கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்! (மருத்துவம்)

Read Time:10 Minute, 21 Second

கடும் கோடைகாலம் அதன் உச்சத்தை எட்டும் நாட்கள் நெருங்கி வரும்போது வெப்பநிலை இன்னும் அதிகமாக உயரும். சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், பல்வேறு கண் பாதிப்புகள் உருவாகும் சாத்தியம் அதிகமாக இருக்கும். இவைகளுக்கு உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் கடுமையான கண் பிரச்னையை இது விளைவிக்கும். எனவே, கோடை காலத்தில் உங்கள் கண்களை கூடுதல் அக்கறையுடன் பராமரிப்பது அத்தியாவசியம் என்கிறார் கண் நிபுணர் டாக்டர் சீனிவாச ராவ்.

‘‘உலர்ந்த கண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையினால் ஏற்படும் பிரச்னைகள் பொதுவாக கோடை காலத்தில் அதிகளவில் கண்களை பாதிக்கக்கூடிய நோய்கள். இவற்றில் இருந்து உங்களின் கண்களை பாதுகாப்பது மிக முக்கியம். இதன் மூலம் கண்களை ஆரோக்கியமாகவும், இப்பருவ காலத்தை மகிழ்ச்சியோடும் அனுபவிக்க முடியும். கண்களில் போதுமான அளவு கண்ணீர் சுரக்காதபோது உலர்ந்த கண்கள் பிரச்னை ஏற்படுகிறது.

இது நிகழாமல் தடுக்கவும் மற்றும் உங்கள் கண்களை ஈரப்பதத்துடன் வைக்கவும், செயற்கை கண்ணீரை அல்லது கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இளம் சிவப்பு கண் நோய் என்று கூறப்படும் கண் அழற்சி பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. இது கண் இமைக்கு உள்ளே இருக்கும் மெல்லிய, திசுவில் ஏற்படும் வீக்கம். கண்ணின் வெண்மையான பகுதியில் இந்த அழற்சி உருவாகும்.

இது வராமல் தடுப்பதற்கு, அழுக்கான கைகளால் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். கைகளை கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அடுத்து சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு, பல கண் நோய்களை விளைவிக்கக்கூடும். கண் புரை நோய், விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிர்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இவற்றுள் அடங்கும். இத்தகைய நோய்கள் வராமல் தடுப்பதற்கு கோடை காலத்தில் வெளியே செல்லும் போது புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும் குளிர் கண்ணாடிகளை அணியலாம்.

கோடை காலத்தில் கண் நோய்கள் மற்றும் பிரச்னைகளிலிருந்து கண்களை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

1. கண் சொட்டு மருந்துகளை பயன் படுத்தவும்: சிலருக்கு கண்ணீரை கண்கள் உற்பத்தி செய்யாது. அப்படியே உற்பத்தியானாலும், அவை வெயிலின் தாக்கத்தால் வேகமாக ஆவியாகிவிடும். உலர்ந்த கண் பிரச்னைக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தவும்.

2. கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்: கோடை வெப்பமும், தீவிர ஈரப்பதமும், கண் அழற்சி அல்லது இளஞ்சிவப்பு கண் பாதிப்பு உட்பட கண் தொற்றுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும். கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக இருந்தால், லென்ஸ்களை கண்ணில் பொருத்துவதற்கும், அகற்றுவதற்கும் முன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

3. குளிர் கண்ணாடிகளை அணியவும்: சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சினால் (UV), கண் புரை நோய், விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிர்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகிய பல கண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியே செல்லும்போது புறஊதா கதிர்களிலிருந்து 100% பாதுகாப்பை தரும் குளிர் கண்ணாடிகளை அணிவது அத்தியாவசியம். போலரைஸ்டு லென்ஸ்களைக் கொண்ட குளிர் கண்ணாடிகள் சூரிய ஒளி பிரதிபலிப்பை குறைத்து பார்வைத் தெளிவை மேம்படுத்தும்.

4. நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தவும்: உலர்ந்த கண்கள் உட்பட பல்வேறு உடல்நல பிரச்னைகள் நமது உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும். இது நிகழாமல் தடுக்க கோடை காலத்தில் அதிக அளவு தாராளமாக தண்ணீரை அருந்தவும். சர்க்கரை மற்றும் கஃபைன் அடங்கிய பானங்கள் உடலின் நீர்ச்சத்தை குறைக்கும் என்பதால் அவைகளை தவிர்க்கவும். வெயிலில் செல்லக்கூடிய வேலை என்றால், எப்போதும் கையில் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம். இளநீர் அல்லது பழச்சாறுகள் எடுத்துக்கொள்ளலாம்.

5. வேதிப்பொருட்களிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்கவும் : கோடைகாலம் என்றாலே நீச்சல் குளத்தில் நீண்டநேரம் செலவிட தோன்றும். ஆனால், அதில் இருக்கக்கூடிய குளோரின் உங்களது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கண் எரிச்சல் மற்றும் கண் சிவத்தலை விளைவிக்கக்கூடிய குளோரினிலிருந்து உங்களது கண்களை பாதுகாக்க நீச்சலுக்கான கண் கவசங்களை அணியவும். வேதிப்பொருட்களை பயன் படுத்தும்போது, அவற்றால் தீக்காயங்கள் அல்லது பிற கண் காயங்கள் நிகழாமல் தடுக்க கண் கவச சாதனத்தை தவறாமல் அணியவும்.

6. ஒவ்வாமைகள் பற்றி அறிந்து விழிப்புணர்வுடன் இருக்கவும்: கோடைகால ஒவ்வாமைகள் உங்களது கண்களையும் பாதிக்கக்கூடும். கண் சிவத்தல், அரிப்பு மற்றும் நீர் வடிதல் போன்றவை இதனால் ஏற்படும் சில பாதிப்புகளாகும். ஒவ்வாமைகளுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் அல்லது உங்களது கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். கண்களை தேய்ப்பதும், கசக்குவதும் பாதிப்புகளை மோசமாக்கி கண் தொற்றுகளுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்பதால், அவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.

7. கண் நோய்களின் அடையாளங்களை அறிந்திருக்கவும் : விழிப்புள்ளி சிதைவு அல்லது கண் அழுத்த நோய் போன்ற சில கண் நோய்கள் காலப்போக்கில் ஏற்படக்கூடியவை. சிலருக்கு முதிர்ச்சியடையும் வரை அதன் அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே கண் நோய்களை கண்டறிவதற்கு குறித்த கால அளவுகளில் செய்யப்படும் கண் பரிசோதனைகள் செய்து அதற்கான சிகிச்சையினை பெறவும். பார்வைத்திறனில் திடீர் மாற்றம் அல்லது கண் வலி இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சைப்
பெறவும்.

8. திரையை பார்ப்பதிலிருந்து அடிக்கடி இடைவேளை எடுக்கவும்: கோடைகால விடுமுறைக் காலம் என்றாலே திரைப் படங்கள், விளையாட்டு போட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்ப்பதில் அல்லது வீடியோ கேம்கள் விளையாடுவதில் நீண்ட நேரத்தை நாம் செலவிடுவதுண்டு. நீண்டநேரம் திரையை பார்த்துக் கொண்டிருப்பது டிஜிட்டல் கண் அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இதனால் கண்களில் களைப்பு, எரிச்சல், வறட்சி ஆகியவை ஏற்படும். இப்பாதிப்பு நிகழாமல் தடுக்க திரையை பார்க்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொள்ளவும். 20-20-20 என்ற விதியினை பின்பற்றவும். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தள்ளியிருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகள் உற்றுப்பார்க்கவும்.

கண் பிரச்னைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் கோடைகாலத்தில் ஏற்படும் பிரச்னைகள் மட்டுமல்லாமல் மற்ற கண் சார்ந்த பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் சீனிவாச ராவ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கட்டாய உடலுறவு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)