான் என அழைக்கப்படுகிறது. நாளடைவில் இது முடக்கற்றான், முடக்கத்தான் என மருவி வழங்கி வருகிறது. இக்கீரையானது தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக வளரக்கூடிய படர்கொடி இனம் ஆகும்.

முடக்கறுத்தான் தற்போது அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. முடக்கத்தான் காய்கள் பலூன் போன்று இருக்கும். இதை அழுத்தினால் பட்டாசு போன்று சத்தம் வரும். அதனால் இது பட்டாசுக்காய் என்று சிறுவர்கள் மத்தியில் அழைக்கப்படுகிறது. முடக்கத்தான் கீரையைப் பற்றி அகத்தியர் குணவாகடத்தில் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

சூலைப் பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவாய்வுங் கன்மலமும் – சாலக்
கடக்கத்தா னோடிவிடும் காசினியை விட்டு
முடக்கற்றான் றன்னை மொழி.
– அகத்தியர் குணவாகடம்

இக்கீரையால் சூலை நோய், பிடிப்பு, சொறி, சிரங்கு, கிரந்தி, கரப்பான், காலடியைப் பற்றிய வாதம் ஆகியவை போகும். மலச்சிக்கலை நீக்கும்.

மூட்டு வலி குறைய…

*முடக்கறுத்தான் மூட்டு வலிக்கு மிகச்சிறப்பாக பயனளிக்கும். மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்பம் முதலே முடக்கறுத்தான் கீரையை உணவில் எடுத்துகொள்வதன் மூலம் வலி நிவாரணியாக செயல்படும்.

*இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

*வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது முடக்கறுத்தான் தோசை, முடக்கறுத்தான் இட்லி, முடக்கறுத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

*முடக்கத்தான் இலைகளை, விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டு வலி, வீக்கம் குறையும்.

*இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உண்டாகும் கவுட் நோய் குணமாகவும் இக்கீரை உதவுகிறது. இதில் உள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டை கரைக்கும் சக்தி படைத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் மூட்டுகளில் படியக்கூடிய யூரிக் ஆசிட் அளவை குறைத்து, கவுட் என்னும் வாத நோயைக் குணப்படுத்த இக்கீரை பெரிதும் பயன்படுகிறது.

உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெற…

முடக்கறுத்தான் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கொதிக்க வைத்து க்ரீன் டீ போல் பருகினால் உடல் சோர்வு மறைந்து உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். இலேசான கசப்புத்தன்மை இருக்கும் என்பதால் இனிப்புக்கு தேன் சேர்க்கலாம். இது உடல்வலியை குறைக்கும்.

இருமலைக் கட்டுப்படுத்த…

முடக்கறுத்தான் இலைகளை நறுக்கி வெயில் படாமல் உலரவைத்து பொடியாக்கி பதப்படுத்தி வைக்கவும். இருமல் வரும் போது சாதத்தில், நல்லெண்ணெய், உப்பு மற்றும் முடக்கறுத்தான் பொடி சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இப்பொடியை தேனில் கலந்து நாவில் தடவி விடலாம். வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் இருமல் கட்டுப்படும்.
காயங்களால் ஏற்பட்ட வலி, அடிபட்ட வலி, சுளுக்கு வலி குணமாக…

*உடலில் காயங்கள் உண்டாகும் போது வலி அதிகமாக இருந்தால் நல்லெண்ணெயில் இதன் இலைகளை காய்ச்சி, அந்த எண்ணெயை அடிபட்ட இடத்தில் தடவ வலி குறையும்.
*முடக்கறுத்தான் சமூலம், வாத நாராயணன் இலைகள், நொச்சி வேர், பேய்மிரட்டி இலைகளை சேர்த்தரைத்து, நல்லெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தயாரிக்கப்படும் எண்ணெயை ‘உடல் பிடிப்பு தைலமாக’ பயன்படுத்த அடிபட்ட வலிகள் மட்டுமன்றி உடலில் தோன்றும் சுளுக்குப் பிடிப்புகளும் மறையும்.

சூதக கட்டு நீங்க..

*இதன் இலைப் பொடியுடன், சித்திரமூல வேர்ப்பட்டை பொடி, கரிய போளம் இவை சேர்த்து மூன்று நாள் கொடுக்க, சூதக கட்டு நீங்கும்.
*இலைகளை வதக்கி அடிவயிற்றில் கட்டச் சூதகத்தை மிகுதிப்படுத்தி சூலக அழுக்குகளை வெளிப்படுத்தும்.
*பிரசவத்திற்குப் பின்னர் கருப்பை அழுக்கு வெளியேற உதவுகிறது.
*பிரசவித்த பெண்களின் கருப்பை அழுக்குகளை வெளியேற்றும் தன்மை முடக்கத்தானுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பற்றுப்போடும் வழக்கத்தை இன்றும் கிராமப்புறங்களில் கொண்டிருக்கிறார்கள்.

மலச்சிக்கல் மற்றும் மூலநோய் குணமாக…

*இதன் இலை, வேர் முதலியவைகளை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடிக்க மூலம், மலச்சிக்கல் நீங்கும்.
*முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூலநோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

கண் நோய்களுக்கு…

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.காது வலி காதில் சீழ் வடிதல் நீங்கஇதன் இலைச்சாற்றை காது வலி மற்றும் சீழ்வடியும் காதில் இரண்டு துளி விட காது வலி நீங்கும் மற்றும் சீழ்வடிதல் நிற்கும்.

முடக்கத்தான் தோசை

* இரண்டு கப் அரிசியை ஊறவைத்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் இலைகளை சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.
*ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை சிறிதளவு நீர் விட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து அதை தோசை மாவுடன் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம். இதில் பெரிதளவு கசப்பு இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

முடக்கத்தான் சூப்இக்கீரையை சிறிதளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின்னர் அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து பரிமாறவும். இது புத்துணர்ச்சி தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

முடக்கத்தான் கீரைக் கூட்டு

முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்.

முடக்கத்தான் துவையல்

ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, அதில் சிறிதளவு மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கி உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ளவும். இதை சூடான சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அழகை மேம்படுத்தும் கண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post பாதங்களை பாதுகாக்கும் நியூட்ரல் ஃபுட் பாத்! (மருத்துவம்)