ஒரு சித்திரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 35 Second

நாம் படிக்கும் புத்தகங்களும் அதனை வாங்கும் முறைகளும் ஒவ்வொரு வாசகர்களையும் பொருத்து வேறுபடும். சிலர் கதையின் கருவை பார்த்து வாங்குவார்கள், சிலர் கதையின் ஆசிரியரின் பெயரைப் பார்த்து வாங்குவார்கள். இன்னும் சிலர் புத்தகத்தின் நிறத்திற்காகவோ, அதில் இருக்கும் படங்களின் மூலம் ஈர்க்கப்பட்டோ வாங்குவார்கள். ஆனால் அந்த சித்திரங்களை யார் வரைவது, எவ்வாறெல்லாம் அதனை வரைகிறார்கள் என்று யோசனை செய்பவர்கள் மிகவும் குறைவே. சந்திரனில் பாட்டி வடை சுட்ட கதையின் சித்திரம் முதல் தற்போது குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் வரை அனைத்து விதமான சித்திரத்திற்கும் தனது ஒற்றை பேனா மூலம் உயிர் கொடுத்து வருகிறார் கிராபிக் இலஸ்ட்ரேட்டர் (Graphic Illustrator) சாயா ப்ரபாத். இவர் கூகுள் இணைய முகப்பு பக்கத்தில் வரும் ‘கூகுள் டூடுள்’க்கும், கூகுள் காலண்டருக்கும் சித்திரம் வரைந்துள்ளார்.

‘‘இதுவரைக்கும் எண்ணற்ற சித்திரங்களை வரைந்துள்ளேன். அதில் பாதிக்கு மேல் என்னுடைய கற்பனையே. ஏதேனும் ஒரு கதையை படித்தாலோ அல்லது கேட்டாலோ அதற்கு உருவம் கொடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். அதிலும், குறிப்பிட்ட கருத்து சார்ந்து வரையும் போது எளிதாக வரைந்துவிடலாம். என்னோட சொந்த ஊர் சென்னைதான். ஸ்கூல் படிக்கும்போது இருந்தே எனக்கு ஆர்ட்ஸ் துறையில் ஆர்வம் அதிகம். அதனாலேயே நான் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். சென்னையில் இளங்கலை படிப்பை முடித்த பிறகு ஹாங்காங்கில் கிராபிக் டிசைன் சார்ந்து படிச்சேன். ஹாங்காங்ல படிக்கும் போதே பயிற்சி முடிச்சிட்டு சென்னையில் பகுதி நேர கிராபிக்ஸ் இலஸ்ட்ரேட்டரா வேலை பார்க்கணும்னு முடிவு செய்தேன்.

அதனால் படிக்கும் காலத்திலேயே சின்னச் சின்ன வேலைப்பாடுகளை செய்து அதை விற்பனையும் செய்து வந்தேன். அதன் மூலம் எனக்கு குழந்தைகளுக்கான கதை புத்தங்களை சித்திரமா வரைவதற்கான வாய்ப்பு வந்தது. இதுவரைக்கும் 8 கதைகளை முழுவதும் சித்திரமா வரைஞ்சிருக்கேன். அது போக புத்தகங்களின் அட்டைப் படங்களுக்கும் வரைந்து கொடுத்திருக்கேன். ஒரு கதையை படிப்பதற்கும், கேட்பதற்கும், ஓவியமாக பார்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் அதிகம்.

அதுவும் குழந்தைகளுக்கு நடித்து கதையினை வர்ணிப்பதற்கும், சித்திரங்களாக பார்ப்பதற்கும் மலைக்கும் மடுக்கும் இடையே உள்ள வித்தியாசம். உதாரணத்துக்கு, ஆரம்ப காலத்திலிருந்து மனிதன் இந்த மாதிரியான உடைகளை பயன்படுத்தியுள்ளான் என்பதை வார்த்தைகளாக எடுத்துச் சொல்வதை காட்டிலும், சித்திரமாக பார்க்கும் போது சுலபமாக புரிந்துகொள்ள முடியும். நான் வரையும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது என்றாலும் எனக்கு மிகவும் பிடித்ததும் அதுதான். அதனால் குழந்தைகள் பார்த்தவுடன் எளிதில் புரியும் படியாக நான் யோசித்து வரைவேன்.

