உணர்வுப்பூர்வமான நட்புக்கு நான் அடிமை! ‘மிஸ்டர் மனைவி’ நாயகி ஷபானா!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 30 Second

‘‘அம்மா, அப்பாவின் பாசம் கொடுக்கும் உணர்வினை ஃபிரண்ட்ஷிப் தரணும். சொல்லப்போனால் நான் அவர்களுடன் இருக்கும் போது என் குடும்பத்தாருடன் இருப்பது போன்ற எண்ணத்தினை ஏற்படுத்தணும். சம்மா பார்த்தோம், ஜாலியா சினிமா, ஷாப்பிங்ன்னு சுத்துனோம்ன்னு இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் இருக்கணும். சந்தோஷமோ துக்கமோ நம்முடைய கஷ்டமான நேரத்திலும் நமக்கு தோள் கொடுக்கணும்.

சொல்லப்போனால், எனக்கு எது நல்லது கெட்டதுன்னு எடுத்துச் சொல்லணும். எல்லாவற்றையும் விட நம்முடைய முன்னேற்றத்திற்கு ஒரு பாலமா இருப்பது தான் தூய்மையான நட்பு. அப்படிப்பட்ட நட்புக்கு நான் அடிமை’’ என்று மனம் திறக்கிறார் ஷபானா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகான காதல் காவியமான ‘மிஸ்டர் மனைவி’யில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘‘நான் பிறந்தது மும்பை என்றாலும் ஏழாம் வகுப்பு வரை கேரளாவில் தான் படிச்சேன். அதன் பிறகு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டேன். அங்கு தான் கல்லூரிப் படிப்பை படிச்சேன். ஆனால் என்னால் கல்லூரியை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், மலையாளத்தில் எனக்கு ஒரு தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதனால் படிப்பினை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தினசரி தொடர் போல் கிடையாது. ஒரு வாரம் ஒரு கதை.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் மெகா சீரியலில் நடிச்சேன். அந்தத் தொடரை தமிழ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிச்சாங்க. அதே நிறுவனம் தமிழில் ‘செம்பருத்தி’ என்ற தொடரை தயாரிச்ச போது, அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. அதனைத் தொடர்ந்து ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடிப்பதற்கு ஆடிஷனுக்காக வந்தேன். ஆனால் அதில் நான் தேர்வாகவில்லை. இதற்கிடையில் செம்பருத்தி தொடருக்கான ஆடிஷனுக்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் செலக்டாகவில்லை.

வேற ஒரு பெண்ணைத் தான் தேர்வு செய்தாங்க. அந்த பெண்ணை வைத்து ஷூட்டிங்கும் ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தொடர முடியல. அதனால் என்னை அழைத்து அந்த வாய்ப்பினை கொடுத்தாங்க. அதனைத் தொடர்ந்து இப்ப ‘மிஸ்டர் மனைவி’யில் நடிக்கிறேன். செம்பருத்தி தொடரை இயக்கியவர் தான் இதனையும் இயக்குகிறார் என்பதால், எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்’’ என்றவர் சின்னத்திரையில் அவர் நுழைந்த தருணங்களை பகிர்ந்தார்.

‘‘கேரளாவில் என்னுடைய குடும்பத்திற்கு தெரிஞ்சவங்க மூலமாகத்தான் நான் சின்னத்திரைக்குள் வந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போதே சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பினை தேடி வந்தேன். அவங்க தான் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. அப்ப எனக்கு 17 வயசு. எனக்கு இந்த துறை எப்படி இயங்கும், கேமரா முன் எப்படி நிற்கணும், மத்தவங்களிடம் எப்படி பழகணும், பேசணும்ன்னு எதுவுமே எனக்கு தெரியாது. மலையாளத்தில் நான் அறிமுகமான முதல் சீரியலில் என்னுடன் நடிச்சவங்க எல்லாரும் பெரிய ஆர்டிஸ்ட். அவங்கதான் எனக்கு எப்படி நடிக்கணும், எந்த காட்சிக்கு என்ன மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுக்கணும், கேமரா முன் நாம எப்படி நிக்கணும்ன்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. அதன் பிறகு படிப்படியா நான் என்னை மோல்ட் செய்து கொண்டேன்’’ என்றவர் தன் நட்பு உலகம் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் ரொம்ப எளிதா எல்லோரிடமும் பழகமாட்டேன். ஆனால் அப்படி நெருங்கி பழகிட்டா அந்த நட்பு என்னுடைய காலம் முழுக்க இருக்கணும்ன்னு நினைப்பேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது நிறைய பேரிடம் நாம பழகுவோம். அதில் ஒன்று இரண்டு பேர் தான் நம்முடைய மனசுக்குள் இடம் பிடிப்பாங்க. அப்படி நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு மிகவும் நெருக்கமானது பிரியா. பிரியாவை நான் ஏழாம் வகுப்பில் தான் சந்தித்தேன். எங்களுடையது ரொம்ப சாதாரணமான குடும்பம். அதனால் கையில் பாக்கெட் மணி எல்லாம் இருக்காது. அந்த வயசில் புதுசா ஏதாவது சாப்பிடணும்ன்னு தோணும்.

