மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் உணவகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 54 Second

‘‘நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் சமூக நோக்கம் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் வணிக நோக்கத்தோட அணுகக் கூடாது’’ என சொல்கிறார் தேங்க்யூ ஃபுட்ஸ் கடையின் நிறுவனர் அப்துல் ரகீம். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிகளே நிர்வகிக்கும் உணவகம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்களின் ஆதரவினால் சென்னை, கோவை என்று இவருடைய கிளைகள் விரிவடைந்து வருகிறது. அந்தந்த ஊரில் உள்ள மாற்றுத்திறனாளிகளை வைத்தே இந்த கடைகளை நடத்தி வருகிறார்.

‘‘என்னோட இந்த கடைக்கு முன்னோடி யாருன்னா என்னோட அப்பாதான்’’ என பேசத் தொடங்கிய அப்துல் ரகீமின் சொந்த ஊர் மதுரை. இன்ஜினியரிங் முடிச்சிட்டு கொஞ்ச வருடங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தவர் இந்த உணவகத்தை துவங்க காரணம் குறித்து விவரித்தார். ‘‘என்னுடைய தந்தை எஸ்.எம்.ஏ.ஜின்னா தான் இந்த கடை தொடங்குறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம். அவர் தன்னுடைய 13 வயதில் பார்வையை இழந்தார்.

அந்த காலகட்டத்தில் ஒருவருக்கு பார்வை இல்லை என்றால் அவர்களால் தனிச்சு செயல்பட முடியாது. மற்றவரின் உதவியுடன்தான் செயல்பட வேண்டும். ஆனால் அப்பா அந்த நிலைக்கு சென்றுவிடக்கூடாதுன்னு தன்னம்பிக்கையோட படிக்க துவங்கினார். கல்லூரியில் அவர் கோல்டு மெடலிஸ்ட். அதன் பிறகு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கே இரண்டு வருஷ படிப்பை முடிச்சதும், அவர் படிச்ச பல்கலைக்கழகத்துலேயே வேலையும் கிடைத்தது. சில காலம் வேலை பார்த்தவர், பிறகு தன்னை போல பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்று இந்தியாவிற்கே திரும்பினார்.

இங்கு மதுரையில் இந்திய பார்வையற்றோர் சங்கம் ஒன்றை தொடங்கினார். இந்த சங்கத்தின் முக்கிய நோக்கமே மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுதான். முதலில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பார்வையற்றவர்கள் தங்கி படிக்கும்படி பள்ளிக்கூடம் ஒன்றையும் தொடங்கினார். பள்ளி ஆரம்பித்த போது 4 மாணவர்கள் தான் இருந்தாங்க. தமிழ்நாடு பாடத்திட்டத்தினை அப்படியே பார்வையற்றவர்கள் படிக்கக்கூடிய பிராய்லி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது.

சில நாட்களில் ஒருவர் மூலமாக மற்றொருவர் என மதுரை முழுதும் அப்பாவின் பள்ளிப் பற்றி பலருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு பார்வையற்ற மாணவர்கள் பலர் இங்கு தங்கி படிக்க துவங்கினர். படிப்பு மட்டுமே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கத்தில் படித்து விட்டு வேலை இல்லாதவர்களுக்கு கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சிகளும் கொடுக்க ஆரம்பித்தார். இங்கு படித்த பலர் ஆசிரியர், வங்கி, மற்றும் அரசு துறையில் வேலை பார்த்து வருகிறார்கள்’’ என்றவர் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து நல்ல வேலையில் இருப்பதாக தெரிவித்தார்.

‘‘இங்கு படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மட்டுமில்லாமல் உணவும் இலவசமாகவேதான் கொடுத்து வருகிறோம். பள்ளிப் படிப்பு மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் இங்குண்டு. அடுத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இங்கு டெலிகாலிங் முறையை அறிமுகப்படுத்தினோம். வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைபேசி நிறுவனங்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக பேசும் கஸ்டமர் கேர் சென்டர்களை இங்கு தொடங்கினோம். அந்த வேலைகளை எல்லாம் இங்கிருக்கும் மாற்றுத்திறனாளிகளே செய்து வந்தனர். இந்த டெலிகாலிங் துறையில் 150 பேர் வேலை செய்து வந்தார்கள்.

தொலைபேசி நிறுவனங்களின் போட்டி மனப்பான்மை, கொரோனா அலை என தொடர்ச்சியான பாதிப்புகளால் டெலிகாலிங் முறையை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. இந்த கால கட்டத்தில் தான் பலர் வேலையினை இழக்கும் நிலை ஏற்பட்டது. எந்த காலகட்டத்திலும் நிரந்தரமாக இருக்கும் வேலைகளை நோக்கி நகர வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். எனக்கும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் சமூக நோக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதால், வேலையினை ராஜினாமா செய்துவிட்டு உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்ேடன். அப்படித்தான் ‘தேங்க்யூ ஃபுட்ஸ்’ உருவானது.

