டப்பிங் பேச மஞ்சப் பையுடன் கிளம்பி வந்தேன்! டப்பிங் கலைஞர் கிருத்திகா!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 57 Second

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகரையோ, இசை அமைப்பாளரையோ அல்லது இயக்குனரிடம் எப்படி சினிமா துறைக்குள் வந்தீங்கன்னு கேள்வி கேட்கும் போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் மஞ்சப்பை அல்லது டிரங்க் பெட்டியுடன் ரயில் ஏறினேன் என்பதாகத்தான் இருக்கும். அதன் பிறகு சென்னையில் வாய்ப்பு தேடினோம்…. கிடைத்தது என்பார்கள். இவர்களைப் போலவே ஒரு மஞ்சள் பையை கையில் எடுத்துக் கொண்டு, கிராமத்தில் இருந்து வந்தவர் தான் கிருத்திகா. சென்னை நகரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பது கூட இந்த பெண்ணிற்கு ரயில் நிலையம் வந்த போது தெரியாது. திக்குத் தெரியாத இந்த மாநகரத்தில் தன் திறமையை மட்டுமே நம்பி வந்தவர்… இப்போது டப்பிங் துறையில் தனக்கான ஒரு பாதையினை அமைத்து அதில் வெற்றி படியினை கொஞ்சம் கொஞ்சமாக ஏறி வருகிறார்.

‘‘தென்காசி மாவட்டம் இரதமுடையார் குளம் என்ற குக்கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். பனிப் படர்ந்து இருக்கும் கிரீன்லாண்ட் பகுதியினை படம் போட்டு காட்டும் கூகுள் மேப்பினால், எங்களின் கிராமத்தை கண்டு பிடிக்க முடியாது. சினிமா தியேட்டர் கூட எங்க கிராமத்தில் கிடையாது. பக்கத்து ஊரில் தான் தியேட்டர் இருக்கு. அங்கு தான் போய் பார்க்கணும். நான் படிச்சது எல்லாம் எங்க கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில். திருநெல்வேலியில் உள்ள அரசு கல்லூரியில் தான் படிச்சேன். கல்லூரி டவுனில் படிச்சிருந்தாலும், நான் திருநெல்வேலியைவிட்டு வேறு எங்கும் சென்றதில்லை. விடுமுறை விட்டா நேரா என்னுடைய கிராமத்திற்கு சென்றுவிடுவேன்.

எங்களுடையது விவசாய குடும்பம் தான். அப்பா எங்க ஊரில் சின்னதாக ஒரு கடை நடத்தி வருகிறார். என் அம்மாவுக்கு பாட்டு, நடனத்தில் ஆர்வம் உண்டு. ஆனால் அவரது கலை ஆர்வம் வீட்டின் வாசலை கூட தாண்டவில்லை. நானோ தைரியமாக மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டேன். நான் இங்கு வந்தபோது எனக்கு ஒரு தனியார் சேனலில் வேலை கிடைத்தது. மாசம் ரூ.10000 சம்பளம். நானும் சென்னையில் ஒரு கவுரவமான சம்பளம்ன்னு நினைச்சேன். ஆனால் சில காலம் தான் என்னால் அந்த வேலையில் நீடிக்க முடிந்தது’’ என்றவர் டப்பிங் துறையினை தேர்வு செய்த காரணத்தைப் பற்றி கூறினார்.

‘‘நான் சேனலில் வேலைப் பார்த்த சமயத்தில் தான் எனக்குள் பின்னணி பேசும் திறமை இருப்பதை கண்டறிந்தேன். எங்க சேனலில் ஒரு சில விளம்பரப் படங்கள், சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கு பின்னணி பேசினேன். அப்போது தான் குரல் திறன் நன்றாக இருப்பதால், சினிமாவில் பேசலாம்ன்னு என்னுடன் இருப்பவர்கள் சொன்னார்கள். எனக்கும் செய்து தான் பார்க்கலாமேன்னு தோணுச்சு. ஆனால் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக வேண்டுமென்றால் அதற்கென்று அடையாள அட்டை வாங்க வேண்டும், அந்த அடையாள அட்டையினை அவ்வளவு எளிதில் வாங்க முடியாது. காரணம், அதன் விலையைக் கேட்டதும் நான் மலைத்து போய் நின்றுவிட்டேன்.

