நினைவுகளை 100 ஆண்டு பாதுகாக்கும் ரெசின் கலை! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 35 Second

ஒருவர் என்றும் உயிரோட்டமாக இருக்க காரணம் அவர்களின் நினைவுகள். நம் மனதிற்கு மிகவும் பிடித்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், செல்லப்பிராணிகளின் நினைவுகள், கணவர் கொடுத்த முதல் ரோஜா… இப்படி பல மலரும் நினைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றை எல்லாம் பாதுகாத்து வைக்க வேண்டும்னு விரும்புவோம். சிலர் மலர்களை புத்தகத்திற்குள் வைத்திருப்பார்கள். அது காய்ந்து உதிரும் நிலையில் இருக்கும். அப்படியும் மிகவும் பத்திரமாக பாதுகாப்பார்கள். அப்படிப்பட்ட மிகவும் விலை மதிக்க முடியாத பொருட்களை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் 100 ஆண்டுகள் வரை பாதுகாக்க முடியும் என்கிறார் தனப்பிரியா. சென்னையை சேர்ந்த இவர் ரெசின் கலை மூலம் பலரின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து கொடுத்து வருகிறார்.

‘‘எனக்கு கலை சார்ந்த விஷயங்கள் மேல் ஈடுபாடு அதிகம். அதனால் ஏதாவது கலை குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்னு விரும்பினேன். எல்லாரும் செய்வது போல் ஓவியம் வரைவது, டெரக்கோட்டா நகைகள் போல் இல்லாமல் வித்தியாசமாக செய்ய விரும்பினேன். மேலும் அதனை என்னுடைய தொழிலாகவும் மாற்றி அமைக்க திட்டமிட்டேன். பத்து வருஷம் முன்பு பார்த்தால் ஓவியம் வரைவதை தான் கலையாக பார்த்து வந்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. கலை சார்ந்து பல விஷயங்கள் உள்ளன. நம்முடைய கிரியேட்டிவிட்டி மூலம் எதையும் அழகாக மாற்றி அமைக்கலாம். பி.டெக் படிப்பு முடிச்சிட்டு நல்ல வேலையில் இருந்தேன்.

எங்க வீட்டில் எல்லோரும் சொந்தமா தொழில் செய்து வராங்க. அதில் நான் மட்டும்தான் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். என்னதான் ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பாத்தியத்தில் இருந்தாலும், ெசாந்தமா தொழில் செய்ய வேண்டும் என்பது என் ரத்தத்தில் ஊறிதான் இருந்தது. அதனால் நானும் ஏதாவது ஒரு ெதாழில் செய்ய வேண்டும்னு விரும்பினேன். அப்பதான் எனக்கு ரெசின் கலை கைக்கொடுத்தது. மூன்று வருஷம் முன்பு நான் இந்த கலையை செய்ய ஆரம்பித்த போது தமிழ்நாட்டில் என்னையும் சேர்த்து மூன்று பேர்தான் இந்த கலையை செய்து வந்தோம். ஆனால் இந்த கலை வெளிநாடு மற்றும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. தற்போது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தக் கலை குறித்து தெரிய வந்துள்ளது’’ என்றவர் இதற்கான மூலப் பொருட்கள் அனைத்தும் வெளி மாநிலங்களில் இருந்து பெற்று வருகிறார்.

‘‘ரெசின் என்பது ஒரு திரவம். ஆனால் அது காய்ந்த பிறகு கண்ணாடி போல் பளபளவென்று திடமான பொருளாக மாறிடும். பார்க்க கண்ணாடி மாதிரி இருந்தாலும் உடைந்து போகாது. எடையும் குறைவாகத்தான் இருக்கும். நான் இதில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்த பிறகு என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். முதன் முதலில் ஒரு சாவிக் கொத்து தான் வடிவமைத்தேன். அதை ரூ.100க்கு விற்றேன். ஆரம்பத்தில் இந்த கலைப் பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியாது.

இதை எவ்வாறு செய்யணும்னு கற்றுக் கொண்டவுடன் நான் இதில் ஒவ்வொன்றாக செய்ய துவங்கினேன். அதே சமயம் இது குறித்த அடிப்படை விஷயம் எனக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. அதாவது, எந்த அளவு ரெசின் திரவியத்தை பயன்படுத்தணும். எத்தனை நாட்கள் காய வைக்க வேண்டும்ன்னு தெரியல. ஒவ்வொரு கலைப் பொருட்களை செய்யும் போது அதில் ஏதாவது சிறிய தவறு இருக்கும்.

