போட்டோ கிராபியில் கலக்கும் இரட்டை சகோதரிகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 42 Second

‘‘ஓசைகள் எல்லாம் துறந்து, காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்…..’’ என்ற விஜய் சேதுபதியின் பாடல் வரிகளுக்கு ஏற்றது போல், காண்கின்ற அனைத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்து, நினைவுப்பெட்டகமாக மாற்றும் ஒரு திறமை புகைப்பட கலைஞர்களுக்கே உள்ளது. ஆண்களுக்கு மட்டுமே என்று சொல்லும் சில துறைகளில் பெண்களும் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகின்றனர்.

அதில் இந்த புகைப்பட துறையும் ஒன்று. ஒரு பொருளை ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து வேறுபட்டு காணும் விந்தையினை இந்த துறைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத இரு பெண்கள் சாத்தியப்படுத்தி காட்டிஉள்ளனர். அந்த இரட்டை சகோதரிகள் கார்த்திகா மற்றும் ப்ரதீபா. ‘கார்த்திகா போட்டோகிராபி’ என்ற பெயரில் இவர்கள் புகைப்பட நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்கள்.

‘‘போட்டோகிராபி எங்களின் கனவு. ஆனா, அதுக்காக நாங்க தனியா படிச்சோமான்னு கேட்டா இல்லைனுதான் சொல்வோம். நாங்க படிச்சது எம்.காம். நாங்க கையில் கேமரா எடுத்த போது எங்க வீட்டில் அதற்கு ‘நோ’ என்றார்கள். ஆனால் எங்களின் ஆர்வத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க’’ என்ற சகோதரிகள், தங்களின் கனவினை எவ்வாறு நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை விவரித்தனர்.

‘‘உண்மையா சொல்லனும்னா, நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நல்ல போட்டோவை என்னுடைய வாட்ஸப் புரொபைல் படமா வைக்கணும்னு ஆசை’’ என்று பேச ஆரம்பித்தார் கார்த்திகா. அதனால் என் நண்பரின் கேமராவை வாங்கி புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சேன். நான் எடுப்பதைப் பார்த்து ப்ரதீபாவும் புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சா. அது தான் நாங்க இந்த துறைக்கு வருவதற்கான ஆரம்ப புள்ளி. அதன் பிறகு இதன் மேல் எங்க இருவருக்கும் ஆர்வம் அதிகமானது. இறுதியாண்டு படிக்கும் போதே ஒரு கேமரா வாங்கினோம்.

அப்போ எங்களுக்கு இது தான் எங்களின் எதிர்காலமாக மாறப் போகிறதுன்னு எண்ணம் எல்லாம் இல்லை. வீட்டிலும் கேமராவில் நாங்க எங்களையே புகைப்படம் எடுத்துக் கொண்டதால், பெரிய தடை எல்லாம் விதிக்கல. நாங்க கொஞ்சம் கொஞ்சமாக எங்களின் பள்ளி விழாக்கள் மற்றும் நண்பர்களின் நிச்சயதார்த்த விழா, திருமணம்னு எடுக்க ஆரம்பிச்சோம்’’ என்றவரை தொடர்ந்தார் ப்ரதீபா.

‘‘எம்.காம் படிச்ச பிறகு அப்பாவுடைய தொழிலை கவனிக்க ஆரம்பிச்சோம். அது சார்ந்த பயிற்சிக்காக நாங்க மும்பைக்கு சென்றோம். ஆனால் கார்த்திகாவிற்கு அதில் சுத்தமா விருப்பமில்லை. அவள் புகைப்படம் எடுப்பதை தொடர ஆரம்பிச்சா. எனக்கு ஒரு விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதில் முழுமையாக கவனம் செலுத்தணும்னு நினைப்பேன். பயிற்சி முடிச்சேன்.
அப்பாவுடன் சேர்ந்து தொழிலை கவனிக்க ஆரம்பிச்சேன்.