அது பிரியா தான் அழைச்சிட்டு போவா. எப்ப நாங்க வெளியே போய் சாப்பிட்டாலும் அவ தான் வாங்கித் தருவா. ஒரு நாள் கூட அவ முகம் சுளித்தது கிடையாது. அதே போல் எங்க வீட்டில் ஏதாவது கஷ்டம்னா அதை அவ சரி செய்வா. அதுவும் அந்த வயசில் நட்புக்காக எதுயும் செய்யலாம்னு அவளிடம் இருந்து தான் நான் தெரிந்து கொண்டேன். பிரியாவும் நானும் கல்லூரி வரை ஒன்றாகத்தான் படிச்சோம்.

கல்லூரியை பங்க் அடிச்சிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட போவோம். அவ வீட்டில் தான் எப்போதும் இருப்பேன். என்னுடைய அம்மா அவ வீட்டில் தங்க மட்டும் தான் அனுமதி தருவாங்க. வெளியே போனாலும் அவ கூட மட்டும் தான் அனுப்புவாங்க. வேற யார் கூடேயும் அனுப்பமாட்டாங்க. அவ வீட்டிலேயும் அப்படித்தான். ஒரு நம்பிக்கையான ஃபிரண்ட்னு சொன்னா அவதான். இப்ப அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. குடும்பம், குழந்தைகள்னு அவ லைஃப்ல செட்டிலாயிட்டா. நான் எப்ப மும்பை போனாலும் அவளை போய் பார்க்காமல் இருக்க மாட்டேன். எல்.கே.ஜி முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் போது ஸ்வாதி, சல்மினான்னு எனக்கு இரண்டு ஃபிரண்ட்ஸ். அவங்களும் என்னோட ரொம்ப அன்பா இருப்பாங்க.

செம்பருத்தி தொடரில் நடிக்கும் போது தான் கதிர் மற்றும் ரேஷ்மாவின் அறிமுகம் எனக்கு கிடைச்சது. இவங்க இரண்டு பேருமே என் இரு கண்கள் மாதிரி. என் குடும்பத்தில் ஒருத்தர்னு சொல்லலாம். என் கல்யாணத்தில் ஒரு அண்ணனா என்ன செய்யணுமோ அது எல்லாம் கதிர் செய்தான். என் கல்யாணத்தில் உறவினர்கள் இருந்தாலும் என்னுடைய நண்பர்கள் சூழதான் நடந்தது.

கதிர் மற்றும் ரேஷ்மாவுடன் செம்பருத்தியில் ஐந்து கால பயணம். அந்த சீரியல் முடிந்த போது நான் இவங்க இரண்டு பேரையும் என் வாழ்க்கையின் பொக்கிஷமா கொண்டு வந்தேன்னு சொல்லணும். என்னுடைய கடைசி காலம் வரை அந்த பொக்கிஷங்களை நான் இழக்க விரும்பல, இழக்கவும் மாட்டேன். அவங்க சும்மா ஃபார்மலா ஹாய் ஹலோன்னு சொல்ற நண்பர்கள் கிடையாது. எனக்கு ஒரு பிரச்னைன்னா முதல்ல வரவங்க இவங்க தான்.

செம்பருத்தியில் நடிச்சிட்டு இருந்த சமயம் எங்களுக்கு ஷூட்டிங் இல்லைன்னா யாராவது ஒருத்தர் வீட்டில் தான் இருப்போம். இப்ப கதிருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கு. அந்த குழந்தைக்கு ஒரு அத்தையா என்ன செய்யணுமோ பார்த்து பார்த்து செய்கிறேன். அப்படித்தான் நாங்க ஒரு குடும்பமா கனெக்டாகி இருக்கோம்னு சொல்லணும். எங்க மூவரின் உறவை நான் என்னுடைய ஆழ் மனசில் உணர்கிறேன், அந்த உணர்வினை வார்த்தையால் சொல்லிட முடியாது.

