தைராய்டு…குணமாக்கும் சித்தா!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 48 Second

உலக அளவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக 5% மக்கள் தைராய்டு சுரப்பி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களைவிட பெண்கள் தைராய்டு பாதிப்பிற்கு அதிகம் ஆளாகின்றனர். காரணம், பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போதும், கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் போது அதிகரிக்கின்ற ஈஸ்ரோஜன் காரணத்தினாலும் இந்நோய் பெண்களை அதிகம் பாதிக்கின்றது. இனி, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியின் செயல்பாடுகள், சுரப்பியின் குறை மற்றும் மிகை செயல்பாட்டால் வரும் நோய்கள் மற்றும் உணவுப் பழக்க
வழக்கங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தைராய்டு சுரப்பி, கழுத்தின் முன்புறப் பகுதியில் குரல்வளைக்குக் கீழே ஆதாம் ஆப்பிளின் பின்புறம் பட்டாம்பூச்சியின் வடிவத்தில் அமைந்துள்ளது. இது வளர்ந்தவர்களில் 10 முதல் 20 கிராம் எடையுள்ளதாக இருக்கும். பட்டாம்பூச்சி வடிவ ஹார்மோன் சீராக செயல்படாவிட்டால் அது நம்மை பாடாய் படுத்தும். இது

இரண்டு வகையான ஹார்மோன்களை சுரக்கின்றது.

*ட்ரை அயோடோ தைரோனைன் (T3)v
*தைராக்ஸின் (T4)
*மூன்றாவதாக ‘‘கால்சிடோனின்” என்றொரு ஹார்மோனை இச்சுரப்பியின் ”சி” செல்கள் சுரக்கின்றது. இது கால்சியம் எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது.
ட்ரை அயோடோ தைரோனைனில் (T3) மூன்று அயோடின் அணுக்கள் டைரோசினுடன் இணைந்துள்ளது. தைராக்சினில் (T4) நான்கு அயோடின் அணுக்கள் டைரோசினுடன் இணைந்திருக்கும். இவ்விரண்டு ஹார்மோன்களில் ‘‘தைராக்சின்” (T4) தான் தைராய்டு சுரப்பி மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சுரப்பி செயல்
படுவதற்கு இரத்தத்தில் உள்ள அயோடின் சத்து இன்றியமையாதது.

ஒவ்வொருவரின் உடலுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 150 மைக்ரோகிராம் அயோடின் தேவைப்படுகிறது. தைராய்டு செல்களில் ‘‘தைரோகுளோபுலின்” என்ற புரதம் உள்ளது. இதில் ‘‘டைரோசின்” என்ற அமினோ அமிலம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள அயோடின், அயோடைடு வடிவில் தைராய்டு சுரப்பிக்கு வந்து தைராய்டு பெராக்ஸிடேஸ்-TPO மூலம் அயோடினாக மாற்றமடைகிறது. தைரோகுளோபுலினிலுள்ள டைரோசினும், அயோடினும் இணைந்து T3, T4 ஹார்மோன்களைச் சுரக்கின்றன.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள்

*குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.ஞாபகசக்தி,புத்திக்கூர்மையை அதிகரிக்கும்.

*உடலின் (கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு) வளர்சிதை அளவை ஒழுங்குப்படுத்துகிறது.

*சீரான இதயத்துடிப்பு, தசைகளின் செயல்பாடு, சீரண உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிக்கிறது.

*உடல் வெப்பத்தைச் சீராக பராமரிக்கிறது.

*உண்ணும் உணவுகளின் கலோரிகளை செலவழிப்பதில் இந்த சுரப்பி முக்கியப் பங்காற்றுகின்றது. கலோரி சரியாக செலவழித்தால் சீரான உடல் வளர்ச்சியையும், அதிகமாக செலவழித்தால் மெல்லிய உடல் தோற்றத்தையும், குறைவாக செலவழித்தால் உடல் பருமனையும் உருவாக்கும்.உடலின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கும்(BMR).

*கொலஸ்ட்ரால் அளவு இரத்தத்தில் சரியாக இருக்க உதவுகிறது.