நான் சும்மா இருக்கும் ேநரத்தில் புகைப்படம் எடுக்கலாம்ன்னு கார்த்திகா என்னை கூட்டிக் கொண்டு போயிடுவா. எனக்கு புது இடங்களை பார்க்கவும், அதில் கிடைக்கும் அனுபவங்களை ரசிக்கவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் எனக்கும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகரிக்க, அப்பாவிடம் சொல்லிட்டு கார்த்திகாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சேன். கார்த்திகா புகைப்படம் எடுப்பா, நான் வீடியோ எடுப்பேன்.

இதுதான் எங்களின் துறைன்னு நாங்க முடிவு செய்து கேமரா ஒன்றை வாங்கினோம். முதலில் ஆர்வத்தில் வாங்கிட்டாலும், இந்த துறையில் எங்களால் சாதிக்க முடியுமான்னு நம்பிக்கை இல்லை. கேமரா வாங்கின காசினை திரும்ப சம்பாதிக்க முடியுமான்னு தெரியல. அதை எப்படி பயன்படுத்தணும்னு கூட தெரியாது. யுடியூப் பார்த்து தான் கற்றுக் கொண்டோம். ஆனால் அனைத்து வீடியோவிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எப்படி எடுக்கணும்னு ஒரே மாதிரிதான் விளக்கி இருந்தாங்க. இடத்துக்கு ஏற்ப லைட்டிங் அமைப்பது பற்றி சுத்தமா புரியல. நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கேட்ட போதும் எங்களுக்கு விளங்கல. பிறகு தான் முடிவு செய்தோம்.

இதை புத்தகத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள முடியாது. அதை பற்றி தெரிந்து கொள்ள செயல்முறை விளக்கமாகத்தான் கற்றுக் கொள்ள முடியும்னு புரிஞ்சது. நாம பண்ணுற ஒரு சின்ன மாற்றம் கூட இதுல பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை எந்த மாதிரி லைட் வைக்கணும், ஸ்பீட் எவ்வளவு இருக்கணும்னு ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டோம். அதன் பிறகு தான் கல்லூரி விழாக்கள் மற்றும் திருமணங்கள் என புகைப்படம் எடுக்க ஆரம்பித்தோம். மறைந்த காமெடி நடிகர் விவேக் அவர்களையும் இரண்டு முறை நாங்க புகைப்படம் எடுத்திருக்கிறோம். ஆரம்பத்தில இரண்டு வருஷம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கண்களில் படுவதை படம் பிடித்து எங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்து வந்தோம். அதைப் பார்த்து எங்களுக்கு ஆர்டர் வர ஆரம்பிச்சது’’ என்ற ப்ரதீபாவைத் தொடர்ந்தார் கார்த்திகா.

‘‘எங்களுக்கு அசிஸ்டன்ட் யாரும் கிடையாது. வரும் ஆர்டர்களை ஆல்பமாகவும், சி.டியாகவும் மாற்றி கொடுக்கும் வரை நாங்கள் இருவருமே தான் பார்த்துக் கொண்டோம். ஒவ்வொரு ஆர்டரை முடித்து கொடுக்கும் போது, ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தெடுப்பது போல இருக்கும். ஆரம்பத்தில் ஒரேயொரு Canon 700D கேமராவை வைத்து, நாங்க இருவர் மட்டுமே புகைப்படம் எடுத்து வந்தோம். தற்போது எங்களிடம் 20க்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

இப்போ சென்னை மற்றும் கோவை இரண்டு இடங்களிலும் அலுவலகம் துவங்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. கேண்டிட் போட்டோகிராபி, ட்ரடிஷனல் போட்டோகிராபி என ஒவ்வொரு பிரிவிற்கும் தனியாக ஆட்களை நியமித்திருக்கிறோம். ஒரு புகைப்படம் எடுக்கும் போது, அதற்கான சில தீம்களை நாங்களே உருவாக்கி இருக்கிறோம். உதாரணத்துக்கு, சிலருக்கு அவங்க குழந்தைகளைப் படம் பிடிக்கும் போது, டிஸ்னி, மனிஹெயிஸ்ட், மோனா போன்ற தீம்களில் புகைப்படம் எடுக்க விரும்புவாங்க. அதற்கான பின்னணி அமைப்புகளை அமைத்து புகைப்படம் எடுப்போம். தனிப்பட்ட புகைப்படம், திருமணத்திற்கு முன், பின் எடுக்கப்படும் புகைப்படத்திற்கு தனிப்பட்ட தீம்கள் உண்டு. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து எடுத்துக் கொடுப்போம். எங்களின் ஸ்பெஷாலிட்டியே Periodic Photography தான்’’ என்றார் கார்த்திகா.

