பெண்களுக்கான ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 8 Second

உடலைப் பராமரிப்பதில் பெண்கள் பிரத்யேக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் புற அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாய் இருந்தால்தான் புற அழகும் ஆரோக்கியமாய் அழகாய் இருக்கும். பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பின்பற்ற வேண்டிய ஃபிட்னெஸ் மந்திரங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

சிறுமிகள், டீன் ஏஜ் பெண்களுக்கு (10-20 வயது)

8-10 வயதில் பெண்கள் பூப்பெய்துதல் நடக்கும். உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னை காரணமாக, பெண்களுக்கு சீரற்ற மாதவிலக்கு, அதீத ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதை, இவர்கள் இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்கின்றனர். கட்டாயமாக மருத்துவரைச் சந்தித்து, ஏன் இந்தப் பிரச்னை, தவிர்க்கும் வழிகள் என்ன என்று ஆலோசனை பெற வேண்டும். ரத்தத்தின் ஆர்.ஹெச் வகை, முழு ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ருபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு இந்த வயதில் ஏற்படும் என்பதால், அதையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

இளம்பெண்களுக்கு (20-40 வயது)

திருமணம், குழந்தைப்பேறு, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, வேலை என்று எப்போதும் பிஸியாக இருக்கும் பருவம் இது. இந்தப் பருவத்தில் பெண்களுக்கு மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள், சரியானதைச் சாப்பிடாததால் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். சீரற்ற மாதவிலக்கு உள்ளிட்ட மாதவிலக்குத் தொடர்பான பிரச்னை இருக்கும். எனவே, இவர்கள் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதைவைத்தே, எவ்வளவு அதீத ரத்தப்போக்கு உள்ளது என்பதையும் கண்டறிய முடியும்.

மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, தைராய்டு, கொழுப்பு அளவு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திருமணத்துக்கு முன்பே கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள், ஆண்டுக்கு ஒரு முறை பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது, கர்ப்பப்பைவாய் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, தடுக்க உதவும்.

35 வயதைக் கடந்த பெண்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தங்கள் மார்பகங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கட்டி இருப்பது போன்று தெரிந்தால், உடனே மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சுயபரிசோதனை எப்படிச் செய்வது என்றும் மகளிர் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

பெரியவர்கள் (40- 60 வயது)

மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு சுழற்சி நிற்கும் காலகட்டம் இது. இதனால், மூட் ஸ்விங், மனத்தடுமாற்றம், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். இதை, மருத்துவர் துணையுடன் எதிர்கொள்ளும்போது, பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்கலாம். இந்தக் காலகட்டத்தில், முழு ரத்தப் பரிசோதனை, தைராய்டு, ரத்தத்தில் கொழுப்பு அளவு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, சிறுநீர் பரிசோதனை, இதய செயல்பாடு பரிசோதனை, பாப்ஸ்மியர் மற்றும் மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எலும்பு அடர்த்தி குறைவைக் கண்டறிந்து, தவிர்க்க வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

வொர்க் அவுட்ஸ், ஃபிட்னெஸ் போன்ற வார்த்தைகள் இன்று வீட்டுக்கு வீடு தண்ணிபட்ட பாடு. ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, இல்லத்தரசிகள் பலர் ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். ‘’ஜிம்முக்குப் போய், வொர்க் அவுட்ஸ் செய்தால்தான், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பதில்லை. வீட்டில் நாம் செய்யும் சின்னச் சின்ன வேலைகளிலேயே, உடலை ‘ஃபிட்’ ஆக வைத்துக் கொள்ளும் ஏராளமான பயிற்சிகள் இருக்கின்றன. தினசரி அவற்றை செய்து வந்தாலே போதும். உடல் ‘சிக்’கென இருக்கும். உடல் உறுப்புகளும் சோர்வின்றி, ‘ஆக்டிவ்’ ஆக வைத்திருக்கமுடியும். வேலைக்குப் போகும் பெண்களும் இவற்றைப் பயிற்சி செய்யலாம் என்றாலும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இவை ஐடியல்! ஆண்களுக்கும் கூடத்தான்.

