26 வருடமாக ஆட்டோ ஓட்டுறேன்! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 55 Second

பெண்கள் அடுத்தவர்களை சார்ந்து வாழாமல் டூவீலரை ஓட்டினால் கூட அது முன்னேற்றம்தான் என்றவாறு நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ஆட்டோ ஓட்டுநர் பவானி. 1998ல் தொடங்கி கிட்டதட்ட 26 வருடமாக ஆட்டோவை ஓட்டி வருகிறேன் என்றவர், சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் தன்னுடைய ஆட்டோவை தயங்காமல் ஓட்டிச் செல்கிறார். சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் என அருகாமையில் உள்ள ஊர்களுக்கும் பயணிகளோடு தன் ஆட்டோவில் பவனி வருகிறார் பவானி. நீண்ட ஆண்டுகள் ஆட்டோ ஓட்டுநராக வலம் வரும் பவானியிடம் பேசியதில்…

‘‘நான் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தபோது எனக்கு வயது 24. திருமணமும் ஆகவில்லை. பெண் ஆட்டோ ஓட்டுவதை அதிசயமாகப் பார்த்த நேரம் அது. “பாரு பொண்ணு ஆட்டோ ஓட்டுரா…” “வீட்டுல அடுப்பு ஊதுறத விட்டுட்டு ஆட்டோ ஓட்ட வந்துருச்சு” என கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஆட்டோ ஓட்டும் பெண்கள் அதிகரித்துவிட்டனர். டூவீலர், கார், கால்டாக்ஸி எனவும் பெண்கள் தைரியமாக முன்வந்து ஓட்டுகின்றனர். வினோதமாகப் பெண்களை பார்த்ததும், கேலி கிண்டல் செய்ததும் இப்போது முற்றிலும் மாறியிருக்கு’’ என்றவரிடத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டநராக மாறிய அனுபவம் குறித்து கேட்டபோது…

‘‘என் அக்கா வீட்டுக்காரர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோவில் வரும் வருமானத்தை வீட்டில் சரியாகக் கொடுக்காமல் தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். வீட்டிற்கு வந்ததும் போதையில் அக்காவிடத்தில் பிரச்னையும் செய்வார். அக்காவுக்கும் மாமாவுக்கும் வீட்டில் தினமும் சண்டை நடக்கும். ஒரு நாள் கோபத்தில் அவரிடம், “ஏன் தினமும் குடிச்சுட்டு வந்து இப்படி பண்றீங்க” என ஆவேசமாகக் கேட்டேன். “நீ ஆட்டோவை ஓட்டிப் பாரு நான் ஏன் குடிக்கிறேன்னு உனக்குத் தெரியும்” என ஒரு வார்த்தையை சொன்னார். “நீங்க சொல்வதுமாதிரி நான் ஆட்டோவை ஓட்டினால் குடியை விட்டுருவீங்களா” எனக்கேட்டேன். ஒத்துக்கொண்டார். அதையே சவாலாக எடுத்து ஆட்டோவை கையில் எடுத்தேன்’’ என்கிற பவானி அதுவரை அண்ணாநகரில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் விற்பனை பிரிவில் சேர்ல்ஸ் கேர்ளாக வேலை செய்திருக்கிறார்.

‘‘ஆட்டோ ஓட்டத் தெரிந்த அக்கா ஒருவர் மூலமாக மூன்றே நாளில் ஆட்டோவை ஓட்டக் கற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை ஆட்டோவில் வைத்த என் கரங்களை நான் எடுக்கவேயில்லை’’ என்றவர், அந்த அளவுக்கு ஆட்டோ ஓட்டுவதில் எனக்கு அதீதமான ஈடுபாடு வர ஆரம்பித்தது என்கிறார். ‘‘நான் ஆட்டோ ஓட்டத் தொடங்கிய புதிதில் என் அம்மாகூட என்னுடன் பேசவில்லை’’ என்றவர், ‘‘ஆனால் என்னைப் பற்றிய செய்திகள் பேப்பர், டிவி என வர ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக இது தப்பான தொழில் இல்லை எனப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க.

ஆட்டோ ஓட்டுவதற்கான பேட்ஜ் பெற்று நான் சாலைகளில் பயணிகளை ஏற்றி, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தபோது, ஒரு பெண் ஆட்டோ ஓட்டுகிறார் என என்னை தேடி ஊடகங்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. எல்லா ஊடகங்களிலும் “ஆட்டோ ஓட்டும் பெண்” என என்னை பற்றிய செய்திகள் வர ஆரம்பித்தது’’ என்றவர் முன்னாள் முதல்வர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் கரங்களில் விருது பெற்றதையும், பல மேடைகளில் தான் கௌரவிக்கப்பட்டதையும் மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.