அந்த கதையை முடிக்கும் வரை என் முழு கவனமும் சித்திரம் வரைவதில் மட்டுமே இருக்கும். இந்த மாதிரி வேலைகள் பொதுவாக பதிப்பகத்தில் இருந்து ஆர்ட் டைரக்டருக்கு வரும். அவங்கதான் எங்களுக்கு அந்த வேலையினை கொடுப்பாங்க. அது போலதான் எனக்கும் இந்த மாதிரி கதைகளை வரையும் வாய்ப்புகள் கிடைச்சது. தமிழ் மட்டுமில்லாமல், ஆங்கிலம் மற்றும் வேறு மொழி கதைகளுக்கும் நான் சித்திரம் வரைந்திருக்ேகன்.

பிரபலமான கதைகளுக்கும் என் சித்திரம் மூலம் உயிர் வடிவம் கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த கதைகளை அதிகபட்சம் வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் தான் விரும்பி படிக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய சித்திரம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியணும்’’ என்ற சாயா, ஒரு கதைக்கான சித்திரத்தை கைகளில் வரைவதற்கும், டிஜிட்டல் மூலம் வரைவதற்கும் இருக்கும் வித்தியாசங்களையும் கூறுகிறார்.

‘‘நாம் கையால் வரைவதற்கும், டிஜிட்டல் மூலம் வரைவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நாம் வரையும் ஓவியங்களுக்கு வண்ணங்கள் தீட்டும் போது அதன் வெளிப்பாடும், எல்லாம் முடித்த பிறகு பார்க்கும் போது வித்தியாசங்கள் நிறைய இருக்கும். அதனாலேயே நான் ஒரு படத்தையே பல வண்ணங்களில் வரைவேன். அதில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வார்கள். அதன் பிறகு அதற்கு சரியான வடிவம் கொடுத்து பிழை இல்லாமல் வெளியிடுவோம்.

சில சமயங்களில் ஒரு படம் எனக்கு திருப்தியாக இல்லை என்றால், அது சரியாக வரும் வரை மீண்டும் மீண்டும் வரைவேன். குறிப்பாக “Anni Dreams of Biryani”, கதையின் எழுத்தாளர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு பிரியாணி கடையை பார்த்து இந்த கதையை எழுதியிருந்தார். கதையில் வரும் பிரியாணியை சித்திரமாக வரைய நான் பல ஆராய்ச்சியினை மேற்கொண்டேன். அதன் பிறகுதான் அந்த புத்தகத்தை வெளியிட்டோம். காரணம், பிரியாணி குறித்த கதை, அதை நாம் சித்திரமாக பார்க்கும் போது நம்முடைய நாவில் அதன் சுவையினை உணரச் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த சித்திரத்திற்கு உயிர் கிடைக்கும்.

சில சமயம் கதைகளில் இல்லாத ஒரு விஷயத்தை சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக வரைவேன். அந்த வகையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகளில் ‘A taste of Honey’-யும் ஒன்று. அந்த கதையில் வரும் தாத்தா கதாபாத்திரம், ஒரு இடத்தில் தூங்குவது போல் கூறியிருப்பார்கள். நான் கதையை மேலும் சுவாரஸ்யமாக்க அவர் கதை முழுவதும் தூங்கி இருப்பது போல் உருவகப்படுத்தியிருப்பேன். கதைகளுக்கு ஏற்ற மாதிரி ஒரு சில மாற்றங்களையும் நான் செய்திருக்கேன். அதை கதாசிரியர்களும் வரவேற்றுள்ளனர். ஒரு சித்திரத்தை தவறில்லாமல் வரைவது எவ்வளவு முக்கியமோ அதே போல் கதைக்கு ஏற்ப சித்திரங்களுக்கான நிறங்களை தேர்வு செய்து வரைய வேண்டும்.

