மண்ணில் இருந்து எடுப்பதை திரும்ப மண்ணுக்கே சமர்ப்பிக்கணும்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 0 Second

பெண்கள் பயன்படுத்துவதில் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படும் பல பொருட்களில் சானிட்டரி நாப்கின்களும் ஒன்று. தற்போது சந்தைகளில் பல விதமான நாப்கின்கள் விற்கப்படுகிறது. அவற்றுள் இயற்கை பொருட்களை கொண்டும், ரசாயன பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எப்படி தயாரிக்கப்பட்டாலும், சில நாப்கின்களால் பெண்கள் அலர்ஜி மற்றும் அசௌகரியத்தால் அவதிப்படுகிறார்கள். இதை புரிந்து கொண்டு பலர் இயற்கை முறையில் நாப்கின்களை தயாரித்து வருகிறார்கள்.

ஆனால் அவற்றிலும் சில ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஒரு சிலர் இதனை அப்படியே தூக்கி எறிவதால் மண்ணிற்கு பாதுகாப்பற்றது என்று நினைத்து எரித்துவிடுகிறார்கள். அவ்வாறு எரிப்பதாலும் அதில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் நச்சு, நாம் சுவாசிக்கும் காற்றின் தன்மையை மாசடைய செய்கிறது. புதைத்தாலும், எளிதில் மக்குவதில்லை. பல மாதங்கள் ஆனாலும் அப்படியே தான் இருக்கிறது. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகில் முதன் முதலில் மக்கும் தன்மையுடைய நாப்கின்களை முழுவதும் இயற்கையான முறையில் தயாரித்துள்ளார் சென்னையை சேர்ந்த டாக்டர் ப்ரீத்தி ராமதாஸ்.

பயோ பாலிமெர்ஸ்ஸில் அனுபவம் வாய்ந்த ப்ரீத்தி, நாப்கின்களில் பயன்படுத்தி இருக்கும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் தயாரிக்கும் முறைப் பற்றி விவரித்தார். ‘‘பயோ பாலிமெர்ஸ்ஸில் இருக்கும் அனுபவத்தை பயன்படுத்தி மக்களுக்கு பயன்படக்கூடிய ஏதாவது ஒரு பொருளை உருவாக்க வேண்டும்னு விரும்பினேன். ஆண்டாண்டு காலமாக பெண்கள் இடையே நிலவும் மிகப்பெரிய பிரச்னை மாதவிடாய் காலத்தில் அவர்கள் பயன்படுத்தப்படும் வழிமுறைகள். நம்முடைய அம்மா காலத்தில் பெண்கள் துணிகளை மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள்.

அதனை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் துணி என்பதால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்படும். இதற்கு ஒரு தீர்வு அளிக்கத்தான் நாப்கின்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது பல விதமான ரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால், எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று விரும்பினேன்.

முழுக்க முழுக்க ஈகோ ப்ரண்ட்லியான சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஒவ்வாமையும் ஏற்படுத்தாத நாப்கினை தயாரிக்க முடிவு செய்தேன். அதன் தொடக்கமாக, 2015ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் அறிவொழி அவர்களின் உதவியால் என் ஆய்வுகளை ஆரம்பிச்சேன். என்னுடைய இந்த ஆய்வுக்காக மத்திய அரசு ஊக்கத்தொகை அளித்து உதவி செய்தனர். மூன்று ஆண்டுகள் பல போராட்டங்கள் மற்றும் ஆய்வுகளுக்கு பிறகு 2018ல் ஒரு முழுமையான நாப்கினை தயாரித்து முடிச்சேன். அதன் பிறகு அதற்கான பேட்டென்டிற்கு விண்ணப்பித்தேன். அதுவும் 2020ல் எனக்கு கிடைச்சது’’ என்ற ப்ரீத்தியின் கண்டுபிடிப்பில் உருவாகி இருக்கும் நாப்கின்கள் 15 நாட்களில் மக்கிவிடும் தன்மைக் கொண்டது.

