நாங்க சண்டக்காரங்க! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 36 Second

பள்ளியில் எல்லா மாணவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு மாணவனை மட்டும் அறிவியல் ஆசிரியர் கைகாட்டி நம்முடைய உடலில் ஏதேனும் குரோமசோம்கள் மாற்றம் ஏற்பட்டால் இப்படித்தான் இருப்பார்கள் என திருநர் மாணவனை சுட்டிக்காட்டி சொல்கிறார். அந்த மாணவனை பார்த்து எல்லா மாணவர்களும் சிரிக்கின்றனர். அந்த மாணவன் தனக்குள் ஏற்படும் வலி மற்றும் மற்றவர்கள் தன் மீது செலுத்தும் எள்ளல்களை அனாயசயமாக நடித்துக் காட்டுகிறார். இந்த காட்சியினை சண்டக்காரங்க நாடக குழுவினர் நாடகத்தில் பார்க்கலாம். இவர்கள் திருநர் சமூகம் அனுபவித்த நிராகரிப்புகளையும், அவமானங்களையும் நாடகங்களாக சென் னையின் பல பகுதிகளில் அரங்கேற்றி வருகின்றனர். இதில் முக்கியமானது இந்த நாடகத்தில் நடித்து வேலை செய்த அனைவருமே திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான்.

‘‘முதல் முறையாக திருநங்கை மற்றும் திருநர் சமூக மக்கள் மட்டுமே இணைந்து நிகழ்த்திய நாடகம் இது தான்’’ என சொல்ல தொடங்குகிறார் நாடகத்தின் கதையாசிரியர்களில் ஒருவரான கிரேஸ் பானு. இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘நான் திருநர் கூட்டமைப்பு என்ற பெயரில் எங்க இணத்திற்கான தனிப்பட்ட அமைப்பினை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறேன். மேலும் எனக்கு புத்தகங்கள் எழுதும் பழக்கமும் உண்டு. இது மட்டுமில்லாமல் 2017ல் “சண்டக்காரங்க” என்னும் பெயரில் திருநங்கை மற்றும் திருநம்பியர்களின் வாழ்வியலை நாடகமாக அரங்கேற்ற வேண்டும் என முடிவு செய்து பல நாடகங்களை இதுவரை நடத்தியுள்ளோம்.

இதன் தொடர்ச்சியாகவே கடந்த மார்ச் 31ம் தேதி நாடகம் ஒன்றை திட்டமிட்டு சென்னையில் நிகழ்த்தினோம். இந்த நாடகத்திற்கான கதை வசனம் நடிப்பு என எல்லாமே திருநங்கைகள் மற்றும் திருநம்பியரை வைத்துதான் எழுதினோம். இதற்காக 9 பேர் கொண்ட குழுவை உருவாக்கினேன். கலை என்பது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எங்களுடைய அடையாளத்தினால் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

இதனால் எங்களுடைய திறமையை வெளிக்காட்டவும் அதே நேரத்தில் எங்களுக்கு நேர்கிற கொடுமைகள், அவமானங்கள், நிராகரிப்புகளையும் காட்டுவதற்காகவே ‘சண்டக்காரங்க’ பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறோம். இந்த நாடகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிட்டு இருக்கிறோம்’’ என்றவர் நாடகத்தில் உள்ள கரு குறித்து விவரித்தார்.

‘‘மாற்று பாலினத்தவர்களுக்கு முதல் ஏற்றத்தாழ்வு என்பது பள்ளிகளில்தான் நடக்கிறது. வயது முதிர்ந்தவர்களுக்கே மாற்று பாலினம் குறித்த அறிவில்லாத போது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எப்படி இந்த விஷயத்தை அணுகுகிறார்கள் என்பது தான் நாடகத்தின் தொடக்க புள்ளி. அறிவியல் ஆசிரியர் நமது உடலில் குரோமோசோம் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் வரும் என ஒரு திருநர் மாணவனை அடையாளம் காட்டி சொல்கிறார். அந்த மாணவனை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். பொதுவாகவே இன்றும் பள்ளிகளில் திருநர் சமூக மாணவர்களை மற்ற மாணவர்கள் கிண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதை ஆசிரியர்கள் கண்டிக்காத பட்சத்தில் அது அடுத்து பாலியல் சீண்டல்களை நோக்கி நகர்கிறது. கடைசியில் அந்த நபர் படிப்பை விட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். எங்களின் சமூகத்தின் முதல் ஏற்றத்தாழ்வு என்று இதைத்தான் நாங்க குறிப்பிடுகிறோம். அடுத்து வீட்டிலிருக்கும் போது திருநர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை அடுத்தக்கட்ட கதையாக விவரித்திருக்கிறோம். வீட்டில் உள்ளவர்களோ எங்களை ஏற்க மறுக்கிறார்கள். இதனால் அடுத்த கட்டமாக வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பு இல்லாத இந்த உலகில் அவர்கள் சந்திக்கும் ெபரிய பிரச்னை உடல் அமைப்பு மாற்று சிகிச்சை முறைகள்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பால்யகால அனுபவங்கள் மற்றும் தங்களின் பாலினத்திற்கு கிடைக்காத அங்கீகாரம், அவமானம், வன்முறை மற்றும் பணியிடங்களில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் ஆகியவற்றை நாடகத்தில் காட்சிகளாக வெளிப்படுத்தி இருக்கிறோம். இவற்றையெல்லாம் பெருங்கோபங்கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடுவதாக காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

