கடற்கரை மணலில் இயற்கை விவசாயம்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 13 Second

“உணவே மருந்து’’ என்று மக்கள் உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அந்த உணவு முற்றிலும் இயற்கையான முறையில் அல்லது செயற்கை முறையில் உருவாக்கப்பட்டதா என சந்தேகம் கொள்ள நேரமில்லாத ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் சிக்கியுள்ளனர். அவர்களின் இந்த இயந்திரத்தனமான வாழ்வில் இயற்கையை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த வினோதா, கோகுல் தம்பதியினர். ‘கழனி நேட்டிவ் பார்ம்ஸ்’ என்னும் பெயரில் சென்னை கடற்கரை மணலில் இயற்கை விவசாயத்தை உருவாக்கியது மட்டுமில்லாமல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து சிறப்பு பயிற்சிகளும் நடத்தி வருகின்றனர். தம்பதியினர் இருவரும் தங்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்கின்றனர்.

‘‘நானும் என் மனைவியும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில்தான். சின்ன வயதிலிருந்தே எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு அதிகம். ஆனால் என் பெற்றோருக்கு அதில் உடன்பாடு இல்லை. பிறகு சென்னையில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் இருவரும் வேலைக்கு போனோம். ஆனாலும் விவசாயம் எங்களுடைய கனவு. கனவை அடைவதற்கு முன்னோட்டமாக நாங்கள் எங்கள் வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் இறங்கினோம். ஆரம்ப காலகட்டத்தில் மணலில் விவசாயம் என்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

ஆனால் எங்களின் நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்து மணலில் பயிர் செய்வதே மிகவும் எளிது என புரிய வைத்து வழிகாட்டினார்கள். இவர்கள் மட்டுமில்லாமல் நம்மாழ்வார் ஐயா, செந்தமிழன், ஞானப்பிரகாசம் ஐயா போன்ற இயற்கை வழி வாழ்வியல் முன்னோடிகளின் வழிகாட்டுதலிலும் ஒரு நம்பிக்கை வந்தது. இந்த சூழல் எங்களுக்கு நம்பிக்கையளித்தாலும், சாதாரண வயல் வெளிகளில் செய்யும் விவசாயத்திற்கும் மணலில் விவசாயம் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. இதனை புரிந்துகொள்ளவே எங்களுக்கு ஒன்றரை வருடம் ஆனது. இதில் முதல் 8 மாத காலம் மிகவும் சிரமத்திற்குள்ளானோம்.

சரியாக சொல்லவேண்டுமெனில், அப்பொழுது கொரோனாவின் முதற்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தருணம். கைகளில் இருந்த மொத்த சேமிப்பும் தீர்ந்த பிறகும் எங்கள் நம்பிக்கையை நாங்க இழக்கவில்லை. அதன் முழு பலனாக கிடைத்தது தான் எங்களின் இந்த ‘‘கழனி நேட்டிவ் பார்ம்ஸ்‘‘ என மகிழ்வுடன் பகிர்ந்த கோகுல், வினோதா தம்பதியினர், எதற்காக கீரை வகைகளை தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் நாட்டு காய்கறிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுகின்றனர்.

‘‘தற்பொழுது விற்ககப்படும் காய்கறிகள் அனைத்தும் இயற்கையான முறையில் வந்தது என சொல்ல முடியாது. விதை போட்டதிலிருந்து, வாடிக்கையாளர்கள் வாங்கும் வரையிலுமே மருந்துகள் பயன்படுத்தப்பட்டவைகளே விற்பனைக்கு வருகின்றன. எனவேதான் நாங்கள் அனைத்தும் இயற்கையான முறையில் வழங்க முடிவெடுத்தோம். ஆனால் கைகளில் இருந்த சேமிப்பு அனைத்தும் தீர்ந்த பிறகு மாத வருமானமாக ஒரு தொகை இருந்தால் மட்டுமே குடும்பத்திற்கும் விவசாயத்திற்கும் ஈடுகட்ட முடியும் என்று தோன்றியது.

நாங்கள் வழங்கக்கூடியது சத்துள்ளதாகவும் குறைந்த நேரத்தில் வருமானம் ஈட்டக்கூடியது கீரை வகைகள் மட்டுமே. மேலும் நகரங்களில் கீரைகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. எனவே தான் கீரை வகைகளை தேர்ந்தெடுத்தோம். நாங்க மொத்தம் 21 வகையான கீரைகளை பயிர் செய்கிறோம். ஆரம்பத்தில் இங்கு விளையும் கீரைகளை எங்கள் நண்பர்களுக்கும், அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் விற்பனை செய்து வந்தோம். பிறகு அவர்களுக்கு தெரிந்தவர்கள் என எங்களின் விற்பனை பெருகியது.