அதை என்னுடைய அடுத்த பொருளில் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். இப்படியாக ஒவ்வொரு தவறுகளையும் திருத்திக் கொண்டு திருத்தமாக செய்ய கற்றுக்கொண்டேன். காரணம், இதற்காக நான் பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. யுடியூப் வீடியோக்கள் மற்றும் புத்தகங்களை படித்து தான் இதனை கற்றுக் கொண்டேன். மேலும் இந்தக் கலைக்கு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலை நயம் மற்றும் ஆர்வம் இருந்தால் போதும். ரெசின் மட்டுமில்லை எந்தக் கலையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்’’ என்றவரின் சிக்னேச்சர் கலைப் பொருட்கள் க்ளட்சஸ், கடிகாரம், செல்லப்பிராணிகள் பெயர் பொறிக்கப்பட்ட டாக்ஸ், மங்கள்சூத்ரா போன்றவையாம்.

‘‘ரெசின் கலையில் பலவிதமான பொருட்களை செய்யலாம். நைட் லேம்ப்ஸ், போட்டோ பிரேம்கள், கடிகாரம், மொபைல் கவர், மோதிரம் ஸ்டாண்ட், கல்யாண பெயர் பலகை, கீசெயின் போன்றவற்றை நான் செய்து வருகிறேன். இதில் க்ளட்சஸ், செல்லப்பிராணிகள் பெயர் பொறிக்கப்பட்ட டாக்ஸ், மங்கள்சூத்ரா இவை மூன்றையும் நானே கண்டுபிடிச்சேன். க்ளட்ச் என்பது சின்ன சைஸ் ஸ்லிங் பேக் போன்றது.

இதில் பார்ட்டி போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது பார்க்க அழகாக இருக்கும். மங்கள் சூத்ரா, மணமக்களின் கல்யாண மாலையினை அப்படியே ரெசின் கொண்டு பதப்படுத்தலாம். தாலி சரடு மற்றும் கல்யாண மாலையில் உள்ள பூக்களைக் கொண்டும் அழகான ரெசின் வடிவத்தை உருவாக்கி இருக்கிறேன். அடுத்து கடிகாரம் எங்களின் ஹாட் சேல்ன்னு சொல்லணும். இதுவரை 200க்கும் மேற்பட்ட கடிகாரங்களை செய்து கொடுத்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து பூக்களை ெகாண்டும் செய்து வருகிறேன்’’ என்றவர் ‘The Madras Art Studio’ பெயரில் இணையத்தில் பக்கம் ஒன்றை துவங்கி அதில் தன் படைப்புகளை பதிவு செய்து வருகிறார்.

‘‘நான் இந்த தொழிலை ஆரம்பித்த போது நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாகத்தான் விற்பனை செய்து வந்தேன். பலர் அதைப் பார்த்து ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இன்ஸ்டாகிராமில் எங்களோட வொர்க்ஸை பதிவு செய்து வந்தேன். அதன் மூலம் எங்களுக்கு நிறைய ஆர்டர்ஸும் கிடைக்க ஆரம்பிச்சது. தற்போது பெரிய அளவில் ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். என்னுடைய வேலை பிடித்துதான் ஆர்டர் தருகிறார்கள். ஆனால் இதை ஒரே நாளில் செய்து விட முடியாது. குறைந்தபட்சம் ஒரு ஆர்டர் முடிய ஐந்து நாட்களாகும். காரணம், ரெசின் ஒரு லேயர் நன்றாக காய குறைந்தபட்சம் 12 மணி நேரமாகும். அவர்கள் ஆர்டர் கொடுக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப லேயரின் அளவும் மாறுபடும் என்பதால், ஒரே நாளில் செய்து விட முடியாது. தற்போது இது குறித்து பேசிக் மற்றும் அட்வான்ஸ் என பயிற்சி அளித்து வருகிறேன். மேலும் வர்க்‌ஷாப்பும் நடத்தி வருகிறேன்.

ஆன்லைனிலும் பயிற்சி அளித்து வருகிறேன். இந்த கலையை கற்றுக் கொள்ள வயது வரம்பு கிடையாது. ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொண்டு தனக்கான ஒரு சிறு தொழிலினை அமைத்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருகிறேன். சமீபத்தில் ஒரு மருத்துவ மாணவி தன் ரத்தத்தினை இதில் பதப்படுத்தி தரச்சொல்லி கேட்டாங்க. ஒரு சிலர் தங்களின் செல்லப்பிராணிகளின் நினைவாக அதன் நகம் அல்லது முடியினை கேட்பார்கள். அதனால் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கிறேன்.

பெண்கள் என்ற காரணத்தால் ஒதுங்கி உட்காராமல், எது பிடித்துள்ளதோ அதை முழு மனசோடு செய்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும். அதற்கு கொஞ்சம் கஷ்டப்படணும். ஆனால் அதற்கான பலன் நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்’’ என்றார் தனப்பிரியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Over Thinking உடம்புக்கு ஆகாது…!! (மருத்துவம்)
Next post குடும்பமாக இயங்கும் அடிசில் உணவகம்!! (மகளிர் பக்கம்)