100+ பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டிய மருத்துவர்! (மருத்துவம்)

Read Time:10 Minute, 31 Second

உடல் நலமில்லை என தன்னிடம் வருபவர்களின் உடல் சார்ந்த பிரச்னைகளை மட்டும் கேட்காமல் அவர்களுடைய வீட்டு பிரச்னைகளையும் கேட்டறிந்து அந்த பெண்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்து வருகிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் உமாதேவி. பெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்றால் பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டாலே போதும் என்று சொன்னவர் அதற்கான தீர்வினையும் ஏற்படுத்தி தந்துள்ளார்.

இவரின் மருத்துவ வளாகத்திலேயே 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொம்மைகள் செய்வது, மலேசியன் உணவு வகைகள் தயாரிப்பது என பல வேலைகளை சொல்லிக் கொடுத்து வருகிறார் உமா தேவி.‘‘சொந்த ஊரு மலேசியா. நான் ஒரு மருத்துவர். மலேசியாவில் தான் மருத்துவம் படிச்சேன். அதன் பிறகு தமிழ்நாட்டுக்கு என்னோட மருத்துவ சேவைகள் செய்யலாம்ன்னு தான் இங்கு வந்தேன். கோயம்புத்தூர்ல சிவசாந்தா என்ற பெயரில் சின்னதா ஒரு கிளினிக் ஆரம்பித்தேன். என் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் நான் நன்றாக பேசுவேன். அதனால அவங்களும் என்னிடம் அவங்க வீட்டு கஷ்டத்தை எல்லாம் சொல்வாங்க.

அதில் பெரும்பாலான பெண்களின் கணவர்கள் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி இருந்தாங்க. சரியா வேலைக்கு போகாமல், அப்படியே போனாலும் சம்பளத்தை குடிச்சே செலவு செய்திடுவார்கள். பாதி பெண்களுக்கு கணவர்கள் இல்லை, வேலை இல்லை. இவ்வாறு அவர்களின் கஷ்டத்தினை என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கதை இருக்கும். அதை கேட்கும் போதெல்லாம் இவர்களுக்கு ஏதாவது செய்யணும் அப்படின்னு தோணும். அதனால அவங்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க முடிவு பண்ணினேன். இங்குள்ள பெண்கள் எல்லாரும் அதிகம் படிக்காதவங்க. அதனால டெய்லரிங் சம்பந்தமான ஏதாவது ஒரு வேலை செய்து கொடுக்க விரும்பினேன்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொம்மைகள் மேல ஆர்வம் இருப்பதை கவனித்தேன். தமிழ்நாட்டுலயும் அதிகமா பொம்மைகள் விற்கப்படுகிறது. ஆனாலும் அது எல்லாமே வெளிநாட்டு பொம்மைகளாகத்தான் இருக்கு. நாம நம்மைப் போன்ற உருவங்களை கொண்ட பொம்மைகள் செய்யலாம் என எனக்கு தோன்றியது. ஆனா, நான் டாக்டர் வேலை செய்து கொண்டு இருந்ததால நேர்ல போய் கத்துக்க முடியாது. இங்க பொம்மைகள் செய்வதற்கு கத்து கொடுக்கவும் அதிகமா ஆட்கள் இல்லை. அதனால பொம்மைகள் செய்வது பற்றின புத்தகங்களை சமூக வலைத்தளங்களில் தேடினேன். அதில் பொம்மைகளை எப்படி செய்வதுன்னு கற்றுக் ெகாண்டேன்.

என்னுடைய ஓய்வு நேரங்களில் பொம்மைகள் செய்யத் தொடங்கினேன். ஆரம்பத்துல பறவைகள், விலங்குகள் பொம்மைகள்தான் செய்ய தொடங்கினேன். அதுதான் எளிதாக இருக்கும். மனித உருவம் கொண்ட பொம்மைகள் செய்யும் போது முக லட்சணம் வேண்டும். அதற்காக அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது. அதனால முதல்ல பொம்மைகள் எப்படி செய்யறதுன்னு கற்றுக்கொண்டு அதன் பிறகு முகத்தினை அமைக்க கற்றுக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் பறவைகள், விலங்குகள் சம்பந்தமாகவே பொம்மைகளை செய்து வந்தேன். இதே காலகட்டத்தில தான் என்னோட கிளினிக்கையும் ஒரு மருத்துவமனையா மாற்றி அமைத்தேன்’’ என்றவர் எப்படி பொம்மைகள் செய்யும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார் என்பதை சொல்லத் தொடங்கினார்.