‘கீரை மட்டும் ஏன்..? நீங்கள் ஏன் காய்களும் பயிரிட்டு விற்கக்கூடாது..? என நிறைய மக்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பித்ததுதான் காய்கறிகள் விற்பனை. கடைகளில் ஹைபிரிட் மூலம் விளைந்த பொருட்களைதான் விற்கின்றனர். அதனால் நாங்க நாட்டு காய்களை பயிரிட திட்டமிட்டோம். கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நாட்டு காய்களின் விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளோம்.

கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை போன்ற நாட்டு காய்களும் மா, பலா, வாழை, சப்போட்டா போன்ற பழவகைகளும் பயிர் செய்கிறோம்’’ என்ற தம்பதியினர், 25 சென்ட் இடத்தில் தங்களின் விவசாயத்தினை ஆரம்பித்து தற்போது இரண்டரை ஏக்கரில் செயல்பட்டு வருகிறார்கள். கழனி நேட்டிவ் பார்ம்ஸில் வெறும் கீரைகள், காய்கறிகள், மூலிகை பொருட்கள் மற்றும் பழங்கள் மட்டும் இல்லாமல் சமையலுக்கு தேவையான அனைத்து மசாலா மற்றும் மளிகை பொருட்களும் கிடைக்கிறது.

மற்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களையும் நேரடியாக பெற்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதால் விவசாயிகள் லாபம் பார்க்க முடிகிறது. மேலும் நியாயமான விலையிலும் விற்கப்படுவதால் எங்களுக்கும் ஒரு மன திருப்தி கிடைக்கிறது’’ என்றவர் பூச்சிகளில் இருந்து இயற்கை முறையில் எவ்வாறு செடிகளை பாதுகாக்கின்றனர் என்பதைப் பற்றி விவரித்தனர்.

‘‘எல்லா காலநிலையிலும் பூச்சிகள் செடிகளில் இருப்பதில்லை. பனி காலத்தில் ஏதேனும் சில பூச்சிகள் கீரைகளில் இருக்கும். அதற்காக நாங்கள் பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதில்லை. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் பசு மாட்டின் கோமியம் இவற்றை 3 நாட்களுக்கு ஊறவைத்து பூச்சி விரட்டியாக மட்டுமே பயன்படுத்துகிறோம். இதில் சில சமயங்களில் காரப் புகையிலையும் சேர்த்து தெளிப்போம். வெயில் காலத்தில் கீரைகளை பாதுகாக்க அதிகமாக ஊடுபயிர்களாக பப்பாளி, தென்னை, கத்தரி, வெண்டை இடையிடையே கீரை விதைக்கிறோம்’’ என்று கூறும் இந்த தம்பதியினர் விவசாயத்தை தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் பேச்சிலர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

‘‘விவசாயம் அழிந்துவிட்டது என்று சொல்லும் பலருக்கு நாங்க ஒரு பெரிய உதாரணம். இந்த விவசாயத்தில் நாங்க மாதம் 40 ஆயிரம் கூட சம்பாதித்து இருக்கிறோம். அதே நேரம் விதைகளுக்காக போட்ட காசும் கிடைக்காமல் போன நாட்களும் உள்ளது. கீரைகள் பொறுத்தவரை தொடர்ச்சியாக வருமானம் கொடுக்கக்கூடியது. மேலும் கால நிலைக்கு ஏற்ப உரிய காய்கறிகளை பயிர் ெசய்தால் கண்டிப்பாக லாபம் பார்க்க முடியும் என்பதை எங்களின் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறோம். நாங்க கற்ற பாடத்தினை வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இயற்கை விவசாயம் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறோம்.

மேலும் ஆறு வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் மூலம் கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் அவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். கல்லூரி மாணவர்களுக்கு எங்களின் தோட்டத்தில் சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறோம். கை நிறைய சம்பாத்தியம் கொடுத்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தை தேர்ந்தெடுத்ததால் ஆரம்பத்தில் வருத்தப்பட்ட எங்களின் பெற்றோர்கள் இப்போது எங்களின் விவசாய பணிக்கு முழு மனதுடன் ஆதரவு அளிக்கின்றனர்.

மக்கள் அனைவரும் இயற்கை உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என வேண்டுகோளை முன்வைப்பதுடன் விவசாயத்தின் மீதான எங்கள் ஆசையும், ஆர்வமும் முன்பைவிட அதிகரித்துள்ளது’’ என்கிறார்கள் வினோதா, கோகுல் தம்பதியினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹேர் ஜெல் நன்மையா.. தீமையா..!! (மருத்துவம்)
Next post வெந்தய தோசை!! (மகளிர் பக்கம்)