தோள்பட்டை வலியினை குறைக்கும் கார் டியூப் டிராவல் பேக்! (மருத்துவம்)

Read Time:10 Minute, 45 Second

சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று நாம் பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அந்த புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். நமக்கென்ன என்று இருக்காமல், நம்மால் முடிந்த சின்னச் சின்ன மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சித்தாலே போதும். அது நம்முடைய வேலை என்று நினைத்தால், நாம் வாழும் இடமே குப்பைக் காடாக மாறிவிடும். இதை புரிந்து கொண்ட பெங்களூரைச் சேர்ந்த சுஹாசன்‌, ஹரிகா தம்பதியினர் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் அதனை முற்றிலும் பாதிக்காத பொருட்களை தங்களின் ‘சேவ் குளோப்’ என்ற நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்கள். மரஸ்பூன், கேன்வாஸ், வாட்டர் பாட்டில், உமி தலையணை என இவர்கள் பல இயற்கை சார்ந்த பொருட்களை தயாரிக்கிறார்கள். அதன் அடிப்படையில் இவர்களின் லேட்டஸ்ட் வரவு கார் டியூப் கைப்பிடி டிராவலர் பேக் மற்றும் பேக் பேக்குகள் (back bag).

‘‘நான் எம்.பி.ஏ பட்டதாரி’’ என்று பேசத் துவங்கினார் ஹரிகா. ‘‘என் கணவர் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தார். நாங்க சமூகம் சார்ந்து பல விஷயங்களை எங்களுக்குள் கலந்துரையாடுவோம். அப்படித்தான் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எங்க இருவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. என்னதான் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அதற்கு தடை விதித்தாலும், இன்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் தான் தண்ணீர் விற்பனை செய்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டில் இருந்த படிதான் இருக்கிறது.

இதனால் நம்முடைய நீர்நிலைப் பகுதிகள், அங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்த புரிதல் ஆரம்பத்தில் எங்களுக்கும் இல்லை என்றுதான் சொல்லணும். நாங்களும் அலட்சியமாகத்தான் இதனை பயன்படுத்தி வந்தோம். ஆனால் இந்தப் பிரச்னை ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய பூதாகரமாக உருமாற ஆரம்பித்தது. ‘கோ கிரீன்’, ‘குளோபல் வார்மிங்’ என்று ேகாஷங்கள் எழு ஆரம்பித்தன. அப்போதுதான் எங்களுக்கு இதில் அடங்கி இருக்கும் உண்மையான விபரீதம் என்ன என்று தெரிய வந்தது. அது குறித்த தேடலில் நானும் என் கணவரும் ஈடுபட ஆரம்பிச்சோம்.

பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ எவ்வளவு நாள்‌ மண்ணில்‌ புதைந்து இருந்தாலும்‌ மக்கிப் போகாது. சுற்றுப்புறச்சூழலுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் மட்டுமே பிரச்னை இல்லை. இதனால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு நோய்களின் பாதிப்பு ஏற்படுகிறது. வெப்பம் அதிகரிக்கும் போது பிளாஸ்டிக் உருகும் நிலை ஏற்படும். அதுவும் நமக்கு ஒருவித பாதிப்பினை ஏற்படுத்தும். இதை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும், என்னால் முடிந்த வரை அதனை பயன்படுத்தாமலும், மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் முடியும். அதற்கு பிளாஸ்டிக்குக்கான மாற்று அவசியம் என்று நினைத்தேன்’’ என்றவர் பல வித ஆராய்ச்சிகளுக்கு பிறகு 2011ம் ஆண்டு தங்களின் நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.

‘‘எங்களின் ஒவ்வொரு பொருட்களும் ஈகோ ஃப்ரண்ட்லி முறையில் தான் தயாரிக்கப்படுகிறது. அதுதான் எங்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அன்றாடம் பயன்படும் ஸ்கூல் பேக் மற்றும் பேக் பேக் (back bag). இதன் மூலம் குழந்தைகளுக்கும் இயற்கைப் பொருட்களின் பயன்பாட்டினைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம். ஈகோ ஃப்ரண்ட்லி முறையில் ஸ்கூல் பேக், டிராவலர் பேக், லஞ்ச் பேக் என பலவிதமான பேக்குகளை தயாரிக்கிறோம். இந்த பேக்கின் முக்கிய சிறப்பம்சம் இதனை தோளில் சுமக்கும் போது, பேக்கில் உள்ள பொருட்களின் எடையினை நாம் உணர முடியாது. காரணம், இதில் எலாஸ்டிசிட்டி முறையினை பயன்படுத்தி இருக்கிறோம். எலாஸ்டிக் தன்மை என்பது, நீட்டிக்கக் கூடியது.