‘‘பறவைகள் சம்பந்தமான பொம்மைகள் செய்து ஓரளவுக்கு நான் கத்துக்கிட்டதோட அடுத்து மனித உருவங்கள் கொண்ட பொம்மைகள் செய்ய தொடங்கினேன். அந்த பொம்மைகளும் நல்லா வந்தது. பொம்மைகளுக்கு முடிகள்தான் அழகு. அதற்காக கருப்பு நூலில் தலைமுடிகள் மாதிரி தைத்தேன். நான் செய்கிற பொம்மைகள் நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் விளக்கும் வகையில் இருக்கணும்னு தெளிவா இருந்தேன். அதனால் நான் செய்யும் பெண் பொம்மைகளுக்கு பொட்டு வைத்து இரட்டை ஜடையும், பாவாடை சட்டையும் செய்து போடுவேன். ஆண்களுக்கு வேட்டி சட்டை. நான் முதல்ல செஞ்ச பொம்மைக்கு பேரு கண்ணம்மா.

அது ஓரளவுக்கு கல்யாணம் செய்து கொண்ட பெண் மாதிரியான பொம்மை. அடுத்து அதை விட சின்ன பொம்மை ஒன்றை செய்தோம். அந்த பொம்மைக்கு கண்மணி என்று பெயர் வைத்தேன். பொம்மைகள் நன்றாக வரவே நான் அதை பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க தொடங்கினேன். முதல்ல நான்கு பெண்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தேன். அந்த பெண்கள் நல்லாவே கத்துக்கிட்டாங்க. தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களை புதுசா வேலைக்கு அமர்த்தினோம்.

‘சிவாஞ்சலி கிராஃப்ட் அண்ட் டிசைன்’ என்ற பெயரில் பொம்மைகள் செய்ய தொடங்கினோம். இப்போ பொம்மைகள் செய்ய மட்டுமே 40 பெண்கள் என்னிடம் வேலை பார்த்து வருகிறார்கள். நாங்க பொம்மைகள் செய்ததுமே அதை கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில இருக்கிற கடைகளில் கொண்டு போய் விற்பனைக்கு வைத்தோம். சிலர் ஆர்வமா வாங்கி வைக்க தொடங்கினாங்க. அதோட சமூக வலைத்தளங்களிலும் எங்களுடைய பொம்மைகளை பதிவிட்டோம். அதை பார்த்த பலரும் எங்களிடம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. கோயம்புத்தூர் மட்டும் இல்லாம தமிழ்நாடு முழுக்க எங்களுக்கு ஆர்டர் வரத் தொடங்கியது. சில கடைகளில் மொத்தமாக ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆர்டர்கள் பெருக பெண்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகமானது. வெள்ளை கருப்பு என பல வகைகளில் பொம்மைகள் செய்தோம்’’ என்றவர் பொம்மைகள் செய்வதற்கான நுணுக்கங்களை பற்றி விளக்கினார்.

‘‘பொம்மைகள் செய்வதற்கு சில நுணுக்கங்கள் இருக்கிறது. ரொம்ப கூர்மையாக பார்த்து பார்த்து பொம்மைகளை வடிவமைக்கணும். அதே மாதிரி தைக்கும் போதும் பார்த்துதான் தைக்கணும். ஒரு நாளைக்கு ஒரு பெண்ணால இரண்டு பொம்மைகள் தான் செய்ய முடியும். பொம்மைக்கான அளவு எடுத்து அதற்கான துணியை வெட்டி அதற்குள் பஞ்சு, காட்டன்கள் வச்சு தைக்க வேண்டும். பொம்மைகளை ரொம்ப குண்டாகவும் ஒல்லியாகவும் இல்லாம சரியான வடிவத்தில கொண்டு வரணும். அதனால எல்லா பெண்களும் இதை செய்வாங்கனு சொல்ல முடியாது. சில பெண்களுக்கு பார்வை குறைபாடுகள் இருந்தது.

அதனால அந்த வேலைகளில் அவங்களை ஈடுபடுத்த முடியல. அப்படிப்பட்டவர்கள் சமைப்பதில் திறமைசாலியாக இருந்தார்கள். அவங்களுக்காக ஸ்நாக்ஸ் உணவுப்பொருட்கள், ஊறுகாய் செய்தல், வத்தல் போன்ற பொருட்களை செய்கிற கடை ஒன்றையும் எங்களுடைய மருத்துவமனைக்குள்ேளயே தொடங்கினோம். நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்ததால எனக்கு மலேசியன் உணவு வகைகள் எல்லாமே செய்ய தெரியும். அதை எல்லாம் இங்க இருக்குற பெண்களுக்கு சொல்லி கொடுத்து மலேசியன் உணவு கடையினையும் திறந்தேன். இங்கு செயல்படும் மூன்று கடைகளையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் என்னிடம் வேலைப் பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் பல பெண்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்த மனதிருப்தியாக உள்ளது’’ என்றார் உமாதேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செல்லப்பிராணிகளுடன் யோகா செய்யலாமே!! (மகளிர் பக்கம்)
Next post கசப்பின் இனிமை!! (மருத்துவம்)