கலை சம்பந்தமான வேலைகள் ஒரு புறம் செய்தாலும் கல்வி சம்பந்தமாகவும் பல கிராமங்களில் நாங்கள் வேலை செய்து வருகிறோம். ஆனால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மேலும் ஏற்படுத்த கலை சார்ந்த வடிவங்கள் தேவைப்படுகிறது. ஒரு நாடகத்தை நாங்கள் அரங்கேற்றும் போது அதில் எங்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளிலும் விமர்சனங்களிலும் இருந்துதான் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறோம். இந்த மாதிரியான விழிப்புணர்வு நாடகங்களை பள்ளி மற்றும் கல்லுரிகளில் அரங்கேற்ற அரசின் அனுமதியினை கோரியிருக்கிறோம்.

இந்த நாடகங்கள் மூலம் எவ்வளவு தான் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், எங்களின் சமூகம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. எங்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நாங்கள் சந்திக்கும் விமர்சனங்களும் கொடுமைகளும் அவமானங்களும் சொல்லி மாளாதவை. அதை மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்று தான் இந்த மாதிரியான நாடகங்களை நடத்துகிறோம். இதன் மூலம் எங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்லக்கூடிய சுதந்திரம் கிடைக்கிறது.

மேலும் எங்க உடலில் ஏற்பட்ட காயங்களையும் பார்வையாளர்களுக்கு வெளிக்காட்ட முடிகிறது. இந்தியாவை பொறுத்தவரை திருநர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தாலும், எங்களுக்கான உரிமைகளை அளிப்பதில்லை. எங்களை கடவுளாகவும், ஐயோ பாவம் என கருணையாக பார்ப்பதும் தான் இன்றுவரை தொடர்கிறது. ஒரு சமூகம் முன்னேற அவர்களுக்கான உரிமைகள் சரியான முறையில் கிடைக்க வேண்டும்.

எங்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்க விடுத்து வருகிறோம். அது எங்களுக்காக ஒரு நல்ல பாதையாக அமைய உதவுகிறது. தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 153 பேர் திருநங்கைகள் மற்றும் திருநர் சமூக மக்கள் தேர்வு எழுதி உள்ளனர். தொடர்ந்து பல துறைகளில் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொண்டு முன்னேறி வருகின்றனர். ஆனால் வாய்ப்புகள் கிடைக்காமல் திரும்ப பழைய நிலைக்கே செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இதையெல்லாம் எங்களின் நாடகங்கள் மூலம் வெளிக்காட்டி வருகிறோம். எங்க நாடகத்திற்கு ‘சண்டக்காரங்க’ன்னு பெயர் வைக்க முக்கிய காரணமே எங்களுடைய பிரச்னைகளை சொல்லி புரிய வைக்கவே ஒரு பெரிய போராட்டமே தேவைப்படுகிறது. அந்த போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை குறிப்பது தான் இந்த பெயர். முதலில் ஆங்கிலத்தில் ‘ப்ரீடம் பைட்டர்ஸ்’ என்று தான் வைத்திருந்தோம். சுதந்திரம் என்பது தங்களுக்கான உரிமைகளை கொடு எனப் போராடுவது. நாங்கள் கேட்பதும் எங்களுக்கான உரிமைகளைதான். அதைக் கேட்டு போராடும் எல்லோருமே சுதந்திர போராட்ட வீரர்களே’’ என்கிறார் கிரேஸ் பானு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டப்பிங் பேச மஞ்சப் பையுடன் கிளம்பி வந்தேன்! டப்பிங் கலைஞர் கிருத்திகா!! (மகளிர் பக்கம்)
Next post வைட்டமின் குறைபாடுகள்… ஒரு பார்வை! (மருத்துவம்)