மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்! (மருத்துவம்)

Read Time:8 Minute, 51 Second

மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் தூக்கம் இன்றியமையாதது. பகல் முழுக்க ஒருவர் எவ்வளவு வேலைகள் செய்தாலும் உறக்கம் மட்டுமே அவரை அடுத்த நாளில் துவக்கத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும். அப்படிப்பட்ட இந்த உறக்கம் சிலருக்கு படுத்த உடனே வரும், சிலருக்கு சில நிமிடங்களில் வரும், இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்து வரும், பலருக்கு விடியும் தருவாயில் வரும். இரவில் தூங்கினாலும், பகலில் தூங்கும் வழக்கமும் சிலருக்கு உண்டு.

ஆனால் இங்கு ‘‘தூங்கினால் மரணம்’’ என்று கேள்விப்பட்டால் பகலில் உறங்கும் தூக்கப் பிரியர்களும் இரவிலும் தூங்காமல் ஆந்தை போல் தவம் கிடப்பார்கள். இதற்கு சென்ட்ரல் ஹைபோவென்டிலேஷன் சிண்ட்ரோம் (Central Hypoventilation Syndrome – CCHS) என்று பெயர். இந்த நோயால் ஒரு சிலரே பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தங்களின் உறக்கத்தையும், வாழ்க்கையையும் எவ்வாறு கடத்துகின்றனர் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் நுரையீரல் நிபுணர் சதீஷ்குமார்.

‘‘பொதுவாக ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 100ல் 10% குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தின் அளவு ஒரு புறம் இருந்தாலும், ஒருவரின் உடல் மாற்றத்தை பொறுத்தும் இதனால் பாதிக்கப்படுவோர்களும் உண்டு. தூக்கத்தின் போது சுவாசித்தலில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.

குண்டாக இருப்பவர்களுக்கு இந்த நோயின் ஒரு வகையான ஒபிசிட்டி ஹைபோவென்டிலேஷன் (Obesity Hypoventilation Syndrome – OHS ) ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் நிறை குறியீடு (body mass index) 30-க்கும் அதிகமாக இருப்பவர்களுக்கும் இந்நோய் பாதிக்கும். இவர்களுக்கு, நுரையீரல் ஒழுங்காக விரிவடையாமல், குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருப்பதால் இரவில் தூங்கும் போது குறட்டை வருவது அதிகரிக்கும். இதன் காரணமாக அவர்கள் பகல் நேரங்களில் தூங்கும் பழக்கமும், வாகனங்கள் ஓட்டும் போது தூங்கும் பழக்கமும் ஏற்படுகிறது. இவர்களுக்கு, தங்களின் உடலுக்கு தேவையான ஆக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும். இதற்கு ஹைபோகேப்னியா (Hypocapnia) என்று பெயர்.

நுரையீரலில் ஆக்சிஜனின் பங்களிப்பு குறைவாகும் போது, அங்கு கார்பன்டை ஆக்சைடு உற்பத்தி அதிகமாகும். பொதுவாக நாம் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்டை ஆக்சைடை வெளியிடுவோம். ஆனால் ஹைபோவென்டிலேஷன் இருப்பவர்களுக்கும், உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் கார்பன்டை ஆக்சைடு சரியாக வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கி விடும். கார்பன்டை ஆக்சைடு நார்கோசிஸ் (Carbon Dioxide Narcosis) என சொல்லப்படும் இந்த நிலையில் இருப்பவர்கள் எப்பொழுதும் சோர்ந்து காணப்படுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கும், சிறு வயது குழந்தைகளுக்கும் இந்த ஹைபோவென்டிலேஷன் பாதிப்பு அதிகம் இருக்காது.

சில சமயம் ஹைபோதைராய்டு பிரச்னையுடன் பிறக்கும் போது குழந்தைகளின் உடல் எடையை பொறுத்தும், தாயின் உடல் நிலையை பொறுத்துமே குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். வயதானவர்கள், குறைவான உடல் செயல்பாடுகள், சர்க்கரை நோய், தைராய்டு, ஹைபெர் டென்சன் உடையவர்கள், துரித உணவுகள், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஹைபோவென்டிலேஷன் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதன் நிலையை கண்டறிய ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு அளவை கண்டறியும் ABG எனப்படும் (Arterial Blood Gas) சோதனையையும் மேற்கொள்ளப்படும். இதனை Apnea Hypopnea Index எனவும் குறிப்பிடுவர்.

இந்த நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு ஆரம்ப நிலையில் இருக்கும் போது சுவாச பிரச்னைகள் இருக்கும். பிறகு ஞாபக மறதி, சுவாசமின்மை காரணமாக பேச முடியாமல் போவார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து, மனரீதியாகவும் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமனோடு இருப்பவர்களுக்கு கொழுப்புகள் அனைத்தும் ஒன்று திரண்டு கட்டிகளாக தோலின் அடியில் தங்கும் அபாயம் உள்ளது. OHS இருப்பவர்களுக்கு நியூரோப்லாஸ்மோடோஸ் (Neuroplasmotos) எனும் கொழுப்பு கட்டிகள் வராது. ஆனால் CCHS இருப்பவர்களுக்கு அந்த கட்டிகள் தோன்றலாம். மேலும் இவர்களின் கழுத்து சின்னதாக இருக்கும், மார்பு பகுதியில் உள்ள தசைகள் வலுவிழந்து காணப்படும். அடிவயிற்றிலிருந்து சுவாசிப்பார்கள். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பார்வையில் கோளாறு போன்றவைகளும் ஏற்படும்.

இந்த ஹைபோவென்டிலேஷன் வருவதால், சில இதய நோய்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளது. அதாவது ஆக்சிஜன் இல்லாத நிலைமையில் நமது இதயம் அதிகமாகவும் வேகமாகவும் துடிக்க ஆரம்பிக்கும். இந்த நிலை தொடர்ந்தால் இதய தசைகள் பலமிழந்து Right Heart Failure எனப்படும் இதய நோய் உண்டாகும். உயர் ரத்த அழுத்தமும் உண்டாகும். எனவே ஹைபோ வென்டிலேஷனை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து அதற்கான சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

லேசான மற்றும் மிதமான பாதிப்புக்குள்ளாகியவர்கள் Life Modification Treatment எனப்படும் உடல் எடையை குறைத்தல், உணவு கட்டுப்பாடு, உணவு பழக்கவழக்கங்களில் மாறுதல் மற்றும் நெபுலைசர் (Nebulaizer) பயன்படுத்தி குணப்படுத்த முடியும். முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு Non Invasive Ventilation எனப்படும் வெளிப்புறத்திலிருந்து குழாய்கள் மூலம் சுவாசமளிப்பதன் மூலமே கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. இதற்கு அறுவை சிகிச்சைகளும் உள்ளது. அதன் மூலம் அவர்கள் இயற்கை முறையில் சுவாசிக்கலாம்.

கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆளாகி தற்போது வரை அந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக மக்களுக்கு சுவாச கோளாறுகளால் ஏற்படும் நோய்களை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை ப்ளு தடுப்பூசியும், 5 ஆண்டுக்கு ஒரு முறை நிமோனியா தடுப்பூசியும் போட வேண்டும். அதுவும் குறிப்பாக மழைக் காலங்களில் தடுப்பூசி போடுவது நல்லது’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் சதீஷ்குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புதிய அம்மாக்களுக்கான உடற்பயிற்சிகள்… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)
Next post மனதார கிடைக்கும் வாழ்த்து விருது பெற்றதற்கு சமம்! (மகளிர் பக்கம்)