அந்த அட்டையின் விலை ரூ.1.50 லட்சம். அதே சமயம் அடையாள அட்டை இருந்தால்தான் என்னால் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்பினையே தேட முடியும். என்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் கூறினேன். அவரும் எனக்காக அதனை கடனாக பெற்றுக் கொடுத்தார். எங்களின் குடும்ப நிலைப் பற்றி எனக்கு தெரியும். கடையின் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தணும், கடனை அடைக்கணும். என்னுடைய சம்பளம் மூலம் நான் அவர்களுக்கு உதவி செய்தாலும், சென்னையின் வாழ்வாதாரம் என்று பார்க்கும் போது, கொஞ்சம் கஷ்டம் தான்’’ என்றவர் ஒரு கம்பெனி இல்லாமல் அனைத்து டப்பிங் நிறுவன படியினையும் ஏறி இறங்கியுள்ளார்.

‘‘எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என்னுடைய சொந்த முயற்சி தான். நான் வாய்ப்பு தேடி அலைந்ததற்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. ஒரு பிராஜக்ட் வரும், அதைக் கொண்டு இன்னொரு வேலை வரும். இதை மவுத்டூ மவுத் என்பார்கள். ஒருவர் சொல்லி மற்ெறாருவரால் கிடைக்கும் வாய்ப்பினை அப்படித்தான் அழைப்பார்கள். எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.

பொதுவாக சினிமாத் துறையில் இருப்பவர்கள் தங்களின் உடல் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். எப்போதும் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதேேபால் தான் டப்பிங் பேசுபவர்களும், தங்களின் குரல் வளத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்ந்த நீர் எதையும் எடுக்ககூடாது. திடீரென்று குரல் கட்டிக் கொண்டால், வரும் வாய்ப்பு தட்டி கழிந்துவிடும். எப்போது என்னை பேச அழைப்பார்கள் என்று தெரியாது.

அதனால் 365 நாட்களும் என்னுடைய குரலை தயாரான நிலையில் பராமரிக்க வேண்டும். பின்னணி பேசும் போது, பலருக்கு மிகவும் கஷ்டமானது அழுகை தான். ஆனால் எனக்கு அந்த உணர்வு சுலபமாக வந்திடும். அழுகை சீனுக்கு ரெடி டேக்ன்னு சொன்ன ஐந்து நிமிடத்தில் எனக்கு அழுகை வந்திடும். அந்த சீன் டப்பிங் முடியும் வரை நான் அழுது கொண்டே தான் பேசுவேன். அந்த அழுகைக்கு பின் என் வாழ்க்கையின் சூழ்நிலை காரணமான்னு எனக்கு தெரியல. ‘வெந்து தணிந்தது காடு’, ‘நாகினி’ சீரியல் என பல பிரபலங்களுக்கு குரல் கொடுத்திருக்கேன்.

சசிக்குமாரின் காரி படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு பேசியிருப்பேன். அது என்னால் மறக்கவே முடியாது. படத்தின் இடைவெளிக்கு முன்பு வரும் உருக்கமான காட்சி அது. தனது சகோதரனை போல் வளர்த்த மாட்டினை திருமண செலவிற்காக விற்றுவிடுவார். அந்தப் பணத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாமல் துடிக்கும் பெண்ணாகவும், தன் மாடு இல்லாமல் எப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று தவிக்கும் உள்ளத்தை உருக்கும் காட்சிக்கு குரல் கொடுத்தேன். இந்த ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு என் குடும்பத்தினர் மற்றும் உணவினர் என அனைவரும் பாராட்டினாங்க. அது என்னால் மறக்கவே முடியாது.

அதேேபால் ‘லவ் டுடே’ கதாநாயகி இவானா நடித்த ‘காம்ப்ளக்ஸ்’ படத்தில் அவருக்கு நான் டப்பிங் பேசி இருக்கேன். இன்னும் ரிலீசாகவில்லை. வானொலியில் இன்றும் மறக்க முடியாத குரல்கள் என்றால் கிஷோர்குமார், அப்துல் ஹமீது போன்றவர்களின் குரல், அவர்களின் குரல்களைக் கொண்டே அடையாளம் காண முடியும். அவ்வாறு தனித்துவமாக என்னுடைய குரலுக்கு அடையாளம் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் நல்ல நல்ல கதாபாத்திரங்களுக்கு பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’’ என்ற கிருத்திகா சிறந்த அறிமுக பின்னணி குரலுக்கான விருதினை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஊறுகாய் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post நாங்க சண்டக்காரங்க! (மகளிர் பக்கம்)