அந்த தன்மை கொண்ட பேக்கில் பொருட்களை சுமக்கும் போது, எடைக்கு ஏற்ப அது அங்கும் இங்கும் அசையும். அவ்வாறு அசைவு ஏற்படும் போது, பேக்கில் உள்ள பொருட்களின் எடை குறைந்து இருப்பது போன்ற உணர்வினைக் கொடுக்கும். அதைத்தான் எங்களின் பேக்கில் பயன்படுத்தி இருக்கிறோம். அந்த எலாஸ்டிசிட்டி கொடுக்க கார் டியூப்களை பயன்படுத்தி இருக்கிறோம். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் டியூப்களை வாங்கி அதை ரீசைக்கில் செய்து எங்களின் பேக்குகளின் கைப்பிடிகளில் பொருத்தி இருக்கிறோம்.

கார் டியூப்கள் ரப்பர் தன்மைக் கொண்டதால், அதில் எலாஸ்டிக் தன்மை இருக்கும். எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது. இவை ஈகோ ஃப்ரண்ட்லியானவை. எளிதில் மக்கக்கூடியது. அதனால் பைகளில் கைப்பிடி மற்றும் தோள்பட்டையில் மாட்டக்கூடிய பகுதியில் இதனை பயன்படுத்துகிறோம். எங்களின் பேக் அனைத்தும் கேன்வாஸ் துணியால் தயாரிக்கப்படுகிறது. எங்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. மேலும் அதிக நாட்கள் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக நாம் பயன்படுத்தும் மற்ற டிராவல் பேக்குகளை நாம் அடிக்கடி வெளியூர் சென்றால் குறைந்த பட்சம் ஐந்து வருடம் பயன்படுத்தலாம். அதேபோல் நீடித்து உழைக்கும் அளவிற்கு இதனை தயாரித்து இருக்கிறோம். இதில் டிராவல் பேக் மட்டுமில்லாமல் லேப்டாப் பயன்படுத்தக்கூடிய பேக்குகளும் தயாரிக்கிறோம். அதில் லேப்டாப் பாதிக்காமல் இருக்க வெள்ளை நிறத்தில் ஃபோம்களை பயன்படுத்துவார்கள். அதற்கு பதில் தேங்காய் நாரினை பயன்படுத்தி இருக்கிறோம்’’ என்றவர் இவர்களின் மற்ற தயாரிப்பு குறித்தும் விவரித்தார்.

‘‘எங்களின் முதல் கண்டுபிடிப்பு சாப்பிடக்கூடிய ஸ்பூன். ஃபோர்க் மற்றும் கத்தி. கோதுமை அல்லது சோளமாவினை சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து தேவையான வடிவமைத்து, பேக் (bake) செய்யணும். நன்கு வெந்த பிறகு சாப்பிடும் தன்மைக்கு மாறிடும். இதை கடிச்சும் சாப்பிடலாம். குப்பையில் போட்டாலும், எளிதில் மக்கிடும். காரம்‌ மற்றும்‌ இனிப்பு என இரண்டு சுவைகளில் உள்ளது. மூங்கிலில்‌ காபி குடிக்கும்‌ மக்‌ மற்றும் கப்கள் எங்களின் அடுத்த கண்டுபிடிப்பு. இதனைத் தொடர்ந்து ‘தாகம்‌’ என்ற பெயரில் ஈகோ ஃப்ரண்ட்லி வாட்டர்‌ பாட்‌டில்‌. ரைஸ் ஹஸ்க் குஷன் மற்றும் ஹீட்டிங் பேட். நெல்லில்‌ இருந்து அரிசியை பிரிக்க தரையில் அடிப்பார்கள்.

அப்போது உமி வெளியாகும். இது மருத்துவ குணம்‌ கொண்டது. குறிப்பாக கழுத்து மற்றும்‌ முதுகு வலிக்கு மிகவும்‌ நல்லது. பாட்டி காலத்தில் கழுத்து வலி என்றால்‌ உமியை லேசாக சூடு செய்து ஒரு மெல்லிய துணியில்‌ கட்டி வலி உள்ள இடத்தில்‌ ஒத்தடம்‌ கொடுப்‌பாங்க. அதே கான்செப்ட்‌டில் நாங்க தலையணை மற்றும்‌ நெக்‌காலர்‌ அறிமுகம் செய்திருக்கிறோம். இது கழுத்து மற்றும் முதுகு வலியை குறைக்கும். இதில் ஹீட்டிங் பேட்டும் உள்ளது.

உமியை ஒத்தடம் கொடுக்கும் துணி போல் அமைத்திருக்கிறோம். இதனை மைக்ரோ அவனில் 3 நிமிஷம் வைத்து சூடு செய்து, கழுத்து அல்லது உடல் வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் சுற்றுப்புறச்சூழலை பாதிக்காத பொருட்களை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. மேலும் இதனை இந்தியா அளவில் எக்ஸ்போர்ட் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார் ஹரிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவில் முழு சுகம் கிடைக்காமல் போக இது தான் காரணம்னு தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்! (மருத்துவம்)