கைவிரல்கள்

முன்பெல்லாம், அலுவலகத்தில் பேனா அல்லது பென்சிலைப் பிடித்து, விரல்களை வளைத்து, அசைத்து எழுதுவோம். அதுவே, தனிப்பயிற்சி. ஆனால் இன்றோ, பெரும்பாலும் கம்ப்யூட்டரில்தான் வேலை செய்கின்றனர். தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது, விரல்களில் ஒரு விறைப்புத்தன்மையும், உள்ளங்கையில் வலியும் ஏற்படும். இதற்கான சூப்பர் பயிற்சி, சப்பாத்தி மாவு பிசைவதுதான்! சப்பாத்தி, பூரிக்கான மாவை அழுத்தி பிசையலாம். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டலாம். கைவிரல்களுக்கும், உள்ளங்கைகளுக்கும் இது நல்ல பயிற்சி.

டென்னிஸ் பந்து சைஸில், மென்மையான பந்து ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு, இரண்டு கைகளிலும் மாறி மாறி, உள்ளங்கைகளில் வைத்து விரல்களால் பிடித்து அழுத்தி, உருட்டியும் பயிற்சி செய்யலாம். பத்திரிகை படிக்கும்போது, டி.வி. பார்க்கும் போது கூட இதைச் செய்யலாம்.இப்போது கணக்குப் போடுவதற்குக் கூட செல்போன்தான். யாருமே கைவிரல்களை நீட்டி எண்ணுவது கிடையாது. குழந்தைகளுக்கும் கற்பிப்பது இல்லை.

விரலை ஒவ்வொன்றாக நீட்டும் பயிற்சி நமக்கு அவசியம் தேவை. ஏனெனில், நம் உடலின் எல்லா நரம்புகளும் முடியும் இடம் நமது கை மற்றும் கால் விரல் நுனிகள்தான். சமையலறை ஷெல்ஃபில் மேல்தட்டில் பொருள்களை வைத்து, கைகளை நீட்டி, எழும்பி எடுக்கலாம். கை, கால்களுக்கு நல்ல ‘ஸ்ட்ரெட்ச்’ கிடைக்கும்.

வயிறு

இலை போல வயிறு வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்கும் உண்டு. ஆனால், அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். முதல் படியாக, நிற்கும்போதும், உட்காரும்போதும் எப்போதுமே வயிற்றைக் கொஞ்சம் உள்ளே இழுத்தபடி இருக்கப் பழகவேண்டும். இதைத் தினமுமே ஒரு பயிற்சியாகச் செய்துவந்தால் பழகிவிடும். இதைத்தான் ஜிம்மில், ‘க்ரன்ச்சஸ்’ என்று வயிற்றுக்கான பயிற்சியாக செய்கின்றனர். சமைக்கும்போதும், பஸ், ட்ரெயினுக்குக் காத்திருக்கும்போதும்கூட, இந்தப் பயிற்சியை செய்யலாம். சீக்கிரமே ‘இலை போல வயிறு’ சாத்தியம். முதுகுப் பகுதி வலிமை பெறும்; வயிற்றுத் தசைகள் இறுகும்.

பேப்பர் படிக்கும்போது, குழந்தை தவழ்வது போல இரு கைகளையும் தரையில் ஊன்றி, முழங்கால்களை மடித்து நின்ற நிலையில் இருக்கலாம். அப்போது வயிறு கீழ்நோக்கித் தொங்கும். அதை உள்ளிழுத்தபடி இருப்பதுதான் பயிற்சி. இதனால் வயிற்றுத் தசைகள் இறுகி, வயிறு உள்ளடங்கி, அழகாகும். எப்போதுமே உள்ளே இருக்கும் தசைகளை வலிமையாக்காமல், வெளி அழகுக்காகப் பயிற்சி செய்வது பயனற்றது. கர்ப்பிணிகள், தவழும் நிலைப் பயிற்சியைச் செய்யக் கூடாது. முழங்கால் வலி இருப்பவர்கள், வெறும் தரையில் முட்டிப் போடாமல், ஏதாவது மென்மையான விரிப்பில் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எளிது எளிது வாசக்டமி எளிது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்… மூடநம்பிக்கைகளும் உண்மைகளும்! (மருத்துவம்)