குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்… மூடநம்பிக்கைகளும் உண்மைகளும்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 14 Second

தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் இன்றியமையாத விஷயம். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் அல்லது உடல்நிலையை மோசமாக்கக்கூடிய நோய்களிலிருந்து தடுப்பூசி மூலம் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். இருப்பினும், தடுப்பூசிகளைச் சுற்றி பல மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான கருத்துக்கள் வலம்வருகின்றன, இது பெற்றோர்களிடையே தடுப்பூசி போடுவது சார்ந்த தயக்கத்திற்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் தடுப்பூசிகள் பற்றிய உண்மைகளை பெற்றோர்கள் அறிந்திருப்பதும், கீழே பட்டியலிடப்பட்டுள்ள மூடநம்பிக்கைகளைக் களைவதும் முக்கியம்.

தடுப்பூசிகள் பற்றிய மூடநம்பிக்கைகள்

தடுப்பூசிகள் ஆட்டிசத்தை ஏற்படுத்துகின்றன: இது ஒரு பொதுவான மூடநம்பிக்கை. ஆனால், இது பல ஆய்வுகள் மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் ஆட்டிசத்தை ஏற்படுத்துகின்றன என்ற கருத்துக்கு எந்த அறிவியல் ஆதரமும் இல்லை.தடுப்பூசிகளே தேவையில்லை: முன்கூட்டியே தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசிகள் முக்கியமானவை. தடுப்பூசிகள் இல்லாமல், குழந்தைகள் கடுமையான உடல்நல சிக்கல்களை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர்.

தடுப்பூசிகள் தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்: எல்லா மருந்துகளையும் போலவே, தடுப்பூசிகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம், ஆனால் அவை பெரும்பாலும் மிதமானவை, குறுகிய காலமே நீடிக்கக்கூடியவை. கடுமையான பக்கவிளைவுகள் மிக அரிதானவை.

தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைவிட இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி சிறந்தது: இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி சில நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கலாம், ஆனால், அது அதற்கான அதிக விலையையும் கோருகிறது. பல நோய்கள் கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த நோய்கள் குழந்தைகளைப் பாதிக்காமல் தடுக்க தடுப்பூசிகள் பாதுகாப்பான, மிகவும் பயனுள்ள வழி.

தடுப்பூசிகள் பற்றிய உண்மைகள்

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை: தடுப்பூசிகளால் கிடைக்கும் நன்மைகள் தீமைகளைவிட அதிகமாக உள்ளன. தடுப்பூசிகள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், பாதுகாப்பிற்காக தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்பு சோதனை செயல்முறை என்பது பல நிலைகளில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் கடுமையான மதிப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகும், பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பூசிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிகளைப் பெறும் பெரும்பான்மையான நபர்கள், உட்செலுத்தப்பட்ட இடத்தில் வலி அல்லது லேசான காய்ச்சல் போன்ற சிறிய பக்கவிளைவுகளை மட்டுமே அனுபவிக்கின்றனர், அவை சாதாரணமானவை, தற்காலிகமானவை.

தடுப்பூசிகள் பயனுள்ளவை: தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதில் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் போன்ற நோய்க்கிருமிகளைக் கண்டறிந்து எதிர்த்துப் போராட உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் வேலையை தடுப்பூசிகள் செய்கின்றன. இது நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் ஏற்பட்டால் பாதிப்பின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. பெரியம்மை, போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களை ஒழிப்பதில் தடுப்பூசி பெரும்பங்கு வகித்துள்ளது.

தடுப்பூசிகள் சமூகத்தைப் பாதுகாக்கின்றன தடுப்பூசிகள் நோய் பரவுவதைக் குறைப்பதன் மூலம் அவற்றைப் பெறும் தனிநபரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாக்கின்றன. மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் ஒரு நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, ​​​​அது சமூக நோய்எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது, இது நபருக்கு நபர் நோய் பரவுவதை தடை செய்கிறது. தடுப்பூசிகளைப் பெற முடியாத பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களையும், தடுப்பூசி போடப்படாத சிறு குழந்தைகளையும் பாதுகாக்க இது உதவுகிறது.

தடுப்பூசிகள் அவசியம்: குறிப்பிட்ட காலத்தில் பொதுவான மற்றும் ஆபத்தான நோய்கள் மீண்டும் தோன்றுவதைத் தடுக்க தடுப்பூசிகள் அவசியம்.மருத்துவ நிபுணர்களால் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன: அறிவியல் சான்றுகளை வல்லுநர்கள் மதிப்பாய்வு செய்து, ஒவ்வொரு தடுப்பூசியின் அபாயங்கள் மற்றும் நன்மைகளின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்குகின்றனர். நோயாளிகளுக்கு தடுப்பூசிகளை பரிந்துரைப்பதிலும், தடுப்பூசி பற்றி அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிவர்த்தி செய்வதிலும் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களுக்கான ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!! (மருத்துவம்)
Next post பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மறுபடி!! (மகளிர் பக்கம்)