‘‘நான் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு தான் நாப்கினை வடிவமைத்து இருக்கேன். கரும்பு நார்கள் தான் என் நாப்கினுடைய முக்கிய மூலப் பொருள். இந்த நாப்கின் மூன்று அடுக்குகள் கொண்டது. முதல் மற்றும் மூன்றாவது அடுக்குகளில் மஞ்சள், வேப்பிலை, வெட்டி வேர் போன்ற பொருட்களும். இவ்விரண்டுக்கும் இடையே கரும்பின் நார்களை கொண்டு செய்தேன். மேலும் சூப்பர் அப்சார்பென்ட் பாலிமர் மற்றும் எலுமிச்சை சாறு இதனைக் கொண்டு ஹைட்ரோபோபிக் லேயர் போல் அமைத்து மூன்று அடுக்குகளையும் இணைத்திருக்கேன். மஞ்சள், வெட்டி வேர், வேப்பிலை மூன்றும் சருமத்திற்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தாது.

எலுமிச்சை ரத்தக்கசிவினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். இதனை ஸ்மால் மற்றும் லார்ஜ் என இரண்டு சைஸ்களில் அமைத்திருக்கிறேன். ஸ்மால் 4 முதல் 5 மணி நேரம் வரை தாங்கும். லார்ஜ் சைசினை ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். என்னதான் என்னுடைய ெபாருள் பயோடீகிரேடபில் என்று நான் சொன்னாலும், அதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்பதால், நான் தயாரித்த அந்த நாப்கினை நானே எங்க வீட்டின் தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்தேன்.

அதே போல் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற நாப்கின் ஒன்றையும் அருகில் புதைத்தேன். 15 நாட்கள் கழித்து இரண்டு நாப்கின்கள் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, நான் தயாரித்த அந்த நாப்கின் மண்ணோடு மண்ணாகி இருந்தது. கடையில் விற்பனையில் இருக்கும் நாப்கின் அப்படியே இருந்தது. மேலும் என் நாப்கின் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள மண்ணை பரிசோதித்த போது அதன் நைட்ரஜன் அளவு அதிகமாக காணப்பட்டது. என்னோட ஆய்வகத்திலே நான் இந்த நாப்கின்களை தயாரித்து வருகிறேன். இங்கு பெரிய நிறுவனங்களில் இருப்பது போல் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் கிடையாது. என்னிடம் இருக்கும் இயந்திரங்கள் கொண்டு தான் நான் தயாரித்து வருகிறேன்.

அதனால் ஒரு நாப்கின் எனக்கு தயாரிக்கவே குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தேவைப்படும். அதனால் கேட்பவர்களுக்கு மட்டும் அவ்வப்போது தயாரித்து வழங்கி வருகிறேன். இதனை பெரிய அளவில் தயாரிக்க முதலீட்டாளர்கள் தேவை. அதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றவர் அழகு சாதனப் பொருட்களையும் தயாரித்து வருகிறார்.

‘‘நம்முடைய உடலில் மிகவும் பெரிய உறுப்பு நம்முடைய சருமம். அதை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்பதால் இயற்கை பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்து வருகிறேன். இதில் முகத்தை பொலிவூட்டும் எண்ணெய், சோப், முடிகள் வளர்வதற்கான எண்ணை போன்ற பொருட்களை தயாரித்து வருகிறேன். இதற்கான பேட்டென்ட் குறித்து விண்ணப்பித்து இருக்கேன்.

2019ல் வியர்வையில் இருந்து நம் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிடும் ஒரு சின்ன சென்சார் இயந்திரத்தை கண்டுபிடிச்சேன். என்னைப் பொறுத்தவரை நான் கண்டுபிடிக்கும் பொருட்களால் மக்களுக்கு மட்டுமில்லை நம்முடைய மண்ணிற்கும் எந்தவிதமான சேதமும் வரக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருந்து வருகிறேன். மண்ணில் இருந்து எடுக்கும் பொருட்கள் திரும்ப மண்ணுக்கே போகவேண்டும். அது தான் என்னுடைய நோக்கம். தற்போது என்னுடைய நாப்கின்களுக்கான முதலீட்டாளர்கள் கிடைத்தால், இதனை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்’’ என்று முக மலர்ச்சியுடன் கூறினார் டாக்டர் ப்ரீத்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நச்சுக்களை விரட்டி அடிக்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)