வண்ணங்களை கொஞ்சம் அதிகமாகவோ இல்லை குறைவாகவோ பெயின்ட் செய்துவிட்டால், அதற்கான சிறப்பை இழந்திடும். அந்த மாதிரி எனக்கு வந்த கதைகளில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 புத்தகம். இதன் அட்டைப் படத்திற்கான வண்ணங்களை தேர்வு செய்ய ரொம்பவே கஷ்டப்பட்டேன். அந்த புத்தகத்தின் 70வது ஆண்டிற்காக சிறப்பான அட்டைப் படத்தினை டிசைன் செய்ய சொன்னாங்க. பொதுவாக நிறங்கள் கொண்டே கதையின் கருவினை முடிவு செய்யலாம். இது தீவிரத்தன்மை கொண்ட கதை என்பதால் அதற்கான நிறங்களை தேர்வு செய்ய கஷ்டப்பட்டேன். இருந்தாலும் என்னுடைய அந்த அட்டைப்படம் பலரால் பேசப்பட்டது’’ என்றவரின் மனசுக்கு நெருக்கமான ஒரு சித்திரம் கூகுள் டூடுலாம்.

‘‘நான் Mac book, Wacom Intuos கொண்டு தான் பெயின்டிங் செய்கிறேன். எனக்கு Inktober-ல் படம் வரைய ரொம்ப பிடிக்கும். ஆனால் தற்போது அதற்கு நேரம் கிடைப்பதில்லை. எனக்கு கிடைக்கும் நேரங்களில் மற்ற கதைகளுக்கான மாதிரி வரைபடத்தை முடித்து அதற்கான நிற தேர்வுகளில் இறங்கிடுவேன். 2019 ஹோலி பண்டிகைக்காக கூகுள் டூடுல்-க்கு முகப்பு பக்கத்தினை வரைவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு இந்த துறையில் ஒரு பெரிய அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து 2021-ல் கூகுள் காலண்டருக்கும் சித்திரம் வரைவதற்கும் வாய்ப்பு வந்தது. மேலும் பிரபல ஆங்கில நாளிதழுக்கும் சர்வதேச யோகா தினம், சர்வதேச புலிகள் தினம் மற்றும் புத்தாண்டு தினத்திற்கு முன் பக்க தலைப்பினை டிசைன் செய்திருக்கேன். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் செயலிக்கும் வடிவமைத்து கொடுத்திருக்கேன். வாட்ஸப் ஸ்டிக்கர்கள், அவதார்களுக்கு உள்ளூரில் உபயோகிக்கப்படும் பேச்சு வழக்கு அடிப்படையாக வைத்து ஸ்டிக்கர்ஸ்கள் வடிவமைத்தேன். நான் டிசைன் செய்த ஸ்டிக்கர்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும்’’ என்றவர் நிறுவனங்களுக்காக வரையும் ஓவியங்களுக்கு தன் பெயரில் உரிமம் பெற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

‘‘எனக்கு பெயின்டிங் செய்ய பிடிக்கும். ஆனால் அதையே வீடியோவாக செய்ய தெரியாது. ஆனால் வரும் காலம் நாம் அனைவரும் டிஜிட்டல் நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் கிடைக்கும் நேரத்தில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு கதைக்கான சித்திரம் வரைய குறைந்த பட்சம் ஒரு மாதமாகும். முதலில் கதைக்கான அவுட்லைன் வரைந்து ஒப்புதல் பெறணும். அதன் பிறகு அதற்கான சித்திரங்களை மூன்று நான்கு ஸ்டைலில் ஸ்கெட்ச் செய்து அனுப்புவேன்.

அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். சில சமயங்களில் எல்லா வேலையும் முடிஞ்சு புக் வெளியாகும் போது, நிறங்களை மாற்றினால் நன்றாக இருக்கும்ன்னு சொல்வாங்க. அதனால் ஒரு புத்தகத்தை அட்டை முதல் கடைசிப் பக்கம் வரை நான் அவசரப்பட்டு முடிக்க மாட்டேன். அவர்கள் முழுமையாக திருப்தி அடைந்த பிறகே பைனலைஸ் செய்வேன். இது பார்க்கும் போது பெயின்டிங் தானே என்று சொல்லத் தோன்றும். ஆனால் நம்முடைய முழு சிந்தனை மற்றும் எண்ணங்களை இதில் செயல்படுத்தினால் மட்டுமே சக்சஸ் செய்ய முடியும்’’ என்றவர், காஸ்மோ இந்தியா பிளாக்கர் 2022-2023ன் கிராபிக் ஆர்டிஸ்ட் விருதினை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சக மனிதர்களின் உணர்வுகளை என் பாடல் மூலம் பகிர்கிறேன்! (மகளிர் பக்கம்)
Next post ஒரே ஊசி முனையால் அழகாக மாறும் சருமம்! (மகளிர் பக்கம்)