*வைட்டமின் பி12, விட்டமின் D சரியான அளவில் இருக்க உதவுகிறது.

*பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மை (IQ) நன்றாக இருக்க உதவுகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக இயங்குவதற்கு உடலின் இயற்கைத் தூண்டுதல்கள்

தைராய்டு சுரப்பி T3, T4 அளவை சரியாக சுரப்பதற்கு, மூளையின் ஹைப்போதலாமஸ் TRH (Thyrotropin releasing hormone) ஹார்மோனை சுரக்கிறது.

இந்த TRH பிட்யூட்டரி சுரப்பியின் TSH (Thyroid stimulating hormone) ஹார்மோன் சுரப்பதைத் தூண்டுகிறது.

இந்த TSH ஹார்மோன் தான் தைராய்டு சுரப்பியைத் தூண்டி T3, T4 ஹார்மோனை ஒழுங்கான அளவில் சுரக்கச்செய்கிறது.

இந்த TRH, TSH ஹார்மோன்கள் Feedback mechanism மூலமாக T3, T4 இரத்தத்தில் குறையும்போது, அவற்றின் சுரப்பை அதிகரிக்கும்.

இதேபோல் T3, T4 ஹார்மோன்கள் இரத்தத்தில் அதிகமாகும்போது, அவற்றின் சுரப்பை குறைக்கவும் உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள T3, T4 ஹார்மோன்கள் பெரும்பாலும் குளோபுலின் என்ற புரதத்துடன் இணைந்துள்ளது. ( TBG – Thyroxine binding globulin) இந்த TBG உடன் சேர்ந்துள்ள தைராக்சினை உடல் செல்கள் கிரகிப்பதில்லை.

எதனுடனும் சேராமல் தனியாக சுற்றி வருகிற (Free T3, T4) தைராக்சினைத் தான் உடல் ஏற்றுக்கொள்கிறது.இவை தான் உடலில் உள்ள செல்களுக்குள் சென்று ஆற்றலைக் கொடுக்கின்றது. தைராக்சினுடன் குளோபுலின் பிணைப்பு அதிகமாகும் போது T3, T4 குறைந்த ஹைபோதைராய்டு நோயும், தைராக்சினுடன் கிளோபுலின் பிணைப்பு குறையும்போது, T3, T4 அதிகரித்த ஹைப்பர்தைராய்டு நோயும் உருவாகிறது. இந்த TBG அதிகமாக இருப்பதற்கும், குறைவாக இருப்பதற்கும், ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற ஹார்மோன்களும் மற்றும் நாட்பட்ட கல்லீரல் பிரச்சனையும் முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே, TBG அளவு சரியாக இருக்க வேண்டும்.

தைராய்டு சுரப்பியின் ஒழுங்கற்ற செயல்பாட்டால் உடலில் உண்டாகும் நோய்கள்:

குறை தைராய்டு (Hypothyroidism)

*தைராய்டு சுரப்பி, தைராக்ஸின் ஹார்மோனை தேவையான அளவு சுரக்காததைத் தான் நாம் குறைதைராய்டு நோய் என்கின்றோம். இதை குறிகுணங்கள் வாயிலாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

சப்க்ளினிக்கல் ஹைப்போதைராய்டிசம் (Subclinical Hypothyroidism)

*இது ஆரம்ப நிலை குறைதைராய்டு நோய். இந்நிலையில் உள்ளவர்களுக்கு எந்த நோய்க் குறிகுணமும் இருக்காது.

*ஆனால், இரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால் பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் TSH மட்டும் சிறிதளவு அதிகரித்துக் காணப்படும். தைராய்டு சுரப்பியில் சுரக்கும் T3, T4 இவை சரியான அளவிலே காணப்படும். அதனால்தான் குறிகுணங்கள் தெரிவதில்லை.

கிளினிக்கல் தைராய்டிசம் (Clinical Hypothyroidism)

*இவ்வகை குறைதைராய்டு நோயில் தைராய்டு சுரப்பியின் T3, T4 ஹார்மோன்கள் குறைவாகவும், பிட்யூட்டரி சுரப்பியின் TSH ஹார்மோன் அதிகமாகவும் காணப்படும். இந்நோயில் குறைதைராய்டு நோய்க்குரிய குறிகுணங்கள் காணப்படும்.