‘‘இட்லி, தோசை போன்ற உணவகங்கள் இருந்தாலும், மக்களுக்கு பேக்கரி உணவுகள் மேல் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. அதனால் நாங்க ஸ்வீட், கேக், பிஸ்கெட், கார வகைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடையினை தொடங்கினோம். இதனை மாற்றுத்திறனாளிகள் மற்றும் வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்கள் இருவரும் இணைந்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதே சமயம் கொடுக்கும் உணவு தரமாக இருக்க வேண்டும் என்பதால், நாங்களே அனைத்தையும் தயாரிக்க முடிவு செய்தோம்.

சமூக கண்ணோட்டத்தோடு தொழில் செய்தாலும், அங்குள்ள பொருட்கள் தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டும் என்பதால் தமிழ்நாட்டிலேயே தரமான உணவு பொருள்களை தயாரிக்கும் மாஸ்டர்களை வேலைக்கு அமர்த்தினோம். அதே நேரத்தில் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதில் நாங்க உறுதியாக இருந்தோம்.

மாஸ்டர்களுக்கு உதவியாக சங்கத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் செயல்பட்டனர். அதுமட்டுமில்லாமல் உணவுகளை பேக்கிங் செய்வதும் அவங்கதான். தரமான ெபாருட்களை கொடுக்கும் போது அதன் ேபக்கிங்கும் அழகாக இருக்க வேண்டும் என்பதால், மிகவும் கவனத்தோடு பேக்கிங் செய்தோம். அடுத்து கடைக்கு பெயர் வைக்க வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியோடும், அன்போடும் நாம் சொல்லும் வார்த்தை “தேங்க் யூ”. அதனால் அந்த பெயரையே வைத்தோம். மதுரை, கோவை, சென்னை என மூன்று மாவட்டங்களில் எங்களுடைய கடைகள் இயங்கி வருகிறது. ஒவ்ெவாரு கிளையில் உள்ள கடையினை நிர்வகிப்பவர்கள் பார்வையற்ற மாற்றுத்திறானாளிகளே. அவர்கள் எளிதாக விற்பனை செய்வதற்கு தொழில்நுட்ப வசதியினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

கடையில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஒரு பார் கோட் இருக்கும். அதை இவர்கள் ஸ்கேன் செய்தால், பொருளின் பெயர், அளவு, விலை அனைத்தும் ஆடியோ வடிவில் கேட்கும்படி அமைத்திருக்கிறோம். மேலும் உணவு பொருட்கள் எவ்வளவு நாட்கள் கெடாமலும், அதனை எவ்வளவு காலம் வைத்து சாப்பிடலாம் என்றும் அந்த சாஃப்ட்வேர் சொல்லிடும்.

இதனால் எங்களுடைய ஊழியர்கள் எளிதாக பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ஆர்டரின் பெயரிலும் சப்ளை செய்கிறோம். ஸ்வீட்கள் மட்டுமில்லாமல் பிறந்தநாள் கேக்குகளும் தயாரிக்கிறோம். ஐ.டி நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நாங்க ஸ்டால்கள் அமைத்தும் விற்பனை செய்கிறோம். ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்’’ என்றார் அப்துல் ரகீம்.

தொகுப்பு : மா.வினோத்குமார்

சந்தோஷம்!

இங்கு இரண்டு வருடமாக வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி தனலட்சுமியிடம் அவர் செய்யும் வேலை குறித்து கேட்ட போது, ‘‘நான் மாற்றுத்திறனாளி என்பதால் எங்கேயுமே என்னை வேலைக்கு எடுத்துக்கல. நான் அதிகமா படிக்கவும் இல்லை. வாழ்க்கையை நகர்த்த என்ன செய்றதுன்னு புரியாமல் இருந்த போது தான், இந்த பார்வையற்றோர் சங்கம் பற்றி தெரிய வந்தது. இங்க வேலை கேட்டு தான் வந்தேன்.

அவங்க உடனே வாங்கன்னு சொல்லிட்டாங்க. இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை பேக்கிங் செய்வது என் வேலை. என்னை போல பலர் இங்கு வேலை செய்றாங்க. அதனால என்னால இயல்பா இருக்க முடியுது. எங்களுக்கு மாத சம்பளம் மட்டும் இல்லாம சமைக்க தேவையான உணவுப் பொருட்களும் சங்கம் மூலம் வழங்கப்படுவதால், என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு தொகையை சேமிக்க முடிகிறது. எல்லாவற்றையும் விட மாற்றுத்திறனாளிகளான நாங்க இணைந்து ஒரு கடையை நடத்துறோம்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றார் புன்னகை மாறாமல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தைராய்டு…குணமாக்கும் சித்தா!! (மருத்துவம்)
Next post சம்மரிலும் வீட்டை கூலா வச்சுக்கலாம் வாங்க! (மகளிர் பக்கம்)