‘‘வீட்டு வேலை செய்யும் பெண்களில் பலரும் என்னைப் பார்த்தே ஆட்டோ ஓட்ட கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்களே ஆட்டோ ஓட்டுநர்களாக அதிகம் வலம் வருகின்றனர். ஒரு இடத்துக்கு வேலைக்குச் சென்றால் எப்போது 1ம் தேதி பிறக்கும், மாதச் சம்பளத்தை எப்போது தருவார்கள் என எதிர்பார்த்து காத்திருப்போம்.

இதற்காகத்தானே நேரம், காலம் பார்க்காமல் ஒரு இடத்திற்கு வேலைக்கு போக வேண்டிய நிலை. அதுவே சொந்தமாக ஆட்டோவை வைத்து ஓட்டினால், நாமே சம்பாதிக்கலாம். வசதியான நேரம் மட்டும் ஆட்டோவை எடுத்து ஓட்டலாம் என்கிற எண்ணம் பெண்கள் மனதில் வர ஆரம்பித்திருக்கிறது. அடுத்தவர் முன் கைகட்டி வேலை செய்ய வேண்டாம் என்கிற முடிவோடு பெண்கள் பலரும் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்கிறார் இவர்.

‘‘என்னை பார்த்து ஆட்டோ ஓட்ட வேண்டுமென நினைத்து யாராவது ஒரு பெண் என்னை அணுகினாலும் அதற்கான உதவிகளை உடனே செய்து கொடுக்கிறேன்’’ என்ற பவானி, ‘‘இதுவரை குறைந்தது 250 பெண்களையாவது ஆட்டோ ஓட்டுநராக மாற்றியிருப்பேன்’’ என்கிறார். ‘‘பெண்களின் முன்னேற்றத்திற்கென சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இயங்கி வருகிறது. அந்த அமைப்பில் இவர்களை இணைத்துவிடுவேன். சில பெண்களுக்கு நானே ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்து, லைசென்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆட்டோ வாங்குவதற்கான வங்கிக் கடனுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன்’’என்கிற பவானி, ‘‘போக்குவரத்து விதியை மீறியதற்காகவோ, விபத்தை ஏற்படுத்தியதற்காகவோ எந்த வழக்கும் தன் மீது இல்லை’’ என்கிறார் நம்பிக்கையை வெளிப்படுத்தி புன்னகைத்தவராக.

‘‘நான் ஆட்டோ ஓட்ட வந்த புதிதில், மொபைல், வாட்ஸ்ஆப் செயலி போன்றவை கிடையாது. பெண் ஆட்டோ ஓட்டுநர் சந்திப்பிற்காகவே, அண்ணா நகரில் பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றை நாங்களே பெண்களாக இணைந்து ஏற்படுத்தினோம். சென்னையில் இதுதான் பெண்களுக்கான முதல் ஆட்டோ ஸ்டாண்ட்’’ என புன்னகைத்தவர், ‘‘ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்களில் ஆட்டோ ஸ்டாண்டில் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடிக் கொண்டாடுவோம். ஸ்டாண்டில் எல்லாவற்றையும் எங்களுக்குள் பேசி தீர்வு காண்போம்.

இப்போது காலம் நிறையவே மாறிவிட்டது. “வீரப் பெண்கள்” என்கிற வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை மொபைலில் வைத்துள்ளோம். இதில் அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுகிறவர்கள் மட்டுமே 270 பெண்களுக்கு மேல் இருக்கிறோம். எங்கள் பிரச்னைகள், சவால்கள், சந்தோஷங்களை குரூப்பில் பகிர்ந்து கொள்வோம். சவாரியில் இருக்கும் யாருக்காவது பிரச்னை என்றால் குரூப்பில் தகவல் வரும். சில நேரம் அழைப்பும் வரும். நாங்கள் ஒன்றிணைந்து பாதுகாப்பு கொடுப்பதுடன், சக பெண் ஓட்டுநர்களின் பிரச்னைகளையும் சரி செய்வோம்’’ என்கிறார்.