என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய கல்யாணத்திற்கு அடுத்து நான் ரொம்ப நெகிழ்ந்த தருணம் கதிருக்கு குழந்தை பிறந்த அந்த நொடி. அவனுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும்ன்னு நான் திருவண்ணாமலைக்கு எல்லாம் போய் வேண்டி இருக்கேன். குழந்தையை அங்கு கூட்டிக் கொண்டு வருவதாகவும் வேண்டிக் கொண்டேன். கதிரின் மனைவி கர்ப்பமா இருக்கான்னு அவன் என்னிடம் வந்து சொன்னதும் நான் அழுதுட்டேன். பாப்பாவை அவன் பார்த்தானோ இல்லையோ நான் தான் முதலில் பார்த்தேன். நான் வேண்டிக் கொண்டது போல பாப்பாவைக் கூட்டிக் கொண்டு நாங்க திருவண்ணாமலைக்கு போயிட்டு வந்தோம்.

மிஸ்டர் மனைவி பொறுத்தவரை 50 எபிசோட் தான் முடிஞ்சிருக்கு. இப்பதான் ஒவ்வொருத்தரை புரிந்துகொண்டிருக்கேன். அதனால் இங்கு அந்த க்ளோஸ் பாண்டிங் இன்னும் வரல. ஆனால் எனக்கு பாட்டியா நடிக்கும் அனுராதா அம்மா மற்றும் ஹீரோவோட பாட்டியா நடிக்கும் லதா அம்மா இருவருமே எனக்கு ஒரு நல்ல வார்ம் ஃபீலினை தருவாங்க. அவங்க இருவருமே சீனியர் ஆர்டிஸ்ட். அவங்க தான் நடிப்பில் நல்லா தெரியணும்ன்னு நினைக்க மாட்டாங்க. நீயும் நல்லா நடி. அப்பதான் நாம எல்லாருமே அதை ஒரு எபிசோடா பார்க்கும் போது மக்களின் பார்வைக்கு ரொம்ப அழகா தெரிவோம்னு சொல்வாங்க. அந்த க்வாலிட்டி இவங்க இரண்டு பேரிடமும் இருக்கு. இவங்கள எனக்கு ரொம்பவே பிடிக்கும்’’ என்றவர் தன் குடும்பம் மற்றும் கணவர் ஆர்யன் பற்றி பகிர்ந்தார்.

‘‘எங்களுடையது ரொம்ப ஆர்தடக்சான முஸ்லிம் குடும்பம். நான் வீட்டில் நடிக்கிறேன்னு சொன்ன போது அம்மா தயங்கினாங்க. ஆனால் எனக்கு விருப்பம் இருந்ததால சரின்னு அம்மா சொல்லிட்டாங்க. அதன் பிறகு இந்த துறையிலும் நல்ல மதிப்பு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டாங்க. எனக்கு அப்பா இல்லை. என்னுடைய எட்டு வயசில் அவர் தவறிட்டார். எனக்கும் என் தம்பிக்கும் அம்மாதான் எல்லாமே. அவங்க பிசியோதெரபிஸ்டா இருந்தாங்க. எங்களுக்காக நிறைய உழைச்சிருக்காங்க.

இப்ப தம்பி படிச்சிட்டு இருக்கான். பத்தாம் வகுப்பில் இருந்தே நான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். வீட்டில் டியூஷன் எடுப்பேன். அதன் மூலம் என்னுடைய அம்மாவிற்கு ஒரு சப்போர்ட்டாக இருக்க நினைச்சேன். என் கணவர் ஆர்யன். அவரும் சீரியல் நடிகர் தான். அவர் ‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடரில் நடிக்கிறார். ஃபிரண்டாதான் எனக்கு அறிமுகமானார். அது காதலா மாறியது. அதன் பிறகு இருவீட்டாரின் சம்மதத்தோடு கல்யாணம் செய்து கொண்டோம்.

இந்த துறையை பொறுத்தவரை நான் எதுவுமே திட்டமிடவில்லை. எனக்கான வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்திக் கொள்வேன். இப்ப தமிழ் சினிமா ஒன்றில் சின்ன ரோல் செய்திருக்கேன். எனக்கு பலவிதமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கணும்னு ஆசை. சீரியலில் நடிக்கும் போது ஒரு மூணு வருஷம் ஒரே கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்போம். இது செய்தாலும் வேறு வேறு களத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கணும். அது சினிமா அல்லது ஓடிடி என்றாலும் எனக்கு ஓ.கேதான்’’ என்றார் ஷபானா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)
Next post வயதானவர்களும் பயணம் செய்யலாம் ஜாலியா! (மகளிர் பக்கம்)