‘‘ஒரு ஃபோர்ட்போலியோ எடுப்பது என்றால் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்களால் முடியும். ஆனால் அவ்வளவு செலவு செய்ய முடியாதவர்களுக்கும் தங்களை அழகாக புகைப்படம் எடுக்க வேண்டும்னு விரும்புவாங்க. அவர்களால் முடிந்த தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்து தருகிறோம்’’ என்றவர் இதில் உள்ள பிரச்னைகள் பற்றி பேச ஆரம்பித்தார். ‘‘இது எங்களுக்கு பிடிச்ச வேலை மற்றும் எங்களை தேடி வரும் போது மகிழ்ச்சியா இருக்கும். எங்களை அவங்க வீட்டுப் பெண்கள் போலதான் நடத்துவாங்க. அதை பார்க்கும் போதெல்லாம் மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கும்.

ஆனால் மாதவிடாய் நேரத்தில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் வேறு ஆட்களை மாற்றி அனுப்பவும் முடியாது. அதை விரும்பவும் மாட்டாங்க. இந்த துறையை பொறுத்தவரை குறிப்பிட்ட அலுவலக நேரம் கிடையாது. சில நேரங்களில் நாங்க வீட்டுக்கு வரவே விடியற்காலை மூன்று மணி நேரமாகும். நாங்க வரும் வரை அம்மா எங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பாங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. இப்போ பழகிடுச்சு.

பெண் புகைப்பட கலைஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இதில் பெரிய வாய்ப்பு இல்லைன்னு நினைத்துக் கொண்டு வாய்ப்பை தவற விட்டிருப்பாங்க. அதை மட்டும் செய்யாதீங்க. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை முழு மனசோட பண்ணுங்க. உங்களுக்கான ஒரு இடம் கண்டிப்பா கிடைக்கும். நாங்க இதுவரை 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சியினை புகைப்படமா எடுத்திருக்கோம். திருமணம் மட்டுமில்லாம் அனைத்து புகைப்படங்களையும் எடுப்போம். குறிப்பா கொரோனா ஊரடங்கின் போது தான் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. இந்த துறையில் மேலும் பல பிரபலங்களை புகைப்படம் எடுக்க வேண்டும், நிறைய நிகழ்ச்சிகளை செய்யணும் என்பதுதான் எங்களின் விருப்பம்’’ என மகிழ்ச்சியுடன் கூறினார் ப்ரதீபா.

‘‘நாங்க பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பித்தோம். இன்று பலருக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். நாங்க இருவரும் சேர்ந்து செய்வதால் ஒருத்தரின் மனநிலை அறிந்து சேர்ந்து செயல்படுறோம். எங்க இருவரில் ஒருவர் இல்லாமல் வேறு ஒருவர் இருந்து இருந்தால் எங்களால் இவ்வளவு தூரம் பயணித்து இருக்க முடியுமான்னு தெரியல. எல்லாவற்றையும் விட எங்க வீட்டில் எங்களுக்கு கொடுத்த சுதந்திரம், எங்க மேல உள்ள நம்பிக்கை.

இது எதுவும் இல்லாமல் நாங்க இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நாங்க புகைப்படக் கலைஞர்கள் தான். ஆனால் எங்களை நாங்க புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை’’ என்ற சகோதரிகள் சிறந்த பெண் புகைப்பட கலைஞர்கள் மற்றும் சிறந்த திருமண புகைப்பட கலைஞர்கள் என்று விருதினை பெற்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 26 வருடமாக ஆட்டோ ஓட்டுறேன்! (மகளிர் பக்கம்)
Next post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கடவுள் கண் திறந்தாரா? (மருத்துவம்)