குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்! (மருத்துவம்)

Read Time:8 Minute, 20 Second

குடற்புழுப் பிரச்னை பெரும்பாலும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும். இவை குழந்தைகளின் வயிற்றில் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கண்களுக்கு தென்படாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது அவை குடற்புழுக்களாக உருவாகும். நகம் கடிப்பது, சுகாதாரம் இல்லாத உணவினை உட்கொள்வது, கைகளை கழுவாமல் உணவினை சாப்பிடுவது, இனிப்பு பண்டங்கள் மற்றும் சாக்லெட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் தோன்றும்.

குழந்தைகளின் வயிற்றில் குடற்புழுக்கள் இருந்தால், அவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும், அந்த சத்துக்கள் அனைத்தும் இந்த புழுக்களுக்கு சென்று விடும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படும். இதைப்ேபாக்க நாம் ஆரோக்கியத்தினை முற்றிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் வெனிட் ரோஸ். இவர் இதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் குறித்து விவரித்தார்.

*எந்த வயதில் எம்மாதிரியான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

குடற்புழு நீக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். குடற்புழு தொல்லையால் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் அவதிப்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை இருந்தால் சில அறிகுறிகள் தென்படும். குமட்டல் உணர்வு, வயிற்று வலி, ஆசனப் பகுதியில் அரிப்பு போன்ற பிரச்னை ஏற்படும். விவரிக்க முடியாத எடை இழப்பு, ரத்த சோகையும் குடற்புழு தொல்லையின் முக்கிய தாக்கமாகும். எனவே, மேலே குறிப்பிட்ட எவையேனும் உங்களுக்கு இருந்தால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

*யாரெல்லாம் பூச்சி நீக்கும் மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது?

பூச்சி நீக்கம் மருந்துகளை கர்ப்ப காலத்தில் மற்றும் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவிர்க்கப்பட வேண்டும். நோயாளிக்கு ஏதேனும் கல்லீரல் கோளாறு, கல்லீரல் தொடர்பான நோய்கள், எலும்பு மஜ்ஜை (Bone marrow) செயலிழப்பு, பான்சிடோபீனியா (pancytopenia) அல்லது ஏதேனும் நோய்த் தாக்கம் இருந்தால் மருந்துகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்ற பிறகு தான் குடற்புழுவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டும். ஆனால் முக்கியமாக இம்மருந்து கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் இந்த மருந்து எடுத்துக் கொள்வதால், அலர்ஜி ஏற்படும் என்றால் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*மருந்து எடுத்துக்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் வாழ்வியல் நடவடிக்கைகள் என்ன?

குடற்புழுவிற்கான மருந்தை உட்கொள்ளும் போது உணவு உட்கொள்வதற்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் குடற்புழு தொல்லையைத் தடுக்க, நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் சுகாதாரம். எனவே நீங்கள் சாப்பிடுவதற்கு முன் உங்கள் கைகளை கழுவ வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி உண்ண வேண்டும்.

உங்கள் கைகள் அழுக்காக இருக்கும் நிலையில் சோப்பை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். குடற்புழுவிற்கான மாத்திரையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதன் மூலம் மீண்டும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் மருந்தை உட்கொள்வது நல்லது.

*வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்க மருந்து எடுத்துக்கொள்ளும் முறை?

குடற்புழு நீக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்து ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. ஆனால் வயதிற்கு ஏற்ப அதனை உட்கொள்ளும் அளவு மாறுபடும். அதாவது ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 200 மில்லிகிராம் இரவில் கொடுக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு 400 மில்லி கிராம் கொடுக்க வேண்டும். மேலும் இம்மருந்து சிரப் வடிவத்தில் இருப்பாதால் குழந்தைகளுக்கு கொடுப்பது எளிது. பெரியவர்கள் அதனை மாத்திரையாகவும் உட்கொள்ளலாம்.

*இயற்கை முறையில் வெளியேற்றம் செய்ய முடியுமா?

கொட்டைப் பாக்கில் உள்ள துவர்ப்பு தன்மை குடற்புழுக்களை வெளியேற்ற உதவும். கொட்டைப்பாக்கை பொடித்து தூளாக்கி காற்றுப்புகாத ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இதில் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் ேபால் இருக்கும் இதனை குழந்தைகளின் நாக்கில் வெறும் வயிற்றில் காலையில் தடவி விட வேண்டும். கொஞ்சம் பெரிய குழந்தைகள் என்றால் தண்ணீருக்கு பதில் பாலில் கலந்து குடிக்க ெகாடுக்கலாம்.

மூன்று முதல் ஐந்து நாட்கள் ெதாடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழு முற்றிலும் நீங்கிடும். பொடித்த கருஞ்சீரகத் தூளினை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தாலும் குடற்புழு நீங்கும். குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கேரட்டினை பொரியல் செய்து சாப்பிட தரலாம். பூசணி விதைகளில் உள்ள அமினோ அமிலம் குடற்புழு நீங்க உதவும். பூசணி விதைகளை வெயிலில் உலர்த்தி மாலையில் ஸ்னாக்ஸ் நேரத்தில் சிறிதளவு சாப்பிடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோள்பட்டை வலியினை குறைக்கும் கார் டியூப் டிராவல் பேக்! (மருத்துவம்)
Next post கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை..!! (அவ்வப்போது கிளாமர்)