ஓலா, ஊபர், ரேபிட்டோ போன்ற நிறுவனங்கள் வந்தபிறகு உங்கள் நிலை என்ன என்றதற்கு, ‘‘அந்த நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டுவதால் வருமானத்தில் எங்களுக்கு பெரிய மாற்றம் இல்லை. ஒரு சவாரியை ஏற்றினால், கமிஷன் இருபது சதவிகிதம் அவர்களுக்கு செல்கிறது. பெட்ரோல், கேஸ் செலவு போக குறைந்த வருமானமே எங்களுக்கு. ‘‘டூவீலரில் சவாரிகளை ஏற்றிச் செல்பவர்கள் பாதுகாப்புக்கான எந்த பேட்ஜும் கைகளில் வைத்திருப்பதில்லை. பணத்தை சேமிப்பதாக நினைத்து அவர்களோடு இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் உயிருக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. அதிலும் பெண்களுக்கு இது முற்றிலும் பாதுகாப்பற்ற பயணம்’’ என்ற விழிப்புணர்வையும் பயணிகளுக்கு இவர் முன் வைக்கிறார்.

‘‘நான் ஆட்டோ ஓட்ட வந்த புதிதில், பெண்கள் ஆட்டோ ஓட்டினால் ஏறுவதற்கு பலரும் தயங்குவாங்க. இன்று பெண்கள் ஆட்டோ ஓட்டுவதால் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இதனால் ஸ்கூல் சவாரி, ஆபீஸ் சவாரி போன்றவை எங்களுக்கு ரெகுலராகக் கிடைத்துவிடுகிறது. காலை 9 மணிக்கு ஆட்டோவை எடுத்தால், மாலை 6 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு தடவை ஆட்டோவை எடுத்தால் குறைந்தது ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறுவரை சம்பாதிக்காமல் ஆட்டோவை நான் வீட்டுக்கு திருப்புவதில்லை’’ என்றவர், ‘‘ நாங்கள் சிக்னலை மதித்து, நிதானமாக, பாதுகாப்பாக, பள்ளம் மேடு பார்த்து ஆட்டோ ஓட்டிச் செல்வதைப் பார்த்து, எங்கள் மீது நம்பிக்கை வந்து வண்டியில் ஏற ஆரம்பித்தார்கள். அதன் பிறகே பள்ளிக் குழந்தைகள், அலுவலகம் செல்லும் பெண்கள் வர ஆரம்பித்தார்கள். எல்.கே.ஜி.யில் தொடங்கி கல்லூரி சென்றதுவரை என் ஆட்டோவில் பயணித்த குழந்தைகளும் இருக்கிறார்கள்’’ எனப் புன்னகைத்தவரிடம், அதிகமாக நடைபெறும் சாலை விபத்துகள் குறித்து கேட்டபோது…

‘‘சாலை விதிகளை மதிக்காததால்தான் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. நிதானமாக வண்டி ஓட்டுவதுடன், வாகனம் ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை மதிக்க வேண்டும். மஞ்சள் விழும்போதே வண்டியை நிறுத்தி, பின்னால் வருபவர்களுக்கும் கையை உயர்த்தி சிக்னல் காட்ட வேண்டும். வளைவுகளில் நிதானமாகத் திரும்ப வேண்டும். இவற்றைச் சரியாகச் செய்தாலே விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்கிறார் போக்குவரத்து விதிகளை மதிப்பவராக.

‘‘சென்னையின் சாலைகளில் நாங்கள் துணிவோடு பயணிப்பதைப் பார்த்து இன்னும் நிறைய பெண்கள் டிரைவிங் கற்றுக் கொள்ள முன்வருகிறார்கள். தமிழக முதல்வர் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்குவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார். அது கிடைத்தால் எங்களைப் போன்ற பெண்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்’’ என்ற கோரிக்கையையும் பவானி முன் வைத்தார்.

பெண் ஓட்டுநர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டபோது, ‘‘பெண்கள் இன்று ஆண்களுக்கு சரிசமமாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்டோ, கால் டாக்ஸி, சொமோட்டோ, சுவிக்கி என அனைத்து வாகனங்களையும் இயக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் கழிப்பறை வசதிகள் சரியான முறையில் பெண்களுக்கு இல்லை. ஆங்காங்கே இருக்கும் கழிப்பறைகளும், சரியான பராமரிப்பு இன்றி, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஒருசில கழிப்பறைகளும் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டிய நிலையில் இருக்கிறது. இதனால் அவசரத்திற்கு பெட்ரோல் பங்க், உணவகங்களில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய நிலையே எங்களுக்கு உள்ளது. அரசாங்கம் எங்களைப் போன்ற பெண் ஓட்டுநர்களை மனதில் இறுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, சுகாதாரமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்’’ என்கிற கோரிக்கையோடு, மே தின வாழ்த்துகளை பகிர்ந்து விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏன் வேண்டும் உச்சகட்டம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post போட்டோ கிராபியில் கலக்கும் இரட்டை சகோதரிகள்!! (மகளிர் பக்கம்)