ஹாசிமோட்டோஸ் குறைதைராய்டு நோய்

*இவ்வகை குறைதைராய்டு நோய் ஜப்பானிய மருத்துவர் Hashimoto என்பவரால் 1912ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஆட்டோ இம்யூன் வகை நோய்.

*ஆட்டோ இம்யூன் நோய்களில், ”நம்முடைய நோய் தடுப்பாற்றல் செல்களே நம் உடலுக்கு எதிராக செயல்படுகின்றது. அதாவது தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு உதவியாக உள்ள தைரோபெராக்ஸிடேஸ் மற்றும் தைரோகுளோபுளின் இவை அதிக அளவில் சுரந்து தைராய்டு சுரப்பியை சரிவர செயல்படவிடாமல் தடுக்கிறது.

இதனைத் தொடர்ந்து தைராய்டு சுரப்பியும் செயலற்றுவிடுகிறது. செயல்படாத தைராய்டு சுரப்பியை செயல்பட வைக்க பிட்யூட்டரி சுரப்பி ஏராளமான TSH – யை உற்பத்தி செய்கிறது. இந்நிலையை ஹாசிமோட்டோஸ் குறைதைராய்டு நோய் என்பர்.

கிரிட்டினிசம் (Cretenism)

*இது பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பு இல்லாமல் வருகிறது.

*இக்குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இன்னும் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியில் குறைவு காணப்படும். இது பெரும்பாலும் பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது.

(Congenital Iodine Deficiency)மிக்ஸிடிமா (Myxedema)

*மிக்ஸிடிமா என்பது பெரியவர்களுக்கு காணப்படும்.

*இதில் தைராய்டு ஹார்மோன்கள் தீவிரமாக குறைந்து காணப்படும். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் மனச்சோர்வு, வலிப்பு குறிகுணங்களுடன் நீண்ட கோமா நிலைக்கு சென்றுவிடுவார்.

*தைராய்டு சுரப்பியின் ஹார்மோன் உற்பத்தியை நிறுத்துவது, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய், குறைதைராய்டு நோய்க்கு மருந்து எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் வரும்.

காய்டர் (Goitre)

*குறை தைராய்டு நோயில் அயோடின் சத்து குறைபாட்டால் குறிப்பிட்ட சில இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வரும் காய்டர் Endemic diffuse colloid goitre எனப்படும்.தைராய்டு சுரப்பி வீங்கி தொடுவதற்கு மென்மையாக காணப்படும்.

*சில மருந்துகளை (எ.கா-லித்தியம்)நாட்பட எடுப்பதன் மூலமாக தைராய்டு சுரப்பி வீங்கி காணப்படும். இதை Non-toxic sporadic Goitre.

குறைதைராய்டு நோய் குறிகுணங்கள்:

*இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து காணப்படுதல்

*உடல் களைப்பு, சோர்வு, பலவீனமாக உணர்தல்

*குளிர் தாங்க முடியாதிருத்தல்.

*பேசுவதற்கு சிரமம், மெல்லிய குரலுடன் பேசுதல்.

*உலர்ந்த வறண்ட சருமம்

*எப்போதும் தூங்கிக்கொண்டிருத்தல்

*மலச்சிக்கல், செரிமானக் குறைவு

*முகம் அல்லது கால் மேல்பாதம் வீங்கிக் காணப்படுதல்

*எலும்பு, தசைகளில் பலவீனம்

*மன அழுத்தம், சோர்வு

*ஞாபகமறதி அல்லது எதிலும் ஆர்வமில்லாமல் இருத்தல்

*முடி உதிர்தல், இளநரை

*ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது அதிகரித்த இரத்தப்போக்கு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காது… மூக்கு… தொண்டை… பிரச்னைகள்!! (மருத்துவம்)
Next post மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் உணவகம்!! (மகளிர் பக்கம்)